காட்சி 4 / 61
காட்சி 4]
காட்சி 4]
மூல ஸ்கேன் 22, 23, 24, 25
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[திருசங்குவின் வீடு.
அரண்மனை வேலைக்காரனுக்குரிய அந்தஸ்துடன் காணப்படுகிறது. வீட்டுக்குள்ளிருந்து இனிமையான கீதம் தென்றலுடன் கலந்து வருகிறது. அந்த கீதத்தில் பொழிந்து கிடக்கும் பொருள் தான் எவ்வளவு சுவையானது. அந்த இன்ப மழையைப் பொழிந்திடும் குரல் நிச்சயமாக ஆண் குரலாயிருக்க முடியாது. குளிர்ச்சி கொட்டும் பெண்ணின் குரல் தான். ஆம், முத்தாயி தரும் இசையின்பந்தான் அது. வீணை அதிர்வது போலும், குழல் ஒலிப்பது போலும் எழும்புகின்ற அமுதத்தொனி இளங்காற்றிலே அலைபெயருப்பி பரிபூரணமான அமைதி நிறை குடிசையை உருவாக்கிய வண்ணமிருக்கிறது. பாடிக் கொண்டிருந்த முத்தாயி திடீரென பாட்டை நிறுத்துகிறாள். “அப்பா!” என அழைத்தபடி கதவண்டை ஓடுகிறாள். அதற்குள் முகம் நாணித் திரும்பி விடுகிறாள்.
திருசங்கு: வெட்கப்பட்டாதேயம்மா! யாருமில்லை இளவரசர் சுகதேவ் இவர்தான்.
முத்தாயி: (தலை குனிந்தபடி) வணக்கம்.
சுகதேவ்: கைகள் குவிவதும், விரிவதும் கமல மலர் போல் காட்சியளிக்கிறது! திருசங்கு நீ சொன்னது உண்மை தான்!
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் முத்தாயிக்கு முகம் மாறுகிறது. கோபத்தால் சிவப்படைகிறது.
சுகதேவ்: பாவம்; வெட்கத்தால் கன்னங்கள் சிவந்து விட்டன.
முத்தாயி எதுவும் பேசாமல் அடுக்களைக்குள் போய்விடுகிறாள். சுகதேவ், திருசங்குவைப் பரிதாபமாகப் பார்க்கிறான்.
திருசங்கு: பார்த்த உடனேயே இப்படிப் பரிகாசம் செய்யலாமா தம்பி நீங்கள்!
சுகதேவ்: என்ன சொன்னேன்—என்ன சொன்னேன் எனக்குத் தெரியாமலே ஏதாவது சொல்லி விட்டேனா?... திருசங்கு! நான் உன்னை ஒன்று கேட்கிறேன் மறுக்க மாட்டாயே!
திருசங்கு: நீங்கள் பாளையக்காரர் பலதேவரின் மகன், இளவரசர். நான் கேவலம் உங்கள் வேலைக்காரன். கேட்காமலே எடுத்துப் போகும் உரிமையிருக்கிறது உங்களுக்கு!
சுகதேவ்: ஆகா! கண்கள் சுழலுகின்றன. காது கேட்க மறுக்கிறது, நா அசைய மாட்டேன் என்கிறது, இருதயம் ஓடவில்லை!
திருசங்கு: தம்பி!
சுகதேவ்: காதலென்னும் கள் மொந்தையில் ஒரு ஈ போல விழுந்து விட்டேன்.
திருசங்குவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. தன் காரியம் கைகூடிவிட்டதென களிப்படைகிறான்.
திருசங்கு: தம்பி! இன்று போய் நாளை வாருங்கள்! காரியம் வெற்றி!
சுகதேவ்: வராமலிருப்பேனா? திருசங்கு வீடு ஒரு தாமரைத் தடாகம்! அங்கு பறந்து வரும் வண்டு இந்த சுகதேவ்!... போய் வருகிறேன் திருசங்கு!
திருசங்கு: சரி தம்பி!
சுகதேவ் போய்விடுகிறான். திருசங்குவிற்கு முத்தாயியின் மீது ஆத்திரம் தாங்கவில்லை. இளவரசன் சுகதேவை அவள் அவமதித்து விட்டதாகவே கருதுகிறான். ஆகவே சீற்றமுடன்...
திருசங்கு: முத்தாயி! வா இங்கே!
முத்தாயி: என்னப்பா! போய்விட்டாரா அந்த மனிதர்?
திருசங்கு: மனிதரா?
முத்தாயி: மன்னிக்கவும். தவறிச் சொல்லிவிட்டேன்.
திருசங்கு: இளவரசர் வீட்டுக்கு வந்திருக்கிறார், இப்படித்தான் அவமானப்படுத்துவதா?
முத்தாயி: வேங்கை நாட்டு சிற்றரசன்—பாவம், இந்தப் பாளையக்காரர் குடும்பத்துக்கு இந்தப் பட்டப் பெயரையாவது மிச்சம் வைத்திருக்கிறானே. படைகளிழந்தார்—பாராளும் உரிமை இழந்தார். ஆனால் பாளையக்காரர் குடும்பத்தினர் பாளையோடு பழகும் பண்பையும் இழந்தனர் என்பது இப்போது தான் தெரியும். மோசமான வாலிபன்!
திருசங்கு: யார் மோசம். அவனுக்கென்ன அழகிலே குறைவா? அந்தஸ்திலே குறைவா? அசட்டுப் பெண்ணே! அவனுடைய அறிவை நீ உணரமாட்டாய்.
முத்தாயி: உணர முடியாத அளவுக்கு ஊசி முனையை விடச் சிறியது போலும்—இல்லையா அப்பா!
திருசங்கு: போதும் நிறுத்து! அவன் நினைத்தால் ஊர்வசி, ரம்பை எல்லாம் ஓடி வருவார்கள்!
முத்தாயி: இதிலென்ன ஆச்சரியம்! ஆஸ்ரமத்து முனிவர்களிடமே ஓடிவந்தவர்கள்—அரண்மனைக்காரர் அழைத்தால் அடியா சொல்லப்போகிறார்கள்? வருவார்களப்பா, வருவார்கள்!
திருசங்கு: வாயை மூடு! வாயாடி!
கோபமாகப் பேசி விட்டு திருசங்கு வெளியே போகிறான். முத்தாயி தன் தந்தைக்குச் சரியான பதில் கொடுத்தோம் என்ற மகிழ்ச்சியில் கூத்தாடுகிறாள். அந்தக் கூத்திலே பாட்டும் பிறக்கிறது;
“நான்தேடிய காதலன் முன்னே—காமனும் மூடிய முகமுடன் செல்வான்! வாடிய பயிர்க்கு மழைபோலே நான் சூடிய முல்லை மலர்போலே! இன்பம் தருவான்!—அந்த அன்பன் வருவான்! நீதிலாத தேன்முகம்! அவன் வான்நிலவு! வருவான்! காதல் வளர்த்தருவான்!”
★