அத்தியாயம் 16 · 16 / 23
அத்தியாயம் 16
Chapter 16
மூல ஸ்கேன் 127 after centered 16 – 134 before centered 17
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
16
இதற்குள் விஷயம் இரயில் முழுவதும் பரவிவிட்டது. “யாரோ ஒருத்தி அபின் கடத்திச் செல்லும்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டாள்” என்று அழகப்பன் காதிலும் செய்தி விழுந்தது. கடைசிப் பெட்டியிலிருந்த டைகரும் கேள்விப்பட்டானென்றாலும், சிந்தாமணிதான் சிக்கிக்கொண்டாள் என்பது அவனுக்குத் தெரியாது.
இரயில் பெங்களூரில் வந்து நின்றது. புறக்கூடு திறக்கப்பட்டது போல மக்கள் இரயில் பெட்டியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள். போலீசார் புடைசூழ சிந்தாமணியும் இறங்கினாள். அவள்மீது பழியைப் போட்டுத் தப்பித்துக்கொண்ட அந்தப் படாடோபக்காரி மிக நல்லவள்போல் முகத்தில் நடிப்பைத் தேக்கியவாறு இரயிலைவிட்டு வெளியேறினாள். டைகரும் பரபரப்போடு சிந்தாமணியைக் காண ஓடிவந்துகொண்டிருந்தான்.
அதற்குள் போலீசாரையும் சிந்தாமணியையும் மக்கள் சூழ்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கத் துவங்கினர். போலீசார் தலையைக் கண்ட டைகர், மிரட்சியோடு கூட்டத்திற்குள் நுழைந்தான். “இதோ அவள்தான்! அவளைத்தான் போலீசார் பிடித்திருக்கிறார்கள்!” என்று கூட்டத்தினர் சுட்டிக்காட்டியவண்ணம் அங்குமிங்கும் அலைந்தனர். கைது செய்யப்பட்டவளைப் பார்ப்போமே என்று கூட்டத்திற்குள்ளே தலையை நீட்டினான் டைகர்! ஒருக்கணம் நிலை குலறியது அவனுக்கு! தன் எதிரே பார்க்கும் காட்சி என்ன—என்று தன்னைத்தானே உரக்கக் கேட்டுக்கொண்டான். தன்னிடமிருந்து தப்புவதற்காகவே அவள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டாளா? இப்படியொரு கேள்வி அவனை ஆட்கொண்டது. அவனுக்கெல்லவா தெரியும் அவள் படும் வேதனை! வெள்ளிக்கிழமை பொழுது விடிந்தது—விபச்சாரிப் பட்டம் கிடைத்தது! விநாசகாலம் சம்பவித்தது! இப்போது போலீசார் கையிலே சிக்கும் நிலை பிறந்தது! இவைகள் விட ஒரு பெண்ணின் வாழ்<!-- source join: scan 127 ends வாழ்; scan 128 begins விலே -->விலே கொடுமைகள் விளையவேண்டுமா? இவை போதாதா; அவளை உயிரோடு வைத்து அணுஅணுவாகக் கொன்று குவிக்க!
“தப்பிவிட்டாளே என்னிடமிருந்து!”—டைகர் பெருமூச்சுவிட்டான். பூனை வாய்க்கிளி பூட்டிய கூண்டுக்குள் அடைப்பட்டால் பூனைக்கு ஏக்கந்தானே பிறக்கும்! இருபுறமும் தொல்லைக்கொண்ட கிளியாயானாள் சிந்தாமணி. அவளை விடுவிக்க மார்க்கமே கிடையாதா? டைகர் யோசித்தான். தானே போலீசாரை ஏமாற்றி ஓடிவந்தவன். இப்போது வலியப்போய் சிக்கிக்கொண்டால்—அதைவிட அறிவீனம் எதுவுமில்லையென்று குழப்பமடைந்தான். சரி, நடப்பது நடக்கட்டும் என்ற தீர்மானத்தோடு சற்று தொலைவில் நின்று கவனிக்க ஆரம்பித்தான்.
அழகப்பனும் அவன் தாயாரும் முதல் வகுப்பு வண்டியிலிருந்து இறங்கி, கூட்டம் நிற்கும் பக்கமாக வெளியே போக முயன்றார்கள். “அவள்தான் அபின் கொண்டு வந்து அகப்பட்டுக்கொண்டவள்!” என மக்கள் சுட்டிக் காட்டி அறிவித்துக்கொண்டிருப்பதைக் கண்ட அழகப்பனுக்குத் தானும் அவளைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. தாயாரை மெதுவாக அழைத்தவாறு கூட்டத்தில் எட்டி எட்டி அவளைப் பார்க்க முயற்சி செய்தான். முடியவில்லை. போலீசார் அவளை அழைத்துக் கொண்டு முன்னே போக பின்னே—தாயாருடன் அழகப்பன் போய்க்கொண்டிருந்தான். அழகப்பன் செல்வதை டைகர் பார்த்துவிட்டான். எங்கே அழகப்பனும் சிந்தாமணியும் சந்தித்துவிடுவார்களோ என்ற பயம் அவனைப் பிடித்துக்கொண்டது. தன்னைத்தேடித்திரியும் போலீசாரிடம் ஏற்படுகிற அச்சத்தைவிட அதிகமான அச்சம் அவனைச் சூழ்ந்தது. அழகப்பனையே கூர்ந்து கவனித்தவாறு பின்னாலேயே நடந்தான்.
புகைவண்டி நிலையத்தின் முன்புறத்தில் “போலீஸ் வேன்” நின்றுகொண்டிருந்தது. சிந்தாமணியைப் போலீசார் அதில் கொண்டுபோய் ஏற்றினார்கள். ஏறும்போது<!-- source join: scan 128 ends ஏறும்போது; scan 129 begins அவளை --> அவளை யாரும் பார்த்துவிடமுடியும். இப்போது அழகப்பன் அவளை நிச்சயமாகப் பார்த்துவிடப்போகிறான். அவள் உடனே தன் கதையைச் சொல்லி அழப்போகிறாள். அழகப்பனும் நம்பிவிடப்போகிறான். பிறகு தன் திட்டமெல்லாம் விழலுக்கிறைத்த நீராகப்போய்விடும். இவ்வாறு எண்ணமிட்டவனும் டைகர் துடித்துக்கொண்டிருந்தான். போலீஸ் வண்டியின் படிகளில் அவன் ஏறி வண்டிக்குள் நுழையும் போது, அழகப்பன் அவளைக் காண விரும்பி அருகே அவசரமாக வந்தான். அவன் வருவது அவளுக்கும் தெரியாது. அவனுக்கும் அவள்தான் சிந்தாமணி என்றும் தெரியாது. வண்டியில் நுழையும்போது முகத்தைத் திருப்பி, மக்களைப் பார்த்திருப்பாளேயானால் அவளை அழகு, உடனே அடையாளம் கண்டிருப்பான். அவன் எதற்காக மக்கள் பக்கம் முகத்தைத் திருப்பப்போகிறான்! பொதுஜனக் கோரிக்கைக்காகப் போராட்டம் நடத்தி அடக்குமுறைக்கு ஆளாகிச் சிறை செல்லும் ‘சமூக சேவகியா அவள்? இல்லை! சமுதாயத்தின் ‘கழிசடை’ யாகி விட்டவள். கன்னி கழியாப் பருவத்திலே கருவுற்று. அபின் கடத்தும் தொழில் நடத்தி ஜீவிக்கும் மனிதப்புழு என சமூகத்தால் வர்ணிக்கப்படும் நிலையிலே உள்ளவள். அவள் ஏன் மக்களைக் திரும்பிப் பார்க்கப்போகிறாள்! திரும்பவில்லை. அதனால் அழகப்பனும் அவளைப் புரிந்துகொள்ளவில்லை. பேதையின் பின்ன மூளை மட்டுமே கண்டான்.
“கொஞ்ச வயசுக்காரிதான் அம்மா!” என்றான்.
“பலே கைகாரி போலிருக்கு!” என்றாள் தாய்!
அந்தத் தாய்க்கு மருமகனாக வந்திருக்கவேண்டிய மாணிக்கப் பதக்கம், சிந்துவாற்றுச் சீரழிந்து போய் விட்டது. “போலீஸ் வேன்” புறப்பட்டது, புழுதியில் வீசப்பட்ட அந்தப் புனிதவதியை ஏற்றிக்கொண்டு!
அழகப்பனும், தாயாரம்மாளும் வாடகைக்கார் ஒன்றில் ஏறி வீடு நோக்கிப் புறப்பட்டனர் அழகப்பனின் விலாசத்தைத் தெரிந்துவைத்துக்கொள்ள விரும்பிய டைகர், இன்னொரு வாடகைக் காரில் பின்தொடர்ந்தான். அழகப்ப<!-- source join: scan 129 ends அழகப்ப; scan 130 begins னுடைய -->னுடைய வீடு எது என்பதை விவரமாகத் தெரிந்து கொண்டு காரிலேயே திருப்பினான்.
சிந்தாமணி போலீஸ்காரர்களிடமிருந்து விடுபட்டு, ‘லாக் அப்’பிலே அடைக்கப்பட்டாள். கற்பான் பூச்சிகளும், வெள்ளைப் புழுக்களும் நிறைந்த அந்த இருட்டறையிலே வாழ்வின் ஒளி தேடிக் கிளம்பிய வைர நிலவு வீழ்ந்து கிடந்தது. “மங்காகர”மான வெள்ளிக்கிழமை, தன் கடையைக் கட்டிக்கொண்டு சனிக்கிழமைக்கு வழி விட்டது.
பலகணி வழியே உதய சூரியனின் பொற் கிரணங்கள் நீட்டப்பட்டு, பாலையூர் மருத்துவ மனையிலே ஆனந்தி துயிலுற்றி யெழுந்தாள். நயினா முகம்மது, அருகே வந்து, “ஹார்லிக்ஸ் போட்டுமா?” என்றான். தேவைதான் எனும் விதத்தில் அவளும் தலையசைத்தாள். இரவு பேசிய பேச்சுக்கள் அவர்கள் இருவரையும் நாணத்தில் ஆழ்த்தியிருந்தன. அந்தப் பேச்சின் தொடர்ச்சியாக அவர்கள் பார்வையிலே வித விதமான மாற்றங்கள் பிரகாசித்தன. அன்று பகல் முழுவதும் மெளனமாகவே இரண்டு இதயங்களும் எண்ணங்களே முழங்கிக்கொண்டிருந்தன. பேசுவதால் காணுகிற முடிவைவிட, மெளனத்தாலும், விழியசைவாலும் சிறந்த முடிவைக் காணமுடியுமென்பது காதல் இலக்கணம். காதலுக்கு இணக்கம் தெரிவிக்கும் உள்ளம் பெற்றிருப்பவர்கள் கூட, நாணத்தாலோ—அச்சத்தாலோ, அந்த எண்ணத்தை வார்த்தை வடிவில் வெளியிடத் தயங்குவார்கள். “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று திடுமென ஒரு பெண்ணிடம் சென்று பேசிவிட்டால், இஷ்டமுள்ளவளாக இருந்தால்கூட, “எட்டி நில்” என்று கூறுவாளே தவிர, “கட்டிக்கொள்வாய் கண்ணாளா!” என்று கிட்ட வரமாட்டாள்! அதனால்தான் காதல் மாளிகையின் முதல் நுழைவுவாயில் என்று கண்கள் சிறப்பிக்கப்படுகின்றன. கண்கள் மாத்திரம் இல்லாவிட்டால், காதலர்கள்<!-- source join: scan 130 ends காதலர்கள்; scan 131 begins இருதயமென்னும்... --> இருதயமென்னும் சுவரேறிக் குதித்தல்லவா காதல் மாளிகைக்குள் நுழையவேண்டும். வாழ்க, அந்தக் கண்கள்—இப்படி விழிகளுக்கு வாழ்த்துக் கூறியவாறு பகல் ஒழிந்தது. இரவு வந்தது. நயினாமுகம்மது ஆனந்திக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்து விட்டு அருகே அமர்ந்தான்.
“நீங்கள் தூங்கவில்லையா?” என்று வாய் திறந்தாள் ஆனந்தி.
“அவசரமில்லை” என்றான் அவன்.
சிறிது நேரம் மெளனம். “வீணாக அவன் மனத்தைக் கலக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறோம்” எனத் தனக்குள் வேதனைப்பட்டாள் ஆனந்தி.
டைகரைப்பற்றிய உண்மையைச் சொல்லாமல், தானொரு கற்புகெடாத பெண்மணியென்று கூறியிருந்தால் நயினாவின் பரிபூரண அன்பைப் பெற்றிருக்க முடியுமே! இதுபோல ஒருக் கணம் நினைத்தாள்.
“! சே !! அப்படி இருவரும் ஒன்றுகி, ஒருநாள் உண்மை அம்பலமாகிவிட்டால்...அவர் உள்ளம் எப்படிச் சிதறிவிடும்?” உண்மையைக் கூறியதற்காகத் தன்னைத் தானே பாராட்டிக்கொண்டாள்.
“என்னைத் தயவுசெய்து வெறுத்துவிடுங்கள்!” என்றாள் கண்களில் நீர் கலங்கியவாறு!
“முடியாது ஆனந்தி! நான் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டேன். உன் வாழ்க்கைக்கு இனிமேல் நான் தான் துணைவன்!”
“அப்படியானால்...?”
“நீயோ நானோ மதம் மாறிட வேண்டியதுதான்!”
“மதம் ஏன் மாறவேண்டும்—மனம் மாறாமலிருந்தால் போதும்!” என்று கூறியபடி அவன் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டு கலகலவெனக் கண்ணீர் உகுத்தாள் ஆனந்தி. அந்தக் கண்ணீர் இருதயத்திலிருந்து புறப்பட்ட புன்னீர் அல்ல! பரவசத் திருவிழாவில் தெளிக்கப்படும் பன்னீர்!—இருவர் கரங்களும் ஒன்றையொன்று பின்னிக்<!-- source join: scan 131 ends பின்னிக்; scan 132 begins கொண்டன; -->கொண்டன; இருதயங்கள் இணைந்து ஒன்றுகி விட்டன என்பதன் அடையாளமாக!
ஒரு வாரத்திற்கு மேலாகிறது; ஆனந்தியின் உடல் நிலைப்பற்றி நயினாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தான் அழகப்பன்.
சிந்தாமணியால் ஏற்பட்ட அவமானகரமான ஏமாற்றத்தைப் போக்கிடும் ஆற்றல் ஆனந்தி ஒருத்தியிடமே இருப்பதாக நினைத்து, அந்த நினைவால் மகிழ்ந்திருப்பவன் அழகப்பன். அம்மாவுக்கு நிரம்பப் படித்த பெண் என்றால் பிடிக்காது. அதுவும் வேட்டாக்கர் என்றால் அறவே ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ஆனந்தியின் விஷயத்தில் அம்மாவையும் சமாதானப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை அழகப்பனுக்கு உதயமாகிறது. அது ஆசையின் விளைவு. வேதபுரமிருந்து திரும்பியது முதல் ஆனந்தியின் பெயரையே உச்சரித்தபடி உழன்றுகொண்டிருந்தான். “இன்றைக்காவது நயினாவிடமிருந்து ஏதாவது தபால் வராதா?” என்று எதிர்பார்த்தவாறு உட்கார்ந்திருந்த அழகுவின் முன்பு டைகர் வந்து நின்றான். அவனைப் பார்த்த அழகு திடுக்கிட்டான். மிக மிகச் சோகத் தோற்றமுடன் நின்ற டைகர், அழகப்பனைக் கண்டதும் “ஆனந்தி!” என்று வாய்விட்டு அலறிவிட்டான்.
“ஆனந்திக்கு என்ன? என்ன நடந்தது?” என நடுங்கியவாறு எழுந்தான் அழகு!
“நேற்று முன்தினம் ஆனந்தி இறந்துவிட்டாள்!” என்று கூறிவிட்டு டைகர் தொடர்ந்து அழத் தொடங்கினான். அழகப்பனுக்கு நிற்க இயலவில்லை. அவன் மனக் கோட்டைகள் இடிந்து தூள் தூளாகிவிட்டன. ஆசைக் கனவுகள் அரும்பிலேயே கலைந்துவிட்டன.
இருண்டுபோன குகையின் வாசலில் தள்ளப்பட்டது போல் ஆகிவிட்டான்.
“கைத்தடியில்லாத குருடன் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டில் விடப்பட்டதுபோல் ஆகிவிட்டதே என் நிலைமை” என மனதுக்குள் சொல்லிக் கண்ணீர் வடித்தான்.
“நீண்ட நேர மெளனம். தாயாரம்மாள் வந்தாள். தடு மாறியவாறு! செய்தி கேட்டு அவளும் சுருண்டுபோனாள்.
“நயினா முகம்மது என்ன ஆனான்?” என்று அழுகையை அடக்கியவாறு அழகு கேட்டான்.
“அய்யோ! அதையேன் கேட்கவேண்டும் — மூன்று நாளாகிறது — வீட்டிலேயிருந்த நகை நட்டுக்களை மூட்டை கட்டிக்கொண்டு, உங்கள் நண்பன் எங்கேயோ கம்பி நீட்டி விட்டான்...” எனச் சொல்லி மேலும் அழுதான், டைகர்!
இந்த வார்த்தைகளை அழகப்பனால் நம்பமுடியவில்லை தான்—ஆனாலும், அந்த டைகர் அழுதுகொண்டே சொல்கிறானே நம்பாமல் என் செய்வது?
தன் நண்பன் இவ்வளவு பெரிய கயவனா? ஒரே குழப்பம் அவனுக்கு!—டைகர், அழகப்பனை வெகு விரைவில் தன் பக்கம் திருப்பிக்கொண்டான். தாயாரம்மாளும் டைகர் பக்கம் சேர்ந்துகொண்டு, நயினாவுக்கு அர்ச்சனைகள் செய்தாள்.
இறுதியில் டைகரிடம், அழகப்பன் ஒரு ஆயிரரூபாய்க்கு நோட்டுக்கத்தையைக் கொடுத்து ஆறுதல் கூறினான்.
“ஆயிரம் ரூபாய்; ஆனந்தியின் உயிருக்குச் சமமாகுமா?” என ஒப்பாரிவைக்கத் தொடங்கினான் டைகர். அவனைச் சமாதானம் செய்து அழகப்பனும், அவன் தாயாரும் வழியனுப்பிவைத்தார்கள்.
டைகர், மூக்கைச் சிந்தியவாறே அந்த பங்களாவை விட்டு வெளியேறினான். அவன் வெளியிற்சென்று கால் மணிநேரத்திற்கெல்லாம் தபால்காரன் ஒரு கவரை அழகப்பனிடம் கொடுத்தான். கவரின் மேலேயுள்ள விலாசம் நயினா முகம்மதுவின் கையெழுத்துப்போல இருந்தது.
நயினாவின் எழுத்துக்களைக் கண்டதும், அழகு அந்த அஞ்சலை அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தான்.
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்