பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 22 · 22 / 23

அத்தியாயம் 22

Chapter 22

மூல ஸ்கேன் 166 after centered 22 – 172 before centered 23

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

22

ஆவேசத்தின் எல்லைக்கோடு வரையிலே போய்விட்ட அவளது நெஞ்சத்தில் சிறிது சிறிதாக அமைதியின் சாயல் விழத் தொடங்கியது. ஆனால் அந்த அமைதியிலே சோகத்தின் மயான நிலைமை ஒளித்துக்கொண்டிருக்கத் தவறவில்லை.

“பொழுது விடிந்தால்?” — இப்படியொரு கேள்வி அவள் இதயத்தின் துடிப்பை அதிகப்படுத்திற்று. “தாயார் தற்கொலை ஊரெங்கும் பரவும். பஞ்சாயத்து, பிரேத விசாரணை என்றெல்லாம் வேதபுரத்து மக்கள் கூட்டம் கூடுவார்கள். அவர்களுக்கெதிரே நானும் நிற்கவேண்டும்; விபச்சாரிப் பட்டத்தோடு! அபின் கடத்தும்போது பிடிபட்டு ஜாமீனில் வந்திருக்கிறாள் என்ற ஊரார் பேச்சுக்களில் வாங்கிக்கொண்டு! அம்மம்மா! என்னால் முடியாது!......... வேதபுரத்தார் விழிகளிலே நான் படவே கூடாது!” என்று தனக்குத்தானே கதறினாள். தானும் தன் தாயாரின் எதிரிலேயே உயிரை விட்டு, பக்கத்திலே பிணமாகத் தொங்கலாம் என்றும் யோசிக்கத் தொடங்கினாள். அப்போதும் அவள் மனக்கண் முன்னே ஊரார்தான் வந்து நின்றனர். தானும் தற்கொலை செய்துகொண்டால், நாளைக்கு வேதபுரம் என்ன பேசும்!—காலையிலே வேதபுரம் மூன்று பிணங்களைக் காணும்! ஆனந்தி, சிவகாமி, சிந்தாமணி—மூன்று பிணங்களைப் பற்றியும் என்ன விமர்சனங்கள் வெளிவரும்?

“அய்யோ; ஊருக்கு எவ்வளவோ உதவியாயிருந்தார்கள் அந்த உத்தமி ஆனந்தி! அந்த அப்பாவியைக் கொன்று விட்டார்களே பாவிகள்!” என்ற விதத்தில் அனுதாபம் எழும்.

“சிவகாமி, பாவம்......எவ்வளவோ மனக்கோட்டை யெல்லாம் கட்டினாள்; அதற்குள்ளே மண் கோட்டைக்குள்ளே போய்விட்டாள்!” என்று பரிதாபம் காட்டுவர்—<!-- source continuation: scan 166 ends என்று பரிதாபம் காட்டுவர்—; scan 167 begins அம்மாவின்... -->அம்மாவின் பக்கத்திலே தன்னுடைய பிணமும் இருந்தால் இரண்டு பிணங்களையுமே ஊரார் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டாலும் போய்விடுவார்கள்.

“சிறுக்கி! செய்வதெல்லாம் செய்துவிட்டுக் கடைசியில் செத்துப்போய்விட்டாயா!” என்று கேலி புரிவர்—காரி உமிழ்வர்!......வேண்டாம்—வேண்டாம்—சாகவேண்டாம் என்று தீர்மானமும் பலமாக எழுந்தது. தன்மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டு குற்றங்களிலுமிருந்தும் விடுபட வேண்டும். அபின் கடத்தியவள் தானல்ல என்பது மட்டும் அல்ல; அந்த உண்மையான குற்றவாளியும் அகப்பட்டாக வேண்டும். அதுபோலவே தான் களங்கமற்றவள் என்று தெரிந்து அழகப்பன் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள முன்வரவேண்டும். இந்த இரண்டு காரியங்களும் நடந்து, தான் அழுக்கற்றவள் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால் மறுநாளே கூட செத்து விடலாம்; அதுவரையில் உயிரை மாய்த்துக்கொள்வது கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டாள். சரி இப்போது எங்கே போவது? விடிந்து ஊரில் இருக்க முடியாதே! அவமானச் சின்னம்போல வேதபுரத்து வீதியிலே எப்படி திரிவது?—என ஏங்கினாள்.

அவளுக்குப் பாலகங்காதரத் தேவரின் ஞாபகம் வந்தது. அவருடைய வீட்டுப் பக்கத்திலே ஐந்துமைல் உள்ள அய்யனார் பண்ணைதான்—அங்கே போய்விட்டால் என்ன என்று ஆலோசனை செய்தாள். ஆனால் அவர் பெங்களூரிலிருந்து நாளைக்குத்தானே வருவதாகச் சொன்னார் என்ற சந்தேகம் எழுந்தது! எதற்கும் அய்யனார் பண்ணைக்குப் போய்விட்டால், அவர் வரும் வரையில் அங்கிருந்து, பிறகு அவரோடு பெங்களூர் சென்று, வழக்குபற்றி ஒரு முடிவு செய்து, அவரிடமே அழகப்பனைப்பற்றியும் கூறி, தன்னைக் களங்கமற்றவள் என்று அவனை நம்பச் செய்துவிடவேண்டும் என்று மனக்கோட்டைகள் கட்டினாள். தேவர் தான் தன்னை பண்ணையிலேயே தங்கச் சொன்னார் என்று கூறினால் அங்கு இடங்கொடுக்கமாட்டார்களா என்ன?—இப்படியெல்லாம் அவளே கேள்விகளைக் கேட்டு பதிலையும் கூறிக்கொண்டு வெகுவிரைவில் அய்யனார் பண்ணைக்குப் போய்ச் சேர்ந்து<!-- source continuation: scan 167 ends போய்ச் சேர்ந்து; scan 168 begins விடவேண்டுமென்ற --> விடவேண்டுமென்ற முடிவுடன் எழுந்தாள். தன் தாயின் முகத்தைக் கடைசியாக ஒரு முறை தரிசனம் செய்து கொள்ள விரும்பினாள். கால்களைக் கண்களில் ஒத்திக் கொண்டாள்.

“அம்மா! இதோ உன் மகள் இந்தக் கண்ணீரால் உன் கால்களைக் குளிப்பாட்டுகிறாள். இருந்து குளிப்பாட்டி, உன் சவச்சடங்குகளைச் செய்துமுடிப்பதற்கான பாக்கியம் எனக்கு இல்லாமலே போய்விட்டது!...பரவாயில்லை!...உன் மகள்மீதுள்ள குற்றங்களும், மாசுகளும் அகன்றுவிட்டால் அதுவே உனக்கு நான் செய்யும் இறுதிக் கடமைகளைவிட அதிக மகிழ்ச்சிதரக்கூடிய சேதியாக இருக்கும் உனக்கு!...என்னைச் சுமந்து பெற்று வளர்த்தாய்! நானும் சுகம் காணவில்லை! நீயும் சுகம் காணவில்லை!

“பூவோடும், மஞ்சளோடும் போய்விடுவோமென்று தானே தாயே; அப்பாவைப் பின்தொடர்ந்துவிட்டாய்!” மானம் போனதேயென்று அப்பா உயிர் நீத்தார்...கவலைப் படாதேயம்மா!......மானமுள்ள குடும்பந்தான் சிவநேசர் குடும்பம் என்பதை ஊர் அறியச்செய்கிறேன். வருகிறேன் அம்மா!......என்னைப்பெற்ற தாயே! வருகிறேன்!”

சிந்தாமணி அந்த இருட்டில் வீட்டைவிட்டுப் புறப்பட்டாள். அய்யனாரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். ஐந்துமைல் தொலைவு!......விடிவதற்குள் போய்விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்குப் பூரணமாக இருந்தது. இரண்டு அல்லது மூன்றுமைல் தூரம் போயிருப்பாள்; வழியில் யாரோ ஒருவன் அய்யனார் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது. அவனது நடை நிதானமாயில்லை. தள்ளாடித் தள்ளாடி நடந்துகொண்டிருந்தான். இருட்டில் அவளுக்கு அவனைச் சரியாகத் தெரியவில்லை. அவன் குடிபோதையில் ஏதோ உளறிக்கொண்டு போகிறான் என்பதையும் அவள் புரிந்துகொண்டாள். ஆனால் அவனை உற்றுப்பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது. அவன் பக்கம் திரும்பாமலே வேகமாக அவனைக் கடந்து நடந்துகொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்துவிட்ட அவன், “ஏய் பொம்பளை! யாரது?...யார்!” என்று கத்தினான், வாய் குழறியவாறு!

சிந்தாமணி, இன்னும் வேகமாக—ஓட்டமும் நடையுமாக அய்யனார் நோக்கிச் சென்றாள். அவன் வெகுதூரத்தில் அவளுக்குப் பின்னே வந்துகொண்டிருந்தான். அச்சமும், கூச்சமும் ஆட்டிப்படைக்க சிந்தாமணி அய்யனார் பண்ணைக்கு வந்துசேர்ந்தாள். பண்ணை வாசலிலே உள்ள அழகான வளவுகளிலே நுழைந்து உள்வாயிற்பக்கம் வந்துசேர்ந்தாள். யாரோ வரும் அரவம் கேட்டு நாய் குரைத்தது.........“யாரது?” என்ற ஒரு முரட்டுக்குரலும் அதைத்தொடர்ந்து கேட்டது. சிந்தாமணி பதில் சொல்லாமல் நின்றாள்.

“யார், இடும்பனு?” என்றபடி காவற்காரன் அருகே வந்து, “டார்ச்” விளக்கை மேலே அடித்தான். ஒரு பெண் நிற்பதைப்பார்த்து காவற்காரன் திடுக்கிட்டான், “யாரம்மா—என்ன வேணும்?” என்றான் காவற்காரன். உடனே சிந்தாமணி......

“தேவர்...” என்று இழுத்தாள்! அதற்குள் அவன், “அய்யா இருக்காரே—பார்க்கணுமா?” என்று கேட்டுவிட்டான். அவளும் “ஆமாம்” என்று தலையசைத்துவிட்டாள். காவற்காரன், “இதோ வந்துவிட்டேன்” என்று சொல்லி உள்ளே போனான். இப்போது சிந்தாமணிக்கு வியப்பு ஏற்பட்டது—“எப்படி தேவர் ஊரிலே இருக்க முடியும்!—பெங்களூரிலிருந்து நாசிக்குத்தானே வருவதாகச் சொன்னார்” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டாள்.

அப்போது காவற்காரன் ஓடிவந்து, “அம்மா! இதோ இந்தஹாலில் உட்காரச்சொன்னார்—இப்போது வந்துவிடுவார்!” என்று கூறினான். சிந்தாமணியும் அவன் காட்டிய இடத்தில்போய் உட்கார்ந்துகொண்டாள். காவற்காரன் வெளியே போய்விட்டான்.

சிந்தாமணி தேவரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். “சரக் சரக்” என்ற செருப்பின் சப்தம் கேட்டது. ஒலி வந்த திக்கையே நோக்கியவாறு<!-- source continuation: scan 169 ends ஒலி வந்த திக்கையே நோக்கியவாறு; scan 170 begins அவள் எழுந்துநின்றாள், --> அவள் எழுந்துநின்றாள், தேவருக்கு மரியாதை அளிப்பதற்காக! ஹாலின் உட்பக்கக் கதவுப்புறம் போடப்பட்டிருந்த சிகப்புப் பட்டுத்திரை விலகிற்று.

அவர் வந்தார். சிந்தாமணிக்குத் திகை சூழ்ந்தது. அவள் பெங்களூரில் பார்த்த பாலகங்காதரத் தேவரல்ல அவர்! “யாரம்மா?” என்றார் தேவர்! சிந்தாமணி, நடுக்கத்துடன் “மன்னிக்கவும்,...நான்...பாலகங்காதரத் தேவரைப் பார்ப்பதற்காக......” என்று திணறியவாறு கூறினாள்.

“நான்தான் பாலகங்காதரத் தேவர்...இந்த ஊரில் வேறு யாருமில்லை என் பெயர் கொண்டவர்களும், என் அளவு பெருமையுடையவர்களும்!” என்று கம்பீரமாக மொழிந்தார் தேவர். “அப்படியானால் நான் பெங்களூரில் பார்த்த பாலகங்காதரத் தேவர்?” என்று கேட்டாள் சிந்தாமணி. தேவருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் பெயரைச் சொல்லி யாரோ ஒருவன் இவளை ஏமாற்றியிருக்கிறான்போலிருக்கிறது என்று எண்ணினார். ஆனால், அதிலும் தெளிவில்லை. அதில் தெளிவு ஏற்படாததற்குக் காரணமே சிந்தாமணியின் தோற்றந்தான்! அவளைப் பார்த்ததுமே அவருக்குப் போதை தலைக்கு மேலேறி விட்டது.

வேங்கையின் இருப்பிடத்திற்கே மான் விருந்தாக வந்ததுபோல் ஆகிவிட்டது சிந்தாமணியின் கதை! தேவரின் பார்வை அவளுக்கு அச்சத்தை மூட்டினாலும், புதிதாகத் தோன்றியிருக்கும் குழப்பத்தை எப்படியாவது தீர்த்துக்கொள்ளவேண்டுமென்று அவள் துடித்தாள். “உன் பெயர் என்ன?” என்றார் தேவர். “சிந்தாமணி”யென்று கேட்டு இதழோரத்தில் புன்னகையை நெளியவிட்டார். “அப்படியானால் பெங்களூரில் வந்த தேவர் யார்?...உண்மையான தேவர் நீங்கள்தானு?” என்று மறுபடியும் ஆவலோடு கேட்டாள் சிந்தாமணி. “நானேதான் பாலகங்காதரத் தேவர்—அதில் சந்தேகமே வேண்டாம்!” என்று கனைத்துக்கொண்டார் தேவர். அப்போது காவற்காரன் அவசரமாக ஓடிவந்து “எஜமான்!....இடும்பன்...”<!-- source continuation: scan 170 ends “எஜமான்!....இடும்பன்...”; scan 171 begins என்றான். --> என்றான். உடனே தேவர் அவசரமாக எழுந்து, “சிந்தாமணி, கொஞ்சம் இரு! இதோ வந்துவிட்டேன்!” என்று கூறிவிட்டுக் காவற்காரனுடன் வெளியே போனார். சிந்தாமணிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பெங்களூரில் தன்னை விடுவித்த பாலகங்காதரத் தேவர் யாராக இருக்கும்?—குழப்பிக்கொண்டாள்.

எழுந்து அந்த ஹாலிலேயே உலவினாள். அங்கிருந்த வாறு தோட்டத்துப்பக்கம் பார்த்தாள். தேவர் காவற்காரனுடன் அவசரமாக அந்தப்பக்கம் வந்தார். ஒரு கதவின் பக்கம் ஒளிந்துகொண்டு என்ன நடக்கிறது என்று கவனித்தாள். அவள் வரும் வழியில் சந்தித்தாளே; அந்த மனிதனைத்தான் இருக்கவேண்டும்; ஒருவன் தள்ளாடியபடி தேவர் அருகே வந்தான்.

“எஜமான்! காரியத்தை முடிச்சுட்டேன்!” என்று வாய் குழறியபடி சப்தம் போட்டான்.

“டே—இடும்பா! சப்தம் போடாதே!” என்றார் தேவர்.

சிந்தாமணிக்கு இடும்பன் யார் என்று விளங்கிவிட்டது. வழியில் அவள் சந்தித்த ஆளாகத்தானிருக்கவேண்டும்; குரலும் அதுபோலத்தானிருக்கிறது என்று முடிவு கட்டிக்கொண்டாள். காவற்காரன் இடும்பன் மீது “டார்ச்” விளக்கை அடித்தான்! இடும்பன் ஆடை முழுவதும் இரத்தக்கறையாக இருந்தது. அவன் கையிலே ஒரு பளபளப்பான அரிவாளும் இருந்தது. அந்த அரிவாள் முழுதும் இரத்தத்தால் நனைந்திருந்தது. சிந்தாமணிக்கு மயக்கம் வந்துவிடும்போலிருந்தது, சமாளித்துக்கொண்டு கவனித்தாள். இடும்பனைப் பார்த்துத் தேவர் கேட்டார்—

“என்னடா, என்ன ஆச்சு? யாரும் உன்னைப் பார்க்கலியே?”

“இல்லீங்க எஜமான்! நான் மாடியிலேயே காத்திருந்தேன். யாரோ இரண்டு பசங்க; ஒருத்தன்தான் அந்த நயினு முகம்மது; இரண்டு பேரும் ரொம்ப நேரம் முழிச்சிகிட்டு, என்னென்னமோ ரகளை பண்ணினானுங்க! ஆனந்திக்கும் அந்தப் பசங்களுக்கும் வம்புச் சண்டையெல்லாம்<!-- source continuation: scan 171 ends வம்புச் சண்டையெல்லாம்; scan 172 begins நடந்தது. --> நடந்தது. அந்தச் சண்டையிலே அவன் மயக்கம் போட்டு விழுந்தா!......யாரும் பக்கத்திலே இல்லை!......நான் ஒரே போடு அவன் தலையிலே போட்டுட்டு வந்துட்டேன்... இன்னேரம்...அவ தீர்ந்திருப்பா எஜமான்!”

சிந்தாமணிக்கு உடலெங்கும் வியர்த்துக்கொட்டியது. உதடுகள் உலர்ந்துவிட்டன. “எங்கேயோ ஒரு கொலைகாரன் கோட்டைக்குள் வந்து சிக்கிக்கொண்டோமே” என்ற அதிர்ச்சி அவளைப் படாதபாடு படுத்தியது.

தேவர், இடும்பனைப் பார்த்து, “சரி சரி!...வேட்டி, சட்டை, அரிவாள் எல்லாத்தையும் குழிவெட்டிப் போட்டு மூடுங்க...உம்......உடனே......பாக்கியெல்லாம் காலையிலே பேசிக்கலாம்!”......என்று உத்தரவிட்டார். காவற்காரன் அந்தத் தோட்டத்து வேலியோரத்திலே ஆழமான ஒரு குழி தோண்டினான். அதிலே அரிவாளும், இரத்தக்கறை படிந்த இடும்பனின் உடைகளும் போட்டு மூடப்பட்டன.

“இடும்பா!...இன்னொரு மொந்தை குடிச்சிட்டு பேசாம போயி தூங்கு—போ! போ!!” எனக்கூறி, தேவர் ஹால் பக்கம் வந்தார், சிந்தாமணியுடன் பேசவேண்டுமென்ற ஆசையோடு!

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்