பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 21 / 61

காட்சி 21]

காட்சி 21]

மூல ஸ்கேன் 76, 77, 78, 79, 80

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[தென்றல் மாளிகை

வெற்றிவேலனும், வேதாளமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வேதாளம்: நீங்கள் சந்தேகப்பட்டது மிகவும் சரிதான்! என்ன இருந்தாலும் ஒரு நாட்டுத் தளபதி அல்லவா? அவன் கையொப்பப்படும்போது ‘முத்தாயி’ என்று தவறு எழுதியவன் என்கிறீர்களே, அது தவறுதல் அல்ல—அப்படி ஒரு தெய்வம் இருப்பது உண்மை.

வெற்றிவேலன்: பார்த்தீரா? எனக்குத் தெரியும் அப்போதே! முத்தாயி என்பவளைப் பற்றி இன்னும் ஏதாவது விபரம் உண்டா? என் வேதாளம்—இருவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமல்லவா?

வேதாளம்: இருக்கலாம், அவள் அரண்மனைக் காப்பாளர் தலைவன் திருசங்குவின் மகள்.

வெற்றிவேலன்: தொடர்பு இருக்கிற அளவுக்கு துடியிடையுடைய அழகியோ அவள்?

வேதாளம்: அழகுதான்—நல்ல அழகு.

வெற்றிவேலன்: சந்தனச் சேரியிலே நாம் தங்கியிருக்கும் போது இப்படித்தான் ஒரு அழகியை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தான் ஒரு அந்தரங்க நண்பன்.

வேதாளம்: அப்படியா?

வெற்றிவேலன்: நண்பனாயிருந்தாலும், அந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அவனுக்கு இருபது பொன் பரிசளித்தேன்.

வேதாளம்: ஓஹோ!

வெற்றிவேலன்: முடியுமானால் முத்தாயியை ஒரு முறை சந்திக்க முயற்சிப்போம்—என்ன வேதாளம்?

வேதாளம்: அதைத்தான் நானும் யோசிக்கத் தொடங்கி விட்டேன்.

வெற்றிவேலன்: சபாஷ்! வேதாளம்—குறிப்பறிந்து செயல் புரிவதில் உமக்கு நிகர் நீதான்!

அப்போது அங்கே முத்தன் வருகிறான் அவனைக் கண்ட வெற்றிவேலன் பேச்சை நிறுத்தி,

வெற்றிவேலன்: என்னப்பா! என்ன வேண்டும்?...

முத்தன்: என்னை மன்னிக்கவேண்டும்.

வெற்றிவேலன்: விஷயத்தைச் சொல்.

முத்தன்: சந்தர்ப்பம் சரியில்லை ...... படையில் சேர முடியவில்லை.

வெற்றிவேலன்: என்ன விளையாடுகிறாய் ..... என்னை யாரென்று எண்ணிவிட்டாய்? படையில் சேரவும்—விலகவும்—உன்னிஷ்டப்படி நடக்கவும்—அனுமதி கிடையாது இங்கே. ஆளப்பார்! மலைபோல் இருக்கிறான்—எலிபோல் பயப்படுகிறான். கோழை.

முத்தன்: தயவு செய்து அந்த வார்த்தை சொல்லாதீர்கள். நான் ஏழையாயிருக்கலாம்—ஆனால் கோழையல்ல!

வெற்றிவேலன்: வாய் நீட்டாதே! வாள் நீளும்! மரியாதையாக நில்! மரியாதையாகப் பேசு!

முத்தன்: படையில் சேருவதற்கு கட்டாயம் எதுவும் இல்லையல்லவா!

வெற்றிவேலன்: சேருவதற்கு கட்டாயமில்லை! ஆனால் சேர்ந்து விலகுவதற்கு உன் இஷ்டமில்லை.

முத்தன்: அதற்குத்தான் நூறு பொன் தண்டம் செலுத்திவிட வேண்டும் என்று நிபந்தனையிருக்கிறதே.

வெற்றிவேலன்: இவன் மிகவும் திமிர்பிடித்தவன்—உன் வால் ஒட்ட நறுக்கவேண்டும். இந்தத் தேகத்தை வளர்த்து என்ன செய்யப்போகிறாய் ... தேசத்திற்காகத்தான் பலிகொடேன்.

முத்தன்: பலி கொடுக்கலாம்—எமக்கென்று ஒரு தேசம் இருந்தால்! பழுதூர் அடிமை பூமி. இதை மீட்க ஒரு படை திரளட்டும். அதிலே சேராதவர் அனைவரும் செத்தவராகவே கருதப்படுவர்.

வெற்றிவேலன்: என்ன சொன்னாய், ராஜத்துரோகி!

முத்தன்: அப்படியெல்லாம் குற்றம் சாட்டிவிடாதீர்கள். என்னை வீரனில்லை யென்றீர்களே; அதற்கு விளக்கம் தந்தேன் அவ்வளவுதான்.

வெற்றிவேலன்: என்னை எதிர்த்துப் பேசிய முதல் ஆள் இவன்தான்! இவனுக்கு ஒரு முடிவு தேடாமல் விடமாட்டேன்.

வேதாளம்: கொஞ்சம் வாருங்களேன்.

வெற்றிவேலன் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே,

வேதாளம்: பயல் விடாதீர்கள்! விட்டால் தண்டப் பொருளைக் கட்டி மீண்டுவிடுவான். பிறகு, முத்தாயியைப் பிடிக்க முடியாது.

வெற்றிவேலன்: என்ன செய்யலாம்.

வேதாளம்: காவலில் போடுங்கள். கழுதையை!—ஆனால் ஒன்று. நான் இந்த நாய்க்குட்டியிடம் நல்லவன் போல நடந்துகொள்கிறேன். அதாவது நடிக்கிறேன் என்கிறேன்.

பிறகு இருவரும், முத்தன் இருக்குமிடத்திற்கு வருகிறார்கள். வரும்போதே,

வேதாளம்: தயவு செய்து மன்னித்து—முத்தனை விட்டு விடுங்கள். அவன் ஏழை.

வெற்றிவேலன்: ஓய் வேதாளம்! திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன். நீர் இதில் தலையிடக்கூடாது.

வேதாளம்: ஏன் தலையிடக்கூடாது! உங்களுக்குத் தர வேண்டிய நூறு பொன்னைக் கொடுத்து விட்டால்—முத்தன் நீங்கள் என்ன செய்ய முடியும்? என்ன முத்தா! நூறு பொன் தயார்தானே?

முத்தன்: தயார்தான். காலையில் கொடுத்துவிடுகிறேன்.

வேதாளம்: காலையிலா?... அதுவும் சரி! தளபதி அவர்களே! முத்தன் போகலாமல்லவா?

வெற்றிவேலன்: கூடாது. தண்டப் பொன்கள் வந்து சேரும் வரையில் இவன் காவலில் இருக்கவேண்டும். ஏய், யாரங்கே?... இவனைக் காவலில் வையுங்கள் ...

வேதாளம்: அய்யோ!... பெருமைக்குரிய பிரபு அவர்களே! அவனை விட்டு விடுங்கள். நானே, நாளை காலையில் பொன்களைத் தந்துவிடுகிறேன்.

வெற்றிவேலன்: முடியாது! வெற்றிவேலன் உத்திரவிடுகிறேன். குறுக்கே நிற்காதீர் நீர்!

முத்தன்: இப்படித்தான் சொல்லுகிறதா உங்கள் அரசாங்கத்தின் பாசறை நீதி? நன்றுயிருக்கிறது!

வெற்றிவேலன்: வீணே சாகாதே! விலங்கிடுங்கள் அவனுக்கு.

முத்தன் கைகளில் விலங்கு மாட்டப்படுகிறது. வேதாளம், தன் முகத்தை மூடிக் கொண்டு வெளித்திரும்புகிறான். அவன் போகும் போது முத்தன் வருத்தமுடன் பார்த்துக் கொண்டே,

“முத்தா! முன் ஜென்மக் கர்மவினை—முடி சூடிய மன்னனையும் விடாது!—பயப்படாதே, நானிருக்கிறேன்”

என்று கூறிவிட்டுப் போகிறான். முத்தன், தென்றல் மாளிகையின் ஒரு அறையில் அடைக்கப்பட்டு வெளியே காவல் போடப்படுகிறது.