பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 15 / 61

காட்சி 15]

காட்சி 15]

மூல ஸ்கேன் 54, 55, 56, 57

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[மடாலயம்

ஊர்மக்கள் கூடியிருக்கிறார்கள். தளபதி வெற்றிவேலன், மருத்துவர் பூபதி, வேதாளம், மற்றும் பலர் இருக்கிறார்கள். மாயைகநாத ஸ்வாமிகளின் சொற்பொழிவு நடைபெறுகிறது.

சாமியார்: அன்பர்களே! இதுவரை தளபதி வெற்றி வேலன் படையின் பயன்கள் பற்றி அறியாதோர் உரை நிகழ்த்தினார். அவர் சொற்களிலே சுவையும்—சூடும் நிறைந்து இறைந்து கிடந்தது. வேங்கை பாய்ந்து அரசு காக்கும் வீரர் முகாமிலே வெற்றி தோளுடையோர் குவியவேண்டும் என அழைத்தார் வெற்றிவேலன். நானும் அதைத்தான் சொல்லப் போகிறேன்.

பகவான் பரந்தாமன், பார்த்திபனே பாரதப் போரில் கலந்துகொள் என்று சொல்லியிருக்கிறார். போர்கூடாது—அது ஒரு வெறி—என்றெல்லாம் போதனை செய்கிறார்களே இன்று. அவர்கள் பகவத்கீதையைப் படிக்கட்டும். போரின் அவசியம்பற்றி அந்தப் புல்லாங்குழலோதி எவ்வளவு கூறியிருக்கிறார் என்பது புலனாகும். கூறியது மட்டுமா—அந்த தின தயாளனே தேர்ச்சாரதியாகவும் அமர்ந்திருக்கிறார். சுப்பிரமணியக் கடவுள் யுத்தகளத்திலேதான் ரத்த வெறிகொண்ட ராக்ஷதர்களைக் கொன்று குவித்தார். பெண்மக்களும் போரில் ஈடுபட்டனர் புராண காலத்திலே! பாமா படைக்கோலம் பூண்டு நரகாசுரனைக் கொன்றிருக்கிறாள். ஆகவே தெய்வங்களுக்கும் உடன்பாடுடையதுதான் போர் புரிதல் என்னும் திருத்தொண்டு. சிவன் கை சூலமும்—சிவகுமாரனின் வேலும்—விஷ்ணுவின் சக்கரமும்—எதைக் குறிக்கின்றன—சமாதானத்தையா? சமரையா? ஆகவே அன்பர்களே! போர்வீரர்களாக மாறிடுங்கள்!

சண்டைக்குப் போவோர் அத்தனைபேரும் மாண்டுவிடுகிறார்கள் என்பதில்லை. விதி இருப்பவர் எங்கும் எப்படியும் மாள்வர். வாள் பிடிப்பதால் மட்டுமல்ல, வாழைப்பழத்தோல் சறுக்கி விழுந்து வாழ்வு முடிந்தோர் பலருண்டு.

அப்படியே இறந்திடினும் யுத்தத்தில் இறந்தால் வீரசொர்க்கம் விண்ணிலே காத்திருக்கிறது. வீரனுக்கு மண்ணில் மட்டுமல்ல—விண்ணிலும் புகழ்தான். வளைந்துபோன தோள்களிலே வாகைமாலை ஏந்துங்கள்—அதற்காகக் கைகளில் வாளேந்துங்கள்! வேலையில்லாதவருக்கு வேலை. வாழ்வற்றவருக்கு வாழ்வு. வீரமுள்ளவருக்கு விருந்து. நாடுகாக்கும் நல்லவர்களே! இன்றே சேருங்கள்! ஆண்டவன் துணையிருப்பான்! திருச்சிற்றம்பலம். தெய்வமே துணையென திண்டோள் தட்டிக் கிளம்புங்கள்! திருச்சிற்றம்பலம்—அறநெறி வாழ்க!

மக்கள்: திருச்சிற்றம்பலம்.

கூட்டத்தினர் கலைந்து போகிறார்கள். தளபதியும் சாமியாரும் தனியிடத்தில் சந்திக்கிறார்கள்.

தளபதி: மிகவும் நன்றி செலுத்துகிறேன்!

சாமியார்: கடமையைச் செய்தேன்.

தளபதி: தங்களைப் போன்ற மடாதிபர்கள் நாட்டுத் தொண்டாற்றக் கிளம்பிவிட்டால் இரண்டு உலகு வெளிச்சமடைந்துவிடும்.

சாமியார்: முடிந்தவரையில் முயலுகிறேன்.

தளபதி: பின்னர் சந்திக்கிறேன்! வருகிறேன்.

சாமியார்: திருச்சிற்றம்பலம்—அருள் நெறி வாழ்க!

சாமியார் தன் பீடத்தருகே வருகிறார். மருத்துவர் பூபதி மட்டும் அங்கேயே அமர்ந்திருக்கிறார். அவரைக் கண்ட சாமியார் திடுக்கிட்டு—

சாமியார்: என்ன பூபதி! நீர் இன்னும் போகவில்லையா?

பூபதி: என்னயே நான் மறந்துவிட்டேன், சாமியாரே! உமது சொற்பொழிவில் உள்ளத்தையே தொலைத்து விட்டேன். ஆகா—என்ன பொருள் பொதிந்த வார்த்தைகள்—எத்தகைய போதையூட்டும் சொற்கள்.

சாமியார்: போமய்யா! உயிரை வாங்காதீர்!

பூபதி: போகிறேன்! ஹிஹிஹி! “வாளையும் வேலையும் கொண்டாடே—வைகுந்தவாசனைத் தொழு! கையிலே கேடயம் ஏந்தாதே—கைலாசநாதனின் திருநீரை ஏந்து!” அது எங்கே? இப்போது “வளர்ந்துபோன தோள்களிலே வாகைமாலை ஏந்துங்கள். அதற்காகக் கைகளில் வாளேந்துங்கள்!!” இது எங்கே? எல்லாம் மாயை! மாயாஜாலம்! இல்லையா சாமியாரே!

சாமியார்: பூபதி! போதும். போய் வாரும்.

பூபதி: புகழ்கிறேன் சாமியாரே! புகழ்கிறேன். ஆகா ஆண்டவனே! நீ எது எதற்குத்தான் பயன்படுத்துகிறாய்! உலகத்திலே தோன்றும் மகான்கள் எல்லாம் உன் அவதாரமென்றிருக்கிறார்கள். பரமாத்மாவாக அவதரித்து பகவத்கீதையை உபதேசித்து அர்ச்சுனனைப் போர் புரியச் சொன்னாய்! பிறகு பகவான் புத்தராகவும் நீயே அவதரித்தாயாம்! போர் புரிவது தீது என்று அசோகனுக்கு நல்வழி காட்டினையாம்! நீயே மரணப்படும்போது இந்த சாமியார் எம்மாத்திரம்! ஓ மறந்து விட்டேன். இவரும் மகான்! உன் அவதாரம்தானே!

சாமியார்: பூபதி...

பூபதி: போதும் சாமியாரே! போற்றி! போற்றி! எனப் பாடுகிறேன்—பொறுமையிழக்கிறீரே—ஏன்?

தளபதி கூறினாரே உம்மிடம்; அதையும் கேட்டேன். உம்போன்ற மகான்கள்; நாட்டுத் தொண்டு செய்யவும் வேண்டும் என்றார்! வேண்டாமய்யா வேண்டாம். இந்த அடிமை நாட்டு மக்கள், பாவம்—நன்றியிருக்கட்டும்! நேரடியாக உமது தேசத் தொண்டை அவர்கள் அனுபவிக்க வேண்டாம்! அருள் நெறி வாழ்வது உம்போடு இருக்கட்டும்.

சாமியார்: சாது மிரண்டால் காடு கொள்ளாது—பூபதி!

பூபதி: மிரளுவது சாது அல்ல! சூது! வாது! தீது! இவைகள்தான் மிரளுகின்றன.

சாமியார்: நமக்குள் என்னய்யா இப்படி வம்பு!

பூபதி: நமக்குள் என்ன—அந்த ரகசியத்தை சொல்லி விடுமே.

சாமியார்: பூபதி—உம்மைக் கும்பிடுகிறேன். போய் விடும்!

பூபதி: போகிறேன்—ஆனால் சாமியாரே! நினைவிருக்கட்டும்; பொய் கொஞ்சம் கொஞ்சமாகப் போதாகி மலரும்! ஆனால் உண்மை திடீரென வெடித்துவிடும்! ஹ ஹ ஹா வருகிறேன்.

பூபதி போகிறார்—சாமியார் பெருமூச்சு விட்டு பீடத்தில் உட்காருகிறார்.