காட்சி 28 / 61
காட்சி 28]
காட்சி 28]
மூல ஸ்கேன் 95, 96
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பழுதூரின் எல்லை
ஐயனார் கோவில் ஒன்று இடிந்து கிடக்கிறது. அங்கே வெற்றிவேலன் படை நிற்கிறது. பின் தொடர்ந்து ஊர்மக்கள் யாருமில்லை. முத்தன் விலங்குடன் பல்லக்கு வண்டியில் ஏற்றப்பட்டு இருக்கிறான். வண்டியிலிருந்தபடியே, வேதாளமும் வெற்றிவேலனும்—முத்தாயி பற்றி திட்டம் தீட்டுகிறார்கள்.
வெற்றிவேலன்: சரி வேதாளம்—ஊரின் எல்லை வந்து விட்டது! நீர் திரும்புகிறீர் என்பதுபற்றி வருந்துகிறேன்.
வேதாளம்: பிரபு, உங்கள் அன்புக்கு நன்றி.
வெற்றிவேலன்: முத்தாயி விஷயம் மறந்துவிடாதீர்! அவளை என்னால் மறக்க முடியவில்லை.....
வேதாளம்: மறப்பேனா நான்.
வெற்றிவேலன்: அவள் ஒரு வீணை! அழுதுகொண்டு தான் பேசினாள். ஆனால் ஒவ்வொரு சொல்லும் சுருதி யோடு சேர்ந்து அதிர்ந்தது.
வேதாளம்: அந்த வீணை தங்களிடம் வரவேண்டும்—அவ்வளவுதானே! தங்களின் நித்திரா மண்டபத்தின் நிரந்தர வீணையாகவே அவளை ஆக்கிவிடுகிறேன்.
வெற்றிவேலன்: வேண்டாம் வேண்டாம். திருமணம் என்கிற அளவுக்கு போய்விடாதீர்! தேனும் தெவிட்டி விடும், திருமணம் என்ற கிண்ணத்தில் ஊற்றினால்! மங்கைகள் மலர்களாகவும்—ஆண்கள் வண்டுகளாகவும் இருப்பதையே நான் விரும்புகிறேன். அதுவே என் லட்சிய கீதமுங்கூட!
வேதாளம்: உங்கள் சித்தத்திற்கு, நான் தான், தாளம்!
வெற்றிவேலன்: வேதாளம்! மகிழ்ந்தேன். சென்று வருகிறேன். போனதும் ஓலை எழுதுகிறேன். அந்தப் பொன்னவிர்மேனியாளை விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்யும்!
வேதாளம்: ஆற்றல் நிறைந்த பிரபுவே! ஆணைப்படி நடக்கிறேன்.
வெற்றிவேலன்: வருகிறேன்.
வேதாளம் வணங்குகிறான். வண்டிகள் வேகமாகப் புறப்பட்டு வேங்கைபுரம் நோக்கி ஓடுகின்றன. முத்தன் கண்களிலே வழியும் கண்ணீரைப் பற்றி கவலைப்பட அங்கு யாருமில்லை.
★