காட்சி 16 / 61
காட்சி 16]
காட்சி 16]
மூல ஸ்கேன் 58, 59, 60, 61, 62
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[அருசல் மண்
அருசல் மண்ணின் அலுவலகம் பூட்டப்பட்டிருக்கிறது. அதன் திண்ணைப் புறமாக உள்ள அறையில் முத்தன் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அவன் உள்ளத்தில் ஊடுறுவிப் பாய்ந்த வண்ணமிருக்கின்றன போலும்!
“அடிமைப் பழுதியிலே வீசியெறியப்பட்ட பழுதூர்! அந்தப் பழுதூருக்கு ஒரு பாளையக்காரன்—ஊரைக் கோட்டைவிட்டவன் ... அந்த அடிமைத் தலைவனுக்கு சில அதிகாரம். அந்த அதிகாரத்திற்கு ஆணவ முத்திரை. உடலே ஓடாகத் தேய்த்து உழைத்திருக்கிறாள், என் அம்மா—அந்த அரண்மனைக்கு! அதற்கு ஒரு நன்றி—ஒரு விசுவாசம்! நன்றி காட்டாவிட்டாலும்—நன்மை செய்ய மனமில்லாவிட்டாலும்—நாச வேலைகளில் ஈடுபடாமலாவது இருக்கக் கூடாதா? அவர்களிடமும் வேலை கிடையாதாம்—அவர்களின் அதிகாரத்திற்குட்பட்ட இடங்களிலும் வேலை தரக்கூடாதாம். அந்த அரண்மனையிலே நான் ஒரு அடிமை! இல்லை—இப்போது அடிமையில்லை! ஆணவ வால் வகையற்றுப் போனவன். உலகில் பிறந்தவர்கள் எல்லாம் பழுதாரில்தானே வாழுகிறார்கள். வேறு இடமே கிடையாதா—வயிறு வளர்க்க! வழிதேட! ஆனால் உலகை விட்டுச் சிறப்புடைய என் முத்தாயி பழுதாரில்தானே வாழ்கிறாள்—அவளை விட்டு நான் எங்கே போவேன்!”
முத்தன் தனக்குள் பேசிக்கொண்டிருந்தான். “முத்தா!” என்று ஒரு குரல் கேட்கிறது. பார்க்கிறான்; திருசங்கு எதிரே நிற்கிறான்.
திருசங்கு: பயப்படாதே முத்தா!
முத்தன்: பயமென்ன, அரண்மனையிலே ஏதாவது புதிய ஆணை பிறந்திருக்கும்.
திருசங்கு: அரண்மனைக்கும் நான் வந்ததற்கும் தொடர்பே இல்லை!
முத்தா! அன்றைக்கு சோலையில் நடந்த விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். முத்தாயியைப் பற்றி சுகதேவன் தவறாக நினைக்கக் கூடாதென்றுதான் உன்மேல் மட்டும் பழியைப் போட்டேன். ஆண் களுக்கு சகஜம்—உலகம் ஒப்பிவிடும். பெண் கட்டுக் கெட்ட பெயர் வந்தால் அழியாது பார்!
முத்தன்: நீங்கள் எதுபற்றி பேச வந்திருக்கிறீர்கள்?
திருசங்கு: உனக்கும் என் மகனுக்கும் உண்மையான அன்பு இருப்பது எனக்குத் தெரியும்.
முத்தன்: இப்போதாவது தெரிந்ததே!
திருசங்கு: கேள் முத்தா! நீதான் என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். நான் சொல்வதற்கு நீ சரி என்று சொல்லவா?
முத்தன்: என்ன சொல்கிறீர்கள்?
திருசங்கு: உன்னைத் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று கூறிவிட்டாள் முத்தாயி.
முத்தன்: இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லையே!
திருசங்கு: நான் உன்னிடம் வந்திருப்பது .....
முத்தன்: ஓரளவுக்குப் புரிகிறது.
திருசங்கு: கல்யாணம் செய்துகொள்ள நீங்கள் இருவரும் முடிவு செய்துவிட்டது எனக்குத் தெரியும்.
முத்தன்: இருந்தாலும் என் சம்மதத்தைக் கேட்கிறீர்கள்; ஒருமுறைக்கு.
திருசங்கு: முத்தா! என் மகள் எப்படி வாழவேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன் தெரியுமா?
முத்தன்: உங்கள் எண்ணம் போலவே எங்கள் வாழ்க்கை நடக்கும்.
திருசங்கு: நடக்காது முத்தா—நடக்காது! நடத்த முடியாது உன்னால்—அதற்குத்தான் உன்னிடம் கெஞ்சிக் கேட்க வந்தேன்—என் கைக்கிளியை! கேள் இதை! இப்போது நினைத்தாலும் முத்தாயி—பாளையக்காரர் அரண்மனையிலே—பளிங்கு மண்டபத்திலே—வாழ முடியும். ஆனால் நீ வீசிய வலையிலே விழுந்துவிட்டாள்.
முத்தன்: நான் வீசவுமில்லை, அவள் விழவுமில்லை—நாங்களிருவருமே காதல் வலையில் சிக்கிவிட்ட புறாக்கள்!
திருசங்கு: அந்த வலையை அறுத்து என் மகளை விடுவிக்க வேண்டும். விடுவித்த பிறகு அவளைத் துரத்தும் வல்லூராக நீ இருக்கக்கூடாது!
முத்தன்: துரத்தவேண்டிய தூரத்தில் அவள் இருக்க மாட்டாள்! முத்தாயி; என் தோளில் தொத்தும் கிளி.
என்னடா—மருமகப்பிள்ளை இப்படிக் கூச்சமின்றிப் பேசுகிறான் மாமனிடம் என்று எண்ணுகிறீரா—மன்னிக்கவும்.
திருசங்கு: முத்தா! வீணைக் கெடுக்காதே, ஒரு குடும்பத்தை. நீ வாழ வகையற்றவன்—வாழமுடியாதவன். என்னை விட்டுத் தள்ளு...... உன்னைப் போல ஒரு ஏழைக்குப் பெண் கொடுக்க எந்தப் பித்துப் பிடித்த தகப்பனாவது ஒப்புக்கொள்வானா? உன்னால் நடத்த முடியுமா, ஒரு குடும்பத்தை? நீயும் மனிதனாயிற்றே—கல்யாணம் பண்ணிக்கொண்டு, மாமனார் வீட்டை எதிர்பார்த்துக் கிடக்க உனக்கு மானமில்லாமலா போய்விட்டது. முத்தாயி சின்னப் பெண்—உலகம் தெரியாதவள்—காதல் பேசுகிறாள். இப்போது! கல்யாணமான பிறகு, காதல் கீதல் எல்லாம் கடையைக் கட்டிவிடும். காதுக்கு வைரத் தோடு, கழுத்துக்கு முத்துமாலை—இப்படி மாறிவிடும் பெண் கழுதைய புத்தி! முடியுமா உன்னால் அவைகளை வாங்கித்தர என் பெண்ணுக்கு! குடும்பம் இருக்கட்டும், திருமணத்திற்கு நிச்சயம் செய்ய ..... ஒரு பொன் நாணயம் வைத்து புரோகிதருக்கு தக்ஷிணை கொடுக்க வழியிருக்கிறதா உன்னிடம்.
முத்தா! ஆத்திரமாகப் பேசுகிறேன் என்று நினைக்காதே! இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். அரண்மனையிலே வேலை பார்த்தாய்—அதுவும் போய்விட்டது! அஞ்சல் மனைக்கு, குதிரை தேய்த்துக் கொடுத்து அதற்குக் கூலியாக இந்த உள்ளங்கை போன்ற அறையிலே வசிக்கிறாய்—அந்த வேலையும் நீ பார்க்க முடியாது; இனிமேல்! அரண்மனை உத்திரவு தடுக்கிறது! இனி—வீட்டு நிழல்கள்—மரத்தின் நிழல்கள்—இவைதான் உனக்கு வாசஸ்தலம்! உன் வறுமையைப் பரிகசிக்கிறேன் என்று கவலைப்படாதே! கவலையோடு கவலையாக இன்னும் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நீ உணர்ந்து பார்ப்பதற்காக. உனக்கு வயதாகியிருந்து—உலகத்தோடு ஒட்டி ஒழுகும் பழக்கமிருந்து—உனக்கு ஒரு மகனும் இருப்பதாக வைத்துக்கொள். அந்த மகன் தகப்பன் பெயர் தெரியாத ஒரு மணமகனுக்கு திருமணம் செய்துகொடுப்பாயா?
நீ செய்வாயோ என்னமோ—என்னால் முடியுமா? என் வைதீக மனம் இடம் கொடுக்குமா? யோசித்துப் பார்!—உன் அம்மா காவேரி என்று தெரியுமே தவிர அவள் உன்னை யாருக்குப் பெற்றாள் என்பது .....
முத்தன்: அய்யோ போதும்!...
திருசங்கு: கதையைப் பொத்திக்கொண்டு பயனில்லை—கண்ணை அகலமாகத் திறந்தும் பயனில்லை. கருத்துக் கதவைத் திற! கொஞ்சமாகத் திற போதும்! சீரும் சிறப்பும், சிங்கார மாளிகையும் அழைக்கிறது என் மகளே! நீ அதை மறுக்கிறாயா? மறுக்கிறாயா முத்தா? மறுத்தால் அது அவள்மேல் உனக்குள்ள காதலுக்கு அடையாளமல்ல. அவளை சீரழிக்க வேண்டுமென்ற உன் கொடிய எண்ணத்துக்குத்தான் அடையாளம்! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்—உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். அவளை மறந்துவிடு. இல்லாவிட்டால் முத்தாயி, தன் தகப்பனை மறந்து விடவேண்டும். அப்படி மறந்துவிட்டால், மரக்கிளையிலே அனாதையாக, அந்தரத்திலே தொங்கும் இந்த திருசங்குவின் பிணம் உன்னை சபிக்கும்—பிணம் உன்னை சபிக்கும்!
முத்தன்: அய்யா! என் உயிரை மறக்கச் சொல்கிறீர்—மறந்துவிடுகிறேன்.
திருசங்கு: [மகிழ்ச்சி பொங்க] முத்தா!
முத்தன்: போய்வாருங்கள்.
திருசங்கு பூரிப்புடன் அதைவிட்டுப் போகிறான். முத்தன் அந்தச் சிறிய அறைக்குள் நடக்க ஆரம்பித்தான். அந்த நடையை ஒரு சாலையிலே நடந்திருந்தால் எத்தனையோ காத தூரத்தைக் கடந்திருக்க முடியும்!
★