பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 25 / 61

காட்சி 25]

காட்சி 25]

மூல ஸ்கேன் 85, 86, 87, 88

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[தென்றல் மாளிகை.

பல்லக்கு போன்ற குதிரை வண்டிகள் புறப்படுவதற்குத் தயாராக இருக்கின்றன. குதிரை வீரர்கள் தத்தம் புரவிகளில் ஏறி ஆயத்தமாகிறார்கள். படையில் சேர்க்கப்பட்ட ஆட்கள் வண்டிகளில் ஏற்றப்படுகிறார்கள். தளபதி செல்வதற்கான அலங்காரமான வண்டியும் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. பாளையக்காரர் பலதேவரும், திருசங்கும், சுகதேவும், தளபதிக்கு முன்னே நின்றுகொண்டு வழியனுப்பத் தயாராயிருக்கிறார்கள்.

வெற்றிவேலன் ஒரு வீரனிடம்,

“எங்கே அந்த முத்தன்? அவனையும் கொண்டுவந்து வண்டியில் தள்ளுங்கள்”

உடனே வீரர்கள் உள்ளே ஓடுகிறார்கள். வேதாளம், தளபதியின் காதில் ரகசியமாகச் சொல்லுகிறான்,

“அவன் ஊர் தாண்டும் வரையில் நடக்க வைத்தே கொண்டுபோனால்—அவளைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்”

வெற்றிவேலன்: ஆமாம்! அந்தக் கழுதையை விலங்கிட்டு இழுத்துச் செல்லுங்கள். ஊர் தாண்டும் வரையில் அவன் நடந்தே வரட்டும்.

உள்ளேசென்ற வீரர்கள், முத்தன் பூட்டப்பட்டிருக்கும் அறையைத் திறக்கிறார்கள்.

முத்தன்: ஏன்—எனக்கு விடுதலையா?

ஒரு வீரன்: இங்கேயிருந்து விடுதலை. ஆனால் விடுதலைக்குப் பிறகுதான் இருக்கின்றன வேதனைகள்! வெறும் பயலே! இந்த விடுதலையை சுவைத்துப்பார். ஊமை யாக கிடப்பாய். உடுத்த உடை கிடைக்காது. பசிக்கு உணவு கிடையாது. கொண்டுபோங்கள் இந்த காவம் பிடித்த ஓநாயை!

முத்தன்: சரிதான்—வேங்கைபுரத்து மனிதர்கள் எல்லோருமே இப்படித்தானா?

வீரன்: பேசாதே! விலங்கை மாட்டிக்கொள்.

முத்தன் இழுத்து வரப்படுகிறான். அதற்குள் தெருப்புறத்தில் தளபதியிடம் நின்று கொண்டிருந்த வேதாளம், வீதியிலே ஒரு பெண் வேகமாக ஓடிவருவதைக் காண்கிறான். உடனே அவன் அவசர அவசரமாக தென்றல் மாளிகையிலிருந்து புறப்பட்டு அந்தப் பெண்ணை நோக்கிப் போகிறான்.

வீதியில்

வேதாளம்: எங்கம்மா ஓடுகிறாய்?

சுமதி: ஓ!... நீங்களா?... முத்தனைப் பார்த்தீர்களா?

வேதாளம்: முத்தனுக்காகத்தான் ஓடியாடிக்கொண்டிருக்கிறேன். அவனை இப்போதே வேங்கைபுரம் கொண்டுபோகப் போகிறார்கள்.

சுமதி: அய்யோ... அவரை நான் பார்க்கவேண்டுமே.

வேதாளம்: முடியாது! இனி அவனை விடுவிக்க முடியாது. விடுவிப்பதாயின் நூறு பொன் வேண்டும்.

சுமதி: அதைத்தான் கொண்டுவந்திருக்கிறேன். இதோ, இதை தயவுசெய்து அவரிடம் கொடுத்துவிடுங்கள்.

வேதாளம்: அன்பான பெண்ணே! நல்ல காரியம் செய்தாய்! முத்தன் சார்பாக உனக்கு என் நன்றி! இப்போதே போய் அவனை மீட்கிறேன். நீ ஓடிவிடு இதை விட்டு!

[சுமதி போய்விடுகிறாள்.]

வேதாளம், பையை அவிழ்த்துப் பார்க்கிறான். நூறு பொன்களிருக்கின்றன. அவன் முகம், மகிழ்ச்சியால் வீங்குகிறது. அந்தப் பையில் ஒரு மடலும் இருக்கிறது. அந்த ஓலையை எடுத்து வேதாளம் படிக்கிறான், தனக்குள்ளாக!

அன்பரே!

குறிப்பிட்டபடி நூறு பொன் அனுப்பியிருக்கிறேன். எடுத்த சுரைக்காய், கறிக்காகாது என்பார்களே; என்பதற்காக முத்தங்களை நேரில் தருவதாக வைத்திருக்கிறேன். இன்று மாலை—நமது சோலை!

அன்புள்ள, முத்தாயி.

வேதாளம், மடலையும், நூறு பொன்களையும் தன் உடையில் மறைத்து வைத்துக்கொண்டு தென்றல் மாளிகையை நோக்கி வருகிறான்.

தென்றல் மாளிகையிலிருந்து வெற்றிவேலன் புறப்பட்டுவிடுகிறான். வேதாளத்தையும் தன் வண்டியில் ஏறச் சொல்லுகிறான்.

வெற்றிவேலன்: வேதாளம்—ஊர் தாண்டும் வரையில் என்னுடன் வாருமே! பிறகு திரும்பிவிடலாம்!

வேதாளம்: உத்திரவுப்படியே பிரபு!

வண்டிகள் நகருகின்றன. முத்தன் மாத்திரம் விலங்கிடப்பட்டு வீதியில் நடத்திச் செல்லப்படுகிறான். வெற்றிவேலனின் பவனியை ஊர் மக்கள் அனைவரும் ஆரவமுடன் கூடி வேடிக்கை பார்க்கிறார்கள். முத்தனோ, யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் நடந்துகொண்டிருக்கிறான். முத்தனின் நிலைமை கண்டு, சுகதேவ் பேரானந்தமடைகிறான். பழுதூரின் வீதிகளைக் கடந்தபடியிருக்கிறது வெற்றிவேலனின் அந்தப் பவனி.