பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 18 · 18 / 23

அத்தியாயம் 18

Chapter 18

மூல ஸ்கேன் 142 after centered 18 – 149 before centered 19

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

18

“நாள், நட்சத்திரம், சாமி கோயில், ஜெயம், தயம் இப்படியெல்லாம் நம்பி நம்பிக் கடைசியில் கெட்டுப் போனேன். நான் நம்பிய நாளோ—நட்சத்திரமோ—கோயிலோ—தெய்வமோ எதுவுமே என்னையும் என் குடும்பத்தையும் கெளரவமாக வாழவிடவில்லை. என் மகள் எப்படி விபச்சாரியானாள்? எப்படிக் கள்ள அபின் கடத்தும் கைகாரியானாள்? கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. தெய்வமும் ஊமையாகிவிட்டது. நான் உயிரோடிருந்தால் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே மனதை அலட்டிக்கொண்டிருப்பேன். இந்தக் கேள்விகளிலிருந்து என் உள்ளத்தையும், தெய்வத்தையும் விடுவிப்பதற்காகப் பிணமாகிவிடுகிறேன். அமைதி பெறுகிறேன். சிவகாமி மஞ்சள், குங்குமம் இழந்துவிடுவாள். அவளுக்குக் கட்டிய மாங்கல்யத்தை நானே பலாத்காரமாக அறுத்துவிடுகிற குற்றச்சாட்டுக்கு ஆளாகிறேன். பரவாயில்லை .....என் கொதிப்பு அடங்க இதைத் தவிர வேறு வழியில்லை. பைத்தியக்காரன் ஏதோ கிறுக்கி வைத்திருக்கிறான் என்று நினைக்காதீர்கள்! பைத்தியம் தெளிந்துவிட்டது எனக்கு. அதன்பிறகே இந்த நல்ல முடிவைத் தேர்ந்தெடுத்தேன். சிந்தாமணி, மாசற்றவள் என்று எப்போதாவது உண்மையிலேயே நிரூபிக்கப்பட்டால், அவள் அழகான கரங்களால் என் சமாதிக்கு மலர் தூவட்டும். இது ஒரு வெறும் கனவு என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அவளாவது அப்பழுக்கற்றவள் என்று நிரூபிக்கப்படவாவது! பாவி, பாதகி, என் குடும்பத்தைக் கெடுத்த குடிகேடி! அவளுக்கு என் மரணச் செய்தியைக்கூடச் சொல்லாதீர்கள்!...அவள் நல்லவள் என்று தீர்மானமாகத் தெரிந்தால் வேண்டுமானால் சொல்லுங்கள் !...சீ! என்ன குழப்பம் எனக்கு; அமைதி காணப்போகிற நேரத்திலே!”

பிணமாக மிதந்துகொண்டிருந்த சிவநேசரின் இடுப்பிலே நனைந்துபோன கடிதத்தில் மேற்கண்ட வாசகங்கள்<!-- source join: scan 142 ends வாசகங்கள்; scan 143 begins இருந்தன. --> இருந்தன. பஞ்சாயத்தார் கூடி தற்கொலைதான் என்று முடிவு செய்யப்பட்டுமே அந்தக் கடிதம் பயன்பட்டது. ஊரார் அனைவருங்கூடி சிவநேசரின் அமைதி நிறைந்த உடலைப் புதைத்துவிட்டுத் திரும்பினார்கள். அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது; நன்றாக வாழ்ந்துகொண்டிருந்த குடும்பத்தில் இப்படித் திடீரென்று பயங்கரமான மாறுதல் எப்படி ஏற்பட்டது என்று! புயல்கூட அடிப்பதற்கு முன்பு தெரிந்துவிடுகிறது. வெள்ளம் வருவதற்குமுன் கண்டு பிடித்துவிடலாம். சிவநேசர் குடும்பத்தைச் சீரழித்த நிகழ்ச்சிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கிடையாது.

ஊரிலே பலர் பலவிதமாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர் சிவநேசரின் குடும்பத்தைப்பற்றி! அழகப்பனின் மனத்திலும் குழப்பம் தலைதூக்கத் துவங்கியது. குழந்தை பெற்ற சிந்தாமணி பெங்களூர் எப்படிச் சென்றாள்? அபின் எப்படிக் கடத்த முடிந்தது? இவ்வளவுக்கும் உடல் நிலை எப்படி இடங்கொடுத்திருக்கும்? கேள்விகள் மாறி மாறி எழுந்து அவன் இதயத்தை நிரப்பிக்கொண்டேயிருந்தன. அதோடு, ஆனந்தியிடம் அவன் நடந்துகொண்டதும், அதை ஆனந்தி வரவேற்ற முறையையும் அவனைப் பயத்திலும் சங்கடத்திலும் ஆழ்த்திவிட்டது. சிந்தாமணியைப் பற்றி அவனிடம் விளக்கமுறைக்கவேண்டுமென்று எண்ணியிருந்த நயினா முகம்மது அந்தப் பேச்சையே எடுக்காமலிருந்துவிட்டான். காலையில் அவன் கண்ட காட்சியை நினைத்து நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டான். தன் நண்பன் அழகப்பனுக்கு இப்படியொரு எண்ணம் இருக்கிறதென்று முன்பே தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே ஆனந்தியைவிட்டு வெகுதூரம் விலகிப்போயிருப்பான்.

இதிலே, அவன் செய்த பெரிய தவறு, ஆனந்திமீது அவனுக்குள்ள அன்பையும் காதலையும் அழகப்பனிடம் முன்பே சொல்லாததுதான்! சொல்லியிருந்தால் அழகப்பன் ஆனந்தியை நினைக்காமலே இருந்திருக்கக்கூடும்! இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணுவது எங்ஙனம் என்ற சிக்கலிலே அகப்பட்டுத் தவித்தான் நயினா முகம்மது!

ஆனந்தி, தன்னைப்பற்றி நயினா முகம்மது தவறுக் கருதிவிட்டானே என்று தவித்துக்கொண்டிருந்தாள்; அவனைத் தனியாகச் சந்தித்து விளக்கம் உரைக்கவும் வசதியில்லாமல் போய்விட்டது. நண்பர்கள் இருவரும் மனத்திலே ஆயிரம் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தாலும் கூட ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் உரையாடிக்கொண்டும் உறங்கிக் கொண்டுமிருந்தார்கள். அதனால் நயினாவைத் தனித்து சந்தித்துப் பேச ஆனந்திக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. சிந்தாமணியைப்பற்றி எழுந்த கேள்விகளுக்கு அழகப்பன் நயினாவிடம் விடை கேட்டிருப்பான் வேறு நாட்களாயிருந்தால்! ஆனால் அழகப்பனுக்கு இப்போது ஒரு பெண்ணைப் பற்றித் தன் நண்பனிடம் பேசவே கூச்சமாயிருந்தது. ஆனந்தியைத் தான் தழுவியதையும், அவள் அதைவிட்டு ஓடியதையும் நயினா பார்த்துவிட்டான் என்பது அவனுக்கு நன்றாக விளங்கும். அதனால் தனக்கும் ஆனந்திக்கும் காதல் உருவாகியிருப்பதாகக்கூட நயினா கருதலாம். அந்தக் கருத்தையே நாமும் வலியுறுத்தி விட்டால் என்ன என்ற எண்ணமும் அவனுக்கு எழுந்தது.

இறுதியில் அழகப்பன் நயினாவிடம் தனக்கும் ஆனந்திக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவே வர்ணித்து ஒரு கற்பனைக் கதையைக் கூறிவைத்தான். நயினா அந்தச் செய்தியைக்கேட்டு பொறுமை கொள்ளவில்லையென்றாலும் மிகுந்த வருத்தமுற்றான். அந்த வருத்தமும், ஆனந்தி தன்னைவிட்டுப் போய்விட்டாளே என்பதால் ஏற்பட்டதல்ல! ஆள்மயக்கும் ஆனந்தியின் வலையிலே அழகப்பனும் விழுந்துவிட்டானே என்பதால் ஏற்பட்டதுதான்! இதை அவனிடம் எவ்வண்ணம் விரிப்பது? வெளியிட்டால் அழகப்பன் தன்னைப்பற்றித் தவறுக் கருத்துக்கூடும்!

அவன் காதலை முறிப்பதற்காக, தான் தீட்டும் சதித் திட்டம் அதுவெனத் தீர்மானித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சரி; எப்படித்தான் மாறுதல்கள் மலர்கின்றன என்று கவனிப்போம் என்று பொறுமையை வரவழைத்துக்<!-- source join: scan 144 ends வரவழைத்துக்; scan 145 begins கொண்டான் நயினா! --> கொண்டான் நயினா! ஆகாயத்திலே திரிந்திடும் மேக மந்தைகள் ஆடாக, மாடாக, மானாக, மயிலாக, மந்தி போல, மனிதன்போல — மாறிக்கொண்டேயிருப்பதைப் பொறுமையோடு கவனிக்கும் கவிஞரின் இன்ப உள்ளத்தோடு அல்ல; விபத்துக்கு உள்ளான ஆகாய விமானத்திலேயிருந்து பாரசூட் குடை வழியாக பூமியை நோக்கி வரும் பிராணி, ‘காட்டிலே இறங்குவோமா - கடலிலே இறங்குவோமா - கரடியின் அருகே விழுவோமா’ என்றெல்லாம் விநாடிக்கு விநாடி ஆவலோடு கவனிப்பானே; பாரசூட் இறங்கும் வழியிலுள்ள மாறுதல்களை — அதைப் போன்ற அச்சம் நிறை ஆவல் சூழ்ந்த உள்ளத்தோடு நயினா முகம்மது கவனிக்கத் தொடங்கினான்.

கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சிந்தாமணியை விடுவிக்கக்கோரி ஒரு தனவந்தர் அப்பீல் செய்துகொண்டிருப்பதாகச் சிந்தாமணிக்குச் செய்தி வந்தது சிறைச்சாலையில்! சிந்தாமணிக்கு அந்தத் தனவந்தர் யாராக இருக்கும் என்ற சந்தேகம் பிறந்தது. ஒருவேளை அழகப்பனாயிருக்குமோ என்று யோசனை செய்தாள். அந்த யோசனை அவளுக்குப் பூரிப்பை அளித்ததாயினும் இனிமேல் அவன் முகத்தில் எப்படி விழிப்பது என்ற அச்சத்தையும் ஊட்டியது. அப்பீல் உத்தரவு கிடைத்ததோடு, சிந்தாமணி ஜாமீனில் வெளியேறவும் அனுமதி கிடைத்துவிட்டதாக அவளுக்கு தகவல் எட்டியது. “யாரோ ஒரு தேவராம்; பெரிய தனவந்தராம்; அவர்தான் வக்கீல் வைத்து வாதாடி ஐநூறு அறுநூறு; ரொக்க ஜாமீன் கட்டி சிந்தாமணியை ஜாமீனில் எடுக்கிறாராம்”—என்றெல்லாம் ஜெயில் வார்டர்கள் காற்று வாக்கில் செய்திகளைப் பரப்பினார்கள். கூண்டுக் கிளியாக அடைப்பட்டிருந்த அவளுக்கு இந்தச் செய்திகள் புதுமையாக இருந்தனவேயொழிய புளகாங்கித மூட்டுவனவாக இல்லை. “யார் தேவர்? ஒரு வேளை பாலகங்காதரத் தேவரோ? அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை! அவருக்கு நம் குடும்பத்தின்மீது ஏது<!-- source join: scan 145 ends ஏது; scan 146 begins அவ்வளவு அக்கறை! --> அவ்வளவு அக்கறை! ஒருவேளை உபகாரம் செய்யும் சுபாவம் படைத்த உத்தமரோ அவர்!”

இப்படியெல்லாம் அவளாகவே எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள். அவள் குழப்பத்தை நீக்கிவிட்டாற்படி ஜாமீனில் விடுதலையாகும் உத்தரவும் வந்துசேர்ந்தது. ஒன்றும் புரியாமல் திகைத்தவாறு சிந்தாமணி சிறைக் கோட்டையைவிட்டு வெளியே வந்தாள். சிறை வாசலில் குள்ள உருவமும், பெரிய சிரமும் படைத்த கருப்புக் கோட்டுக்காரர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் பக்கத்திலே மற்றொரு வாட்டசாட்டமான மனிதர் இளந் தாடியுடனும், தலைப்பாகையுடனும். பட்டுச் சொக்காய், சராயுடனும் நின்றுகொண்டு சிந்தாமணியை வரவேற்றார். சிந்தாமணி அந்த மனிதரைப்பார்த்து, “நீங்கள்......?” என்று வெட்கத்தோடும் வழிந்தோடும் வேதனைப் பெருவெள்ளத்தோடும் கேட்டாள்.

“நான்தான் பாலகங்காதரத் தேவர்!... உங்களுக்குப் பக்கத்து ஊர்! இவர்தான் நமது வக்கீல்.........பெங்களூர் பெரியசாமின்னு மிகப்பெரிய வக்கீல்!....” என்று வக்கீலையும் அறிமுகப்படுத்தினார் தேவர். வக்கீல் சிந்தாமணிக்கு வணக்கம் தெரிவித்தார். அவளும் கண்ணீர் பெருக்கியபடி வணங்கி நின்றாள். பிறகு மூவரும் வக்கீலின் காரில் ஏறி அவரது வீட்டிற்குப் புறப்பட்டார்கள். வக்கீல் சிந்தாமணியின் வேதனையைப் பார்த்து மனமுருகிப்போனார். “இவ்வளவு நல்ல பெண்மணியின்மீது அநியாயமாகக் குற்றம் சுமத்திவிட்டார்களே”—என்று அங்கலாய்த்துக் கொண்டார். சிந்தாமணி, பாலகங்காதரத் தேவருக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக்கொண்டு.

“நீங்கள் எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டது ஆச்சரியமாயிருக்கிறது!” என்றாள். உடனே வக்கீல்,

“என்னம்மா செய்வது; உன் அப்பாவேறு தற்கொலை செய்துகொண்டார்...” என்று வக்கீல் கூறியதுதான்<!-- source join: scan 146 ends கூறியதுதான்; scan 147 begins தாமதம்; --> தாமதம்; சிந்தாமணிக்கு உலகமே சுற்றியது போலிருந்தது. தேவரின் முகம் மாறிவிட்டது. வக்கீலைப் பார்த்து, “என்ன சார்; சொல்லவேண்டாமென்றேன்; சொல்லி விட்டீர்களே?” என்று கடிந்துகொண்டார்.

வக்கீல் மிரளமிரள விழித்து, “மன்னிக்கவும் மிஸ்டர் தேவர்! வாய்தவறி உண்மையைச் சொல்லிவிட்டேன்! பரவாயில்லை—என்றைக்கிருந்தாலும் ஒருநாள் தெரியத்தானே போகிறது!” என்று மழுப்பினார். சிந்தாமணி தேவரின் காலை பிடித்துக்கொண்டு.

“என்னை எப்படியாவது உடனே வேதபுரத்துக்கு அனுப்பிவையுங்கள். என் அம்மாவையாவது உடனே நான் பார்க்கவேண்டும்!” என்று கதற ஆரம்பித்தாள். தேவர் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தார். “ஒருவழியாக வழக்கில் வெற்றி பெற்று விடுதலை அடைந்தபிறகு தாயாரைப் போய்ப் பார்க்கலாம்; அம்மாவுக்கும் அப்போது சற்று ஆறுதலாக இருக்கும்” என்று கூறினார். சிந்தாமணி கேட்டால்தானே! வக்கீலும் அவள்பக்கம் பேசி, “அடுத்த வாரந்தானே கோர்ட்டுக்கு வரவேண்டியிருக்கிறது; அதற்குள் அவள் போய்விட்டு வரட்டுமே” என்று வாதாடினார். அதில் வெற்றியும் கண்டார். தேவரையும் தன்னோடு கூட்டிட்டாள் சிந்தாமணி. அதற்குத் தேவர், தனக்கு பெங்களூரில் மிக முக்கியமான வேலை ஒன்று இருப்பதாகவும், அதை முடித்துக்கொண்டு நாளை இரவு ஊருக்குப் புறப்பட இருப்பதாகவும்; நாளை மறுநாள் வேதபுரத்தில் வந்து சிந்தாமணியை சந்தித்து, இருவருமே புறப்பட்டு பெங்களூருக்கு வந்து விட்டால், வழக்கு விஷயங்களைக் கவனிக்கலாமென்றும் கூறி, அன்று பகல் வண்டியிலேயே சிந்தாமணியை வேதபுரம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சிந்தாமணியும் தேவருக்காக வேதபுரத்தில் காத்திருப்பதாகவும், நாளை மறுநாள் அவர் வரும்போது அவரோடு பெங்களூர் வரத் தயாராய் இருப்பதாகவும் கூறினாள். பின்னர், வேதபுரம் புறப்பட்டாள்; தானிழந்த தன் தாயைச் சந்திப்<!-- source join: scan 147 ends சந்திப்; scan 148 begins பதற்காக! -->பதற்காக! இரவு ஒரு மணி சுமாருக்குப் பாலையூரில் இறங்கி அங்கிருந்து வேதபுரத்திற்கு ஓட்டமும் நடையுமாகப் புறப்பட்டாள். பாலையூரின் இருளமைந்த தெருக்கள், டைகர் அவளைத் துரத்தி விரட்டியதை ஞாபகப்படுத்தி—பயங்கர உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டன. “தந்தையின் முகதரிசனம் காணமுடியாத பாவியாகிவிட்டேன்—தாயின் மஞ்சளிழந்த முகத்தை எப்படிப் பார்ப்பேன்?”—என்று புலம்பியபடி வேதபுரம் நோக்கி ஓடிக்கொண்டேயிருந்தாள்; தரையிலே ஒரு நிலவு போல!

வேதபுரம் வந்துசேர்ந்தாள்! வேதபுரம் அவளுக்கு வேதனைபுரமாகத்தான் தோன்றியது! விடிந்தால் யார் முகத்திலும் படமுடியாது. அவள் ஒதுக்கப்பட்டவள்; ஒழுக்கம் கெட்டவள்! சிற்றவள்; சிறை சென்றவள்! இப்படியெல்லாம் அர்ச்சனைகள் நடந்த அந்தகாரத்திலே மூழ்கி அமைதி பெற்றிருக்கும் அந்தக் கிராமம் தயாராக இருந்தது.

சிந்தாமணி, தன் வீடு நோக்கி ஓடினாள். அங்கே அவள் அப்பா இல்லை! அதை அவளால் நினைக்கவும்—அந்த நினைப்பைச் சுமக்கவும் இயலாதுபோயிற்று! தாய் எப்படி ஓடிவந்து அணைத்துக்கொண்டு அலறப் போகிறாளோ? அய்யோ கொடுமை! கொடுமை!! சிந்தாமணி செந்தேள்கள் ஆயிரம் கொட்டினாற்போன்ற துடிதுடிப்புடன் வீட்டு வாயில் அடைந்தாள். அவளையறியாமல் “அம்மா” என்று கத்தினாள், கதவிலே சென்று மோதிக்கொண்டாள்; “அப்பா” என்று அலறியவாறு! கதவு தாளிடப்படாமல் இருந்து, திறந்துகொண்டது. “அம்மா! அம்மா!!” என்று கூச்சலிட்டாள். அம்மா இல்லை! தலைவிரியலோ யாரோ உதைத்ததுபோலிருந்தது. அண்ணாந்து பார்த்தாள்; இரண்டு கால்கள் தொங்கிக்கொண்டிருந்தன! விறிட்டுக் கதறினாள். சிவகாமி, நிம்மதியாக ஊஞ்சலாடிக்கொண்டிருந்தாள்; சிந்தாமணியை ஏறெடுத்துப் பார்க்காமல்!

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்