பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 10 / 61

காட்சி 10

காட்சி 10

மூல ஸ்கேன் 42, 43, 44

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

அரண்மனையில்—பாளையக்காரர் மாளிகை. நாய்க்குட்டியைத் தடவிக்கொடுத்தபடி பலதேவர் உட்கார்ந்திருக்கிறார். அவரது மனைவியும், பூங்காவனமும் சதுரங்கம் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதை பலதேவர் ரசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே சுகதேவன் வேகமாக நுழைகிறான்.

சுகதேவ்: அப்பா! உடனே நீங்கள் ஒரு உத்திரவு போடவேண்டும்.

பலதேவர்: உத்திரவா?... என்ன சுகதேவா?

சுகதேவ்: குதிரை தேய்க்கும் முத்தன் உடனே வேலையைவிட்டு நீக்கவேண்டும்.

பலதேவர்: காரணம்?...... அவன் சாதுவான கழுதை யாயிற்றே!

சுகதேவ்: நமது திருசங்கு இருக்கிறானே—அரண்மனைக் காவலன், அவன் மகன் கையைப்பிடித்து இழுத்தான். நான் அதைக் கண்டித்தேன்.

பலதேவர்: சரி... உம்?...

சுகதேவ்: கன்னத்திலே......

பலதேவர்: ஆ... என்ன...

சுகதேவ்: [சமாளித்து] நான் இரண்டு கொடுத்தேன். சரியான அடி!

பூங்காவனம்: தம்பி, சுகதேவ்! குதிரையை அடித்தாய். அது உன்னைக் கீழே தள்ளியது. முத்தனை அடித்தாய்—அவன் சும்மாயிருக்கிறான். சும்மா இருக்கிறவனை வேலையை விட்டு விரட்டவேண்டும்—குதிரைக்குக் கொள் வைக்கவேண்டும். நல்ல நியாயமப்பா இது.

சுகதேவ்: அத்தை! நீ பொன்றும் பேசவேண்டாம். நடந்த விஷயம் தெரியமுடியாது.

சுகதேவின் தாய்: ஆமாம். சுகதேவ் சொல்வது சரிதான். முத்தன் நம்பக்கூடாது. பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறவன் மிகவும் கெட்டவன்.

பலதேவர்: சரி, சுகதேவ், உன் இஷ்டப்படியே முத்தன் அரண்மனையை விட்டு விரட்டிவிடு!...

பூங்காவனம்: பாவமண்ணு! தாய்தந்தை யில்லாத அனாதை. நம்மை விட்டால் எங்கே போவான்.

பலதேவர்: பூங்காவனம்—நீ சொல்வது சரிதான். அவன் தாயார் காவேரியம்மை நமது அரண்மனை வேலைக்காரி யாயிற்றே—அவள் சாகும்போது மகனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு செத்தாளே என்பதற்காகத்தான் அந்த முத்தனை இத்தனை நாள் பொறுத்தேன். அவன் நமது மடத்து சாமியாரைப் பற்றியும்—மற்றும் தெய்வீக விஷயங்கள் பற்றியும் தாறுமாறாகப் பேசிவருகிறான் என்று பல நாட்களாகக் கேள்விப்படுகிறேன். பூங்காவனம்! உனக்கும் சொல்கிறேன். நீ அவனிடத்தில் இப்படி அடிக்கடி அக்கரை காட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை....

சுகதேவ்: அப்படிச் சொல்லுங்கள்!.... அத்தை உனக்குத் தான் உலகமே பிடிக்காது. கல்யாணமே வேண்டா மென்று கன்னிகையாயிருக்கிற நீ கடவுளை நினைத்துக் கொண்டு—ஐப மாலையை உருட்டுவாயா—இந்த வம்புக்கெல்லாம் ஏன் வருகிறாய்?

பூங்காவனம்: பார்த்தீர்களா அண்ணா உங்கள் மகன் பேசுவதை!

பலதேவர்: சுகதேவ்! சும்மாயிரு!

பூங்காவனம்: நாம் இங்கு நிற்பதே தப்பு.

கண்களில் கலக்கம் மறைய பூங்காவனம் அதைவிட்டுப் போய்விடுகிறாள்.