காட்சி 1 / 61
காட்சி 1]
காட்சி 1]
மூல ஸ்கேன் 8, 9, 10, 11, 12, 13
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பழுதூர்
ஊரைச்சுற்றி யோடிடும் ஆறு. அதன் கரைகளைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆற்றின் ஓரங்களிலே கவனிப்பாரற்றுக் கிடக்கும் கனிகுலுங்கும் சோலைகள். அவைகளை விட்டு ஊருக்குள் நுழைந்தால் அழகிழந்து போன அகலமான வீதிகள். வீதிகளின் பள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீர். அதிலே புரளும் பன்றிக்குட்டிகள். அவைகளுடன் கல் வெறிந்து விளையாடும் சிறுவர்கள். பெரும் பெரும் வீடுகள். உயர்ந்த கோபுரத்தையுடைய ஓர் ஆலயம். ஆலயத்திற்கு அருகாமையிலே பெரியதோர் மடாலயம். ஊருக்கு நடுவே உப்பரிகைகள் கொண்ட பலமான அரண்மனை. அரண்மனையை அடுத்து சிறிதும் பொருத்தமான சோபையிழந்த தெருக்கள். தெருக்களிலே குதிரைபூட்டிய பல்லக்கு வடிவமான வண்டிகள் போவதும் வருவதுமாயிருக்கின்றன. காய்கறிக் கூடைகளை தலையில் சுமந்து கூவியவண்ணம் வியாபாரம் செய்திடும் வயதான ஆடவர்-பெண்டிர். கோயிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்திலே நீந்தி விளையாடும் வாலிபர்கள்; தாமரையெனும் முகமுடைய மங்கையர்கள்.
குளத்தின் எதிர்க்கரையிலே பழமை படிந்து போன ஒரு வீடு. அந்த வீட்டின் முகப்பிலே ‘அஞ்சல் மீன்’ என்ற எழுத்துக்கள் தூசி படிந்து காணப்படுகின்றன. வீட்டு வாயிலிலே கம்பீரமான குதிரையொன்றை ஒரு கட்டுக் கோப்பான தேகமுடைய வாலிபன் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் குன்றை வெல்லும் தோற்றமுடையவை. முகமே வீரக்களை வாய்ந்தது. உதடுகளைக் குவித்து ஏதோ ஒரு பாட்டை புல்லாங்குழல் ஒலியில் ஊதிக்கொண்டே குதிரை தேய்க்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான். அந்த வீட்டின் உட்புறத்திலே—நடுத்தர வயதுடையவனா அல்லது கிழவனா என்று உறுதியாகச் சொல்லமுடியாத வண்ணம்—காலரேகைகளால் குழப்பட்ட முகத்தையுடைய ஒரு மனிதன் தனது கூரிய கண்களை அங்குமிங்கும் செலுத்தியபடி கையிலேயுள்ள முத்திரை குத்தும் கருவியை உருட்டிக்கொண்டிருக்கிறான். அவனுக்கெதிரே சுருள் சுருளாக கட்டப்பட்டுக் கிடக்கும் ஓலைகள் குவிந்திருக்கின்றன. அவைகளை ஒருமுறை பார்க்கிறான். அந்த மனிதன் ஒரு அசாதாரணமான வெறுப்பு அவன் உள்ளத்திலே ஜ்வாலைவிட்டுக் கிளம்புவதை சுருங்கி விரியும் அவன் அடர்ந்த புருவங்களின் அசைவுகள் நமக்கு உணர்த்துகின்றன. எதிரிலே அரக்கு உருகிக் கொண்டிருக்கிறது தீயிலே! கையிலுள்ள முத்திரை குத்தும் கருவியை ஒரு முறை பார்த்துக்கொள்கிறான். வேங்கையின் சின்னம் பொறித்த அந்தக் கருவியைக் கீழே வைக்கிறான். பிறகு தன் அகலமான வாயைத் திறக்கிறான்.
“ஏ நாய்க்குட்டிப் பயலே! எங்கே போய்விட்டாய்! சீக்கிரம் வாடா!”
“இதோ வந்துவிட்டேன்” என்று ஒரு குரல் கேட்டது. ஆஜானுபாகுவான ஒரு முரட்டு ஆள் உள்ளே இருந்து வருகிறான். மரியாதையுடன் நிற்கிறான். அவன் கையிலே ஒரு வேல் கம்பு இருக்கிறது, அதில் சிறிய மணிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
அவன் பணிவுடன் கேட்கிறான்,
“அடியேன் என்ன செய்யவேண்டும்?”
“அதையும் சொல்லவேண்டுமோ! ஓலைகளை எடுத்துப் பையிலே போடு!”
ஓலைகள் பையிலே போடப்பட்டுக் கட்டப்படுகின்றன.
“பையின் கழுத்திலே முத்திரையைப் போடு!”
வேங்கைச் சின்னமிட்ட முத்திரை போடப்படுகிறது.
“உம்—தூக்கிக்கொண்டு ஓடு!”
அவன் பையைத் தூக்கிக்கொண்டு புறப்படுகிறான்.
“அடே! நாய்க்குட்டி!...பத்திரம்! நூறு ஓலைகள்—ஐம்பது பொன்கள்! இருட்டுவதற்குள் மாயனூர் போய் விட வேண்டும். இல்லாவிட்டால் வழியிலே எவனாவது திருடன் சுருட்டிவிட்டுப் போகிறான்.”
“சரி! உத்திரவுப்படி ஓடுகிறேன்”
“உம்! ஓடு!...ஆமாம்...குதிரை தயாராகிவிட்டதா!...ஏ...முத்தா!...முடிந்ததா வேலை?”
“முடிந்துவிட்டது! குதிரை தயார்!” என்று கூறியபடி முத்தன் வருகிறான். முத்தன்தான் முதலில் குதிரை தேய்த்துக்கொண்டிருந்த வாலிபன். தேய்த்த களைப்பில் தெருத் திண்ணையிலேயே அமர்ந்து பெருமூச்சுவிடுகிறான். ஓலை நிரப்பிய பையை முதுகில் போட்டுக்கொண்டு, மணி யோசை எழுப்புகின்ற வேல் கம்பை கையில் பிடித்தபடி அந்த முரட்டு மனிதன் குதிரையில் ஏறி உட்காருகிறான். குதிரை பறக்கத் துவங்குகிறது. குதிரை போடும் பக்கம் கண்கள் செலுத்தியபடி இருக்கிறான் முத்தன். ஊர் மக்கள் நாலைந்து பேர் அஞ்சல் மனையில் நுழைகிறார்கள்.
அவர்கள் முத்தனைப் பார்த்து,
“முத்தா! அஞ்சல் மணியார் இருக்கிறாரா?” என வினவுகிறார்கள்.
“அதோ உட்கார்ந்திருக்கிறாரே! தெரியவில்லை” என்று உள்ளே கையைக் காட்டுகிறான் முத்தன்.
ஊர் மக்களில் ஒரு பெரியவர்,
“என்ன வேதாளம்! எனக்கு ஏதாவது அஞ்சல் உண்டா?”
“அஞ்சல் ஒன்றுமில்லை—ஐந்து வராகன் கொண்ட ஒரு சிறு முடிச்சு வந்திருக்கிறது.”
“அப்படியா! மிகச் சந்தோஷம்” பெரியவர் அந்த முடிச்சைப் பெற்றுக்கொள்கிறார்.
“அதிர்ஷ்டம்தான்! உம் வேதாளத்துக்கு ஒன்றும் கிடையாதா?”
“உமக்கில்லாமலா! இந்தாரும்!”
பெரியவர் முடிச்சை அவிழ்த்து ஒரு பொன் நாணயத்தை எடுத்து வேதாளத்தின் கையில் கொடுக்கிறார். வேதாளத்தின் அகலமான வாய் ஒரு புன்னகையைக் கொட்டுகிறது. மற்றவர்களுக்கு வந்திருக்கும் ஓலைகளைக் கொடுத்து எல்லோரையும் அனுப்பிவிடுகிறான். பிறகு, “அப்பாடா!” என்று பெரிய கொட்டாவி விட்டபடி தன் எதிரே கிடக்கும் சிறு, சிறு முடிச்சுகளை எடுத்து உற்றுப் பார்க்கிறான். அவன் உதடுகள் முணுமுணுக்கின்றன.
மாய்காநாத ஸ்வாமிகள்!
மாய்காநாத ஸ்வாமிகள்!
மாய்காநாத ஸ்வாமிகள்!
ஆம். ஒவ்வொரு முடிச்சிலும் எழுதப்பட்டிருக்கிற பெயரைத்தான் அவன் அப்படிப் படிக்கிறான். அதைக் கவனித்த முத்தன், வேதாளத்தைப் பார்த்து,
முத்தன்: மாய்காநாத ஸ்வாமிகளுக்கு சரியான வேட்டைதான் போலிருக்கிறது!
வேதாளம்: எல்லாம் பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகள்!
முத்தன்: காணிக்கையா! ஆமாம் ஆமாம்! உழைக்காமல் கிடைக்கிற ஊதியத்திற்கு அப்படியும் ஒரு பெயர் உண்டு.
வேதாளம்: ஆரம்பித்துவிட்டாதே முத்தா உன் அதி மேதாவித்தனமான பிரசங்கத்தை!
முத்தன்: நான் சாமியாரைச் சொன்னால் தங்களுக்கேன் கோபம் வருகிறது.
வேதாளம்: ஏ முத்தா! இது அஞ்சல் மனை! பலரும் வருமிடம் போகுமிடம்! நீ இப்படி உளறுவது எனக்கு ஆபத்து. இது மாதிரி எதுவும் வருமென்று தெரிந்துதான் உனக்கு என் வீட்டில் ஒரு அறையை வாடகைக்குத் தர அவ்வளவு தயங்கினேன்.
முத்தன்: சரி...சரி...வாயை மூடிக்கொண்டேன்.
வேதாளம்: ஏன், உட்கார்ந்திருக்கிறாய்ப்; அரண்மனைக்குப் போகவில்லையா குதிரை தேய்க்க?
முத்தன்: உம்—இதோ போகிறேன். ஏன் நான் உட்கார்ந்திருந்தால் இன்னும் ஏதாவது பேசிவிடுவேன் என்று பயமா?
வேதாளம்: இல்லை! ஊதியம் வாங்குகிற இடத்தில் ஒழுங்காக வேலை பார்க்க வேண்டாமா!—அதற்குச் சொன்னேன். நீ நல்லபிள்ளை—எப்படியாவது கெட்டுப்போ—எனக்கென்ன, நான் மடத்துக்குப் புறப்படுகிறேன். எனக்கு என் கடமை பெரியது!—சாமியாரை மட்டும் ஒன்றும் சொல்லாதே—அவர் உன் போல சத்திரத்துப் பேர்வழியல்ல. ஜகம் புகழும் மகான்.
பொன் முடிச்சுக்களையும்—அஞ்சல் ஓலைகள் கொண்ட அடுக்கையும் எடுத்துக் கொண்டு வேதாளம் எழுகிறான்.
★