காட்சி 31 / 61
காட்சி 31]
காட்சி 31]
மூல ஸ்கேன் 101, 102, 103, 104
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[சுகதேவின் மாளிகை
திருசங்கு எதிரே உட்கார்ந்திருக்கிறான்.
சுகதேவ் பேரானந்தமுடன் பேசுகிறான்.
சுகதேவ்: நானும் முத்தாயியும் காந்தர்வ மணம் புரிந்து கொண்டோம். என்னை மறக்க மாட்டேன் என்று கடவுள்மேல் சத்தியம் செய்தாள்.
திருசங்கு: ஆமாம்.
சுகதேவ்: நந்தவனத்திலே ஓடினோம்—நதியிலே நீராடினோம்—'முத்தாயி' என்றேன்; அவள் நாதா என்று கூப்பிட்டாள். கண்ணை அசைத்தாள்—கழுத்துக்கு வைர மாலை! அவள் இடை நெளிந்தது—இரத்தின ஒட்டியாணம் பூட்டினேன்! நகைகளைப் போட்டுக் கொண்டு ஒரு சிரிப்பு சிரித்தாள்—சிங்காரி! ஒய்யாரி! கண்ணே! மயிலே! கட்டிலரைக்கு வாடி என்றேன், வரவும் இசைந்தாள்!
ஆகா! அதற்குள் விழித்துக்கொண்டேன்!... எல்லாம் கனவு திருசங்கு—எல்லாம் கனவு!
திருசங்கு: கனவாகாது தம்பி—இந்தத் திருசங்கு இருக்கும் வரையில்!
சுகதேவ்: தங்கமும் வைரமும் தயார்—அதை சங்கிலியாக்குவதற்கு என் தகப்பனார் சம்மதிக்க வேண்டுமே!—
திருசங்கு: அதற்குத்தான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும்.
சுகதேவ்: கஷ்டமா?
திருசங்கு: ஆமாம். அர்ச்சுனன் பாம்பானான் அல்லியை மணக்க! வேலன், கிழவனானான் வள்ளியை மணக்க!
சுகதேவ்: நான் என்ன ஆகவேண்டுமோ, தெரியவில்லையே!
அப்போது வேதாளம் அஞ்சல் ஓலைகளின் அடுக்குடன் அங்கு நுழைகிறான்.
வேதாளம்: நீங்கள் அடுத்த பாளையக்காரராக வேண்டுமே—இதிலென்ன சந்தேகம்?
சுகதேவ்: அடேடே! வேதாளமா?... நல்ல சமயத்தில் வந்தீரய்யா நாரதர் போல!—உட்காரும்.
வேதாளம்: என்ன ஆலோசனை பலமாக நடக்கிறது?...
சுகதேவ்: எனக்கு ஏதாவது ஓலையுண்டா?...
வேதாளம்: உண்டு உண்டு!... இதோ!... (ஒரு ஓலையைக் கொடுக்கிறான்)
சுகதேவ்: உம்முடைய மூளையைப்பற்றி எனக்கு நிறைய நம்பிக்கை!... ஆகையால் இந்த முக்கியமான நேரத்தில் ஒரு முதல் தரமான யோசனை சொல்லும்.
வேதாளம்: விஷயத்தைச் சொல்லாமல் யோசனை கேட்டால் எப்படித் தம்பி சொல்லுவது?
சுகதேவ்: இது தேவ ரகசியம்—நீர் யாரிடமும் சொல்லக் கூடாது! தெரியுமா?
வேதாளம்: ரகசிய மென்றால் யாரிடமும் சொல்லக் கூடாது என்பது தெரியும். என்ன ரகசியம் என்பது தெரிய வேண்டுமே!
சுகதேவ்: திருசங்கு—நீர் பயப்படாதீர்—நான் சொல்கிறேன்!
திருசங்கு: பயமொன்று மில்லை, சொல்லுங்கள்.
சுகதேவ்: வேதாளம்—ஒரு பெண்ணைப் பற்றிய விஷயம்—
வேதாளம்: அப்படியானால் காதல் விஷய மாகத்தானிருக்கும்.
சுகதேவ்: ஆகா கண்டு பிடித்து விட்டீரே—உமது மூளையே மூளை! இன்னும் சொல்கிறேன் கேளும்—திருசங்குவின் மகள் முத்தாயி, என்னை மனப்பூர்வமாக காதலிக்கிறாள்.
வேதாளம்: சபாஷ்! அப்படியா?—[வேதாளத்தின் முகத்திலே திடீரென மாறுதல் ஏற்படுகிறது. சமாளித்துக் கொள்கிறான்.]
சுகதேவ்: நானும் காதல் மயக்கத்தில் விழுந்து விட்டேன். அவளோ என்னைத் தவிர வேறு யாரையும் தீண்டேன் தீண்டேன் என்று சபதம் செய்து விட்டாள்.
வேதாளம்: ஆகா—காதலுக்குத்தான் என்ன மகிமை! உலகமே காதலில் கட்டுண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது!
சுகதேவ்: நான் இப்போது அவளைத் திருமணம் செய்து தீர வேண்டும்—அப்பா—சம்மதிக்க மாட்டார்—அந்தஸ்து குறைந்து விடும் என்பார்! இதற்கு என்ன செய்யலாம் சொல்லும்!
வேதாளம்: சிக்கலான பிரச்சினைதான்—பாளையக்காரர் மகன்—திருசங்குவின் மகள்—இருவருக்கு மிடையே நிறைய வித்தியாசம்! ஆனால் காதலோ தெய்வீகமானது. அதையும் மறுத்துவிட முடியாது!—ஆங்! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது!
சுகதேவ்: என்ன—என்ன? திருசங்கு! நீரும் கேளும்!
வேதாளம்: அப்பாவுக்கு உங்களைத் தவிர பிள்ளையில்லை—ஆகையால் அவர் உங்களை வெறுத்துவிட முடியாது!—அதற்காக திருமணத்துக்கு சம்மதம் கொடுப்பாரா என்று கேட்டால், அதுவும் தர மாட்டார்! அதற்கு ஒரே வழிதானிருக்கிறது. பெண்ணை வெளியூருக்கு அழைத்துக்கொண்டுபோய் ரகசியமாக திருமணத்தை முடித்துவிட வேண்டும். திருமணம் முடிந்த பிறகு அப்பா சிறிது கோபமடைவார்—பிறகு தானே சமாதான மடைந்துவிடுவார்! விஷயம் சுலபமாக முடிந்து விடும்.
சுகதேவ்: ஆங்—மிகவும் சரியான யோசனை!—வேதாளத்தின் மூளையிலே மட்டும் உதிக்கக் கூடிய வெற்றிகரமான யோசனை...... என்ன திருசங்கு!
திருசங்கு: தங்களிஷ்டப்படி நடக்கிறேன் தம்பி!—
சுகதேவ்: அப்படியானால் உடனே நடக்கவேண்டியதை கவனிப்போம்.
வேதாளத்தின் விகாரமான முகம் விசாலமாகிறது பயங்கரமான கண்களிலே இன்னும் அதிக ஒளி குவிகிறது. "முட்டாள்கள்—என்னிடம் வந்து யோசனை கேட்கிறார்களே; நான் எனக்கு சாதகமாகத்தானே யோசனை சொல்வேன்! வேதாளம்! வெற்றி அழைக்கிறது உன்னை வேகமாய் நட!" என்று அவன் வாய் தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறது.
★