பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 6 / 61

காட்சி 6

காட்சி 6

மூல ஸ்கேன் 30

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

அரண்மனை தாழ்வாரத்தின் பக்கமாக முத்தன் போய்க் கொண்டிருக்கிறான். பூங்காவனம் தன் அறைக்குப் போக அந்த வழியே வருகிறாள். முத்தன் போகிற காட்சியை இமை கொட்டாமல் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். எங்கேயோ சிந்தனையை மேயவிட்டுக் கொண்டு போகிற முத்தனுக்கு தன்னை பூங்காவனம் விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக் கொண்டிருப்பது தெரியவில்லை. அவனது அங்க அசைவுகள்—நடையின் கம்பீரத்தை பூங்காவனம் ஏன்தான் அப்படி ரசிக்கிறாளோ புரியவில்லை. அவளாயறியாமல் அவளது இதழ்கள் புன்னகையைத் தேக்குகின்றன. அதை முந்திக்கொண்டு அவளது கண்களில் நீர் அரும்பு கட்டிவிடுகிறது. அது ஆனந்தக் கண்ணீரா! அல்லது அந்த அழகே உருவெடுத்த வாலிபன்—அரண்மனையில் படும் கஷ்டங்கள் நினைத்துப் பொங்கி வரும் சோகக் கண்ணீரா! முத்தன் போய்விடுகிறான்—பூங்காவனத்தின் கண்கள் விட்டு மறைந்து விடுகிறான். ஆனால் அவள் இருதயத்தை விட்டு மறைந்ததாகத் தெரியவில்லை. குரு நிறைந்த ஒரு பெருமூச்சு! பூங்காவனம் தன் அறையில் நுழைந்துவிடுகிறாள். என்ன புதிர் இது! பாளையக்காரரின் தங்கை! பழுதூர் இளயராணி! அவள் குதிரைக்கார முத்தனைப் பார்த்து அப்படியொரு பெருமூச்சு விடுகிறாள். உம்... எவ்வளவு ஆபத்து காத்திருக்கிறதோ அந்த முத்தனுக்கு!