பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 18 / 61

காட்சி 18]

காட்சி 18]

மூல ஸ்கேன் 66, 67

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[முத்தனின் அறை

வேதாளம்: ஆமாம்—முத்தா! இப்படி எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடப்பாய்?

முத்தன்: உணவு கிடைக்கும் வரையிலும்.

வேதாளம்: நான் சொல்வதைக் கேள். பாளையக்காரர் உனக்கு எங்கேயும் வேலை தரக்கூடாதென்று உத்திரவு போட்டுவிட்டார். நீயோ ஆள் வாட்ட சாட்டமாய் இருக்கிறாய். தேகத்திலே நல்ல வலிமை இருக்கிறது......

முத்தன்: பாளையக்காரரை அடித்து நொறுக்கி விடலாம், இல்லையா?

வேதாளம்: பைத்தியக்காரா! நான் சொல்வதைக் கேட்டால் உனக்கு ஒரு கவலையும் இருக்காது.

முத்தன்: செத்துவிடலாம் என்கிறீரா?

வேதாளம்: இல்லையப்பா இல்லை.

முத்தன்: சாவு ஒன்றுதானய்யா; உலகத்தில் ஏழைகள் அழைத்ததும் ஓடிவரக்கூடியது.

வேதாளம்: முத்தா! பொருளுக்குப் பொருள். பதவிக்குப் பதவி, பார்க்கிறவன் பயப்படுவான். படையிலே சேர்ந்துவிடு.

முத்தன்: படையில்!??

வேதாளம்: பயப்படாதே—நான் சேர்ந்துவிடுகிறேன். சிற்றரசு விஷயத்தில் தலையிட பாளையக்காரருக்கு அதிகாரமில்லை. ஆகவே அவரால் தடுக்கவும் முடியாது. என்ன சொல்லுகிறாய்?... யோசி!

[உள்ளே போகிறான்]

முத்தன்: [தனக்குள்]

படைவீரன்!...

ஆம். முத்தாயி! உன்னை மறக்க சரியான வழி!... சரியான வழி! என்னால் உன் தந்தை பிணமாக வேண்டியதில்லை; நீயும் தரித்திர லட்சுமியாய் மாற வேண்டியதில்லை. முத்தாயி—நீ இளவரசன் சுகதேவின் மனைவி! நான் போர்வீரன்! நான் உன்னைக் கெடுக்கவேண்டாம்!... நான் போர்வீரன்! வேங்கை புரத்துப் படையிலே ஒருவீரன்! பழுதூரை அடிமையாக்கியிருக்கும் சிற்றரசன் சேனையிலே ஒருவீரன் நான்!—அவமானந்தான்! ஆனாலும் உன்னை மறக்க வேறுவழி?... இல்லை, இல்லவே இல்லை. ஆகையால் நான் போர்வீரன்! போர்வீரன்!