காட்சி 13 / 61
காட்சி 13
காட்சி 13
மூல ஸ்கேன் 50, 51
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
“இளையராணி! என்றுமில்லாத இந்த அக்கிரமத்துக்கு எப்படி துணிந்தாள்? கல்யாணமே தேவையில்லை யென்று கூறி கன்னிப்பெண்ணாக வாழத் கங்கணம் கட்டியவள் “கண்ணு வாராய்!” என்று என்னை அழைக்கிறாள்! வயதோ—நாற்பது ஆகப்போகிறது. இதுவரையிலே வைராக்கியத்தைக் காப்பாற்றியவள் “வா அருகே!” என்று ஒரு குதிரைக்காரனைக் கூப்பிடுகிறாள். இப்படிப்பட்டவள் திருமணம் வேண்டாமென்று காரணம்தான் என்ன? கன்னியா? கள்ளியா? புரியாத புதிர்! கோமாளியின் தங்கை—குதிரைக்காரனிடம் கொஞ்சிடத் தாவுகிறாள். “ராஜா பர்த்துருஹரி” கதைத்தான் கேட்டிருக்கிறேன். இது அதைவிட வேடிக்கையாயிருக்கிறதே! சரி, சரி—இனி நமக்கு இந்த இடம் பொருத்தமில்லை. இங்கே இனியும் இருந்தால்—அடங்கிக்கிடந்து இப்போது அலைமோதும் அவள் ஆசை வெள்ளத்திலே எங்கேயோ ஒரு ஆபத்தான இடத்துக்கு அடித்துக்கொண்டு போகப்படுவான் இந்த முத்தன்! வயிறு வளர்க்க—வாழ்க்கையை நகர்த்த ஒரு இடம் இருந்தது! அதையும் கெடுக்கும் ஆபத்து—அன்பு வடிவத்திலே வந்துவிட்டதே!
பூங்காவனம்—ஹ ஹ ஹ பூங்காவனத்திலே புயல் புகுந்துவிட்டது. அதன் எதிரே நிற்க நம்மால் முடியாதப்பா முடியாது! முத்தா முழுக்குப் போட்டுவிடு அரண்மனை வேலைக்கு!”
பூங்காவனத்திடமிருந்து ஓடிவந்த முத்தன் மனதிலே இப்போன்ற குமுறலும்—கொந்தளிப்பும் எழுந்தது. அவன் அரண்மனை வாயிலைத் தாண்டவில்லை. அப்போது, சுகதேவின் குரல் எழுந்தது.
“ஏ முத்தா!”
“என்ன சங்கு?”
“இனிமேல் நீ அரண்மனைக்குள் நுழையக்கூடாது”
“மிகவும் நன்றி”
“உனக்கு வேலையில்லை என்று நமது உத்திரவு”
“ஒரு ஏழை, தேவை என்று கேட்டதை இப்போது தான் முதன் முதலாகத் தருகிறது இந்த உப்பரிகை!”
“என்னடா தேவை என்று கேட்டாய்?”
“வேலையிலிருந்து விலக்கிவிடு” என்று கேட்கலா மென்றிருந்தேன் — கேட்காமலே — நீ நினைத்ததைத் தருகிறீர்கள்.”
“சரி போடா, வேலையில்லை என்றதும் — பழம் புளிக்குமென்றிருன்.”
“பாவம்—பழம் நழுவிப் பாலில் விழுந்ததும்—அதை வேண்டாமென்று இந்த முத்தன் வெறுத்துவிட்டு வந்ததும் உனக்கு எப்படித் தெரியும்? வருகிறேன். வணக்கம்.”
★