பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 17 / 61

காட்சி 17]

காட்சி 17]

மூல ஸ்கேன் 63, 64, 65

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[தென்றல் மாளிகை.

வெற்றிவேலன் முன்னிலையில், படைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வேதாளமும் அங்கே இருக்கிறான். படையில் சேருபவர் பலர் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவராக சோதனை செய்யப்பட்டு படையில் பதிவு செய்யப்படுகிறார்கள். ஒரு வாலிபனின் தோளை தட்டியபடி,

வெற்றிவேலன்: திடமான தோள்கள் உனக்கு—நீ விரைவில் என்னைப்போல் ஆகிவிடலாம். உன் பெயர் என்ன சொல்லு; வீரப்பனா? சபாஷ்!—

இன்னொருவனைக் காட்டி;

வேதாளம்: இவன் நெஞ்சு மிகவும் உறுதியானது. உனக்குப் படையிலே ஊதியம் மாத்திரமல்ல; பரிசுகள், பதக்கங்கள் எல்லாம் ஏராளமாகக் கிடைக்கும்.

அவன்: சரிதான்; அய்யா அஞ்சல் மண் வேலையை விட்டு விட்டு, ஆருடம் பார்த்தா நல்ல வரும்படி வரும்.

அவனை, வெற்றிவேலன் தட்டிக்கொடுத்து,

வெற்றிவேலன்: சபாஷ்! சாமர்த்தியமான பேச்சுக்காரன். சைன்யத்திலே சரியான புகழ் இருக்கிறது இவனுக்கு!

இன்னொருவனைக் காட்டி, அவன் தலையைத் தடவியபடி,

வேதாளம்: தம்பிக்கு நாறு அடி விழுந்தாலும் நொறுங்காது—தலைக்கனம் அதிகம்!

அவன்: அப்ப, யுத்த மந்திரியார்க்கூட வரலாம்.

வெற்றிவேலன்: ஆமா ஆமாம்!... சரி! இப்போது உங்களையெல்லாம் படையில் சேர்த்தாகி விட்டது. நீங்களும் கையொப்பம் செய்து விட்டீர்கள். சேர்ந்தவர்கள் யாராவது நாளைக்கு விலக வேண்டுமென்று நினைத்தால்—நூறுபொன் தண்டம், செலுத்த வேண்டும்.

வீரப்பன்: நாங்க, எதற்கு விலகப் போகிறோம்.

வெற்றிவேலன்: சந்தோஷம், நீங்கள் எல்லாம் இப்போது போகலாம். விரைவில் வேங்கையூரம் போக வேண்டியிருக்கும். தயாராயிருங்கள்.

எல்லோரும் தளபதியை வணங்கிவிட்டுப் போகிறார்கள். வெற்றிவேலன், வேதாளத்தைப் பார்த்து—

வெற்றிவேலன்: வேதாளம்! இன்று படையில் பத்து பேரை சேர்த்திருக்கிறீர். இல்லையா!

வேதாளம்: ஆமாம்.

வெற்றிவேலன்: இந்தாரும். [பொன் நாணயங்களைத் தருகிறான்]

வேதாளம் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு,

வேதாளம்: பொன் இருக்கட்டும் பொன்! உங்கள் பூரண தயவு இருந்தால் போதும். பிறகு... நான் வரட்டுமா.

வெற்றிவேலன்: சரி. போய்வாரும்—நன்றி!

தென்றல் மாளிகையின் வாயிற்புறத்திலே வெளியே வந்து கொண்டிருக்கும் வேதாளம், தனக்குள்;

வேதாளம்: லட்சுமிதேவி வர ஆரம்பித்து விட்டாள் என்னிடம்! வேதாளம்—இந்தப் பாதையிலேயே வேகமாக முன்னேறு! பொருள் சம்பாதிக்க உலகத்திலே எவ்வளவோ பொருத்தமான வழிகள்!

இனிப்பான பேச்சு ... அதிலே ஏமாறும் இளிச்ச வாயர்கள் ... இந்த இரண்டுக்குமிடையிலே என் போன்றவர்களுக்கு வாய்ப்பு!