பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 5 / 61

காட்சி 5

காட்சி 5

மூல ஸ்கேன் 26, 27, 28, 29

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

பாளையக்காரர் அரண்மனையைச் சேர்ந்த ஒரு பகுதி. முத்தன் ஒரு கம்பீரமான குதிரையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். குதிரை சவாரி செய்யும் உடையுடன் சுகதேவ் பெருமிதமாக நடைபோட்டு, குதிரையிடம் நெருங்குகிறான். மாளிகையின் உச்சியிலே யிருந்தபடியே பாளையக்காரரும் அவரது துணைவியும் தங்கள் மைந்தனின் குதிரையேற்றத்தைக் காணக் காத்திருக்கிறார்கள். பலதேவருக்குப் பக்கத்திலே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் நிற்கிறாள். பலதேவரின் முக ஜாடையும், அவரைப்போன்ற உயரமும் உள்ள அந்த மங்கை நிச்சயமாக அவருக்குச் சகோதரியாகத்தான் இருக்கவேண்டும். நாற்பது வயது மதிப்பிடலா மென்றாலும் அவளது தேகம் கட்டுக் குலைந்து காணப்படவில்லை. அவளின் முகத்திலே பூரிப்புத் தவழவில்லை. எதைப்பற்றியோ எண்ணங் கொண்டவள் போல நின்று கொண்டிருந்தாள்.

குதிரையிடம் வந்துவிட்ட சுகதேவன், மாளிகையின் உச்சியை அண்ணாந்து பார்த்து,

சுகதேவ்: குதிரையிலே ஏறி அங்கே பாயட்டுமா?

அதைக்கேட்டதும் அந்த நாற்பதுவயது மங்கை அவனைப்பார்த்து... “வேண்டாம் வேண்டாம்! நீ முதலில் குதிரையைப் பிடி பார்க்கலாம்” என்று கிண்டல் செய்கிறாள். கோபங்கொண்ட சுகதேவன் “அத்தை! என்ன அவ்வளவு மட்டமாகவா நினைத்து விட்டாய்! இதோ பார்-ராஜா தேசிங்கு போல..........” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், அவள் “பல்லிக்கடித்துப் பயனில்லை... பஞ்சகல்யாணியை அடக்கவேண்டும்” என்று கூறி சிரிக்கிறாள். அந்த சிரிப்பிலே குளிர்ச்சி இல்லை. சுகதேவன் குதிரையின் கழுத்தைத் தடவிக் கொடுக்கிறான். குதிரை கனைத்துக் கொண்டு ஒரு உதை கொடுக்கிறது. அந்த உதை பின்னால் நிற்கும் முத்தன் மீது விழுந்து அவன் கீழே விழுந்து எழுந்திருக்கிறான். அதைக் கண்ட சுகதேவின் அத்தை “அப்பய்யோ” எனக் கத்திவிடுகிறாள். அதைக் கண்ட பலதேவர், “அந்த முட்டாளுக்கு வேண்டும். குதிரையின் பின்னே ஏன் நிற்கிறான் குருடன்?” என்று திட்டுகிறார்.

சுகதேவ்: டே முத்தா! விழுந்ததா நல்லதை. தள்ளிப் போடா!

என்று கூறியபடி குதிரையின்மீது பாய்ந்து ஏறுகிறான். குதிரை அவனைக் கீழே தள்ளிவிட காலைக் தூக்கிக்கொண்டு பயங்கர நடனமாடுகிறது. சுகதேவ், “முத்தா! முத்தா! ஓடிவாடா!” என்று அலறுகிறான். முத்தன் ஓடிவருவதற்குள், குதிரை சுகதேவை கீழே உருட்டிவிட்டு ஓடிவிடுகிறது. திரண்ட பலதேவரும் மற்றவர் களும் ஓடிவருகிறார்கள். அதற்குள் சுகதேவ் எழுந்துவிடுகிறான். குதிரையின்மீது செல்ல வேண்டிய கோபம், முத்தன்மீது திரும்புகிறது.

சுகதேவ்: சோம்பேறி முத்தா! சோறு தின்ன வில்லையா நீ!... குதிரை என்னை மிதித்திருந்தால் என்ன ஆவது?

சுகதேவின் தாய்: சுகா! காயம் ஒன்றுமில்லையே கண்ணு!

சுகதேவ்: இல்லையம்மா! இந்தக் குதிரை சரியில்லை.

அதற்குள் அவன் அத்தை குறுக்கிடுகிறாள், சிரிப்புடன்.

அத்தை: ஆமாம், அதனால்தான் இத்துடன் விட்டு விட்டது.

சுகதேவ்: அத்தை! நீ பேசாமல் இரு! இந்தத் தூங்கு மூஞ்சிக் கழுதை கடிவாளம் சரியாகப் போட்டாமல்...

முத்தன்: சரியாகத்தான் போட்டேன்!

சுகதேவ்: எதிர்த்துப் பேசாதேடா எச்சில் இலை நாயே! உதை விழும் ஜாக்கிரதை!

அத்தை: ஏண்டா சுகதேவ்; நீ விழுந்து விட்டு அவன் மீது சீறுகிறாய்? முத்தா! நீ போ! அரண்மனைக் குதிரை யெல்லாம் அப்படித்தான் உதைக்கும்.

முத்தன் போய் விடுகிறான்.

சுகதேவ்: அத்தை எனக்குக் கோபம் வரும்.

பலதேவர்: பூங்காவனம்! நீ ஏன் அந்த முத்தனுக்குப் பரிந்து இவ்வளவு பேசுகிறாய்?

பூங்காவனம்: அண்ணா! உங்க மகன் முதலில் பொம்மைக் குதிரையில் ஏறிப் பழகப் படுத்திக் கொண்டு பிறகு குடைராட்டினக் குதிரையிலேறி சவாரி பண்ணிவிட்டு, அதன் பிறகு உண்மைக் குதிரையில் ஏறச்சொல்லுங்க.

சுகதேவ்: சரிங்க! நீங்க முதலில் கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு மாளிகையை விட்டுப் போங்க.

பலதேவர்: ஏ சுகதேவ்! போதும்.

பூங்காவனம்: மன்னித்து விட்டப்பா! உன் கூட பேசி எனக்கே தப்பு.

சுகதேவ்: அத்தை! நீ பேசாவிட்டால் எனக்கென்ன நஷ்டம்! பெண்ணை பெற்று வைத்திருக்கிறாய்... உனக்குத்தான் கல்யாணமே...

பலதேவர்: சுகதேவ்! சும்மா போகமாட்டாய்!...

சுகதேவ்: போகிறேன்—போகிறேன்!

பூங்காவனம் சோகம் ததும்பும் முகத்துடனே அந்த இடத்தைவிட்டு வேகமாகப் போய்விடுகிறாள்.