காட்சி 2 / 4
காட்சி—2
காட்சி—2
அனார்கலி வீடு.
மூல ஸ்கேன் 19, 20, 21
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அனார் தன் வீடு நோக்கி ஆனந்தமாகப் போய்க் கொண்டிருக்கிறாள் உலகை மறந்த நிலையில். அவள் வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அங்கே ராஜா மான்சிங் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறாள்.)
அனார் : யார்?
ராஜா : ராஜா மான்சிங்!
அனார் : ராஜா மான்சிங்!
ராஜா : ஆமாம்.......அக்பர் சக்ரவர்த்தியின் அமைச்சன், ராஜ நிர்வாகி, படைத்தளபதி....
அனார் : (சாவதானமாக—ஆனால் குறும்பாக) அக்பருக்கு மைத்துனர் கூட! தெரியும் எனக்குப் பிரபு! தங்கள் வருகையால் ஏழையின் குடிசை எல்லையில்லாப் பெருமையடைந்தது.
ராஜா : ராஜ நர்த்தகி! என்னுள் உன் குடிசை பெருமையுற்றது என்கிறாய்; உன்னால் இந்த மண்டலமே பெருமையடைய வேண்டும் என்கிறேன் நான்!
அனார் : நடனமாடு நான்! நாட்டுக்குப் பெருமை தரும் தகுதி எனக்கென்ன இருக்கிறது?
ராஜா : கொற்றவனின் கொலு மண்டபத்தில்.......
அனார் : நான் ஆடும் நடனத்தால் நாடு புகழடைகிறது என்கிறீர்கள்—இல்லையா?
ராஜா : இல்லை....கொற்றவனின் கொலு மண்டபத்தில் மட்டுமே நீ ஆடவேண்டும்.
அனார் : என்ன?
ராஜா : கோமகன் சலீமின் உள்ளத்திலும் நீ ஆடக் கூடாது!
அனார் : என்ன?....சலீம்!....அவருக்கு ஓர் உள்ளம்! அதிலே என் ஆட்டம்?........
ராஜா : அதைக் காட்சியாக்கிக் காட்ட ஒரு தோட்டம்.
அனார் : என்ன சொல்கிறீர்கள்?
ராஜா : ஏன் மறைக்கிறாய், அனார்கலி?....ஜோடிப் புறாக்களாக நீங்கள் பாடி மகிழ்ந்ததைப் பார்த்துவிட்டுத்தான் இங்கு ஓடிவந்திருக்கிறேன் நான்!
அனார் : சரிதான். அக்பர் பாதுஷாவின் அதிகாரத்திலே காதல் புரிவது கடுமையான குற்றமென அவசரச்சட்டம் ஏதாவது!....
ராஜா : பிறக்கவில்லை.......ஆனால்.......அப்படிக் காதல் புரிவோர் தகுதி பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது!
அனார் : காதலுக்குத் தகுதி! நடனப் பெண்ணும் நாடு காக்கும் போர் வீரனும் நேசிக்கக்கூடாதா ?
ராஜா : அவன் போர் வீரனல்ல, புவியாளும் மன்னன்.
அனார் : ஆ!
ராஜா : அக்பரின் திருமகன்! இந்த அவனிக்கு அதிபதி!
அனார் : ஆ!
ராஜா : சலீம்! சலீம்! சலீம் !
அனார் : சலீம்! சலீம்! சலீம்! இல்லை, இல்லை. அவர் சலீம் இல்லை; சக்ரவர்த்தியின் மைந்தரில்லை! சிப்பாய்தான்! சிப்பாய்தான்! என் சிந்தை கவர்ந்த அவர் பொய் சொல்லமாட்டார்! பொய் சொல்லமாட்டார்!
ராஜா : நாடகமாடாதே! ஒரு நாடோடிப் பெண், சாதாரண சிப்பாயின்மீது சாகச வலை வீசமாட்டாள் என்பது எனக்கு நன்றாகத்தெரியும். சக்ரவர்த்தி, சபா மண்டபம், சப்ரகூட மஞ்சம், சாம்ராஜ்ய பவனி—இத்தனையும் ஒரு கண் வீச்சால் பெறலாம் என்ற முடிவு கட்டித்தான் முடியுடை வேந்தர் அக்பரின் செல்வனுக்கு நீ மோக போதை ஊட்டியிருக்கிறாய்!
அனார் : போதும், நிறுத்தும்! அக்கினிப் பிழம்பாகப் போய்விட்ட என் உள்ளத்தில் ஆயிரம் தேளெனக் கொட்டாதீர்! அனார்கலி அன்பு காட்டியது ஒரு சிப்பாயிடந்தான்! செங்கோல் ஏந்தியின் மகனிடமல்ல!
ராஜா : இன்னுமா மறைக்கிறாய், அனார்கலி?
அனார் : மறைத்தது நானல்ல! உங்கள் மகுடபதியின் மகன்தான் சிம்மாசனமேறிகளை நான் மதிக்கமாட்டேன் என்பது தெரிந்துதான் இளவரசர் சலீம் இவ்வளவு பெரிய பொய்யை என்னிடம் சொல்லியிருக்கிறார்!
ராஜா : நடந்தவைகள் நடந்தவைகளாயிருக்கட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாயிருக்கட்டும். இந்தா, அனார்கலி! இலட்சம் பொன் தருகிறேன். எடுத்துக் கொண்டு போய்விடு, எங்கயாவது. இளவரசன் உன்னை மறந்துவிடட்டும்!
அனார் : பொன்னுக்காகக் காதலித்திருந்தால் போய்விடுவேன்! நீர் தரும் இலட்சமென்ன, கோடி கோடியாக என்னைத் தேடி வந்து கொட்டக் குபேரர்கள் காத்திருக்கிறார்கள்! அவர்களும் சரி—நீர் தரும் இந்தப் பொன்னும் சரி—எனக்கு மண்ணுக்குச் சமானம்!....இந்த மண்ணுக்குச் சமானம்!
(மண்ணையள்ளிக் காட்டல்)
ராஜா : (அமைதியாக) கொஞ்சம் சிந்தனை செய், அமைதியாக! பிறகு பதில் சொல்! படை வீரன் என எண்ணிப் பாசம் வைத்தாய்! பாராள்பவன் எனத்தெரிந்ததும் மறந்துவிட வேண்டியதுதானே உன் கொள்கைப்படி! பெண்ணே! உன் ஸ்தானத்தில் நான் இருந்து, இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டால், கட்டாயம் சலீமை மறந்துவிடுவேன்!
அனார் : நீர் மறந்து விடுவீர்........காரணம்.......நீர் அனார்கலி அல்லவே!
ராஜா : சரி, முடிவாக என்ன சொல்லுகிறாய்?
அனார் : என் அபிப்பிராயத்திற்குத் தடையாக உங்களுக்கு அதிகாரம் கிடையாது!
ராஜா : என்ன?
அனார் : அனார்கலியின் ‘காதல் சுதந்திரம்’ டில்லி ஏகாதிபத்தியத்திற்குப் பணிந்துவிடாது!
ராஜா : அதையுந்தான் பார்க்கிறேன்!