பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 3 / 61

காட்சி 3]

காட்சி 3]

மூல ஸ்கேன் 19, 20, 21

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[பழுதூரின் தெரு

அரண்மனைக் காவலன் திருசங்கு, இளவரசன் சுகதேவும் போய்க் கொண்டிருக்கிறார்கள். வேதாளம் எதிரே வருகிறான்.

வேதாளம்: நமஸ்காரம் சுகதேவ!

சுகதேவ்: உம், என்ன வேதாளம் சுகந்தானே!... ஏதாவது ஓலையுண்டா?...

வேதாளம்: உங்களுக்கொன்றுமில்லை. உம்—திருசங்கு! உனக்கு ஒரு ஓலையிருக்கிறது; இந்தா பெற்றுக்கொள். நான் வருகிறேன்.

திருசங்குவிடம் ஓலையைக் கொடுத்துவிட்டு வேதாளம் போய்விடுகிறான். திருசங்கு ஓலையை படித்து முடித்து சொக்காயின் பையில் திணித்துக்கொண்டு சுகதேவுடன் நடக்கிறான்.

சுகதேவ்: என்ன திருசங்கு! யாரிடமிருந்து ஓலை?

திருசங்கு: ஆங்! அவன் ஒரு வேலையற்றவன் பொழுது விடிந்தால் என் உயிரை வாங்குவதே அவனுக்கு வேலை.

சுகதேவ்: ஆகா! எவ்வளவு புரியும்படி சொல்லி விட்டாய், புலவர்களைப்போல!

திருசங்கு: என்ன தம்பி சொல்வது! எனக்கு ஒரு மருமகப் பயல் இருக்கிறான். அவனுக்கு பெண் வேண்டுமாம்.

சுகதேவ்: ஏன், பிறப்பதெல்லாம் ஆணாகப் பிறக்கிறதோ மருமகன் என்றால் உமது மகளின் கணவன் தானே!

திருசங்கு: இல்லை தம்பி இல்லை! கல்யாணத்துக்குப் பெண் வேண்டுமாம்.

சுகதேவ்: அதற்கென்ன?

திருசங்கு: மரம் பழுத்தால் வெளவால்களே வா என்று அழைக்கும்!

சுகதேவ்: அதுபோல?

திருசங்கு: என் மகள் பருவமடைந்து விட்டாள். பயல்கள் வலை வீசுகிறார்கள். அதற்குத்தான் ஓலை எழுதி இருக்கிறான் இந்த உதவாக்கரை. என் மகளின் அழகென்ன—குணமென்ன. அத்தான் முறைக்காக மட்டும் அந்தப் பயல் உரிமை கொண்டாடி விட முடியுமா தம்பி!

சுகதேவ்: ஓகோ! அவ்வளவு அழகா உன் மகள்?

திருசங்கு: நீங்கள் பார்த்ததே இல்லையா?

சுகதேவ்: இல்லையே... உன் மகளின் பெயர் என்ன?

திருசங்கு: முத்தாயி! முத்தாயி என்றால் முத்தாயிதான்!

சுகதேவ்: உம்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!

திருசங்கு: இல்லை தம்பி, இது காக்கை அடைகாத்த குயிலின் குஞ்சு!

சுகதேவ்: சரிதான்! கறுப்பு நிறமாக்கும்.

திருசங்கு: நான் குறைச் சொல்லுகிறேன் தம்பி, முத்தாயி ஒரு எலுமிச்சம்பழம்.

சுகதேவ்: புளிக்காதே!

திருசங்கு: என்ன தம்பி நீங்க—வயசானவனிடம் இண்டல் பண்ணி உயிரை வாங்குறீங்க!

சுகதேவ்: திருசங்கு! வாயேன் உன் வீட்டுக்குப் போகலாம்!

திருசங்கு: வினாபாடாதீங்க! அரண்மனைக் காவல் காரன் வீட்டுக்கு இளவரசர் வருவதாவது வேடிக்கை! வேடிக்கை!

சுகதேவ்: என்னிடத்திலே அந்த உயர்வு தாழ்வு இல்லை என்பது உனக்குத் தெரியாதாக்கும்! நீ என் தந்தைக்குத் தான் வேலைக்காரன், எனக்கு ஒரு வயதான தோழன்! சரிதானா?...

திருசங்கு: நான் பாக்கியசாலி!

சுகதேவ்: வா போவோம்.