அத்தியாயம் 19 · 19 / 23
அத்தியாயம் 19
Chapter 19
மூல ஸ்கேன் 149 after centered 19 – 154 before centered 20
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
19
சிவகாமிக்கு சாவைத்தவிர வேறு என்னதான் வழியிருக்கிறது? மகளும் போய்விட்டாள். மானமும் போய்விட்டது. இறுதியில் “மாங்கல்ய”மும் போய்விட்டது. ஒருமுழக் கயிற்றைத் தவிர அவளுக்கு அமைதி அளிக்கக்கூடிய சாதனம் வேறு எதுவுமேயில்லையென்றாகிவிட்டது. தாயும் தந்தையும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிணமாகிவிட்டார்கள், சிந்தாமணியை நடைப்பிணமாக ஆக்கிவிட்டு! தாயின் காலைக் கட்டிக்கொண்டு சிந்தாமணி கதறினாள். “இனி எனக்கு யாரம்மா நாதி?” என்று புலம்பினாள்.
“அம்மா! என்னைப் பெற்று வளர்த்து சீராட்டிப் பாராட்டி, செப்புச் சிலையே! செந்தமிழே!”—என்றெல்லாம் தாலாட்டுப்பாடி, ‘தரையில் படலாமோ என் தங்கத்தின் பாதம்’ என்று இடுப்பில் சுமந்து இடையறாத் துயர்களை யேற்று, என் வளர்ச்சி, வளம், நலம் இவைகளிலேயே நாட்டங்கொண்டு இறுதியில் இப்படி நவிந்துபோனாயே; என்னம்மா? நாம் யாருக்கு என்ன தீங்கம்மா செய்தோம்? நமக்கு ஏன் தாயே இப்படியெல்லாம் கொடுமைகள்? அய்யோ! உன் வயிற்றில் நான் ஒரு ஆணைப் பிறந்திருக்கக்கூடாதா? ஆணைப் பிறந்திருந்து; கற்பு நெறி தவறி நடந்திருந்தால்கூட இந்த உலகம் மன்னித்திருக்குமே! இப்படியெல்லாம் பழி சுமத்திப் பழிப்புக் காட்டியிருக்காதே? பெண்ணை நான் பிறந்ததால்தானே இல்லாத பழியைச் சுமத்திப் பொல்லாத வார்த்தைகளால் நம் குடும்பத்தையே அடியோடு பொசுக்கித் தள்ளிவிட்டது! அம்மா! இனிமேல் யாரையம்மா நான் அம்மா என்று ஆசை நிரப்பக் கூப்பிடுவேன்? யாரம்மா இருக்கிறார்கள்? ‘வயதான காலத்தில் மகள் வீட்டில் போய், நீட்டிய காலை மடக்காமல் நிம்மதியாக உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவேன்!’ என்று எல்லோரிடமும் அடிக்கடி கூறுவாயே; மகள் வீடே இல்லையென்று ஆகிவிட்டதே உனக்கு! மயான வீட்டுக்குப் புறப்<!-- source join: scan 149 ends புறப்; scan 150 begins பட்டுவிட்டாயே! -->பட்டுவிட்டாயே! நீதான் என்ன செய்வாய்? மகளே விபச்சாரியென்று கூறும்போது அதைக் கேட்டுக்கொண்டு தாய் உள்ளம் எப்படித்தான் கொதிக்காமல் அமைதியாக இருக்க முடியும்! விபச்சாரி மட்டுமா? சிறைப்பறவையும் ஆகிவிட்டாள்! அதுவும் கேவலமான தொழிலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு! உன்னுள் எப்படித்தான் உயிர் வைத்துக்கொண்டிருக்க முடியும்! இவ்வளவுக்கும் யாரம்மா காரணம்? யார் காரணம்? அந்த அக்கிரமக்காரன் டைகர்! அந்த அநியாயக்காரி ஆனந்தி!...... அவள்தான் என்னையும் என் குடும்பத்தையும் இழிவுப்படு குழியிலே தள்ளியவள். அவளைப் பழிதீர்த்துக்கொண்டால்தான் என் மனம் அமைதியடையும்!
“குடும்பத்தைக் கெடுத்த கொலைகாரி! ஒரு பெண்ணின் வாழ்வைப் பலியாக்குகிறோம் அக்கிரமமாக என்று எள்ளளவும் எண்ணிப்பார்க்காத பெண்ணுருவப் பேய்! அவளைப் பழிவாங்குவதே எனக்கு முதல்வேலை! அவளை அழித்துவிட்டுத்தான் மறுவேலை! அவள் உயிரோடு இருக்கக்கூடாது! இருந்தால் இன்னும் எத்தனை பெண்களின் எதிர்காலத்திற்கு “எமனாக வருவாளோ; யார் கண்டது? இதோ, இப்போதே போகிறேன். அந்த ஆனந்தியைப் பழிவாங்கிவிட்டுத் திரும்புகிறேன்! சிந்தாமணி! நீ கொலைகாரியாகவும் மாறு! இனியென்ன மிச்சமிருக்கிறது. பட்டம்? விபச்சாரி! மோசடிக்காரி!! அடுத்தது கொலைகாரி !!!
“அம்மா, உன்னைப்போல தற்கொலை செய்துகொண்டு சாகமாட்டேன் நான்! நான் சாவதற்குள் ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்டுச் சாகிறேன். நான் செய்யப்போகும் காரியத்திற்குச் சாவுதான் எனக்குப் பரிசாகக் கிடைக்கும்! உன்னைப்போல உலகத்துக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டு சாகவேண்டியதில்லை நான்! பகிரங்கமாகத் தக்கப் பாதுகாப்புடன் மணியோசை முழங்கத் தூக்குமேடையில் என் உயிரை வாங்குவார்கள்! புராணங்கள் கூறுவது உண்மையாயிருந்து, நீங்கள் இருவரும் தேவ<!-- source join: scan 150 ends தேவ; scan 151 begins லோகத்தில் -->லோகத்தில் இருப்பீர்களேயானால் அங்கே வந்து, ஆனந்தியைக் கொன்றுவிட்ட ஆனந்தமான செய்தியை உங்களுக்குச் சொல்லுவேன்! இப்போது தானம்மா தேவலோகம் என்று உண்மையிலேயே ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றிருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது! இதோ; நான் என் வேலையை முடித்துவிட்டு வருகிறேன். ஆனந்தி! உன்னைப் பழிக்குப்பழி வாங்குகிறேன்! என் குடும்பத்தைக் குலைத்துவிட்டு நீ கோலாகலமாக வாழ முடியாது! நீயும் எங்களோடு வரவேண்டியவள்தான்!”
ஆவேசங்கொண்டு தன்னையறியாமல் கத்தினாள் சிந்தாமணி. தாயின் பாதங்களைக் கண்களில் ஒத்திக்கொண்டாள், வெறிபிடித்தவள்போல வீட்டை விட்டு வெளியேறி ஆனந்தி மருத்துவ மனையிருக்கும் தெரு நோக்கி ஓடினாள். அவள் கையிலே ஆனந்தி அகப்பட்டால், அவளைக் கிழித்துக் கொன்றுபோட்டுவிட்டுத்தான் அடுத்த அடி வைப்பாள்; அவ்வளவு பழியுணர்ச்சி பெருக்கெடுக்கத் துவங்கியது அவள் உள்ளத்தில்!
எப்படி எப்படி மாறுதல்கள் மலர்கின்றன பார்ப்போம் என்று கவனித்துக்கொண்டிருந்த நயினா, தன் அறையில் தூக்கமின்றித் தவித்துக்கொண்டிருந்தான். ஆனந்திக்கும் அழகப்பனுக்கும் கூட ஒருவேளை தொடர்பு ஏற்பட்டிருக்குமோ என மயங்கியது ஒரு சமயம் அவன் உள்ளம்! சேச்சே... இருக்காது என்று தேற்றிக்கொண்டது ஒரு சமயம்! ஆனந்தி, தன் பழைய கதையை அவனிடம் சொன்னதால்தான் அவனுக்கு அவள்மீது அவ்வளவு ஐயம் எழ ஏதுவாகிவிட்டது. வீண் சந்தேகத்தால் குழம்பிக் கொண்டிருப்பானேன்; ஒரு சோதனை நடத்தி அவளைப் பற்றிப் புரிந்துகொள்ளலாமே என்று முடிவு கட்டினான் நயினா. அழகப்பன்மீதும் அவள் வலைவீசுகிறாள் என்றால், இரவு எப்படியும் அவன் அறைக்கு வந்தே தீருவாள். அப்படி அவள் அழகப்பன் அறைக்கு வரும்போது அங்கே தானிருந்து அவளைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டால்...?
இப்படியொரு கேள்வியைப் போட்டுக்கொண்டு, தன் சோதனையைச் செயல்படுத்த முனைந்து எழுந்தான். தன் அறையிலிருந்து அகன்று அழகப்பன் அறைக்குப்போனான். அழகப்பனும் தூக்கமின்றிப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். நயினா அங்குப் பிரவேசித்து, “இங்குக் கொசுக்கடி அதிகமாயிருக்கும். நான் படுத்திருக்கும் அறையில் நல்ல கொசுவலையிருக்கிறது; அங்கு போய்ப் படுத்துக்கொள்ளலாமே” என்று கூறினான். அழகப்பன் முதலில் வேண்டாமென்றுதான் கூறினான். ஆனாலும் அவனுக்கும் ஒரு ஆசை; ஆனந்திக்கும் நயினாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிடவேண்டுமென்று! ஒரு வேளை நயினாவின் அறைக்கு அவள் வர நேர்ந்தால் அவ்விடம் தானே மனம் விட்டுப்பேசி நிலைமையைச் சீர் செய்து விடலாமென்றும் எண்ணியிருந்தான். நயினா வலியுறுத்தியதன்பேரில், அழகப்பன் நயினாவின் அறையில் போய்க் கொசுவலைக்குள் படுத்துக்கொண்டான். நயினாவும் அழகுவின் அறையில் படுத்தவாறு தூக்கமின்றித் தவித்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் யாரோ வரும் காலடி ஓசை கேட்டது. எழுந்து வந்து உற்றுக் கவனித்தான். மறைந்து மறைந்து ஒரு பெண் வருவது தெரிந்தது. சத்தம் காட்டாமல் அறைக்குள்ளே போய்க் காத்திருந்தான். யாரும் வரவில்லை. மெதுவாக எழுந்து வந்து பார்த்தான். யாரையும் காணவில்லை. மறுபடியும் அறைக்குள்ளே சென்று கவனித்துக்கொண்டிருந்தான். மீண்டும் யாரோ நடந்துவரும் ஓசை, அந்த நள்ளிரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்தது. நயினா, ஒளிந்தவாறு ஒலி வரும் திக்கில் நாட்டம் செலுத்தினான். ஆனந்திதான் அது! அவள், அழகு படுத்திருக்கும் அறைக்குள்ளே போய்க்கொண்டிருந்தாள். அவள், அந்த அறையில் நயினாதான் படுத்திருப்பான் என்று கருதி அங்குப் போகிறாள். நயினாவுக்கு அவள் மீதிருந்த சந்தேகம் பெரும்பகுதி நீங்கிவிட்டது. உண்மையிலேயே அவளுக்கு அழகப்பன் மீது கண்ணிருக்குமானால் தான் இருக்கும் அறைக்கல்லவா வந்திருக்கவேண்டும்—அவளோ தான் வழக்கமாக உறங்கும்<!-- source join: scan 152 ends வழக்கமாக உறங்கும்; scan 153 begins அறைக்கல்லவா போகிறாள்! --> அறைக்கல்லவா போகிறாள்!-நயினா தனக்குத்தானே வெட்கத்தால் தலைகுனிந்துகொண்டான். ஆனாலும் அடக்க இயலாத ஆவலொன்று அவன் இருதயத்தில் பீறிட்டுப் புறப்பட்டது. அழகப்பன் அறையில் என்ன நடக்கிறது என்று அறியவேண்டி, அதை நோக்கி மெதுவாக நகர்ந்தான்.
கொசுவலைக்குள்ளே ‘குறு குறு’ வென்று விழித்துக்கொண்டிருந்த அழகப்பன்மீது ஒரு மெல்லிய பூங்கரம் பட்டது. அழகப்பன் அந்த ஸ்பரிச இன்பத்திலே மெய் மறந்து அசையாது படுத்திருந்தான். அதே சமயம் நயினா முகமதுவும் அறைக்கு வெளியே கதவுப்புறம் வந்து ஒளிந்துகொண்டு, காதைத் தீட்டிவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“தூக்கமா?” என்றாள், அழகப்பன் கன்னத்தை வருடியபடியே ஆனந்தி!
உரத்த குரலில் பேசினால் குரல் புரிந்துவிடுமென்று எண்ணியோ என்னவோ, அழகப்பன் ஈன சுரத்தில் “இல்லை” என்றான்.
“அவர் எங்கே?”
“அவன் அந்த அறையில் படுத்திருக்கிறான்.”
இந்த உரையாடல் ஒளிந்திருக்கும் நயினாவின் உள்ளத்தை ஒரு உலுக்கு உலுக்கியது!
“என்மீது உங்களுக்கு ஏதாவது சந்தேகமா?”
“ஏன்?”
“அவர் என்னிடம் நடந்துகொள்கிற முறை......அவ்வளவு சரியாக இல்லை”
“பரவாயில்லை!”
அழகப்பனுக்கு இப்போது நாக்கு பேச எழவில்லை. உடல் பதறியது. வெகு விரைவில் தான் யார் என்பதைத் தன் செய்கைமூலம் வெளிப்படுத்திவிட்டான்.
“யார் நீங்கள்?” என்று துள்ளியெழுந்தாள் ஆனந்தி! அவள் கரத்தை அழகப்பன் விடாமல் பற்றிக்கொண்டான்.
“விடுங்கள் தயவு செய்து என்னை!” என ஆத்திரமாகப் பேசினாள் அவள். அந்தக் கனல் தெறிக்கும் வார்த்தைகள் நயினாவுக்குக் களிப்பூட்டின.
“ஆனந்தி! உன்னால்தான் என் வாழ்வு மறுமலர்ச்சி பெறவேண்டும்—நான் மிகவும் நொந்துபோயிருக்கிறவன், என்னைக் காப்பாற்று!” எனக் கெஞ்சும் குரலில் கேட்டான் அழகு.
வெளியிலிருந்தவாறு இந்தச் சொற்களைக் கேட்ட நயினாவுக்குக் கண் கலங்கியது. தன் நண்பனின் நிலைமை கண்டு சோகடிப்புமானான் நயினா.
அப்போது அறைக்கு எதிர்ப்புறமாக சிறு ஒலியெழவே திரும்பிப் பார்த்தான். யாரும் அவன் கண்ணில் படவில்லை. ஆனால், ஆனந்தி அங்கு வருவதற்கு முன்பே வந்துவிட்ட சிந்தாமணி, நயினா முதலியவர்களின் பார்வையில் விழாமல் வேறு பக்கம் போய்ப் பதுங்கிக்கொண்டாள்.
ஒலி வந்த பக்கம் எதுவுமில்லையெனக் கண்டு, மீண்டும் அறையின் பக்கம் கருத்தைச் செலுத்தினான் நயினா.
ஆனந்தி அழகப்பனிடம் கையை விடுமாறு மன்றாடிக் கொண்டிருந்தாள். அவனோ, “என்னை உயிரோடு கொன்றுவிடாதே!” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்