பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 30 / 61

காட்சி 30]

காட்சி 30]

மூல ஸ்கேன் 99, 100

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[திருசங்கு வீடு

பூங்காவனம் அங்கே அழுதுகொண்டிருக்கிறாள். இங்கே முத்தாயி துன்பத்தின் எல்லையில் தூக்கி யெறியப்பட்டுத் துடித்துக்கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு இனி யார்தான் ஆதரவு? தந்தையோ அவள் நல்ல வழிக்கு வர நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார். எத்தகைய இடையூறுகள் வரினும் அவைகளைத் துரும்பாக்கிப் போடும்—அவளது காதலனின் திருமுக தரிசனமும் இனிக் கிடைப்பதற்கு வழியில்லை. நூறு பொன்கள்—அவளது தந்தை, தன் மகளிப் பவனியும் திருவிழாவின் செலவுக்காக சேமித்து வைத்திருந்த திரவியம். அதைக் கொடுத்துத் தன்னுடையவனை மீட்கத் துணிந்தாள். அதற்குக் குறுக்கிட்ட வஞ்சகன்தான் யாரோ? தடாகத்து நீரும் அதன் தெளிந்த அமைதியும் போலிருந்த அவர்களின் காதல் வாழ்வில் சந்தர்ப்பம் கல் வீசிவிட்டதே! சோகக் கண்கள் எட்டு திக்கிலுமிருந்தும் பாய்ந்திடுகின்றன அவள் மீது! அவளால் அழுவதைத் தவிர வேறெதையும் செய்யமுடியவில்லை. வாய் திறந்து கதறி அழுவது அவளுக்கு ஆறுதல் போலும்! சுமதி வருகிறாள். அவள் வரவேற்கப்படவில்லை. “முத்தாயி” எனக் கூப்பிடுகிறாள் வாய்நிறைந்த வாத்சல்யத்தோடு!

முத்தாயி: எங்கே வந்தாய்—காதகி!... வேண்டும் மென்று கேட்டிருந்தால், நூறு என்ன—ஐநூறு பொன் எப்படியாவது தேடித் தந்திருப்பேனே உனக்கு! கேவலம்: நூறு பொன்னுக்காக, எங்கள் இருவரையும் பிரித்துவிட்டாயே—பாவி!

சுமதி: முத்தாயி! நீயா என்னைப்பற்றி அப்படி நினைக்கிறாய். நான் சொல்வதைக் கேள்.

முத்தாயி: மூதேவி! என் முகத்திலே விழிக்காதே! போய்விடு!

சுமதி: முத்தாயி!

முத்தாயி: போய்விடு என்றால் போய்விடு! பொல்லாதவளே! நான் என்ன உனக்குத் தீங்கு செய்தேன்—எனிப்படி பழிவாங்கினாய்? பாசமுள்ளவள் போல நடித்தாயே—அப்போதெல்லாம் நீ இப்படி மோசம் செய்வாயென்று எனக்குத் தெரியாதடி!

சுமதி: முத்தாயி!

முத்தாயி: பேசவேண்டாம் நாசக்காரி! என் முன்னே நிற்காமல் உடனே போய்விடு!

சுமதி: போய் விடுகிறேன்—ஒரு காலம் வரும், அப்போது நீ என்னை உணருவாய்!

கண் கலங்கியபடி சுமதி அதை விட்டுப் போய்விடுகிறாள்.