பொருளடக்கம்அனார்கலி

காட்சி 1 / 4

காட்சி—1

காட்சி—1

தோட்டம்

மூல ஸ்கேன் 18

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(அனார்கலி, சலீம் காதல் கீதம். தூரத்திலிருந்து ராஜா மான்சிங் பார்க்கிறார்.)

சலீம் : அனார்கலி! அணுப்பொழுதும் உன்னைவிட்டு அகலாதிருக்க மார்க்கமொன்று தேடுகிறேன். கிடைக்கவில்லை!

அனார் : நீங்களோ போர்வீரர்! உங்களுக்குத் தெரியாதா என்ன! உலகத்திலே நிரந்தரமான சமாதானம் நிலைத்த பிறகுதான், வானத்திலே வல்லூறுகளுக்குப் பதிலாக வெண்புறாக்கள் வட்டமிடும் நிலை ஏற்பட்ட பிறகுதான், வீரர்கள் வீட்டுக் காதல் விழாவில் இடைவேளை ஏற்படாமல் இருக்க முடியும். இல்லையா கண்ணே?

சலீம் : அனார்கலி! இரவு நேரம், சொல்லாமலே விடை பெறுகிறது; நம்மைக் கொள்ளாமலே கொல்லுகிறது! என் செய்வது, அன்பே!....புறப்பட்டுமா?

அனார் : ஆமாம், கடமை அழைக்கிறது உங்களை!

சலீம் : அதை உன் காந்தக் கண் தடுக்கிறது. அதையும் உணருகிறேன். ஆனால்........

அனார் : நாளைக்குச் சந்திக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் புலம்பும் என் இருதயத்துக்கு ஆறுதல்கூறி-வாய் உபசாரமாக வழி அனுப்பி வைக்கிறேன்.

சலீம் : அக்பரது குடைநிழலில் சிறு தவறு விளையவும் இந்த ஏழைச் சிப்பாய் காரணமாயிருக்கக்கூடாது, என் திழையே!

அனார் : (தழுவுதல்) என்னுடையவரே!

சலீம் : வருகிறேன், கண்ணே........!

(பிரிகிறார்கள்)

(ராஜா மான்சிங் தனக்குள் ஏதோ ஒரு முடிவு செய்து கொண்டு அகலுகிறார் அந்த இடத்தைவிட்டு)