பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 9 / 61

காட்சி 9]

காட்சி 9]

மூல ஸ்கேன் 40, 41

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[தென்றல் மாளிகை

தளபதி வெற்றிவேலன் அனாயாசமாக சாய்ந்திருக்கிறான், ஒரு பீடத்திலே, எதிரே வேதாளம் உட்கார்ந்திருக்கிறான் மிகவும் மரியாதையுடன்.

வெற்றிவேலன்: உம்மைப் பற்றி நான் நிரம்ப கேள்விப்பட்டேன். பலதேவரும் சொன்னார்; மிகவும் திறமைசாலி என்று! நான் வந்திருக்கிற காரியம் உமக்குத் தெரியும். அதற்கு உம்மால் உதவி செய்ய முடியுமா?

வேதாளம்: நானா? சரிதான்! வாளைத் தூக்கக்கூட எனக்கு சக்தியில்லை...

வெற்றிவேலன்: நீர் படையில் சேர வேண்டாமய்யா கொஞ்சம் ஆட்கள் பிடித்துக் கொடும். முயற்சி பண்ண வேண்டும். வேலையில்லாதவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்.

வேதாளம்: படையில் சேருவதென்றால் பயப்படுவார்களே!

வெற்றிவேலன்: பலி பீடத்துக்கு வருவதற்கு ஆட்கூடத் தான் பயப்படும். அதற்காகத்தான் மஞ்சள் நீர் தெளித்து—மலர் தூவி—ஆகாரத்தையும் எதிரே நீட்டி ஆசை காட்டுவது!

வேதாளம்: சரியான பேச்சு! தங்கள் உத்திரவுப்படியே வேலையை ஆரம்பிக்கிறேன். இன்னொரு விண்ணப்பம். இந்த ஊரில் ஒரு பெரிய சாமியார் இருக்கிறார், அவர் பேச்சை தெய்வப் பேச்சாக எல்லோரும் எண்ணுவார்கள். அவரிடம் சொல்லி படைக்கு ஆள் சேர்க்கும் பிரச்சாரம் செய்யச் சொன்னால் நமது வேலை சுலபமாக முடியும்.

வெற்றிவேலன்: பொருள் எதுவும் தரவேண்டுமோ—அவர் அருள் பெற?

வேதாளம்: தரவேண்டியதில்லை, ஏனெனில் அவர் கையால் தொட்டு பொருளே வாங்கிடமாட்டார். மடாலயத்தில் ஒரு உண்டியல் இருக்கிறது. அதில் போட்டு விடவேண்டும்.

வெற்றிவேலன்: சபாஷ்! அப்படியே செய்து விடுவோம். வேதாளம் உனக்கும் சொல்கிறேன் படைக்கு நீ ஒரு ஆள் சேர்த்துக் கொடுத்தால் உனக்கு ஐந்து பொன் ஊதியமாகத் தரப்படும்! மொத்தமாக அல்ல! ஒரு ஆளுக்கு ஐந்து பொன்!

வேதாளம்: தங்கள் சித்தம் அதற்கென்ன இப்போது நான் அச்சாரமா கேட்கப் போகிறேன்.

வெற்றிவேலன்: என் வாங்கிக் கொள்வேன். இப்போது பத்து பொன் தருகிறேன்.

எ—யாரங்கே? பேழையைத் திறந்து பத்து பொன் எடுத்துவா!

வேதாளத்துக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.