பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 12 / 61

காட்சி 12]

காட்சி 12]

மூல ஸ்கேன் 47, 48, 49

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[பூங்காவனத்தின் மாளிகை

அவளுக்கு ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை. அங்குமிங்கும் அலைந்து கொண்டேயிருந்தாள். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஏதோ ஒரு பயங்கர உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டவள் போலத் தோன்றினாள். அவளையறியாமலே ஏதோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள். விளக்கு மங்கலாக எரிந்தது. அதைப் பிரகாசமாகத் தூண்டி விட்டாள். அந்த வெளிச்சத்திலே அவள் கண்களில் நீர் தேங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. அவளது மாளிகை கச்சிதமாக அமைந்தது. அதிக ஆடம்பரமில்லாமலும் ஆணவ அலங்காரத்திற்கு குறைவில்லாமலும் இருந்தது. தங்கத்தினால் ஆன நீண்ட உயரமான முக்காலிகள். அவைகளிலே பீங்கானால் செய்யப்பட்ட அழகான சிலைகள். இரண்டு புறாக்கள் ஜோடியாக அமர்ந்திருக்கும் அந்த மோகன நிலையை எவ்வளவு அழகாக வடித்தெடுத்திருக்கிறான் அந்த சிலையை வார்த்தவன். அதற்கடுத்தபடியாக தூரத்திலே நின்று துள்ளி விளையாடும் கன்றுக் குட்டியும் அதைத் தன் நாவினால் தடவிக் கொடுத்து அன்பு காட்ட முடியாமல் கயிற்றால் கட்டுண்டு தவிக்கும் பசுவும் ஆகா! எத்துணை அழகான கலைப் படைப்பு. சீன நாட்டுப் பீங்கான் பொம்மைகளின் சிங்காரமே சிங்காரம்! மான்தோலைப் போர்த்திக் கொண்டு ஒரு வேங்கை உட்கார்ந்திருக்கிறது. ஆனால் வேங்கையின் முழு உடலையும் மறைப்பதற்கு போதவில்லை. அப்படி ஒரு பொம்மை அந்த இடத்தை அலங்கரித்தது. அந்த உயிர் நிறை சிலைகள் யெல்லாம் பூங்காவனம் எத்தனையோ முறை பார்த்திருக்கிறாள். ஆனாலும் இப்போதும் அவைகளை அவள் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் கண்கள் அடிக்கடி வாயிற் புறத்தை வட்டமிட்டுத் திரும்பியபடி யிருந்தன. காலடி ஓசை கேட்கிறதா என்று கவனித்தபடி இருந்தன காதுகள்! “முத்தன் வருவானா?” என்று ஆவல் வெளிப்பட்டபடி துடித்தது அவள் இருதயம். உட்கார்ந்தாள்—எழுந்தாள்—நின்றாள்—உலவினாள்—அயர்ந்தாள் மீண்டும் உட்கார்ந்தாள்—படுக்கையில் சாய்ந்தாள். வாயிற் கதவுப்பக்கம் ஓசை கேட்டது. திடுமென எழுந்தாள். ஆம். அவன் வந்து விட்டான். முத்தன் வந்தே விட்டான். பூங்காவனம் ஏதோ பேச முயன்றாள்—முடியவில்லை. முத்தனும் மரமானான். அவன் உடலிலே வியர்வை அரும்பிக் கொட்டியது.

பூங்காவனம் தன்னைக் கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டாள். பேசத் துவங்கிறாள்.

“வா—முத்தா—வா!”
“என் கூப்பிட்டீர்கள்?”
“சொல்கிறேன்—அருகே வா”
“வேண்டாம்—இங்கே இருக்கிறேன்”
“என் கண்ணு! என் அருகே வா!”
“ஆ!”
“பயப்பட்டாதே”

முத்தனுக்கு நிற்க முடியவில்லை. பூங்காவனம் அவனிடம் முன்னேறி ஒரு அடி எடுத்து வைத்தாள். அவ்வளவுதான்—முத்தன் வெளியே ஓட ஆரம்பித்து விட்டான். “முத்தா! முத்தா!” என்று பூங்காவனம் அலறினாள். அவன் நிற்கவில்லை. பூங்காவனம் ஓடிப்போய் தன் படுக்கையில் விழுந்து விம்மியழ ஆரம்பித்து விட்டாள்.

பாவம்: அந்த சீனப் பீங்கான் சிலைகள் அப்படியே அவளைப்பற்றி நின்றுகொண்டிருந்தன.

காதற் புறாக்கள்—கன்றை நாடும் பசு—மான்தோல் வேங்கை, மூன்று சிலைகளும், முத்தன் ஓடியதைப் பற்றியோ இளையராணி பூங்காவனத்தின் இதயம் முகாரி ராகம் இசைப்பதைப் பற்றியோ கவலைப்படாமல் நிரந்தரமான கலை விருந்தை அளித்துக் கொண்டிருந்தன.