காட்சி 2 / 61
காட்சி—2]
காட்சி—2]
மூல ஸ்கேன் 14, 15, 16, 17, 18
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பழுதூர் மடாலயம்
தக தக வென மின்னிடும் பொன் மெழுகேறிய பீடமொன்றில் மாய்காநாத சாமியார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகாமையில் உள்ள பச்சைப் பட்டு விரித்த ஆசனத்தில் பலதேவர் உட்கார்ந்திருக்கிறார். அவரது காதுகளில் வைரத்தாலான ஆபரணம் ஒளிவிடுகிறது. சுருண்டு. பிடரிக்கும் கீழே தொங்கும் தலைமயிரும், காதுகளின் ஓரங்களிலே தூண்டிலென இறங்கியிருக்கும் ரோமக் கொத்துகளும், சிறிய மீசையும் கொண்ட தேவர் எப்பொழுதுமே சிந்தனையிலாழ்ந்திருக்கும் தோற்றங் கொண்டவர். அவரது மேனியை ரோஜா நிறத்துச் சொக்காயும், அதன்மீது சிவப்பு வண்ணப் பீதாம்பரமும்—அலங்கரித்தபடி இருக்கிறது. அதுதான் அவர் வழக்கமாக அணியும்—அவருக்குப் பிடித்தமான உடை போலும்! பக்கத்திலே அவர் துணைவியாரும், மகன் சுகதேவனும் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் சிறிது பணிவுடன் அரண்மனைக் காவலாளி திருசங்கு நின்றுகொண்டிருக்கிறான். சாமியாரின் பீடத்திற்கு நேராக ஊர் மக்கள் குழுமியிருக்கிறார்கள். சாம்பிராணி—ஊதுவத்திகளின் நறுமணம், அந்த இடத்திலே—பக்தி, பிரவாகமாகக் கரை புரண்டோடுவதை விளக்கிக்கொண்டிருக்கிறது. சாமியாரின் திருவாயிலிருந்து எத்தகைய அமுத மொழிகள் உதிரப்போகின்றனவோ என்று அனைவரும் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.
அப்போது, ஒரு தாடிக்கார கிழவர் அங்கே நுழைகிறார். எல்லோரது கவனமும் கிழவரின் மீது பாய்கிறது. கிழவர்—பலதேவரைப் பார்த்து வணங்குகிறார்.
பலதேவர்: வாரும் பூபதி! வாரும்! பல ஆண்டுகளாகி விட்டனவே உம்மைப் பார்த்து! தாடியெல்லாம் வெளுப்பேறியும் விட்டதே!
கிழவர் ‘ஆமாம்’ என்பதுபோல தலையை அசைத்து அசட்டுப் புன்னகை காட்டுகிறார். அதற்குள் சாமியார், கிழவரைப் பார்த்தபடி—பலதேவரிடம்,
சாமியார்: தளிர் சருகாகத்தானே மாறும்! தாடி வெளுப்பாவதிலே என்ன ஆச்சரியம்.
பூபதி: ஒன்று சொன்னீர், அதுவும் நன்று சொன்னீர்! உண்மை—உள்ளங்கை நெல்லிக் கனி!
பலதேவர்: பூபதியாரே! வெளிநாட்டுப் பயணங்கள் எப்படியிருந்தன? உமது மருத்துவத் தொழில் முன்னிலும் பன்மடங்கு சிறப்படைந்திருக்குமென்று எண்ணுகிறேன். அதற்கு உமது சுற்றுப் பயணம் பயன்பட்டதல்லவா?
பூபதி: நிச்சயமாகப் பயன்பட்டது! இருபதாண்டுகள் இடைவிடாத அலைச்சல் வீண்போகவில்லை. மாயத் தாலும்—மந்திரத்தாலும் தீர்க்கமுடியாத பலவற்றை மருத்துவத்தால் தீர்க்கலாம் என்ற உண்மையை......
கிழவர் வார்த்தையை முடிப்பதற்குள் சாமியார் குறுக்கிட்டு
சாமியார்: திருச்சிற்றம்பலம்! தெய்வத்தால் ஆகாதொன்றில்லை!... அன்புக்குரியவர்களே... ஆரம்பிக்கலாம் நமது அருள் நெறித் திரு அற உபதேசத்தை என எண்ணுகிறேன்...
பலதேவர்: காத்திருக்கின்றோம் ஸ்வாமி...
சாமியார்: மகான்களைப் பற்றி நேற்று சொன்னேன்... அல்லவா? மகான்கள் அடிக்கடி தோன்றுவதில்லை. தோன்றவும் முடியாது! ஆனால் அப்படித் தோன்றும் மகான்களால் ஆகாதது எதுவுமேயில்லை! கடல் வற்றவைப்பார்—ககனத்தில் மிதந்திடுவார்—கடவுளுடன் பேசுவர்—கரும்பிலே கசப்பு காட்டுவர்—காகத்தையும் கந்தர்வ கானம் எழுப்பச் செய்வர்—அத்தகைய அருட் சக்தி பெற்றவர்கள் அவர்கள்.
வீரர்கட்டும், விவேகிகட்டும் மண்ணிலேதான் புகழ்! ஆனால் மகான்களோ விண்ணிலும் புகழ். ஆகவேதான் சொல்லுகிறேன், வாளையும் வேலையும் தொடாதே! வைகுந்தவாசனைத் தொழு! கையினிலே கேடயம் ஏந்தாதே! கைலாச நாதனின் திருநெறி ஏந்து!
நீ யார்—நான் யார்? தாய், தந்தை, அண்ணன், தம்பி—எல்லாம் விண்—முடிவில் ஒரு பிடி மண்!
மாயப் பிரபஞ்சம்—காயமெடுத்தோர்க்கோ ஆண்டவனிடம் செல்லவேண்டும் நெஞ்சம்!
சாமியாரின் நீண்ட பிரசங்கம் முடிவதற்குள்ளாகவே, அஞ்சல் மனை வேதாளம் உள்ளே நுழைகிறான். சாமியார் அவனைக் கண்டதும் பிரசங்கத்தை முடித்துவிடுகிறார்.
வேதாளம்: பரபு! நமஸ்காரம்! ஸ்வாமி! நமஸ்தே! என்று முறையே பலதேவரையும், சாமியாரையும் வணங்குகிறான்.
பலதேவர்: எனக்கு ஏதாவது ஓலைகள் உண்டா, வேதாளம்!
வேதாளம்: உண்டு, அவைகள் அரண்மனையிலேயே கொடுத்துவிட்டேன். சாமிகளுக்கு காணிக்கை வந்திருக்கிறது நிறைய! அதை எடுத்துவந்தேன்.
சாமியார்: காணிக்கை! வாழ்க பக்தர்கள்! எவ்வளவு வேதாளம்?
வேதாளம்: நூறு பொன் நாணயங்கள் வரையில்!
சாமியார்: சந்தோஷம், அதோ இருக்கிறது உண்டியல்!
இதற்குள்—பலதேவரும் ஊர் மக்களும், பலதேவரின் மகன் சுகதேவும், அரண்மனைக் காவலன் திருசங்கும் மடாலயத்தை விட்டுப் புறப்படுகிறார்கள். வேதாளம், நூறு பொன் நாணயங்களையும், சாமியார் காட்டிய உண்டியிலே போடுகிறான். அதை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவக் கிழவனார் பூபதி—ஏளனமான சிரிப்புடன்
பூபதி: ஸ்வாமிகள் பொன்னைத் தொடுவது கிடையாதோ!
சாமியார்: விஷம்!
பூபதி: அந்த விஷத்திலே வளாவதுதானே இந்த விருக்ஷம்!
என்று சிரித்தபடி சாமியார் பக்கம் சுட்டு விரல் நீட்டுகிறார். வேதாளம் வெளியேறிவிடுகிறான்.
சாமியார்: பூபதி! உயிரை வாங்காதீர்... போய்வாரும்.
பூபதி: சாமியாரே! ஹி ஹி ஹி! ஊர் மக்களிடம் சொன்னீரே—மகான்களின் சக்தியைப் பற்றி! அது மட்டும் உண்மையாயிருந்தால் என்னை சாகவே செய்துவிடுவீர்—இல்லையா?
சாமியார்: இருபது வருடமாய்த் தொலைந்திருந்தீரே, இப்போது என்னய்யா வந்தீர்?
பூபதி: ஏன் வந்தேனா? சொல்லுகிறேன். ஹி ஹி ஹி!... சாமியாரே! நீரும் இருபது வருஷமாகத்தானே அந்த ரகசியத்தை என்னிடம் மறைக்கிறீர். இரும்! இரும்! கண்டுபிடிக்காமலா போகப் போகிறேன். ஹி ஹி ஹி!
வயதான கிழவனுக் குறித்தான சோர்வுச் சிரிப்புடன் பூபதி அவைவிட்டு அகலுகிறார்.
சாமியார்: [தனக்குள்] திருச்சிற்றம்பலம்—தெய்வமே துணை!
★