அத்தியாயம் 21 · 21 / 23
அத்தியாயம் 21
Chapter 21
மூல ஸ்கேன் 160 after centered 21 – 166 before centered 22
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
21
“நயினா! என்னை மன்னித்துவிடு. உள்ளம் எனக்கு மட்டும் இருப்பதாகவும், உலகில் உள்ள பொருள்களுக்கு உரிமை கொண்டாடும் பாக்கியத்தை எனக்கே ஏகபோகமாக எழுதிவைக்கப்பட்டிருப்பதாகவும் எண்ணி, என்னை நானே ஏமாற்றிக்கொண்டுவிட்டேன். காவியம் செறிந்த உன் இருதயத்தில் வனப்பு மிகுந்த பருவப்பெண்ணுக்கு நீ காதல்வீடு கட்டிக்கொடுப்பதால் எனக்கு ஏன் பொறாமை ஏற்படவேண்டும்? என்னையும் மீறி — என் நட்பையும் மீறி அப்படியொரு தீயசக்தி என் நெஞ்சிலே திரிந்து மன்னிக்கமுடியாத பெருங்குற்றமல்லவா? எனதருமை நண்பனே! இன்ப துன்பங்களில் இணைபிரியாதிருந்த ஆருயிர்த் தோழனே!...என்னை மன்னித்துவிடடா!...... மண்ணையும் பொன்னையும் பிரிக்கமுடியாத நமது தூய நட்பு<!-- source continuation: scan 160 ends நமது தூய நட்பு; scan 161 begins ஒரு பெண்ணால்... --> ஒரு பெண்ணால் பிரிக்கப்பட்டுவிட்டது என்று பழி-பாவம்; அந்த அன்புச் சகோதரி ஆனந்திக்கு ஏற்படவேண்டாம்! என் இரத்தத்தில் எங்கேயோ ஒளிந்துகொண்டிருந்த வெறியுணர்ச்சி சூடேறிக் கிளம்பி சூறாவளியை உண்டாக்கி விட்டு இப்போது மறைந்துவிட்டது! இனி அந்த வெறி தலைகாட்டாது! என்னை மன்னித்துவிடு!”
இப்படி அழத் தொடங்கினான் அழகப்பன். நயினாவும் கண்களிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சியைத் தடுத்திட முடியாமல், நண்பனைக் கட்டித் தழுவியவாறு, “இப்படி யெல்லாம் பேசாதே அழகு!......ஏதோ நடந்தது நடந்து விட்டது. இவைகளையெல்லாம் உருவற்ற கனவாக மதித்து நடக்கவேண்டியவைகளைக் கவனிப்போம். மன்னிப்பு கேட்கிறாய் என்னிடம்—உன்னை மன்னிக்க நான் யார்?.... நீயென்ன அவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டாய்? நீ செய்ததை உள்ளபடியே பெருங்குற்றமாக நீ நினைப்பாயானால், அதற்கு ஒரே ஒரு ‘பிராயச்சித்தம்’ தான் இருக்கிறது. அதை நிறைவேற்ற முடியுமானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.”
“என்ன நயினா?......சொல்லு! கட்டாயம் அந்தப் ‘பிராயச்சித்தத்’தை நிறைவேற்றுகிறேன்.”
“அருமை நண்பனே!...சிந்தாமணியை நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும்.”
“என்ன!”
“அவள் மிகவும் நல்லவள். டைகர் என்ற அந்தத் துரோகியின் தூண்டுதலால் ஆனந்தி அவளுக்குக் களங்கம் கற்பிக்க முற்பட்டாள். நாமும் அவசரப்பட்டுத் தவறான முடிவுக்கு வந்துவிட்டோம். ஆனந்தி டைகருக்குப் பயந்து செய்த காரியம் அவள் மனச்சாட்சியைக் குடைய ஆரம்பித்தவுடன் உண்மையை நம்மிடம் சொல்ல ஓடி வந்திருக்கிறாள். அதன்பிறகுதான் கார் விபத்து...இதுவரையில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாமே!...”
“சிந்தாமணி கைது செய்யப்பட்டிருப்பது எப்படி?” என்றான் அழகு.
“அதுதான் எனக்கும் தெரியவில்லை ... ஒருவேளை அவள் நம்மைப் பார்க்க பெங்களூர் ஓடி வந்திருக்க வேண்டும்—வரும் வழியில் இப்படியொரு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். சிந்தாமணியைப்பற்றி, ஆனந்தி கூறும் பாராட்டுரைகளைக் கேட்கும்போது, அவள் ஒரு பத்தரைமாற்றுப் பசும்பொன் என்றுதான் தீர்மானிக்கவேண்டும். உன் மனத்தைத் திருப்ப முயல்வதாக நினைக்காதே அழகு! உண்மையாகவே சிந்தாமணி மாசற்றவள்!”
“எனக்கு ஒரே குழப்பமாயிருக்கிறது நயினா! என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை...”
“சிந்திக்க நேரம் எடுத்துக்கொள். சிந்தாமணியைப் பற்றி எந்த அவசரமான முடிவுக்கும் இப்போது வரத் தேவையில்லை. மாசு படிந்தவள் என்று நாம் முடிவு கட்டுகிற ஒரு வார்த்தையால் ஒரு பெண்ணின் வாழ்வே அஸ்தமித்துப்போகும் நிலைமை ஏற்படுகிறது என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து, அவளைப்பற்றி ஆராய்ச்சியை நடத்தி தீர்க்கமான முடிவுக்கு வருவது நல்லது நண்பா!”
“சரி நயினா.....நீ கூறுவதுபோலவே அவகாசமெடுத்துக்கொண்டு, அதைப்பற்றி முடிவு கூறுகிறேன்......வா, ஆனந்தியிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும்!...”
நயினாவும், அழகுவும் அவர்கள் இருந்த அறையை விட்டுப் புறப்பட்டு ஆனந்தியிருக்கும் அறைநோக்கிச் சென்றார்கள்.......ஆனந்தியைச் சமாதானம் செய்து தன்னுடைய தங்கையாக ஏற்றுக்கொள்ள எண்ணி நடந்தான் அழகு! புயலுக்குப்பின் அமைதி உருவாயிருப்பதாக நினைத்து மகிழ்ந்தான் நயினா.
ஆனால் இந்த இருவரின் எண்ணத்திலும் மண்ணைப் போடுவது போன்ற பயங்கரமான காட்சியை ஆனந்தியின் அறையிலே கண்டார்கள்.
ஆம்; ஆனந்தி, பிணமாகக் கிடந்தாள் கட்டிலின் மீது!...கட்டில் முழுவதும் இரத்தமயமாக இருந்தது. தலையிலேயிருந்து ‘குபு குபு’ வென்று குருதி பொழிந்து கொண்டேயிருந்தது. கீழே, கட்டிலின் ஓரமாக அம்மிக் குழவியொன்றும் கிடந்தது. நயினா, “அய்யோ!” என்று அலறிவிட்டான். அழகப்பனும் கூச்சலிட்டான். அழகப்பனை நயினா பிடித்துக்கொண்டு, “அடப்பாவி!......நீதானே இவ்வளவு பெரிய அக்கிரமத்தைச் செய்துவிட்டாய்!...உன் எண்ணம் ஈடேறக் காரணத்தால் இவ்வளவு பெரிய இழி செயலுக்குத் துணிந்துவிட்டாயே; அழகப்பா! எப்போதடா உன் மனம் இதுபோன்ற கொடூர வேலைகளுக்குத் துணிந்தது?” என்று கதறினான்.
அழகப்பனே திகைத்துப்போய், நயினாவைப் பார்த்து, “அய்யோ! பழியைப்போடாதே, நயினா!.........எனக்கும் இந்தக்கொலைக்கும் சம்பந்தமேயில்லை. வீணாக என்னைச் சந்தேகப்படுத்தி என்மீது சண்டாளப்பட்டம் சுமத்தாதே!” என்று அலறினான்.
நயினா, அழகப்பனை நம்பத் தயாராய் இல்லை. முழு நிலவு ஒளியாக்கப்பட்டது போல் சிதறுண்டு கிடக்கும் சித்திரப் பொற்பாவையாம் ஆனந்தியின் பிணத்தின் மீது விழுந்து தன்னை மறந்து புலம்ப ஆரம்பித்தான் நயினா.
“அய்யோ ஆனந்தி! உன் வாழ்வுக்கு முடிவுதேடும் காரியத்திற்கு நானல்லவா காரண கர்த்தாவானேன். நம்மிடையே ஏற்பட்ட காதல் அல்லவா — கட்டழகி! உன் வாழ்வை மாய்க்கும் கருவியாக மாறிவிட்டது! அழகப்பா! தியாகம் செய்யமுடியாத பொருளை—தேடிக்கிடைக்காத இந்தத் திரவியத்தை தியாகம் செய்கிறேன் என்று உன்னிடம் கூறினேனே; அப்படியிருந்தும் ஏனடா பாவி; அவளை அழித்துவிட்டாய்? நீ என்ன செய்வாய்? உனக்குப் பயனில்லாத பொருள் உலகிலே இருக்கவேண்டாமென்று நினைத்துவிட்டாய் போலும்! என் செல்வத்தைச் சீரழித்துவிட்டு என்னிடமே நல்லவன்போல நடித்து என்னை மயக்கிவிட்டாயே; கொலைகாரா!”
நயினாவால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. ஆனந்தியோ எந்தக் கவலையுமின்றி நீங்காத துயிலில் கிடந்தாள். அழகப்பன் அதிர்ச்சியுற்று தன் நிலையை விளக்கமுடியாமல் தவித்தான். அவனுக்கும் அந்தக் கொலைக்கும் எந்தசம்பந்தமுமில்லை. அவன் அதைச் சொன்னால் நயினா நம்பத் தயாராகவும் இல்லை. என்ன செய்வான்; பாவம்—நடப்பது நடக்கட்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டான் மாடிப்படிகளில் கன ரக ‘பூட்ஸ்’கள் எழுப்பும் சப்தம் தொடர்ந்து கேட்டபடியிருந்தது. ஏழெட்டுப்பேர் நடந்து வருகிறார்கள் என்பதை அந்த ஒலி விளக்கியது.
நயினாவும், அழகும் ஒலி வந்த திசையை நோக்கியவாறு நின்றனர். ஏழெட்டுப் போலீசார் ‘திபு திபு’ வென்று பிரவேசித்தனர்...
அவர்கள் எப்படி வந்தனர்? யார் அவர்களுக்குத் தகவல் கொடுத்திருப்பார்கள்?
இந்தக் கேள்வி, அழகு—நயினா இருவரையும் வியப்பில் ஆழ்த்தியது! போலீசாரின் பின்னாலேயே வேம்பு வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் சோகம் குடிக் கொண்டிருந்தது. அழுதழுது கண்கள் சிவந்திருந்தன அவனுக்கு!
“இவர்களில் யார் நயினா முகம்மது?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர், வேம்புவிடம்! வேம்பு நயினாவை அடையாளங் காட்டினான். அதற்குள், அழகப்பன் இன்ஸ்பெக்டரிடம் வந்து—“ஏன் சார்?” என்றான் ஆவலாக!
“நயினா முகம்மது இந்தக் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்றார் இன்ஸ்பெக்டர்.
உடனே அழகப்பன்—“இல்லை சார் இல்லை! நயினாவுக்கும் இந்தக் கொலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நான்தான் ஆனந்தியைக் கொலை செய்தேன்” என்று கூவினான்.
உடனே நயினா—“அழகப்பன் சொல்வது பொய்! நான்தான் அவளைக் கொலை செய்தேன்?” என்று கத்தி<!-- source word join: scan 164 ends கத்தி; scan 165 begins னான். -->னான். ஆருயிர் நண்பர்கள் இருவரும் ஒருவருக்காக ஒருவர் தங்கள் வாழ்வையே தியாகம்செய்யத் தயாராகி விட்டார்கள்.
அழகப்பன்தான் காம வெறியில் ஆனந்தியைத் கொலைத்துவிட்டான் என்ற உறுதியான கருத்து நயினாவுக்கு இருந்தபோதிலும் நண்பனைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை.
அழகப்பனின் கிழத் தாயார் நயினாவுக்கு எதிரே வந்து நின்று கண்ணீர் மல்கியவாறு “என் மகனைக் காப்பாற்றடா!” என்று கொஞ்சுவதுபோல் இருந்தது நயினாவுக்கு!
அழகப்பனே, யார் செய்த கொலைக்கோ தன் நண்பன் பலியாகிறானே என்ற பதட்டத்திலும்—நண்பன் தன்னைச் சந்தேகித்தபிறகும் உயிர்வாழ விரும்பாத விரக்தியிலும்—தானே கொலை செய்ததாகச் சாதிக்கத் துவங்கினான்.
இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தான்தான் குற்றவாளியென்று வாதாடுவது கண்ட போலீசார் திகைத்தனர்.
வேம்பு சொன்னான்: “எனக்கு இந்த இரண்டுபேர் மேலேயும் சந்தேகம் சார்!” என்று!
திகைப்பிலாழ்ந்த இன்ஸ்பெக்டரும் அழகு, நயினா இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். ஆனந்தியின் பிரேதம் பரிசோதனைக்காக பாலையூர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
எந்தப் பாலையூர் மருத்துவ மனையில் ஆனந்திக்கும் நயினாவுக்கும் காதல் வளர்ந்ததோ, அந்தப் பாலையூர் மருத்துவ மனைக்கு அவளது சவம் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அழகுவும், நயினாவும் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வீட்டிலே பிணமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் தாயாரின் காலடியில் தலையை மோதிக்கொண்டு, சிந்தாமணி அழுதுகொண்டிருக்கிறாள். “அம்மா! அந்தப் பாதகி ஆனந்தியை என்னால் பழிவாங்க முடியவில்லை!.........அதற்குள்<!-- source continuation: scan 165 ends அதற்குள்; scan 166 begins யாரோ... --> யாரோ அந்த வேலையைச் செய்து முடித்துவிட்டார்கள்!” என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்!
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்