பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 15 · 15 / 23

அத்தியாயம் 15

Chapter 15

மூல ஸ்கேன் 120 after centered 15 – 126

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

15

போலீசாரால் அவன் மறைந்த திசையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவன் போன பக்கத்தைவிட்டுவிட்டு வேறு பகுதிகளில் தேட முனைந்தார்கள். அவனோ ஒரு சந்திலே நுழைந்து, ஒரு சாக்கடை வாய்க்காலின் உள்ளே புகுந்து வேறு வீதிக்கு வந்துவிட்டான். ஓடிக்கொண்டிருக்கிற பெண்ணை சந்திப்பதற்கும், எதிரே மடக்குவதற்கும் அதுதான் சரியான வழியென்று அவன் தீர்மானித்தான். அவன் எதிர்பார்த்ததுபோலவே அவளும் அவன் எதிரே வந்துவிட்டாள். “சிந்தாமணி! நில்!!” என்ற குரல் கேட்டு அவள் திடுக்கிட்டாள்.

தன்னை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்த பாதகனின் குரல்தான் அது என்பதை உடனே புரிந்துகொண்டாள். ஆவேசம் அவளை ஆட்டிப்படைத்தது. ஆயினும் அப்படியே நின்றாள். ‘வரட்டும் அவன் அருகே!’ என்ற வீராப்பு அவள் உள்ளத்திலே பொங்கி வழிந்தது. ‘என்னை பாடு படுத்துகிறேன் அவனை’ என்பது போல அவளது விழிகள் சுழன்றன. டைகர், மெதுவாக அவளருகே நடந்து வந்தான்.

“வாடா வஞ்சகனே! வா! எங்கே வந்தாய்? என் வாழ்வை ஏனடா இப்படிச் சீரழிய வைத்தாய்?” என்று குமுறினாள் அவள். “அதெல்லாம் பேச இப்போது நேரமில்லை. ஆபத்து காத்திருக்கிறது. வா...வா...என்னோடு!” என்று அவளைக் கரந்தொட்டுப் பரபர வென்று இழுத்துக் கொண்டே ஓடினான் அவன். அந்த வேகத்தில் அவன் பின்னே சிறிது ஓடிய சிந்தாமணி, ஆத்திரமனைத்தையும் சேர்த்து அவன் கன்னத்திலே “பளார்!” என்று ஒரு அறை கொடுத்து, “காரணம் சொல். என்னைக் களங்கம் சூழ்ந்தவள் என்று ஏன் கற்பனை செய்து காட்டினாய்? நீதானே படுபாவி; அந்த அக்கிரமச் செயலுக்கு மூல கர்த்தா!” என்று அலறினாள். டைகர் அவளைப் பிடித்திருந்த பிடியை விட்டு, தன் கன்னத்தை அழுத்திக்கொண்டான். அதுதான் சமயமென சிந்தாமணி ஓட ஆரம்பித்தாள், டைகர் விடவில்லை, தொடர்ந்தான். ஆனால் அவனால் அவ்வளவு வேகம் ஓட முடியவில்லை. கன்னம், எண்ணெயிலிட்ட அப்பளம்போல் வீங்க ஆரம்பித்தது.

வலியைச் சமாளித்துக்கொண்டே ஓடினான். அவன்கையில் அகப்படுவது சிலந்தி வலையில் சிக்குவது போலாகுமெனக் கருதிய சிந்தாமணி, திசை தெரியாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். எதிரே விளக்குகள் தெரிந்தன. பின்னே திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் டைகர் வருவது தெரிந்தது. விளக்குகள் தெரிந்த பக்கம் மிக வேகமாக ஓடினாள். அதுதான் பாலையூர் ரயில்வே ஸ்டேஷன். இரயில் நிலையத்தில் வண்டி புறப்படத்தயாராக இருந்தது. மூன்றாவது மணி அடிக்கப்பட்டது. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு புகைவண்டியின் ஒலி எழுந்தது. சிந்தாமணி நிலையத்தில் விசாரித்தாள்; எந்த ஊர் போகிற இரயில் என்று! பெங்களூர் போகிற வண்டியெனப் பதில் கிடைத்தது. அவள் மனத்திலே கண நேரத்தில் பல நினைவுகள் மின்னலென எழுந்தன. “பெங்களூர் மாப்பிள்ளை வீட்டுக்கே போய், அவர்களிடம்தான் நிரபராதியென நிரூபித்தால் என்ன? ஆம் அதுவே சரி!” இந்தத் தீர்மானத்தோடு சிந்தாமணி, புகைவண்டியிடம் ஓடினாள். வண்டியில்<!-- source join: scan 121 ends வண்டியில்; scan 122 begins ஒரே கூட்டம். --> ஒரே கூட்டம். தீமரென எந்தப் பெட்டியிலும் ஏற இயலவில்லை. மிகவும் சங்கடப்பட்டு, கடைசியில் பெண்களுக்கென உள்ள தனிப்பெட்டியில் ஏறிக்கொண்டாள். அதில் மட்டும்தான் சிறிது கும்பல் குறைவாக இருந்தது. வண்டி புறப்பட்டது. சிந்தாமணி வண்டியிலிருந்தவாறே டைகர் வருகிறானா என்று எட்டிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளையுமறியாமல், வண்டி நகரும்போது கடைசிப் பெட்டியில் அவன் ஓடி வந்து தொத்திக்கொண்டான். சிந்தாமணி, பெங்களூருக்குத்தான் போகிறாள்; அங்குப் போய் தன்னைத் தூய்மையானவள் என்று விளக்குவதற்குத்தான் கிளம்பியிருக்கிறாள்; ஆகவே நடுவழியில் அவளை எதுவும் கலகம் செய்யாமல்—பெங்களூர் போனதும் மடக்கிவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான்.

சிந்தாமணி ஏறிய பெட்டியிலேயிருந்து பெண்மணிகள் அனைவருமே அயர்ந்த தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். ஒருத்தி மட்டுமே அரைத் தூக்கமாயிருந்தாள். அவளது விழிகள் கூடப் பாதிதான் மூடியிருந்தன. பார்வைக்குப் பெரிய வீட்டுப் பெண்போல இருந்தாலும், முகத்திலே ஆண்மையின் சாயல் அளவுக்குமீறிக் காணப்பட்டது.

கழுத்திலே இரட்டை வடம் சங்கிலி போட்டிருந்தாள். காதில் வைரத்தோடு—முழங்கை மட்டும் வளையல்கள்!.... பணக்காரியின் தோற்றம். முகத்திலே மட்டும் பெண்மையின் பொலிவில்லை. உதடுகள் தடிப்பேறியிருந்தன அவளுக்கு. கண்கள் சற்று சிவந்திருந்தன. நல்ல சிவப்புச்சேலை கட்டியிருந்தாள். அலங்காரமான காலணி அணிந்திருந்தாள். ரவிக்கையின் கைகள் தோள்பட்டையோடு நின்றுவிட்டன. சரியான தூக்கமின்றி அவள் உழன்று கொண்டிருந்தாள்.

பலகணி வழியே அடிக்கடி பார்ப்பதும், பிறகு தான் உட்கார்ந்திருக்கும் பலகையின் கீழே கவனிப்பதும்—சற்று நேரம் கண்களை மூடிக்கொள்வதுமாக சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள். சிந்தாமணி, அவளுக்குப் பக்கத்திலே

கார்ந்து கொண்டாள். பணக்காரி சிந்தாமணியை உற்று நோக்கினாள். அந்தப் பார்வை சிந்தாமணிக்கு அச்சத்தையும், வெறுப்பையும் உண்டாக்கியது. அவள் தூங்குவது போலக் கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது, சிந்தாமணி, அவளை நன்றாகக் கவனித்து இன்னும் சிறிது பீதி கொண்டாள். மணமறியாத நீலக் கனகாம்பரப் பூவைத் தலையிலே வைத்துக்கொண்டு, மிளகாய்ப் பழத்தின் எரிச்சலை வெளியிடும் ஏதோ ஒருவகை வாசனைப் பொருளையும் மேனியில் பூசிக்கொண்டு, அடக்க ஒடுக்கமின்றி அமர்ந்திருக்கும் அந்த ‘மாது சிரோன்மணி’ சிந்தாமணிக்கு ஒரு புதிராகவே தோன்றினாள்.

இரயில் எங்காவது ஒரு ஸ்டேஷனில் நிற்கும். உடனே அந்தப் ‘புதிர் மனுஷி’ எழுந்து கதவுப் பக்கம் நின்றுகொள்வாள். வெளியே தலையை நீட்டி யாரையோ எதிர்பார்ப்பதுபோல ஆவலை முகத்தில் தேக்குவாள். பிறகு, வண்டி நகர ஆரம்பித்ததும் தன் இடத்தில் வந்து அமர்ந்துகொள்வாள். விடை காண முடியாத சிக்கலாக உணர்ந்தாள் சிந்தாமணி, அவளை!

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு சிந்தாமணி பக்கத்திலேயுள்ள அந்தப் படாடோபக்காரியை மறந்துவிட்டாள். இதைவிடப் பெரிய சிக்கலிலேயிருந்து அவள் விடுபட வேண்டுமே! அதை நினைத்தால் அவள் நெஞ்சில் சீமை எண்ணெயில் தீப்பற்றுவதுபோலப் பற்றும்! “விபச்சாரி!” இந்தக் கர்ணகடூரமான வார்த்தைக்கு இலக்காகி விட்டவள் அவள்! குற்றம் புரியாத எத்தனையோ நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆயுள் தண்டனை—தூக்குமேடை—நாடுகடத்தல், இப்படியெல்லாம் தீர்ப்பு வழங்கப்படுகிறது அவர்களுக்கு! அந்தத் தண்டனைகளையெல்லாம்விட, விபச்சாரப் பட்டத்தை சுமக்கச் சொல்லி, ஒரு தாய் உள்ளத்தில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது மிகக் கொடுமை! மிகக் கொடுமை!! அந்தக் கொடுமைக்கு முடிவு காணத்தான், தானே தன் வழக்கிற்கு வழக்கறிஞராகவும்—சாட்சியாகவும் செல்கிறாள்—பெங்களூர் நோக்கி!

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றது. வழக்கம்போல அந்தக் ‘கனகாம்பரம்’ கதவண்டை நின்று கவனித்தாள்.

சிந்தாமணியும், என்ன ஸ்டேஷன் என்று பார்ப்பதற்காக வெளியே தலையை நீட்டினாள். ஸ்டேஷன் பெயர்ப்பலகை தூரத்தில் இருந்ததால் சரியாகத் தெரியவில்லை. ஸ்டேஷன் பக்கம் வட்டமிட்ட அவளது கண்கள் திடீரென எதையோ பார்த்து அகலத் திறந்தன. அவள் பெட்டியோரமாக ஒரு வயதான அம்மையும் ஒரு வாலிபனும் நின்றுகொண்டிருந்தார்கள். வயதானவளை இன்னொருவன் கையைப் பிடித்து அழைத்து, அருகேயுள்ள முதல் வகுப்பு வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தான். அப்போது அந்தப் பக்கம் வந்த ஒரு பெரிய தனவந்தர், “என்ன அழகப்பன்? ஏது இவ்வளவு தூரம்?” என்று கேட்டார். சிந்தாமணியின் மனம் எப்படி அலமோதியிருக்கும்!

ஆம்; அவன் அழகப்பனேதான்! தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமின்றி, தனக்கு வேசி பட்டம் கட்டிவிட்டு திரும்புகிற அழகப்பனேதான்! அவள் அந்த உரையாடலை உன்னிப்பாகக் கவனித்தாள்.

“அம்மாவும் நானும் ஒரு ஊருக்குப் போய்விட்டு பெங்களூர் திரும்புகிறோம். வழியிலே கார் பழுதாகிவிட்டது. அதனால் காரை சீர் செய்து எடுத்துவரும்படி டிரைவரை இங்கு விட்டுவிட்டு நானும் அம்மாவும் பெங்களூர் போகிறோம்.”

தனவந்தர், “நானும் பெங்களூர்தான் வருகிறேன்” என்று கூறவே, அழகப்பனும் அவரும் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். டிரைவர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான்.

“காரை ஜாக்கிரதையாக எடுத்துவா!” என்று அழகப்பன் கூறுவதற்கும் இரயில் அசைவிட்டு நகருவதற்கும் சரியாக இருந்தது. சிந்தாமணிக்கு வண்டியில் இருப்புக் கொள்ளவில்லை. இவ்வளவு நேரம், பக்கத்திலேயிருந்த வாலிபன் அட்டகாசத்தையும், அவள் பூசியிருந்த ‘வாசனை’யின் நெடியையும் சகித்துக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தாள். இப்போதோ அவள் நெஞ்சம் படபடத்தது. உலகம் நிலைமாறிச் சுழல்வதுபோல் தெரிந்தது. புகை<!-- source join: scan 124 ends புகை; scan 125 begins வண்டி -->வண்டி ஆகாயத்தை நோக்கிப் போவதுபோலவும், தண்டவாளத்தை விட்டிறங்கி பாலத்தில் மோதி சுக்குநூறாகி விட்டதுபோலவும்—நினைவுகள் தாக்கின. காய்ச்சல் அடிப்பதுபோல் உடம்பு சூடேறிவிட்டது. கைகால்கள் கட்டுப்படுத்த முடியாமல் நடுங்கின.

தன்னை “அவமானப் படுகுழி” யெனத் தீர்மானித்த வனைத் தேடி, தான் நிரபராதியென வாதிடப் போகிறாள். அவனோ வழியிலே வந்து மட்டுமல்ல; பக்கத்து வண்டியிலேயே வந்துகொண்டிருக்கிறான். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, அழகப்பனையும் அவன் தாயாரையும் சந்தித்தால் என்ன? கேள்வி அவளைத் துளைத்தது.

“சேச்சே! இரயிலில் போய்ப் பேசுகிற பேச்சா இது? அதுவுமில்லாமல் அவர் கூட ஒரு தனவந்தரும் இருக்கிறார். கூடாது; கூடாது! பெங்களூரில் போய்ப் பார்த்துக்கொள்ளலாம்—இரயிலை விட்டு அவர்கள் இறங்கியதும் அவர்கள் பின்னாலேயே தொடர்ந்து செல்வோம்!” இப்படி ஒரு முடிவு செய்துகொண்டு தனக்குத்தானே திருப்தியடைந்து கொண்டாள். எப்படியும் தான் களங்கமில்லாதவள் என்று ஆதாரம் தந்து, அழகப்பனைத் தன் துணைவனாக ஏற்றுக்கொண்டுவிட முடியும் என்று அந்த பரிதாபத்திற்குரிய பாவை நம்பினாள். பாவம்; கள்ளங்கபடமற்ற இளம் நெஞ்சம்! உலகத்து மோசடிகளைத் தொட்டுப் பார்க்கவும் விரும்பாத சிட்டுக்குருவி! அவளுக்கு இப்படியொரு வேதனை—வெள்ளிக்கிழமை பொழுது விடிந்தாலும் விடிந்தது; அவளுக்கு விநாசகாலமாக முடிந்தது! காலை முதல் அவள் பட்ட கஷ்டங்கள், அப்பப்பா! இனிமேலாவது; சனிக்கிழமை வருவதற்குள்ளாவது அவளுக்கு ஏதாவது விமோசனம் பிறக்குமா?

பக்கத்துப் பெட்டியிலே கணவனாக வந்திருக்க வேண்டிய கட்டழகன்!

கடைசிப் பெட்டியிலே அவளைக் கசங்கிய மலராக ஆக்கத் துடிக்கும் காதகன்! அவனுக்கோ போலீஸ் பயம்!

இவளுக்கோ, அவன் வந்துவிடுவானே என்ற அச்சம்!

இரயில் போய்க்கொண்டே யிருந்தது; பல்வேறு நினைவுகொண்ட பிரயாணிகளைச் சுமந்துகொண்டு!

அடுத்து ஒரு ஸ்டேஷன், இரயில் நின்றது. சிந்தாமணிக்கு அருகேயிருந்தவள் எழுந்து கதவண்டை வந்தாள். நாலைந்து போலீஸ்காரர்கள் திடுதிடுவென அந்தப் பெட்டியில் வந்து ஏறினார்கள். பெண்கள் வண்டியில் அவர்கள் திடீரென ஏறவேண்டிய காரணம் என்ன? வண்டி சோதனை செய்யப்பட்டது. சிந்தாமணி உட்கார்ந்திருந்த பலகையின் கீழேயிருந்து ஒரு சதுர மரக்கட்டைப் பெட்டியைப் போலீசார் எடுத்தனர். பரிசோதனை நடந்தது.

அந்தப் பெட்டி நிறைய அபின் அடைக்கப்பட்டிருந்தது. “யாருடைய பெட்டி இது?” போலீசார் கேட்டனர். வழியில் உள்ள பல ஸ்டேஷன்களில் நிறையப் பெண்கள் இறங்கிவிட்டனர். இப்போது மிச்சமிருப்பவர்கள் சிந்தாமணி, அந்தப் பணக்காரி, மற்றும் சில பெண்கள்—அவ்வளவுதான்!

பணக்காரி ஜாடையாக சிந்தாமணியைக் காட்டினாள். போலீசார் சிந்தாமணியை மிரட்டிக் கேட்டனர். அவள், தனக்குத் தெரியாது என்றாள். ‘அபின்’ என்றால் என்ன? அதைக் கடத்திக்கொண்டு போய்க் கள்ளச் சந்தையில் விற்பதும், வெளிநாட்டுக்கு அனுப்புவதும் எப்படி என்கிற விஷயங்கள் எல்லாம் அந்தக் குற்றமற்ற கோதைக்கு எங்ஙனம் தெரியும்?

இரயிலில் இருந்தவர்களில், சிந்தாமணியின் தோற்றமே சந்தேகத்திற்குரிய தோற்றமாகப் போலீசாருக்குத் தெரிந்தது. அதோடு, அந்தப் ‘படாடோபக்காரி’யின் குறிப்பு வேறு சேர்ந்தது!

“உன்னைக் கைது செய்திருக்கிறோம்!” என்று சிந்தாமணியைப் பார்த்து போலீசார் சொன்னார்கள். சிந்தாமணிக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்