பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 20 / 61

காட்சி—20]

காட்சி—20]

மூல ஸ்கேன் 69, 70, 71, 72, 73, 74, 75

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[ஆற்றங்கரையின் சோலையோரம்

முத்தாயியும், அவளது தோழி சுமதியும் தண்ணீர்க் குடத்துடன் நடந்து கொண்டிருக்கிறார்கள். முத்தாயியின் கையில் ஒரு பொட்டலம் இருக்கிறது.

சுமதி: பாவம், இரண்டு மூன்று நாட்களாகக் காதலனைக் காணாமல் கண்கள் பூத்தே போயிருக்கும். இல்லையா முத்தாயி!

முத்தாயி: சுமதி, போதும்—ஆரம்பித்துவிடாதே

சுமதி: ஏன், சொல்லச் சொல்ல மிகவும் வேதனையா இருக்கிறதோ.

முத்தாயி: அது எத்தகைய வேதனை என்பதை நீ அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

சுமதி: ஆண்டவனே! இந்தமாதிரி அனுபவங்கள் எனக்கு வரவேண்டாம்.

முத்தாயி: ஆண்டவனுக்கே வந்திருக்கிறதடி!

சுமதி: என்ன சொன்னாய்!!

முத்தாயி: கதைகளில்!

சுமதி: அதுதானே பார்த்தேன்—கஷ்டம் வந்தவுடன் கடவுள் நினைத்துவிட்டாயோ என்று! காதலனுக் கேற்ற காதலியல்லவா நீ!

முத்தாயி: சுமதி! சுமதி! அவர் அதோ வருகிறார்—நீ ஓடிவிடு!

சுமதி: வரட்டுமே—எனக்கொன்றும் வெட்கமில்லை.

முத்தாயி: எங்களுக்கிருக்குமடி—போய்விடு!

சுமதி: சரி போகிறேன் முத்தாயி! நான் குளித்து முடிவு தற்குள் வந்துவிடுவாயல்லவா?

முத்தாயி: வரும் வரையில் குளித்துக்கொண்டிரேன்—வெல்லத்தாலா செய்திருக்கிறது உன் உடம்பு—தண்ணீரில் கரைந்துவிட!

சுமதி: என் உடம்பு வெல்லமில்லை—இப்போது வந்து வர்ணிப்பார்—கற்கண்டே, தேனே, காய்ச்சிய பாகே! என்றெல்லாம்—அப்போது எண்ணிப்பார்—யாருடைய உடம்பு வெல்லத்தின் வார்ப்படம் என்று!

முத்தாயி: வாயாடி! சுமதி ... நான் உன்னைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தேன் என்றால் .....

சுமதி: விழலுக்கு நீர் இறைக்காதே முத்தாயி!... அதோ வருகிறார்—பேசு... பேசு... பேசிக்கொண்டேயிரு!... ஆனால் நான் மாத்திரம் ஆற்றோடு போய்விட்டேன் என்று எண்ணிவிடாதே. சீக்கிரம் வா!

சுமதி, சிரித்துக்கொண்டே ஆற்றுக்குப் போய்விடுகிறாள்.

முத்தாயி, முத்தனுக்கு நேராகப் போகாமல் ஒரு மலர்ச் செடிப் பக்கம் மறைந்து ஒரு மலரை எடுத்து அவன் மீது வீசுகிறாள். அவன் அதைப் பிடித்து, கசக்கி எறிந்தபடி வருத்தமுடன் உட்காருகிறான். முத்தாயி அவனிடம் சென்று,

முத்தாயி: ஏன் வருத்தமாயிருக்கிறீர்கள்?... இரண்டு நாட்களாக வரவில்லையே; நான் கோபித்துக்கொள்வேன் என்று முந்திக்கொள்கிறீர்களா?

முத்தன்: ஒன்றுமில்லை முத்தாயி ...

முத்தாயி: பிறகென்ன கவலை ... இதைச் சாப்பிடுங்கள்.

கையிலுள்ள பொட்டலத்தை அவிழ்த்து, தின்பண்டங்களை நீட்டுகிறாள்.

முத்தன்: எனக்கு ஒன்றும் வேண்டாம்.

முத்தாயி: உடம்புக் கென்ன? வேலை போய்விட்ட தென்று கவலையா? போனால் போகிறதே; இனிமேல் நாம் அடிக்கடி சந்திக்கலாம் அல்லவா!

முத்தன்: சந்திக்க முடியாது.

முத்தாயி: ஏன். அன்று நடந்தது போல் நடக்குமென்ற பயமா? அதற்கெல்லாம் துணிந்து விட்டேன்.

முத்தன்: தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். உன் தந்தையை என்னால் எதிர்க்க முடியாது.

முத்தாயி: அரண்மனையில் அலுவல் பார்க்கிறார் என்பதாலா?

முத்தன்: இல்லை. அவர், குயில் கூவ வேண்டிய இடம், குளிர்மலர்ச் சோலை யென்றிருப்பார்! நான் “இல்லை, குட்டிச் சுவரில்” என்று கூற முடியுமா?

முத்தாயி: நம்ப முடியாது. அவர் உங்கள் குளிர்மலர்ச் சோலையென்று கூறியிருக்கமாட்டார்.

முத்தன்: என்னைச் சொல்ல அவருக்கென்ன வைத்தியமா? எனக்கே தெரியுமே—நான் சோலைவன மல்ல; பாலைவன மென்று!

முத்தாயி: நீங்கள் பாலைவன மானால் நான் அதிலே வளரும் பேரிச்சை மரம்.

முத்தன்: முத்தாயி! பாலைவனத்திலே ஒட்டகம் கூட ஆகாரத்தை சேமித்துக் கொண்டுதான் பயணம் போகுமாம். நானோ, வாழ்க்கைப் பயணத்தை தொடங்குவதற்கே வகையற்றவன். வழி தெரியாதவன்.

முத்தாயி: வழி தானே உண்டாவதில்லை.

முத்தன்: நானே கண்டு பிடித்து விட்டேன்.

முத்தாயி: என்ன கண்டு?

முத்தன்: ஆமாம். ஒருவழி கண்டு பிடித்து விட்டேன்—ஒருவழி கண்டு பிடித்து விட்டேன்.

முத்தாயி: என்ன இது?... என்ன சொல்கிறீர்கள்?

முத்தன்: உன்னை மறந்துவிட முடிவு கட்டிவிட்டேன்.

முத்தாயி: விளையாடுகிறீர்களா?

முத்தன்: இல்லை. நிலைமை என் வாழ்க்கையோடு விளையாடிவிட்டது. நான் படையிலே போர்வீரனுக்குச் சேர்ந்துவிட்டேன்.

முத்தாயி: ஆ!

முத்தன்: வேங்கைப்புரத்து வீரர்களில் ஒருவன் நான்! இன்றோ நாளையோ, வேங்கைப்புரம் நான் வாழுமிடமாகிவிடும்.

முத்தாயி: யாரைக் கேட்டுக்கொண்டு, படையில் சேர்ந்தீர்கள்?

முத்தன்: நான் யாரைக் கேட்பது. ஏழை முத்தனைக் கேட்டேன். முத்தாயி, மாளிகை ராணியாக வேண்டியவள், அவன் எண்ணத்தை விட்டுவிட என்றான். காதல் முத்தனே கண்ணீர் விட்டான். கரகரத்த குரலிலே, கம்மிய தொனியிலே, ஏழை முத்தன், கட்டளையிட்டான், முத்தாயியை மறந்துவிட என்று! மறந்துவிட்டேன்—என் சிங்காரியை மறந்துவிட்டேன். என் சிந்தையில் குடியேறிய செல்வத்தை மறந்துவிட்டேன். மறந்துவிட்டேன்.

முத்தாயி: மறப்பீர்கள். ஏன் மறக்கமாட்டீர்கள்! மனம் குன்றமாகப் போய்விட்டால், உணர்ச்சியற்ற மரக்கட்டையாக மாறிவிட்டால் மறப்பீர்கள். மறக்கிறேன் என்று சொல்லாதீர்கள்—மனதார நம்பியவள் மலை உச்சியிலிருந்து தள்ளி விடுகிறேன் என்று சொல்லுங்கள். நீங்கள் மறக்கும்படியாக நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்—பேராசைக்கார தகப்பனுக்குப் பெண்ணாகப் பிறந்ததைத் தவிர! காதல் என்றால் என்ன, கண்டவர் உருவத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியா காதல்? கலைத்து எழுதும் சித்திரமா? அழியாத ஓவியம்—அசையாத இமயம்—காதல் என்று எண்ணியிருந்தேனே. அது பைத்தியக்காரத்தனந்தானா? நிலையில்லா செல்வத்திலே நீந்தி விளையாடு என்று எனக்கு நீதி போதிக்கிறீர்களே. சந்தைப் பொருளென்ன என்னை எண்ணிவிட்ட தந்தைக்கும் உங்களுக்கும் என்ன தான் வித்தியாசம்? ஏன் சிலையாக நின்றுவிட்டீர்கள்?

முத்தன்: முத்தாயி!

முத்தாயி: காதலன் மறந்துவிட்டான்—காதலி வேறிடம் பறந்துவிட்டாள் என்று என் சரித்திரம் முடியாது துரையே! அவன் வாழ்க்கைத் துறந்துவிட்டான்—என்றுதான் முடியும்—சம்மதந்தானே? அப்படியானால் இந்த ஆடும் மார்கழியில், அதோ ஓடும் வெள்ளத்தில்—இரண்டில் ஒன்றில் என் பிணத்தைப் பார்க்க தயாராகிக்கொள்ளுங்கள்.

முத்தன்: முத்தாயி—என்னை மன்னித்துவிடு.

முத்தாயி: மறதியை மறந்தும் நினைக்கமாட்டீர்களே.

முத்தன்: படைத் தளபதியிடம் பெயரைப் பதிவுசெய்து விட்டேனே.

முத்தாயி: செய்தால் என்ன. விலகிக்கொள்வது பெரிய விஷயமா?

முத்தன்: விலகிக்கொள்ளலாம். ஆனால்...

முத்தாயி: என்ன மறுபடியும் ஆனால்? வீரருக்கு அழகில்லை யென்று இலக்கணம் கூறுகிறீர்களா? நான் சொல்கிறேன் என்று கோபிக்காதீர்கள்! மன்னித்து விடுங்கள் என்னை. நீங்கள் சேர்ந்திருப்பது படையே அல்ல! நாட்டை அடிமையாக்கி யிருப்பவனின் கோட்டைக் காவலர்களில் ஒருவராக நீங்கள் போகிறீர்கள்.

முத்தன்: உண்மைதான். ஆனால் நான் சொல்லவந்தது...

முத்தாயி: என்ன?

முத்தன்: படையில் சேர்ந்து விலகினால் அதற்குத் தண்டம், நூறு பொன் தரவேண்டுமாம். இல்லையேல் விடுவிக்க மாட்டார்கள்.

முத்தாயி: நூறு பொன்! சரி—நான் தருகிறேன்.

முத்தன்: நீயா?

முத்தாயி: ஆமாம். என் திருமணத்திற்காக, அப்பா சேர்த்துவைத்து, யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருக்கிறார். இதற்கில்லாமல் அது வேறு எதற்காக? நாளை காலையில் அனுப்பிடுவேன் போதுமல்லவா.

முத்தன்: போதும்—யாரிடம் அனுப்புவாய்.

முத்தாயி: என் தோழி சுமதியின் மூலமாக அனுப்புகிறேன்.

முத்தன்: நானில்லாவிட்டாலும், அஞ்சல் மண், வேதாளத்திடம் கொடுத்துவிடச் சொல்!

முத்தாயி: சரி, அது போகட்டும். சாப்பிடுங்கள்.

என்று தின்பண்டங்களை அவன் வாயில் திணிக்கிறாள். அப்போது சுமதியின் பலத்த குரல்,

“முத்தாயி! ஆயிரம் தடவை குளித்துவிட்டேன். ஆற்றிலே தண்ணீரும் அற்றுவிட்டது. ஓடிவா சீக்கிரம்!”
“இதோ வந்துவிட்டேன்”

அவசர அவசரமாக முத்தன் வாயிலே தின்பண்டங்களை வைத்து அமுக்கி, அவனைத் திணற அடித்து விட்டு முத்தாயி—குடத்தை எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்கம் ஓடுகிறாள். ஓடும் போதே;

“நாளை, பொன்னுடன் சுமதியை அனுப்புகிறேன். விலக, மறந்து விடாதீர்கள்”

முத்தன் வாய் நிறைய உணவு இருப்பதால், பதில் சொல்ல முடியாமல் தலையை ஆட்டுகிறான். முத்தாயி அவனைத் திரும்பத்திரும்பிப் பார்த்துக் கொண்டே போய், சுமதியின் மீது முட்டிக் கொள்கிறாள். சுமதி இன்னும் ஆற்றிலே இறங்கவே இல்லை!—

இருவரும் மகிழ்ச்சி பொங்கிட ஆற்றில் நீராடத் துவங்குகிறார்கள்.