பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 23 / 61

காட்சி 23]

காட்சி 23]

மூல ஸ்கேன் 82, 83

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[தென்றல் மாளிகை.

தென்றல் மாளிகையில் முத்தன் அடை பட்டுக் கிடக்கிறான். கூண்டினில் புலிபோல அங்குமிங்கும் உலவுகிறான். அப்போது வேதாளம் அங்கே நுழைகிறான். முத்தன், வேதாளத்தை ஆவலுடன் பார்க்கிறான்.

வேதாளம்: முத்தா!... என்ன முட்டாள்தனம் செய்து விட்டாய்... முதலிலேயே யோசித்து செய்யக்கூடாது நான் என்ன, உன்னை பலவந்தமாகவா படையில் சேர்த்தேன். வெற்றிவேலன் ஒரு முரடன்... நீயோ பாவம், மிகவும் நல்லவன். நியாயப்படி உன்னைக் காவலில் வைக்கக் கூடாது! இந்த அநியாயத்தை யார் கேட்டது. பாளையக்காரரிடம் ஓடிப்போய் சொன்னேன். அவர் என் பேச்சை லட்சியம் செய்யவே இல்லை. ஏழையின் குரல் எஜமானின் காதில் எப்படி கேட்கும்?

அப்போது வெற்றிவேலன் அங்கு வருகிறான்.

வெற்றிவேலன்: என்ன வேதாளம். என்ன அளக்கிறீர்? முத்தனை நீர் பார்த்து விட்டுத்தான் போகலாம்; ஆசையிருந்தால்! அவனுடன் பேசுவதற்கு உமக்கு அனுமதியில்லை. அவன் இப்போது கூண்டுப் பறவை. நீர் விலகட்டும்!

வேதாளம்: முத்தன் என்னுடனேயே இருந்தவன் பிரபு! மேன்மை தாங்கியவரே! பழகிய பாசம் மிகவும் பொல்லாதல்லவா? இவனை எப்படியாவது மன்னித்து......

வெற்றிவேலன்: ஹ ஹ ஹ! மன்னிப்பதா? இதோ பாரும் அரசாங்க உத்திரவை! இதுவரை சேர்ந்துள்ள படைவீரர்களோடு நான் உடனே தலைநகருக்குப் புறப்பட வேண்டுமென்று கட்டளை யனுப்பியிருக்கிறார் மன்னவர்! இன்றே புறப்பட வேண்டும்.

வேதாளம்: முத்தனுமா?

வெற்றிவேலன்: ஆமாம்! ஆனால், தண்டப் பணம் நூறு பொன் வந்துவிட்டால் இவன் விடுதலை பெறலாம். இவனுக்கேது நூறு பொன் — குப்பையில் கிடப்பவன்?

வெற்றிவேலன் போய்விடுகிறான். வேதாளம், முத்தனை மிகவும் சோகமுடன் பார்ப்பதாக நடிக்கிறான். முத்தனும் வேதாளத்தை நம்புகிறான்.

வேதாளம்: முத்தா! உன்னைப் பார்க்கவே எனக்கு கஷ்டமாயிருக்கிறது.

முத்தன்: அய்யா, ஒரு உதவி செய்யுங்கள்.

வேதாளம்: என்ன உதவி? சொல்! செய்து முடிக்கிறேன்.

முத்தன்: என்னிடம் கொடுக்கச்சொல்லி, நூறு பொன் தங்களிடம் வரும் — அதை வாங்கி கட்டி — என்னை விடுவித்து விடுங்கள்!

வேதாளம்: அதைவிட—எனக்கு வேறு வேலை ... பொன் கட்டாயம் வருமல்லவா? முத்தா! இனிப் பயமில்லை ... நீ கவலையில்லாமல் இரு! எது நடந்தாலும் சரி ... பொன் வரட்டும்—எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

வேதாளம், அதைவிட்டு வெளியே போகிறான். கதவு பூட்டப்படுகிறது. முத்தன், கூண்டுக்குள் மீண்டும் அலைந்துகொண்டிருக்கிறான்.