பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 20 · 20 / 23

அத்தியாயம் 20

Chapter 20

மூல ஸ்கேன் 154 after centered 20 – 160 before centered 21

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

20

அழகப்பனின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் சங்கடப்பட்ட ஆனந்தி அவனை மிகவும் இரக்கத்தோடு பார்த்து, “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஈனசுரத்தில் கேட்டாள். அந்த வார்த்தையின் பொருளைத் தவறாகப் புரிந்துகொண்ட அழகு, “மலை மலையாகக் குவிந்து கிடக்கிறது திரவியம். அலை அலையாக எழுகிறது அன்பு. காப்பாற்றாமல் இருப்பதற்கா கண்ணே; உன்னை என் கண்வழியே அழைத்துவந்து உள்ளத்தில் குடியேற்ற விரும்புகிறேன்” என்றான் தழுதழுத்த குரலில்!

“என்னை உங்கள் தங்கைப்போலப் பாவிக்கவேண்டும்.”

“நீயாக அப்படியொரு கற்பனை செய்துகொண்டு என்னைக் கல்லிலும் முள்ளிலும் தள்ளாதே! கனிபறிக்கக் கால் கடுக்க ஓடிவந்தவன் நான். காய்தான் நான் என்று சாய்ந்து விழாதே! மலர் தேடி மயங்கிய மனம்—முள் என்று கூறி முடங்கிவிடச் செய்யாதே!”

“என்னை நீங்கள் மறந்துவிடத்தான் வேண்டும்.”

“நீ டாக்டர்—நான் நோயாளி!”

“நான் டாக்டர்தான்—உங்கள் நோய்க்கு மருந்து சொல்லமுடியுமே தவிர டாக்டரே மருந்தாக மாறிவிட முடியுமா?”

“மருந்து சொல்லமுடியாது உன்னால்!”

“ஏன் முடியாது? சிந்தாமணியிருக்கிறாள்; உங்கள் சிந்தைப் பிணி அகற்றவல்ல சிறந்த மருந்தாக!”

“சாகிறவன் சஞ்சீவி கேட்டால், விஷத்தை சிபாரிசு பண்ணுகிறாய் நீ!”

“இல்ல; சிந்தாமணி விஷமல்ல! அவளை விஷமாக மாற்றிவிட்டோம் நானும் டைகரும் சேர்ந்து! நான் சொல்லுவதைத் தயவுசெய்து கேளுங்கள். டைகரின் சூழ்ச்சிக்கு அடிபணிந்த காரணத்தினால்தான் அபாக்கியவதி சிந்தாமணியை அழுக்கேறிய சிந்தாமணியென்று உங்களை நம்பவைத்தோம். உண்மையிலேயே அவள் மாசற்றவள். இன்னொருத்தியின் குழந்தையை அவள் பக்கத்திலே படுக்க வைத்துப் பிரசவமாகிவிட்டது என்று ஏமாற்றினோம். பிறகு எனக்கே மனச்சாட்சி கேட்கவில்லை. ஓடிவந்தேன். உங்கள் காரிலேயே சிக்கினேன். இப்போது உங்கள் கரத்திலும் சிக்கியிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்!”

“எல்லாம் பொய்; நீ தப்பித்துக்கொள்வதற்காக சிந்தாமணியை நல்லவள் என்று கதை கட்டுகிறாய்! ஆனந்தி—என் நிலைமைகண்டு உனக்கு இரக்கமே பிறக்கவில்லையா? என்னை உனக்கு ஏன் பிடிக்கவில்லை? அவசரப்பட்டு உன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக்கருதி என்மீது நம்பிக்கை குறைந்துவிட்டதா உனக்கு? தயவு செய்! தீக் காட்டால் அழிந்துவிட்ட என் இதயச் சோலை<!-- source join: scan 155 ends சோலை; scan 156 begins யில் -->யில் பூக்காடாய் மணக்க வருவாய்—புது நிலவாய் ஒளி சிந்தி வருவாய்—பொன் வண்டாய்ப் பறக்க வருவாய் பொதிகைத் தென்றலாய்—பூங்குயில் இசையாய் உலவுவாய் என்றெல்லாம் கனவு கண்டேன். அவ்வளவுங் கரைந்துவிட்டது நினைவுகள்தானா? சொல் ஆனந்தி! சொல்!!”

“என்னிடம் நீங்கள் கேட்கும் பொருள்; கேட்டவுடன் தந்துவிடுவது அல்லவே......இருதயத்தையல்லவா கேட்கிறீர்கள்!”

“ஏன் தர இயலாதா?”

“அது முன்பே பண்டமாற்று ஆகிவிட்டது!”

“அப்படியானால்?”

“ஆமாம்! உங்கள் தோழர் என் இருதயத்தை எடுத்துக்கொண்டு அவர் இருதயத்தை என்னிடம் கொடுத்து விட்டார்!”

“ஆ! நயினா முகம்மது எனக்குத் துரோகம் செய்து விட்டானா?” என்று பெருமூச்சோடு கேள்வி கேட்டவாறு அவளைப் பிடித்திருந்த கைகளை விட்டுவிட்டுத் திரும்பினான் அழகு.

“துரோகம் செய்யவில்லை அழகு! உன் நண்பன் எப்போதுமே துரோகம் செய்து பழக்கப்பட்டவனல்ல”

இந்த வார்த்தைகளோடு நயினா உள்ளே வந்தான். அழகப்பனால் ஆத்திரத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஓங்கி ‘பளார்’ என்று நயினா முகம்மதுவின் கன்னத்தில் ஒரு அடி கொடுத்தான், நயினாவின் கன்னம் அப்படியே கன்றிப்போய்விட்டது. வாயிலே இதழோரத்தில் இலேசாக இரத்தம் வழிய ஆரம்பித்தது. நயினா அடியை வாங்கிக்கொண்டு அமைதியாகவே நின்றான். அழகு, வெறி பிடித்தவன்போல ஆகிவிட்டான்.

நயினாமீது மீண்டும் புலிபோலப் பாய்ந்து தாக்கிடத் துவங்கினான். நயினா, அழகு தரும் அடி உதைகளைப் பொறுத்துக்கொண்டான். கன்னத்தில் மறுபடியும் ஒரு குத்து!......வயிற்றிலே சரியான அடி. தலையிலும் காயம்

நயினா எதிர்த்தே அடிக்கவில்லை. அப்படியே சோர்வுற்றுக் கீழே விழுந்தான். அழகு அவனை வெறி உணர்ச்சியோடு பார்த்துக்கொண்டு நின்றான். கீழே சாய்ந்த நயினா மெதுவாக எழுந்தான். அவன் தலையிலும் வாயிலும் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. ஒரு அலட்சியச் சிரிப்புடன் நயினா முகம்மது அந்த அறையை விட்டு வெளியேறினான். ஆனந்தி மயக்கமுற்றுக் கட்டிலில் சாய்ந்தாள். அழகு அசைவற்று நின்றுகொண்டிருந்தான். அவன் வெறி தீர்ந்தபாடில்லை. கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. தான் செய்தது சரியா—தவறு என்று யோசிப்பதற்குக்கூட முடியாமல் அவனது நினைவு துயிலில் ஆழ்ந்துவிட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவனும் அந்த அறையைவிட்டு வெளியேறித் தன் அறைக்குப் போய்விட்டான்.

இந்த நிகழ்ச்சிகளின் குழப்பமான ஒலி மட்டுமே அங்கு ஒளிந்திருந்த சிந்தாமணியின் காதில் விழுந்ததே தவிர, யார் யார் பேசிக்கொண்டார்கள் என்பதோ, என்ன நடந்தது என்பதோ தெரியாது. அறைக்குள்ளே ஒரு பெண் இருக்கிறாள்; அவள்தான் ஆனந்தி என்பதை மட்டும் அவள் புரிந்துகொண்டாள்; முதலிலேயே அவளைத் தொடர்ந்துவந்த காரணத்தால்! குழப்பங்கள் முடிந்து கொஞ்சநேரத்திற்கெல்லாம் ஒரே அமைதி நிலவிற்று. சிந்தாமணி, தான் ஒளிந்திருந்த இடத்தை சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு அம்மியும் அம்மிக்கல்லும் இருந்ததைக் கண்டாள். அவள் கண்களிலே தீப்பொறி கிளம்பியது.

தந்தையின் சாவு—தாயின் பிணம்—தனக்கு விபச்சாரிப் பட்டம்—குற்றவாளிக்கூண்டு—சிறைச்சாலை—இத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக அவள் மனத்திரையிலே படம்போல் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. “பழிக்குப் பழி!” உலர்ந்துபோன உதடுகள் ஆக்ரோஷத்தோடு இந்தச் சொற்களை உச்சரித்துக் குமுறின. அம்மிக் குழவியை இருகைகளாலும் தூக்கிக்கொண்டாள். தலைக்கு மேலே குழவியைப் பிடித்துக்கொண்டு பயங்கரமாக—<!-- source join: scan 157 ends பயங்கரமாக—; scan 158 begins ஆனந்தியிருக்கும் -->ஆனந்தியிருக்கும் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அம்மிக் குழவியை ஆனந்தியின் தலையில் போட்டு அவளைக் கொன்றுவிடுவது என்ற முடிவு! அயலார் குழவியைத் தன்னருகே படுக்கவைத்துத் தன்னை வேசியாக்கியவளின் தலையிலே—இந்தக் கருங்கல் குழவியைப் போடுகிறேன் என்று மனத்திற்குள் ‘சபதம்’ செய்துகொண்டாள் போலும்.

ஆனந்தியோ, தன் காதலனின் நிலைமை கண்டு மூர்ச்சித்து விழுந்திருக்கிறாள்; படுக்கையிலே! மரணத்தை எதிர்பார்க்கும் அச்சம் ஒரு சிறிதுமில்லாமல் அவளைச் சாவு உலகிற்கு அனுப்பிவிட சிந்தாமணி வந்துவிட்டாள். கொலை செய்யப் போகிறோம் என்ற பயம் சிறிதும் தலைகாட்டவில்லை சிந்தாமணிக்கு! எல்லாவற்றிற்கும் துணிந்து விட்ட ஒரு அசட்டுத் தைரியம் அவள் முகத்திலே பிரகாசித்துக்கொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்திலே அவளது முகம் மிகப் பயங்கரமாகத் தோற்றமளித்தது. குறிபார்த்துக் குழவிக் கல்லை அவள் தலைமீது போடுவதற்குத் தயாராகிவிட்டாள் அந்த இளஞ்சிட்டு! அவளைத் தடுப்பதற்கு அங்கு யாருமே இல்லை. மனச்சாட்சி ஒன்றுதான் குறுக்கிட்டிருக்க வேண்டும். மாறாக அதுதான் அவளைக் கொலைச்செயலுக்குத் தூண்டிவிட்டுத் தூபம் போட்டது. அழகப்பனே, தன் அறையில் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். இன்னும் அவன் நினைவுகள் புரண்டு படுக்கக்கூட இயலாமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. நயினா முகம்மது, தள்ளாடியபடியே மாடியைக் கடந்து கீழே வந்து, முகத்தையும் காயப்பட்ட இடங்களையும் கழுவிக்கொண்டான். அங்குள்ள சில மருந்துகளை அவனே காயங்களில் தடவிக்கொண்டான். பிறகு அங்குள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்து தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான். ஆனந்திக்கும் தனக்கும் ஏற்பட்ட ஒருவாரத் தொடர்பு, நீண்ட நாளைய தன் ஆருயிர்த் தோழனிடத்திலே எவ்வளவு பெரிய பகையைத் தோற்றுவித்துவிட்டது என்று எண்ணினான். அடி வாங்கியபோது வலி மிகுந்த சமயங்கூட வராத<!-- source join: scan 158 ends வராத; scan 159 begins கண்ணீர், --> கண்ணீர், இப்போது வெள்ளமாக வெளிப்பட்டுக் கன்னங்களைக் கழுவியது.

ஆனந்தியிடமிருந்த எந்தெந்த குணநலன்கள் தன்னை வசீகரித்ததோ அதே குணநலன்களுக்குத்தான் தன் நண்பனும் அடிமைப்பட்டுவிட்டான் என்று முடிவு செய்தான். தனக்கு ஏற்பட்ட காதல் அவனுக்கும் ஏற்பட்டதை யார் தடுக்கமுடியும்? அவனும் தன்னைப்போல உள்ளங் கொண்டவன்தானே!

அய்யோ! அவன் ஆசைக்குத் தடையாக ஆனந்திக்கும் அவனுக்கும் குறுக்கே தான் வந்து நின்றுவிட்டோமே என்று நொந்துகொண்டான்.

அவனது காதல் உள்ளத்திலே கடுமையான தியாகம் உதயமாயிற்று. ஆனந்தியின் மீதுள்ள அன்பையே தியாகம் செய்யத் துணிந்துவிட்டான் நயினா முகம்மது. அவளையும் அழகப்பனையும் ஒன்று சேர்த்துவிடுவது என்று உறுதிகொண்டான். பள்ளிப் பருவத்திலே நயினாவும் அழகுவும் சேர்ந்தே திரிவார்கள். அப்போதெல்லாம் ஒரே பண்டத்தின் மீது நயினாவும் அழகும் பிரியம் வைப்பார்கள்.

அந்தப் பொருள் ஜோடியாக இருக்காது. அதனால் அழகப்பன் — தான் விரும்பிய பண்டத்தை நயினாவிடம் கொடுத்து அவனைத் திருப்தி அடையச் செய்வான். அழகப்பனால் அது முடிந்தது; காரணம் அது ஒரு பண்டம்!

நயினா இழப்பது வாழ்க்கையையே அல்லவா? இது மிகப்பெரும் தியாகம் அல்லவா? “எதுவாயினும் சரி; காதலைத் தியாகம் செய்தே தீருகிறேன் — அழகப்பன் ஆனந்தியைத் தம்பதிகளாக்குகிறேன்” என்று உறுதி செய்துகொண்டு மாடிப் பக்கம் போக எழுந்தான் நாற்காலியை விட்டு! எழுந்தவன் கீழே விழுந்துவிட்டான்.

அடிபட்ட இடங்களில் அவ்வளவு வலி அவனுக்கு! மெதுவாக எழுந்து, நகர்ந்து நகர்ந்து மாடிப்படிகளைக் கடக்க ஆரம்பித்தான். அழகப்பன் இருந்த அறைக்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் அழகப்பனுக்கும்<!-- source join: scan 159 ends அழகப்பனுக்கும்; scan 160 begins ஒன்றும் புரியவில்லை. --> ஒன்றும் புரியவில்லை. கோவெனக் கதறி நயினா முகம்மதைத் தழுவிக்கொண்டான் அழகு!

“அழகப்பா! என் ஆருயிர்த் தோழா! என்னை மன்னித்துவிடு! நான்தான் தவறு செய்துவிட்டேன். ஆரம்பத்திலேயே ஒரு ஜாடை காட்டியிருந்தாயானால் நான் இவ்வளவுதூரம் நடந்துகொண்டிருக்கமாட்டேன். இப்போது ஒன்றும் குடிமுழுகிவிடவில்லை. ஆனந்தியை நான் தியாகம் செய்துவிடுகிறேன். அவளே நீயே ஏற்றுக் கொள். அவளை இந்த முடிவுக்குச் சம்மதிக்கச் செய்வது என் பொறுப்பு!” என்றான் கண்களில் நீர் கலங்கியபடி நயினா.

“வேண்டாம் நயினா! என்னைக் கொல்லாதே, இந்த வார்த்தைகளால்! அன்பனே!...அணைத்து மகிழ்ந்து ஆடி ஓடிக்கிடந்த நமது தூய்மையான நட்பில் இப்படி யொரு தொய்வு விழும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான்தான் தவறிழைத்தவன் — நான்தான் துரோகி — நான்தான் பாதகன்!”

அழகப்பன் நயினாவின் காலைக் கட்டிக்கொண்டு புலம்பினான்.

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்