பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 27 / 61

காட்சி 27]

காட்சி 27]

மூல ஸ்கேன் 91, 92, 93, 94

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[பழுதூர் வீதி

பாளையக்காரரின் அரண்மனைப் பக்கமாக வெற்றிவேலனின் படை, நடை போடுகிறது. திரளான மக்கள் வேடிக்கை பார்த்தவாறு பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிவேலனும், வேதாளமும் வண்டியிலிருந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். தளபதியின் வண்டியில் தான் ஏறி வருகிறோமே என்ற பெருமையும், காவலும் வேதாளத்தை ஆட்கொள்கின்றன. நிமிர்ந்த பார்வையுடன் அவன் மக்களைப் பார்த்துக் கொண்டு—விகாரமான அந்த முகத்திலே விசித்திரமான புன்னகை தவழ வீற்றிருக்கிறான். படை வீரர்கள் இருமருங்கிலும் குதிரைகளிலமர்ந்து பல்லக்குவண்டிகளைப் பாதுகாத்துச் செல்கின்றனர். வீரர் அணி வகுப்புக்களின் போது இசைத்திட வேண்டிய போர்வாத்தியங்கள் ஆடம்பரமாக முழங்குகின்றன. அத்தகைய அலங்காரம் நிறைந்த பவனியிலே அவன்மட்டுமே அவமானத்தை சுமக்க முடியாமல் தலையைக் கவிழ்த்தவண்ணம் செல்லுகிறான். அரண்மனையின் உச்சியிலிருந்து ஒரு உருவம் அந்த ஊர்வலத்தைக் காணுகிறது. அது யாருமில்லை; பூங்காவனம் தான்! பூங்காவனத்தின் கண்கள், விலங்கணிந்து வீதியிலே செல்லும் முத்தனின் மீது பாய்கின்றன. அந்தக் காட்சியை அவளால் காண முடியவில்லை. பலமாக முகத்தில் அறைந்து கொள்கிறாள். கண்கள் நீரைப் பொழிகின்றன—ஓடிப்போய் படுக்கையில் விழுகிறாள்—அழுகிறாள்.

இப்படி எத்தனையோ முறை அவள் அழுதிருக்கிறாள். அப்போதெல்லாம்—அவள் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது—காதல் புறாக்கள், கன்றை நாடும் பசு, மான்தோலில் வேங்கை, ஆகிய மூன்று சிலைகளும் இப்போதும் அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன.

ஊர்வலமோ போய்க்கொண்டிருந்தது—திருசங்கு வீட்டின் வாயிலில் நின்று, வேடிக்கை பார்க்கத் தயாராக இருந்தார்கள்—சுமதியும் முத்தாயியும்!

ஊர்வலமும் அவர்களிடம் நெருங்கிவிட்டது. யுத்த வாத்தியங்கள் அவர்கள் வீட்டினின்றும் அகன்றுவிட்டன. படையில் சேர்ந்த ஆட்கள் அமர்ந்துள்ள பல்லக்கு வண்டிகளும் வீட்டைத் தாண்டி விட்டன. அடுத்து, வெற்றிவேலன்—வேதாளம் அமர்ந்துள்ள வண்டி அவர்களை நெருங்கியது. வண்டியிலிருந்தபடியே வேதாளம்—தளபதிக்கு முத்தாயியைக் காட்டி,

வேதாளம்: வீரம் நிறைந்த பிரபு! அதோ நிற்கிறாளே அந்தப் பொன் வார்த்துதான் நான் குறிப்பிட்ட முத்தாயி!

வெற்றிவேலன்: ஆகா! அவள்தானா? பொன் வார்த்து என்று புகன்றீரே அவள்! புலவர் மொழியிலே அன்னம் என்று சொல்லும்! சொர்ணம் என்று கூறும்! அடடா! சொக்கத் தங்கத்திலே உளிபட்ட இடம்போல பிரகாசிக்கும் கன்னங்கள்! அவள் இதழ்களே கோவைப்பழம் என்று எண்ணி கொத்துவதற்காக வளைந்த கிளிமூக்கு! மனிதனை மயக்குவதற்கே மாயனால் படைக்கப்பட்ட மாம்பழ மேனி!

வெற்றிவேலனுக்கு வண்டியில் உட்கார்ந்திருக்கவே இயலவில்லை.

முத்தாயி—சுமதி இருவரும் அந்த ஊர்வலத்தின் அழகிலே கண்ணை செலுத்திக்கொண்டிருந்தனர். தளபதியின் வண்டியும் அவள் வீட்டை விட்டு நகர்ந்து விட்டது. அதற்கடுத்தாற் போல்? முத்தாயி பார்த்துவிட்டாள் அவனை! ஆம் அவள் நெஞ்சு நிறைந்த முத்தனை? அந்த ஊர்வலம்—அதிலே செல்லும் படைவீரர்—வேடிக்கைப் பார்க்கும் மக்கள் கூட்டம்—இசை முழக்கம்—எதுவுமே அவள் நினைவில் இல்லை. நடுவீதிக்குப் பாய்ந்தோடினாள், வீறிட்டலறியபடி!—

“அத்தான்! அத்தான்!”
“முத்தாயி!”

இடிமென வார்த்திய ஒலிகள் நின்று விடுகின்றன. பயங்கரமான அமைதி.

முத்தாயி: அய்யோ! அவரை விட்டு விடுங்கள்! இது என்ன கொடுமை! அத்தான்.

அப்போது வெற்றிவேலன் வண்டியிலிருந்து இறங்கி அங்கு வந்து விடுகிறான்.

வெற்றிவேலன்: யாரம்மா நீ? என்ன இது?

முத்தாயி: பிரபு! அவரை விட்டு விடுங்கள்!—

முத்தன்: முத்தாயி! கிளியை விடுதலை செய்யும்படி கேட்கிறாய்; பூனையிடம்!

வெற்றிவேலன்: (முத்தாயியைக் கடைக் கண்ணால் பார்த்தபடி) ஏய் முத்தா! நீயல்ல கிளி!—

முத்தாயி: அத்தான்! நான் உங்களிடம் அவ்வளவு கெஞ்சிக்கேட்டும் கடைசியில் ஏமாற்றிவிட்டீர்களே—

முத்தன்: என்ன செய்வது, எதிர்பாராமல் நடந்து விட்டது—போகிறேன் விடு.

முத்தாயி: போங்கள்! விடுதலையடைய உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் அவர்களிடம் சொல்லி ஒரு சட்டியையாவது என் நெஞ்சின் மீது வீசச் செய்யுங்கள்.

வெற்றிவேலன்: சே! கனியின் மீது கத்திவீச்சா?

முத்தன்: முத்தாயி! குற்றம் என்மீதில்லை என்பதை யாவது நீ உணர்ந்துகொள்!

முத்தாயி: பிறகு யார்மீது? நான் அனுப்பியது வந்து சேரவில்லையா?

இந்நேரம், அங்கே திருசங்கு பிரவேசிக்கிறான்—கோபாவேசமாக!

திருசங்கு: மானங்கெட்ட பெண்ணே! வா இங்கே, என் அந்தஸ்தைச் சந்திசிரிக்க வைக்கிறாயே.

முத்தாயி: அப்பா! என்னை விட்டுவிடுங்கள். விட்டு விடுங்கள் அப்பா—விட்டுவிடுங்கள்! இதோ போகிற வண்டிகளில் ஒன்று என்னை சாகடித்துவிட்டுப் போகட்டும். இதோ என்னுயிரையே எடுத்துச் செல்கிறார்கள்—இனி இந்த நடமாடும் சவம் இருந்து என்னப்பா பயன்?—என்னை விட்டுவிடுங்கள்.

முத்தாயி அலறியபடி தெருவில் விழுந்து விடுகிறாள். திருசங்கு அவளைப் பிடித்துப் பரபர வென்று இழுத்துக் கொண்டுபோகிறான். அவளது பொன்னுடல் மண்ணில் தேய்கிறது. வெற்றிவேலன் தன் வண்டிக்குப் போகிறான். மீண்டும் வாத்தியங்கள் ஒலிக்கின்றன. ஊர்வலம் போகிறது.