காட்சி 11 / 61
காட்சி 11
காட்சி 11
மூல ஸ்கேன் 45, 46
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
குதிரைக் கொட்டடி
முத்தன் குதிரைகளை ஒழுங்காக கட்டி தீனி வைத்துக்கொண்டிருக்கிறான். அந்தக் காட்சியை இரண்டு கண்கள் கனிவோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன. வேலையிலேப்பட்டிருந்த முத்தன் இடமொரு திரும்பவே அந்தக் கண்கள் சந்தித்துவிடுகின்றன. ஆம்—பூங்காவனம் தான் நின்றுகொண்டிருக்கிறாள்—முத்தனைப் பார்த்த படி.
முத்தன்: இளைய ராணி! என்னவேண்டும் தங்களுக்கு!
பூங்காவனம்: எதுவுமில்லை முத்தா! ... உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.
முத்தன் திகைத்து நின்றுவிடுகிறான். அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக திருசங்கு வந்து கொண்டிருப்பதை பூங்காவனம் கவனித்து விடுகிறாள். உடனே முத்தனிடம்,
பூங்காவனம்: முத்தா! வேலை முடிந்ததும் என் மாளிகைக்கு வந்து விட்டுப் போ! மறந்துவிடாதே! அவசியம் வரவேண்டும்.
என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள். முத்தனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. உலகமே சுற்றுவது போல் தெரிகிறது. வேலையிலேயே மனம் செல்லவில்லை. அப்படியே நின்ற இடத்திலேயே முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறான்.
“எதுவுமில்லை முத்தா! உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும்”
இந்த வார்த்தைகள் அவன் கண்களை மூட வைத்துவிடுகின்றன. சிந்தனை சுழல்கிறது.
“என் மாளிகைக்கு வந்துவிட்டுப் போ! மறந்துவிடாதே—அவசியம் வரவேண்டும்”.
அவனோ, நினைவையே இழக்கச் செய்து விட்டன இந்த வார்த்தைகள். எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரியாது. கடைசியாக குதிரையின் பின் கால்கள் தந்த ஒரு உதைக்குப் பிறகே அவன் சமாளித்துக்கொண்டு எழுந்து நின்றான்.
★