காட்சி 26 / 61
காட்சி 26]
காட்சி 26]
மூல ஸ்கேன் 89, 90
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[திருசங்கு வீடு
சுமதி ஓடிவந்து நுழைகிறாள். அவளுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் முத்தாயி, கண்கள் ஒளிவிட—அவளையே பார்க்கிறாள்.
சுமதி: முத்தாயி!
முத்தாயி: சுமதி, என்ன ஆயிற்று கொடுத்துவிட்டாயா?
சுமதி: நல்லவேளை. நான் கொஞ்சம் வேகமாக ஓடியிராவிட்டால் இந்நேரம் அவரைக் கொண்டு போயிருப்பார்கள்.
முத்தாயி: என்ன—என்ன?
சுமதி: ஆமாம்—படையிலிருந்து வருகிறேன் என்று அவர் கூறியதும் உடனே பாதுகாப்பில் வைத்து விட்டார்களாம். தலைநகரிலிருந்து தளபதியைப் புறப்படும்படி உத்திரவும் வந்துவிட்டதாம். எல்லோரும் கிளம்பிவிட்டார்களாம்; அவரையும் அழைத்துக் கொண்டு!
பயப்படாதே! அந்த நேரத்தில் நான் போய் வேதாளத்தைச் சந்தித்து, தண்டப் பொன்களைக் கொடுத்தேன். இல்லாவிட்டால், உன்னுடையவரை விடுதலை செய்திருக்க முடியாது. அந்த வேதாளம் மிகவும் நல்லவர்.
முத்தாயி: பிரியமுள்ள தோழி! உன் உதவியை என்னால் மறக்கவே முடியாது.
[தழுவுகிறாள்]
சுமதி: அப்பப்பா! இப்படியா கட்டிப் பிடிப்பது. அவரிடம் கற்ற வித்தையை என்னிடமே காட்டுகிறாயே!
முத்தாயி: ஸ்... குறும்புக்காரி!
சுமதி: வா, வேடிக்கைப் பார்க்கலாம்; வெற்றிவேலனின் பவனி வீதி வழியே வருகிறதாம்! வாவா!
முத்தாயி: வெற்றிவேலர் பவனிதானே!
சுமதி: ஓகோ—உனக்குப் பிடிக்காது. உங்கள் இருவரின் பவனியை நான் பார்க்கவேண்டும். அப்போதுதான் உனக்கு உவகை பூக்கும்—உள்ளம் மணக்கும்—உற்சாகம் பொழியும். சரிதான் வா, இதையும் பார்ப்போம்.
இருவரும் வாயிற் பக்கம் வருகிறார்கள்.
★