காட்சி 3 / 4
காட்சி—3
காட்சி—3
அனார்கலி வீடு
மூல ஸ்கேன் 22, 23, 24
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அனார் அழுது கொண்டிருக்கிறாள் — ‘அனார்’ என்ற சலீமின் இன்பக்குரல் கேட்கிறது. அவளோ திடுக்கிட்டு மிதியுண்ட நாகம்போல் எழுகிறாள்.)
அனார் : வருக வருக! இளம் மனதை ஏங்கவிட்ட ஏந்தலே, வருக!
சலீம் : அனார்! குறித்த நேரத்தில் வரவில்லை என்றுதானே கோபிக்கிறாய்?
அனார் : கொலுமண்டபத்து மனிதர்களுக்கு நேரமாவது? நினைப்பாவது........?
சலீம் : கொலு மண்டபத்து மனிதன்! அப்பப்பா! எவ்வளவு ஆத்திரம்! அனார்! உன் கோபத்தில் என் அந்தஸ்தைக் கூட உயர்த்துகிறாயே!........ஏழைச் சிப்பாய் நான் என்று எண்ணம் செய்கிறாயா?
அனார் : தெரியும் எனக்கு! தென்றல் நடை பேசும் தீரரே! போர் வீரனல்ல என் காதலர், புவியாளும் பாதுஷாவின் புதல்வர் என்று!
சலீம் : ஆ!
அனார் : புரிந்துவிட்டது! நீங்கள் மூட்டிய புகை மண்டலம் மறைந்துவிட்டது! உண்மை உதய சூரியனைப் போல் வெளிக் கிளம்பிவிட்டது!
சலீம் : அனார்கலி! இல்லை...... இல்லை.......
அனார் : (கோபமாக — அழுகையோடு) ஆமாம், அப்படித்தான்! நீங்கள் சலீம் இல்லேதான்! சாமான்ய சிப்பாய்தான்! நீங்கள் ஜரிகைப்பூ அல்ல! சாமந்திப்பூ! நீங்கள் மாளிகையின் வெள்ளி மரவல்லி! மணம் வீசும் முல்லை மலர்! என் நெஞ்சை தவழ்ந்தவர், ஒளிவிடும் தங்க ரோஜா அல்ல! பனி விழும் இன்ப ரோஜா! இனிய ராஜா அல்ல! இதய ராஜா! அப்படித்தானே சலீம்? அதுபோலத்தானே நான் நம்பி ஏமாறவேண்டும்?
சலீம் : அனார்!.......சொல்வதைக் கேள்!
அனார் : கேட்டேனே பல முறை! “கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போர் முனை செல்லும் பட்டாளத்து வீரனும் நான்” என்று கூறிய போலிப் பேச்சைக் கேட்டேனே பலமுறை! அப்போதெல்லாம் தெரியாதே எனக்கு அந்தஸ்து பேதத்தின் அளவு! தெரிந்திருந்தால், ஆகாயத்துச் சூரியனுக்காக இந்தத் தடாகத்துத் தாமரை மலர்ந்திருக்காதே பிறைக்கொடி காக்கும் பெம்மானின் பிள்ளையே! டெல்லி ஆதிபத்தியத்தின் எதிர்காலக் காவலரே! என்ன விழிக்கிறீர்?
திரை மறைவில் அனுபவித்த தேன் விருந்து! தெவிட்டிய பின் வீசி எறியவேண்டிய காதல் அமுதம்! அந்தத் தேவை தீருவதற்கு முன் தடைபோட்டு நிற்கிறதே என்று எண்ணுகிறீரா?....படைபோட்டு வாழும் பாதுஷாவின் மைந்தரே! சிப்பாய் நடை போட்டு வந்து என்னை ஏமாற்றியது போதும்! சென்றுவிடும்!
சலீம் : அனார்!... உன்னை நான் ஏமாற்ற எண்ணியதில்லை! ராஜ குடும்பம் என்றால் பயந்து விடுவாயே என்றுதான் போர் வீரன் என்று புகன்றேன்.
அனார் : பயந்துவிடுவேன் என்றல்ல; மறந்துவிடுவேன் என்று! இணங்க மாட்டேன் என்று! சாதாரணமான மனிதர்களும் செய்யத் துணியாத சாகசம் சலீம் பாதுஷா செய்திருக்கிறார்! காரணம் அனார்கலியின் மீது அவ்வளவு அன்பாம் அவருக்கு! துள்ளி விளையாடும் புள்ளிமான் மீது அன்பு கொண்ட வேங்கை, வெள்ளாடு போல வேஷம் போட்டுக் கொண்டு வந்ததாம், பாசத்தைக் காட்டி நேசத்தை வளர்க்க! அப்படித்தானே பாதுஷா தங்கள் கதையும்?
சலீம் : அனார்கலி! போதும் நிறுத்து! சலீம், வேங்கையுமில்லை, வேஷம் போட்டவுமில்லை. ஆனால் நான் என்ன சொல்லி உன்னிடத்திலே வாதிட்டாலும் நீ நம்பப்போவதும் இல்லை. என் உள்ளத்திலே மெல்ல ஒலிக்கும் களங்கமற்ற காதல் கீதத்தை நீ கேட்க முடியாதபடி கோட்டைச் சுவர் தடுக்கிறது! இருதயத்திலே சித்திரமாக அமைந்துவிட்ட என் காதல் ராணி அனார்கலிதான் என்பதை நீ காணமுடியாதபடி ‘அக்பரின் மகன்’ என்ற திரை மறைக்கிறது! ஆகவே என் பேச்சும் பெருமூச்சும் உன் காதில் விழாது! அனார்கலியின் ரோஜாப் பாதங்களின் அருகே சலீம் சவமாகக் கிடப்பதையே விரும்புகிறேன் என்பதை இப்போதே செயல் மூலம் காட்டிவிடுகிறேன். இதோ, அனார்! இதோ!
(சலீம் வாளை எடுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயலுதல்.)
அனார் : (ஓடிப்போய்) சலீம்! சலீம்! என்னை மன்னித்துவிடுங்கள்!
சலீம் : அனார்! (இருவரும் தழுவுதல்)
(காவலர் வந்து)
காவ : உங்களிருவரையும் கைது செய்யும்படி அக்பர் பாதுஷா உத்தரவு!
(ராஜா மான்சிங் தொலைவிலிருக்கிறார்)
சலீம் : ஆ!.......ராஜா மான்சிங்!
ராஜா : (தொலைவில் இருந்தபடி)
ஆமாம்! அக்பர் ஆட்சி அப்படித்தான் ஆணையிடுகிறது (சலீம்—அனார் அழைத்துச் செல்லப்படுதல்)
(திரையில் குரல்)
சலீமும் அனார்கலியும் குற்றம் சாட்டப்பட்டனர். இருவருக்கும் அக்பர் பாதுஷா மரண தண்டனை விதித்தார் — அரசபரம்பரை அந்தமித்து விடக்கூடாது என்று எண்ணிய ராஜா மான்சிங் அக்பரோடு வாதாடி சலீமை மட்டும் விடுவித்தார்! அனார்கலியை உயிரோடு சமாதி வைக்க வேண்டுமென்று ஆணை பிறந்தது! சேதி கேட்டு சலீம் ஓடினான் காதலியை மீட்க! கண்மணியை மீட்க ஓடியவன் கண்டதென்ன? அய்யகோ! அதற்குள்........ அனார்கலி சமாதியில் மறைந்துவிட்டாள்!