பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 17 · 17 / 23

அத்தியாயம் 17

Chapter 17

மூல ஸ்கேன் 134 after centered 17 – 142 before centered 18

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

17

அன்புள்ள அழகு! வணக்கம். ஆனந்தி முழுசம் அடைந்து வேதபுரத்திற்கு வந்துவிட்டாள். நான் இரண்டு நாட்களில் வந்து சேருகிறேன். பேசவேண்டியவை நிறைய உண்டு!

அன்பு நண்பன், நயினா.

அழகப்பனுக்கு வாய் குழறிற்று. “அம்மா! ஏமாந்து விட்டோம்” என்று கத்தினான். உடனே போலீசுக்குப் ‘போன்’ செய்து டைகரின் அடையாளங்களைக் கூறினான், அவர்களும் தேடுவதற்கான முயற்சியில் உடனே ஈடுபடுவதாகப் பதில் கூறினர். அழகப்பனுக்கு வேதபுரம் போய் ஒருமுறை ஆனந்தியைப் பார்த்துவிட்டு வரவேண்டும் போலிருந்தது. அம்மாவிடம் எப்படிச் சொல்வது? நயினாவே, இரண்டொரு நாட்களில் வருவதாக வேறு எழுதியிட்டான். இருந்தபோதிலும் ஆனந்தியைப்போய்ப் பார்த்தால்தான் அவன் ஆவல் அடங்கும்போலிருந்தது.

தனக்கு ஒரே குழப்பமாக இருப்பதாகவும், வேதபுரம் போய் விவரமறிந்து வருவதாகவும் தாயாரம்மாளிடம் கூறிவிட்டு, அன்றிரவே வேதபுரத்திற்குக் கிளம்பினான் அழகப்பன். மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் வேதபுரம் போய்ச்சேர்ந்தான். ஆனந்தியும், நயினாமுகம்மதும் காபி சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள், யாரோ வரும் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்க்கவே அழகப்பன் நின்றான். ஆனந்தி துள்ளிவந்தவாறு எழுந்து நின்று “வாருங்கள்” என்று உபசரித்தாள். நயினாவோ, அழகப்பனைத் தழுவிக் கொண்டு, “என்னப்பா! திடீரென்று விஜயம் செய்து விட்டாய்?” என்று ஆவல் ததும்பக்கேட்டான். நயினாவின்<!-- source join: scan 134 ends நயினாவின்; scan 135 begins கேள்வி --> கேள்வி அழகப்பனின் கவனத்தைக் கவரவில்லை. அவன், ஆனந்தியைப் பார்த்து. “உடம்பு எப்படியிருக்கிறது? பூரண குணந்தானே?” என்று கேட்டான். அவளும், தலையசைத்துப் புன்னகை சிந்தியவாறு “சுகந்தான்” என்று இதழ் திறந்தாள். “காபி சாப்பிடு” என்று அழகப்பனை அருகே உட்காரவைத்துக்கொண்டான் நயினா. ஆனந்தியும் அவர்கள் எதிரே உட்கார்ந்துகொண்டாள்.

“ஊரில் அம்மா செளக்கியந்தானே!” என்று அவள் கேட்டாள்.

அந்தக் கேள்வி அழகப்பனை என்ன பாடுபடுத்திற்று தெரியுமா? மாமியாரைப்பற்றி ஒரு மருமகள் இப்படி விசாரிக்கும்போது மணவாளனுக்கு மகிழ்ச்சி பொங்கத்தானே செய்யும்!

“ரொம்பவும் இளைப்பாயிருக்கிறதே!” என்றான், ஆனந்தியைப் பார்த்தவாறு!

“நீங்கள் கூடத்தான் சற்று இளைத்துக் காணப்படுகிறீர்கள்!” என்றாள் பதிலுக்கு அவள்! தன் உடல் நிலையில் எவ்வளவு அக்கறை காட்டுகிறாள்? இப்போதே இப்படி யென்றால்... எதிர் காலத்தில்?—இனிப்பு நிறைந்த கேள்வி எழுந்தது அவன் இருதயத்தில்!

“நான் கொஞ்சம் பருத்திருக்கிறேன் அல்லவா?” என்று கேட்டபடி ஆனந்தியைப் புன்முறுவலோடு நோக்கினான் நயினா.

ஆனந்தி இறந்துவிட்டதாகவும், நயினா நகையோடு ஓடிவிட்டதாகவும் கூறி, டைகர் தன்னிடம் ஆயிரம் ரூபாய் ஏமாற்றி வாங்கிக்கொண்டு போனதை அழகப்பன் விவரமாகச் சொன்னான். உடனே நயினா, “அடப்பாவி! ஆனந்தி இறந்துவிட்டாள் என்பதை நீ நம்பியதற்காகக் கூட நான் ஆச்சரியப்படவில்லை. நான் நகைகளைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டேன் என்பதை எப்படியப்பா நம்பினாய்? இவ்வளவு காலம் பழகியும், நண்பனைப்பற்றி நீ போட்டிருக்கிற கணக்கு இவ்வளவுதானா?” என்று வருத்தத்<!-- source join: scan 135 ends வருத்தத்; scan 136 begins தோடு -->தோடு குறிப்பிட்டான் நயினா. அதற்கு ஆயிரம் சமாதானங்கள் சொன்னான் அழகு!

சிந்தாமணியைப்பற்றி எப்படியாவது பேச்சை எடுத்து, அழகப்பனுக்கு உண்மையை உணர்த்திவிட வேண்டுமென்று விரும்பினாள் ஆனந்தி. அதற்காக, அவள் நயினாவுக்கு ஜாடை காட்டினாள். நயினா அந்த ஜாடையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னைத்தான் அழைத்துவிட்டு எழுந்துபோகச் சொல்லுகிறாளாக்கும் என்று கருதி, மெதுவாக எழுந்து அழகப்பனிடம், “சரி—பேசிக் கொண்டிருங்கள், இதோ வந்துவிடுகிறேன். கடைத்தெரு வரையில் போய்விட்டு!” எனக் கிளம்பினான். தான், சிந்தாமணியைப்பற்றி அவனிடம் விளக்குவதைவிட அவளே விளக்குவது நல்லது என்றும் அவன் நினைத்தான். அதனால் தான் சற்று ஒதுங்கியிருப்பது கூட நல்லது என்று எண்ணங்கொண்டு, புறப்பட்டான். அழகப்பனும் தன் நண்பனுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று தனக்குத் தானே மகிழ்ந்துகொண்டான். ஆனந்தி அழகப்பனிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தபோதிலும் சிந்தாமணி பற்றிய பேச்சுக்கு வருவதற்கு வழிபார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன; திருமண விஷயமெல்லாம் எந்தமட்டில் வைத்திருக்கிறீர்கள்?”—ஆனந்தியின் இந்தக் கேள்விக்கு அழகப்பன், உடனடியாகப் பதில் சொல்லாவிட்டாலும், தான் அவளிடம் கேட்க இருந்த விஷயத்தை அவளே துணிச்சலாகக் கேட்டுவிட்டாளேயென்று ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்டான்.

“திருமணம் என்ன; நினைப்பதுபோல அவ்வளவு சாதாரணமாக முடிந்துவிடுகிற நிகழ்ச்சியா?”

பதிலக் கேள்வி உருவிலே கொடுத்தான்.

“திருமணம் நடத்துகிற முறையைச் சொல்லுகிறீர்கள்; நீங்கள்! நான் கேட்டது அதுவல்ல! மணமகள் பற்றி......” என இழுத்தாள் அவள்!

“நானும் அதைப்பற்றித்தான் குறிப்பிடுகிறேன். எதிர்பாராதவிதமாக மலையில் மோதிக் கொண்டு சிக்கலங்கிப்போயிருக்கிறோம்; நானும் என் தாயாரும், என் நண்பனும்! அடுத்து எடுக்கிற முயற்சியாவது ஆரம்பத்திலேயே முறிவாகாமல் இருக்கவேண்டுமல்லவா?”

“கண்ணால் கண்டதும் பொய்—காதால் கேட்டதும் பொய்—தீர விசாரிப்பதே மெய்—என்கிற பழமொழி இருக்கிறதே; அதை முழுக்க முழுக்க நம்புகிறவன் நான்! நீங்கள்...?”

“சுற்றி வளைத்துப் பேசினால் எப்படிப் புரியும்? சுருக்கமாகவும் கொஞ்சம் பச்சையாகவும் சொல்லிவிட்டால் இருவருக்குமே குழப்பமிருக்காது என்று கருதுகிறேன்.”

“எனக்குக் குழப்பமேயில்லை நிச்சயமாக! உங்களுக்குத்தான்....”

“உண்மை—எனக்குக் குழப்பமேதான்! இப்போதல்ல—குழப்பம் போன வெள்ளிக்கிழமையே ஏற்பட்டுவிட்டது! உன் பதில் எப்படியிருக்குமோ என்றுதான் சந்தேகப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்.”

“என் பதில் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். உங்கள் வாழ்வில் இன்பம் வழங்குவதாகவே இருக்கும்!”

“உங்கள் வாழ்வு என்று பிரித்துப் பேசுவானேன்? ‘நம் வாழ்வில்’ என்று கூறலாமே!”

ஆனந்தியின் முகம் திடீரென மாறிவிட்டது. அதை அழகப்பனிடம் காட்டிக்கொள்ளாமல் “சரி; டிபனுக்கு நேரமாகிறது. பல் துலக்குங்களேன்!” என்றபடி அதை விட்டு எழுந்தாள். டிபன் சீக்கிரம் வாங்கி வரும்படி வேலுவை விரட்டினாள். வேலுவும் போய்விட்டபடியால் தானும் அவளும் தனிமையிலே இருப்பதை உணர்ந்து, தன் எண்ணத்தை எப்படியாவது முழுவதும் வெளிப்படுத்திவிட வேண்டுமென்று துடித்தான் அழகு. “பற்பொடி இருக்கிறதா?” என்று கேட்டபடி ஆனந்தியின் அறைக்குள்ளே எட்டிப் பார்த்தான். அவள், “இதோ,<!-- source join: scan 137 ends open quote “இதோ,; scan 138 begins கொண்டுவருகிறேன்” --> கொண்டுவருகிறேன்” என்று அவசரமாக வெளியே வந்தாள். அழகுக்குப் பேசமுடியாமல் நாக்குக் குழறத் தொடங்கிற்று. கட்டுப்படுத்தமுடியாத ஒரு நடுக்கம் நரம்புகளை உலுக்கிக்கொண்டிருந்தது. பற்பொடி டப்பாவைக் கொண்டுவந்து அவன் கையில் கொடுத்தாள். அதை வாங்கும்போது அவள் கரத்தின் மென்மையான ஸ்பரிச உணர்ச்சியால் கிறுகிறுத்துப் போனான் அழகப்பன். பல் துலக்கியதும் சோப்பு கேட்டான். அதையும் அவளே எடுத்துவந்து கொடுத்தாள். அவன் தோளிலே ஒரு துண்டு இருந்தபோதிலும் முகம் துடைப்பதற்கு ஒரு துண்டு கேட்டான். அதை அவள் கொடுக்கும்போது, அழகப்பனின் விரல்கள் அவளது விரல்களைச் சுற்றி பலமாகவே அழுத்தின. “டிபன் இப்பொழுது சாப்பிடுகிறீர்களா? அல்லது அவரும் வந்துவிட்டுமா?” என்று வினவினாள்.

“ஏன்; நாம் இருவருமே இப்போது சாப்பிடலாமே!” என்று தழுதழுத்த குரலில் கூறினான். ஆனந்தி வெளிக்காட்டிக்கொள்ள முடியாத உணர்ச்சியால் திண்டாடினாள். சிந்தாமணியைப்பற்றிப் பேச்செடுத்து, தன் குற்றத்திற்குக் கழுவாய் தேடிக்கொள்ளலாம் என நம்பியவளுக்கு அழகப்பனின் போக்கு அதிர்ச்சியைத் தந்தது! வேலு, டிபன் வாங்கிக்கொண்டு வந்துசேர்ந்தான். அவனைவிட்டே பரிமாறச் சொன்னாள். அவளும் அருகே வந்து உட்கார்ந்து சாப்பிடுவாள் என்று எதிர்பார்த்தான். நடக்கவில்லை. வேலு டிபனையும், காப்பியையும் அழகுவின் எதிரே வைத்துவிட்டு, ஆஸ்பத்திரி வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். நல்லெண்ணெய் பிடிக்காது அவனுக்கு! ஆனாலும்; “கொஞ்சம் நல்லெண்ணெய் இருக்குமா?” என்றான். ஆனந்தி, வேறு வழியின்றி எண்ணெய் கொண்டுவந்து ஊற்றினாள். “போதும்! போதும்!!” என்று சொல்லிக்கொண்டே, அவள் கையைப் பிடித்து நிறுத்திவிட்டான் அழகப்பன். ஆனந்தியின் கையிலிருந்த எண்ணெய் ஜாடி, அப்படியே மேசைமீது கவிழ்ந்துவிட்டது. அவளால் அங்கு நிற்கமுடியவில்லை. ‘மளமள’<!-- source join: scan 138 ends literal ‘மளமள’; scan 139 begins வென்று -->வென்று அறைப்பக்கம் போய்விட்டாள். அழகப்பன், தானே, சிந்திய எண்ணெயை ஜாடியில் வழித்து நிரப்பி, மேசையையெல்லாம் துடைத்து ஆரம்பித்தான். அந்த வேலைகளை முடித்துவிட்டு டிபனைச் சாப்பிட முயன்றான்; முடியவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது.

எழுந்து ஆனந்தியிருந்த அறைக்குள்ளே சென்றான். அவள், தலையில் கை வைத்தவாறு ஒரு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். மெதுவான குரலில் “ஆனந்தி!” என்றான்.

“தயவுசெய்து வெளியே போய் உட்காருங்கள்!” என்று கெஞ்சுகிற தொனியில் கேட்டுக்கொண்டாள். அவனுக்கு என்ன செய்வது; என்ன பேசுவது என்றே புரியவில்லை! ‘தான் நடந்துகொண்டது சரியா? தவறு?’—என்ற மனப்போராட்டம் வேறு எழுந்தது. தவறு என்றால்; அந்தத் தவறுக்கு அவளையும் இணங்கவைத்து, இருவரும் குற்றவாளிகளாகிவிட வேண்டும்—இல்லையேல் அவளுக்கு நேராக என்றென்றும் குற்றம்புரிந்தவன் என்ற பட்டத்தோடு தலைகுனிந்து நிற்கவேண்டி நேரிடும்—இப்படி எண்ணினான் அவன்! தான் அவசரப்பட்டுவிட்டதையும் தெளிவாக உணர்ந்தான்.

அவள் கருத்தையும் தெரிந்துகொள்வதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்து, “ஆனந்தி! நான் நினைப்பது தவறு என்று கூறுகிறாயா?” என்றான்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”—நடுக்கத்தோடு மறுமொழி பிறந்தது.

“நான் நினைப்பதைத்தான் நீ புரிந்துகொண்டிருப்பாயே!”

“பெண்ணே, ஆண்கள் எவ்வளவு சாதாரணமாகக் கணக்குப் போட்டுவிடுகிறீர்கள்!”

“தவறுதான் ஆனந்தி! உன் உள்ளத்தை அறியாமல் என் மனம்போல் நடந்துகொண்டேன். மன்னித்துவிடு! ஆனால் ஒன்று! புயலால் தாக்குண்டவன்போல<!-- source join: scan 139 ends புயலால் தாக்குண்டவன்போல; scan 140 begins ஆனேன் அன்று! --> ஆனேன் அன்று! நீதான் அமைதி வழங்கினை எனக்கு! இன்று மீண்டும் புயல்-பூகம்பம்—எரிமலை—எல்லாமே எழுந்துவிட்டன என் வாழ்வில்!”

“உங்களுக்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன். உங்கள் வாழ்வில் சூறாவளி வீசுவதற்குக் காரணகர்த்தாக்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். அந்தச் சூறாவளியை அடக்குவதற்கும் நானே முன்னிற்கிறேன் இப்போது! ஆனால் தாங்கள் நினைப்பதுபோன்ற முறையில் அல்ல!”

“பின் எந்த முறையில் ஆனந்தி?”

“சிந்தாமணியைக் களங்கமுடையவள் என்று உங்களை எண்ணும்படி செய்தது அந்தப் பாவி டைகரும், நானுந்தான்!”

அழகப்பன், அவள் பேச்சைத் தொடரவிடவில்லை. சிந்தாமணியை நல்லவளாக்கித் தன் தலையில் கட்டுவதற்காகவே அவள் மீண்டும் தந்திரம் செய்கிறாள் என்று அவன் கணக்குப் போட்டுக்கொண்டான்.

“சிந்தாமணியின் பேச்சையே என்னிடம் எடுக்க வேண்டாம்—நான் உன்னைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும்!” என்றான்.

அவள் பதில் பேசவில்லை. மெளனமாக நின்றாள். அவனும் அறையைவிட்டுப் போகாமல் அவளருகே நின்று கொண்டிருந்தான். மீண்டும் அவனை உணர்ச்சிக் கயிறு பம்பரம்போல் சுழலவிட்டது.

“ஆனந்தி, பதில் சொல்!...... ஏன் மெளனம் சாதிக்கிறாய்? மெளனம் சம்மதத்திற்கு அடையாளம் அல்லவா?” எனக் கேட்டவாறு அவள் தோளைத் தழுவினான். அவன் அவளைத் தழுவுவதற்கும் நயினா முகம்மது உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

ஆனந்தி சட்டென அவனிடமிருந்து விடுபட்டு வெளியேறி தோட்டத்துப் பக்கம் சென்றாள். நயினா<!-- source join: scan 140 ends நயினா; scan 141 begins எதுவும் பேசவில்லை. --> எதுவும் பேசவில்லை. இப்படியொரு காட்சியைக் காணத் வேண்டிப்போலவே நடந்துகொண்டான். “என்ன அழகு, டிபன் சாப்பிட்டாச்சா?” என்று வழக்கமான முகபாவத்தோடு கேட்டான். அழகுவின் முகத்தில் அசடு வழிந்தது, ஆனாலும் சமாளித்துக்கொண்டு “சாப்பிட்டுவிட்டேன்” என்றான். அவன் தேகமெங்கும் வியர்த்துக்கொட்டியது.

நயினா, “ஆனந்தி! ஆனந்தி!” என்று கூப்பிட்டான். அவளும் தோட்டத்துப் பக்கமிருந்து “ஏன்” என்று கேட்டபடி உள்ளே வந்தாள். “பத்திரிகை பார்த்தாயா? ...வேதபுரத்துச் செய்திகள் இரண்டு வெளியாகியிருக்கின்றன” என்று அவள் கையிலே பத்திரிகையைக் கொடுத்தான்.

“என்னப்பா வேதபுரத்துச் சேதி?” என்றான் அழகு; சமாளிப்பதற்காக!

“அதுதான்; டைகர் உன்னை ஏமாற்றிய சேதி ஒன்று!”

“இன்னொன்று?....”

“சிந்தாமணி அபின் கடத்திச் செல்லும்போது போலீசாரால் பிடிக்கப்பட்டு, மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறாளாம்!”

இதைக் கேட்டு அழகு அதிர்ச்சியடையவில்லை, அதிகமாக!

ஆனந்தி, “ஆ!” என்று ஏங்கினாள். அப்போது வேலு வேகமாக ஓடிவந்து, “அம்மா! அம்மா! கேளுங்கள் சேதி! சிந்தாமணியோட அப்பா, சிவநேசர், ஆற்றிலே விழுந்து தற்கொலை செய்துகொண்டாராம்!” என்றான்.

கூடத்தில் மெளனம் நிலவியது. அழகு, நயினா, ஆனந்தி மூவரும் ஒருவர் முகத்தை யொருவர் பார்க்க விரும்பாமல் அசைவற்று நின்றுவிட்டார்கள்.

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்