காட்சி 4 / 4
காட்சி—4
காட்சி—4
சமாதி
மூல ஸ்கேன் 25, 26
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
சலீம் : அனார்! அனார்! மறைந்துவிட்டாயா என் மாசற்ற ஜோதி மழையே! பெண்ணிற் பெரும் பொருளே! பேரழகின் பிறப்பிடமே! என் கண்ணிற்படாமல் உன் கட்டழகைக் கல்லறைக்குள் மறைத்துவிட்டார்களா மாபாவிகள்! காதலுக்கோர் எடுத்துக்காட்டே! கவிஞர்களும் தொழுத்திட இயலாக் கற்பின் ஆரமே! சிரித்துச் செழித்த உன் சிங்கார முகத்தை எரித்துக்கெடுக்க வேண்டாமென்று, கல்லுகொட்டி மூடினரோ, கல்லினும் வலிய மனமுடையோர்? காதலி! அனார்கலி! அனார்கலி!!
பாவிகளே! என் அனார்கலியை அழித்துவிட்டீர்கள்! என் இதய ஜோதியை அணைத்துவிட்டீர்கள்! அமர வீணையை உடைத்து விட்டீர்கள்! காதல் மகாகாவியத்தின் சிரஞ்சீவிக் கதாநாயகியைக் கல்லறைக்குள் மூடிவிட்டீர்கள்! அவள் அழுகை மறைத்தீர்கள்! ஆனால் அற்ப சந்தோஷக்காரர்களே, அவள் சலீம் நெஞ்சத்திலிருந்து எடுத்தெறிய யாருக்கும் துணிவில்லை! யாருக்கும் திறனில்லை!.
நாடோடியாம் அவள்! நாடாள வேண்டியவனும் நான்! என் சுட்டுவிரல் அசைவுக்கு எட்டுத்திக்கும் பணியுமாம்! படை பல உண்டாம் எனக்கு! தடை பல கடக்கலாமாம் நான், பெரிய ஊர்போல் அரண்மனை! பிரும்மாண்டமான கோட்டை! எடுபிடி, ஆள், அம்பு, யானை, சேனை ஏராளம், ஏராளம்! மணி முடியுண்டு! பணிபுரியப் பலர் வருவர்! மந்த மாருதம் வேண்டுமா? அதற்கோர் சோலை! நீந்தி விளையாடவா? அதற்கோர் நீரோடை! பட்டு விரித்த தரையிலே பாதம் பட்டால் நோகுமோ என்று கவலைப்படக் கணக்கற்றோர்! மொட்டு விரிந்த மல்லிகை நல்லதா, முல்லை நல்லதா, பஞ்சத்திலே பரப்ப—என்று யோசிப்போர் ஆயிரம் ஆயிரம்........
இவ்வளவும் இருந்தென்ன? இத்தனை சுகமும் கிடைத்தென்ன? இதயத்திலே குடியேறி விட்டவளை ஏற்றுக் கொள்ளும் உரிமை கிட்டாத எனக்கு? விருப்பியவளை அடைந்திடும் சுதந்திரமில்லாத எனக்கு? இவ்வளவும் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அரண்மனை ஏன்? ஆடம்பரம் ஏன்? அரச வாழ்வு ஏன்? என் ஆணை கேட்க ஆயிரம் ஆட்கள் ஏன்? ஏன்? ஏன்....? அனார்கலி! உன்னை அடைய முடியாத இப்பாவிக்கு இத்தனையும் ஏன்? உயிரோடு உன்னைச் சமாதி வைத்ததைத் தடுக்க முடியாத இந்த அடிமை ராஜ குமாரனுக்கு ராஜ்யந்தான் ஏன்? நீதியில்லாத பூமியில், என் அன்பே! எனக்கு வாழ்வுதான் ஏன்?
அக்பரின் மகன் ஒரு நடன மாதைக் காதலிக்கக் கூடாதாம். என் கட்டழகியை மூடியுள்ள கல்லறையே, நீ சொல்! ராஜ்ய அந்தஸ்து குறைந்துவிட்டது என்று அவளை நீ விழுங்கிவிட்டாய். முஸ்லீம் பாதுஷா அக்பர், ராஜபுத்திர ஜோதிபாயை மணந்து கொள்ளலாமாம். அந்த ஜோதிபாயின் மகன் ஒரு நடன சந்திரியை காதலிக்கக்கூடாதாம்! என் காதலியை விழுங்கியுள்ள கல்லறையே, நியாயந்தானா? சொல்! நீ இப்போது வழங்கியிருப்பது நல்ல தீர்ப்புதானா? சொல்....! சொல்ல மாட்டாய்! உனக்கு உயிரைக் குடிக்கத்தான் தெரியும்! இதோ அந்த வேலையைச் செய்! உனக்குப் பழக்கமான அந்த வேலையைச் செய்!
(சலீம் சாகத்துணிகிறான்........அவன் மரணத்தை, அந்த மண்டலம் விரும்பவில்லை.)