பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 7 / 61

காட்சி 7

காட்சி 7

மூல ஸ்கேன் 31, 32, 33

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

அரண்மனையின் முன்புறம் பல்லக்கு வடிவமுள்ள, குதிரை பூட்டிய ஆடம்பரமான வண்டி ஒன்று வந்து நிற்கிறது. அந்த வண்டிக்கு பாதுகாவலாக முன்புறத்திலும் பின்புறத்திலும் முறையே இரண்டு முரட்டு வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து கையினிலே வாள் தாங்கிய வண்ணம் வந்துகொண்டிருக்கிறார்கள். வண்டியிலிருந்து ஒரு கொழுப்பான மனிதன் இறங்குகிறான். அவனது மார்பில் வெள்ளியாலான வேங்கைச் சின்னம் பதிக்கப்பட்டிருக்கிறது. கருப்பு ஆடைக்கும்—அந்த வெள்ளிப் பதக்கத்திற்கும், இரண்டு இரண்டு உயர்ந்த அந்த சரீரத்திற்கும், யானை போல் அசையும் அந்த நடைக்கும் ஏதோ ஒரு மதிப்பு இருக்கத்தான் வேண்டும். ஆம், அவன்தான் வேங்கை நகர சிற்றரசனின் தளபதி வெற்றிவேலன். வெற்றிவேலன் இறங்கியதுதான் தாமதம் பாண்டு வாத்தியங்கள் முழங்கின. கையினிலே மாலைகள் ஏந்திய நடன மாதர்கள் எதிர் கொண்டழைக்க ஓடி வந்தனர் அபிநயத்தின் மூலம்! பாளையக்காரரும், சுகதேவும் பணிவுடன் திலகமிட்டு வணங்கியவண்ணம் எதிர்நின்றனர். வெற்றிவேலன் அவர்களுடன் அரண்மனைக்குள் பிரவேசித்தான். அலங்காரங்கள் நிறைந்த ஒரு கூடத்திலே தகுதியான ஆசனத்திலே வெற்றிவேலன் உட்காரச் செய்துவிட்டு தானும் அருகிலே பணிவுடன் அமர்ந்தார் பலதேவர்.

வெற்றிவேலன்: என்ன பலதேவரே! நலந்தானே யாவரும்!

பலதேவர்: நலந்தான்! மன்னர் நலமெல்லாம் எப்படியோ!

வெற்றிவேலன்: நலமே! ஓலை அனுப்பியது கிடைத்ததல்லவா?

பலதேவர்: கிடைத்தது! ஆனால் அதைக்கண்டு ஆச்சரிய மடைந்தேன்,

வெற்றிவேலன்: ஏன்?

பலதேவர்: ஆயிரக் கணக்கிலே படை வீரர்கள் இருக்கும் போது—வீர தளபதி வெற்றிவேலர்—நீங்கள் இருக்கும்போது—வேங்கை நகரத்து சிற்றரசர் யாருக்காக பயந்துகொண்டு படையை இன்னும் பெருக்குகிறார்?

வெற்றிவேலன்: படையைப் பெருக்குவது பலத்திற்காக அல்ல! பாதுகாப்புக்காக! பலதேவரே! நூறே நூறு பேர் வீரர்கள் தானும்... உமது தங்கையைத் தோற்கடித்து இந்தப் பழுதூரை கைப்பற்றியவர்கள்!

பலதேவர்: அதைத்தான் சொல்கிறேன் நானும். வேங்கை நகரத்து வீரர்கள் தொகையிலே அதிகம் தேவை யில்லை... தோல்வி காணத் துரார்கள் அவர்கள்!—

வெற்றிவேலன்: என்ன இருந்தாலும் அரசர் விரும்புகிறார்—படையைப் பெருக்க வேண்டுமென்று! சிறுத்தையூரன் வேங்கை நகரின்மீது எப்போது பாயலாம் எங்குக் காரணம் கிடைக்கும்; களம் அமைக்க—என்று எதிர்பார்த்துக் கிடக்கிறான். அதனால் தான் படை பெருக்கும் முயற்சியில் சிறிதும் தடை கூடாது என நம் மன்னர் உத்திரவிட்டுள்ளார்!

பலதேவர்: என்னால் இயன்றது செய்யக் காத்துக் கிடக்கிறேன்.

வெற்றிவேலன்: இந்த வட்டாரத்தில் ஒரு நூறு பேராவது படையில் சேர்ந்திடச் செய்ய வேண்டும்.

பலதேவர்: முயற்சிக்கிறேன்.

வெற்றிவேலன்: ஆளுங் கட்டாயமாக யாரையும் சேர்க்க வேண்டாமென காவலன் கட்டளை!

பலதேவர்: ஆமாம்—அப்படிச் சேர்ப்பது படையா காது! நமக்கு நாமே கட்டிக்கொள்ளும் பாடையாவது விடும்.

வெற்றிவேலன்: உண்மை! உண்மை! உமது ஊர் மக்களுக்கு வேங்கை புரத்துப் படையில் சேர்வது என்றால் வெறுப்பாயிருக்கும்—ஏனெனில் அவர்கள் அடிமையாக்கி வைத்திருக்கும் அரசனன்று எம்மவர்!

பலதேவர்: அதெல்லாம் ஒன்றுமில்லை. முதல் அடிமையாகிய நானே—முழந்தாளிட்டு அவரை வணங்கினேன். முழு மனதோடு அவர் வாழ—ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். தாங்கள் எதிர்பார்ப்பதுபோல படையில் பலர் சேர்வர்! சந்தேகமேயில்லை.

வெற்றிவேலன்: சரி, நான்; என் தங்குமிடத்திற்குச் செல்லவேண்டும்.

பலதேவர்: தங்களுக்காக தெற்கு ராஜ வீதியிலுள்ள தென்றல் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!.

வெற்றிவேலன்: சந்தோஷம்!...