காட்சி 8 / 61
காட்சி 8
காட்சி 8
மூல ஸ்கேன் 34, 35, 36, 37, 38, 39
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
ஆற்றங்கரையை யடுத்துள்ள சோலைப்புறமாக சுகதேவனும்—திருசங்கும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.
திருசங்கு: தம்பி-நீங்கள் வந்ததும் போதும்; அப்பப்பா! அதிலேயிருந்து முத்தாயிக்கு உங்கள் பேச்சேதான்!
சுகதேவ்: அப்படியா? என்ன சொல்லுது! என்ன சொல்லுது!.
திருசங்கு: உங்கள் நடையிலே ஒரு வீரமிருக்கிறதாம். கண் பார்வையிலே ஒரு கம்பீரம் இருக்கிறதாம். பேச்சிலே இனிமை இருக்கிறதாம். கையிலே........ என்னமோ இருக்கிறதுன்னு—சொல்லிச்சே........
சுகதேவ்: விரல்! விரல்!
திருசங்கு: இல்ல தம்பி, விரல்ல......
சுகதேவ்: நகம்! நகம்!!
திருசங்கு: அது இல்ல தம்பி - போங்க நீங்க! எனக்கென்ன இந்த எழவு காதல் வார்த்தையெல்லாமா தெரிகிறது!
சுகதேவ்: அப்படியானால் முத்தாயிக்கு என் மேல் காதல்!
திருசங்கு: கண்டதும் காதலென்று கதைகளில் படித்திருக்கிறேன். அதை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்.
சுகதேவ்: ஆகா! உன்னைப்போல ஒரு அப்பனும் அந்த அப்பனுக்கு முத்தாயிபோல ஒருமகளும் இருந்தால்!... உலகம் வெகு விரைவில் காதல் சோலையாக மாறிவிடும்—முத்தாயி! நீயும், நானும்...
சுகதேவ் மெய்மறந்து நின்று விடுகிறான். அதேசோலையில் வேறுபுறத்தில்,
வீணையும் நாதமும்!
விழியும் ஒளியும்!
வீரனும் வாளும்!
என்ற வார்த்தைகள் தன் பவள இதழ்களால் பொழிந்தவாறு—முத்தாயி, முத்தனின் மடியிலே படுத்திருக்கிறாள்.
முத்தன்: அடக்கிவிட்டாய் நீ! ஆனால் என் நம்பிக்கை நாசமாகி விடுமென்று பயப்படுகிறேன்.
முத்தாயி: ஏன்?
முத்தன்: நீயாவது அரண்மனைக் காவலாளியின் மகன்! நானோ தாயை இழந்தவன்—தந்தை யாரெனத் தெரியாதவன்—உற்றார் உறவினர் இல்லாதவன்—தனி மனிதன்.
முத்தாயி: நட்சத்திரங்கள் கூட்டமாய்த்தானிருக்கின்றன. நிலவு தனியாகத்தானிருக்கிறது. ஆனால் அல்லிமலர் எதிர்பார்ப்பது நிலவைத் தானே!
முத்தன்: என் அல்லி! அரண்மனை குதிரை தேய்ப்பவன் நான்! அங்கே என்னை ஒரு நாயைப்போல் நடத்துகிறார்கள்.
முத்தாயி: அப்படிச் சொல்லாதீர்கள். அங்கே நாய்க்குக்கூட பட்டுமெத்தை—பாதாம்பருப்பு—பாதுகாப்புப் பணியாட்கள்—எல்லாவசதியும் உண்டு!
முத்தன்: பொறுமையெல்லாம் குதிரைக் கொட்டடியிலே இடக்கும் என்னை—உன் அப்பா தினந்தோறும் பார்க்கிறார்—அவரா எனக்கு உன்னை அளிப்பார்! கனவு! கனவு!
முத்தாயி: கனவையும் பலிக்கவைக்கிறேன். கண்ணையா! கவலையை விடுங்கள்! எங்கே—என்னைப் பாருங்கள்! பார்க்கமாட்டீர்களா! என் முகம் உங்கள் கவலையைத் தீர்க்கும் மருந்தாக இல்லையா?
முத்தன்—முத்தாயியை அன்புவழிய நோக்குகிறான். அவளும் முத்தமிடுவதற்காக உதடுகளைக் குவிக்கிறாள். அதற்குள் முத்தாயி எழுந்து விடுகிறாள்.
முத்தாயி: உஸ்! பறக்காதீர்கள்!
முத்தன்: வசந்தத்தின் ஸ்பரிசத்திலே வானம்பாடி பறக்காமலிருக்குமா?
முத்தாயி: பறப்பதற்கு—ஒரு இறக்கை போதாது!
முத்தன்: அதற்குத்தான் உன்னையும் அழைக்கிறேன்.
முத்தன் அவளைத் தழுவிட முயலுகிறான். முத்தாயி விடுபட்டு அதை விட்டு ஓடுகிறாள். அவள் ஓடுகிறாள். அவன் துரத்துகிறான். இந்தக் காட்சியை சோலைப்பக்கமாக பேசிக்கொண்டு வந்த சுகதேவும், திருசங்கும் பார்த்துவிடுகிறார்கள்.
சுகதேவ்: சரிதான்! சரிதான்! மாலை கண்ணோரம்—சோலையின் ஓரம்!
திருசங்குவிற்கு என்னசெய்வதென்று புரியவில்லை. மகளுக்கேற்ற மணமகனைப் பிடித்து தயார் செய்து கொண்டிருக்கும்போது இப்படியொரு மாடுபெரும் இடிவிழுந்து விட்டதே என யோசிக்கிறான். ஆளும் சாமாளித்துக் கொள்கிறான்.
திருசங்கு: இளவரசே! நீங்கள் தவறாக நினைக்காதீர்கள். என் பெண்ணை பலாத்காரம் செய்ய ஆரம்பித்திருக்கிறான்—இந்தப் பயல் ஏ! அறிவுகெட்ட பயலே! என்ன காரியமடா செய்தாய். இந்நேரம் நாங்கள் வரவில்லையென்றால் என் குடும்பத்து மானத்தையே கெடுத்திருப்பாயே. என்னடா குட்டிச்சுவர் மாதிரி நிற்கிறாய்! பெண் என்றால் என்ன நினைத்தாய்! சின்னஞ்சிறிய பெண் வெளியே வந்தால் இப்படியா நடந்துகொள்வது நாயே! உன் கண்ணைக் குத்திப் பெயர்க்கிறேன் பார்!
முத்தாயி: [தடுக்கிட்டு] அப்பா!
திருசங்கு: நீ பயப்படாதேயம்மா! அவன் என்ன பொன்றும் செய்துவிட மாட்டான். சும்மா—பெண்களை மிரட்டுகிற சோம்பேறிப் பயல்!
முத்தாயி: இல்லையப்பா!
திருசங்கு: எனக்குத்தான் எல்லாம் புரிகிறதே—நீ ஏன் இங்கெல்லாம் தனியாக வருகிறாய்? கடவுளே! என் பெண் மானத்தைக் காப்பாற்றினாய்! உனக்கு கோடி நமஸ்காரம்.
முத்தாயி: சொல்வதைக் கேளுங்க......
திருசங்கு: ஒன்றும் சொல்ல வேண்டாம். நீ போ வீட்டுக்கு... இந்தப் பாவிக்கு நேராக நிற்காதே! போம்மா! போகிறாயா இல்லையா? உம்! போ! போ!
முத்தாயி எதுவும் சொல்லமுடியாமல் போய் விடுகிறாள். தன் தகப்பன்—இளவரசன் சுகதேவனுக்கு நேராக தன்னை ஒரு கொய்யாக்கனி என்று நிரூபிக்க மிகவும் அக்கரை எடுத்துக் கொண்டிருக்கிறான் என்பதை எண்ணி மனதுக்குள் சிரித்தவாறு அவள் போய்விடுகிறாள்.
திருசங்கு: இளவரசே! பார்த்தீர்களா? இவன் அக்கிரமத்தை.
சுகதேவ்: (முத்தனிடம் பாய்ந்து அவன் முதுகில் தட்டியபடி) ஏ, முத்தா? முணுமுணுக்கிறதா முதுகு? அரைப்பட்டினி! ஆண்டிப்பயலே! அருமைக் கழுதை!
முத்தன்: தீர்ந்ததா அகராதி?
சுகதேவ்: பேசாதே பேடி நாயே!
முத்தன்: இனிமேல் பேசுவதற்கு உத்தேசமில்லை.
சுகதேவ்: என்னடா நிமிர்ந்து நிற்கிறாய்! நெஞ்சு எலும்பை உடைத்து விடுவேன்.
முத்தன்: உடைத்துப்பார்! அப்போதாவது எனக்கும் இருதயம் இருப்பது உனக்குத் தெரியும்.
சுகதேவ்: ஏ...மரியாதையாகப் பேசு.
முத்தன்: மரியாதை—மண்ணுங்கட்டியெல்லாம் மழைக்குப் பயப்படவேண்டும்.
திருசங்கு: சரிதாண்டா! அதிகப்பிரசங்கித்தனத்திலே அயோக்கியத்தனத்தை மறைக்க முடியாது!
முத்தன்: எப்படி முடியும். அதற்குப் பாளையக்காரர் மகனைப் பிறக்கவேண்டுமே!
சுகதேவ்: ஓ! தகப்பன் பெயர் தெரியாத தருதலை!
முத்தன்: உனக்குத் தெரியுமா தகப்பன் பெயர்...
ஆத்திரமடைந்த சுகதேவ், முத்தனின் கன்னத்தில் அறைந்து விடுகிறான். அவ்வளவுதான்—முத்தனின் கரங்கள் சுகதேவின் உடம்பில் விளையாட ஆரம்பிக்கின்றன. வேகமாக விழுந்த ஒரு அடியில் சுகதேவின் தலைப்பாகை பறந்துபோய் ஒரு கிளையில் தொத்திக்கொள்கிறது. அடிபொறுக்காத சுகதேவ், திருசங்குவின் கையிலுள்ள பெரிய வேல்கம்பை வாங்குகிறான். “சரி முத்தன் தீர்ந்தான்” என்று திருசங்கு முடிவு கட்டுகிறான். வேல்கம்பை வாங்கிய சுகதேவ், மரக்கிளையிலே தொத்திக் கொண்டிருந்த தன் தலைப்பாகையை அந்தக் கம்பின் உதவியால் எடுத்து தலையில் வைத்துக்கொண்டு வேகமாக அதை விட்டுப் போய்விடுகிறான்.
★