காட்சி 29 / 61
காட்சி 29]
காட்சி 29]
மூல ஸ்கேன் 97, 98
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பாளையக்காரர் அரண்மனையில்!
மாயங்காத சாமியார் பல்லக்கில் வந்து இறங்கி உள்ளே வருகிறார். உள்ளே, பலதேவர் அவர் மனைவி, பூங்காவனம்—ஆகியோர் இருக்கிறார்கள். பலதேவர் சாமியாரை எதிர்கொண்டழைக்க ஓடுகிறார். பூங்காவனம் சாமியார் வருவதைப் பார்த்து முகஞ்சுளிக்கிறாள். சாமியார் வந்து ஆசனத்தில் அமருகிறார்.
பலதேவர்: என்ன திடீரென்று?
சாமியார்: ஆமாம்—மடாலயத்துக் குரு பூஜை வருகிறது!—
பலதேவர்: அதற்கென்ன—பிரமாதமாய் நடத்தி விடுவோம்! நாளையதினம் மடத்தில் என்ன உபதேசமோ?
சாமியார்: “தவ நெறியும்—கற்பு நெறியும்” என்பது பற்றிப் பேசப் போகிறேன்.
அப்போது, அங்கு நிற்பதற்குப் பிடிக்காத பூங்காவனம்—அதைவிட்டு நகருகிறாள். ஆனால் சுகதேவின் குரல் அவளைத் திரும்பச் செய்கிறது.
“அத்தை! தெரியுமா சேதி? முத்தனை விலங்கு மாட்டி—வீதியிலே ஊர்வலம் நடத்தி வேங்கை புரத்துக்கு கொண்டு போய் விட்டார்கள்.”
பலதேவர்: ஒழியட்டும்! ஒழியட்டும்! அதற்கென்ன இப்போது—பெரிய செய்தியா அது?
பூங்காவனம்: ஆமாம் அண்ணா! ஏழைகளின் துன்பம் உங்களுக்குப் பெரிய சேதியே அல்ல! அவன் நம் வீட்டில் மாடுபோல் உழைத்திருக்கிறான். அவனை ஏன் நாம் மீட்டிருக்கக்கூடாது?
பலதேவர்: உனக்கென்ன பைத்தியமா பூங்காவனம்? பாருங்கள் சுவாமி! என் தங்கையின் பரிதாபம் யார்மேல் விழுகிறது என்று! ஏதோ ஒரு அனாதை!
சாமியார்: உம்! எல்லாம் விதிப்படி நடக்கும். யாரும் தடுக்க முடியாது.
பூங்காவனம்: நல்ல விதி! சோம்பேறிக்கட்டும், சூதுக் காரர்க்கட்டும் சுலபமாக அகப்படுகிற வார்த்தை. விதியாம்—விதி!
சுகதேவ்: ஆமாம் அத்தை! அப்பா பாளையக்காரராக இருப்பது அவர் விதி! சாமியார் பெண்கள் வெறுப்பது அவர் விதி! நீ கல்யாணம் வேண்டா மென்று காலங் கழிப்பது உன் விதி!
பூங்காவனம்: மணங்கெட்டி! அந்த விதியென்கிற வார்த்தை உன் வாயிலே அகப்பட்டு விழுகிறதே; அது அதனுடைய விதி!
பாளையக்காரர்: சரி, இரண்டுபேரும் வாயை மூடுங்கள். தொலைந்து போனவன் பற்றி நீங்கள் ஏன் போர் தொடுக்கிறீர்கள்?
சாமியார் அசட்டுத் தனமாக சிரிக்கிறார். பூங்காவனம் அதைவிட்டுப் போய் விடுகிறாள். அவள் எங்கே போவாள்—போனால்! படுக்கையில் விழுந்தாள்! அழுதாள்! வழக்கம் போல அந்த மூன்று சிலைகளும் அவளைப் பார்த்து பரிதாபப்பட்டன.
★