அத்தியாயம் 14 · 14 / 23
அத்தியாயம் 14
Chapter 14
மூல ஸ்கேன் 115 after centered 14 – 120 before centered 15
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
14
அவன் சிறிதும் எதிர்பார்க்காத கணை பாய்ந்துவிட்டது. அவன் தன்னைத்தானே சமாளித்துக்கொள்ளவே நிரம்ப நேரம் பிடித்தது. ஆனந்தியின் சொற்களிலே காணப்பட்ட அந்தத் தற்குறைவு அவள் முகத்திலே காணப்படவில்லை. அதையும் அவனால் உணர முடிந்தது. வாழ்க்கையிலே மிக வெறுப்புற்று, சாவதற்குப் பயந்து கொண்டிருந்த ஒருத்தி தன் அந்தரங்க வாழ்வின் அந்தகாரத்தை ஆத்திரமாக வெளியிடும்போது சூடான வார்த்தைகள் பொறி பறக்கக் கிளம்புவதிலே வியப்பில்லையென்றும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். அவள்மீது அலட்சியம் பிறப்பதற்குப் பதில் அனுதாபமே பிறந்தது. அவளுக்கு என்ன சூழ்நிலையோ—ஏன் இப்படிக் கெட்டுவிட நேர்ந்ததோ—என்றெல்லாம் கேள்விகளைப் போட்டு விடை காணமுடியாமல் தத்தளித்தான். இதயத்தில் எழும் இளம் பருவ நமைச்சலுக்கு, அவள் கண்டு பிடித்த மருந்தல்ல டைகர்—என்பதை மட்டும் இப்போது நயினா தெளிவாகப் புரிந்துகொண்டான். இந்த வார்த்தைகளுக்குப் பிறகும் தனது முயற்சியைத் தொடருவதா கூடாதா என்ற ஐயம் சிறிது நேரமே அவனிடம் நிலைத்திருந்தது. பின்னர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். தன் ஆசை நிறைவேறவேண்டும் என்ற நோக்கத்திலே சிறிது மாற்றம் ஏற்பட்டது. திருமணமென்றும் கூறலாம் அதை! அவள் வாழ்வு வளம்பெற வேண்டும்—அதற்குத் தான் துணையாக இருக்கவேண்டும் என்ற பொதுநோக்கையும் தன் தீர்மானத்தோடு இணைத்துக்கொண்டான்.
இப்போது அவள் குழம்பிப்போய் இருக்கிறாள்; மேலும் அவளைத் தொந்தரவு செய்யவேண்டாமென்ற எண்ணத்துடன் அவளை அப்படியே தூங்க விட்டுவிட்டு நயினா தாழ்வாரத்திலுள்ள தனது இருப்பிடத்திற்கு வந்து விட்டான். காலை மலரட்டும்; ஆனந்தியின் வாழ்விலும் ஒரு மறுமலர்ச்சி காண திட்டம் தயாரிப்போம் என்ற பெரு நினைப்போடு கட்டுக் குலைந்து வரும் இருளைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்துவிட்டான்.
டைகரால் அனுப்பிவைக்கப்பட்ட சிவநேசர், சிவகாமி, சிந்தாமணி மூவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். சிவநேசரை மிகவும் சிரமப்பட்டு வீட்டில் அடைத்து வைத்தார்கள். காலை முதல் ஏற்பட்ட தொல்லைகளை எண்ணிக் கண்கலங்கி நின்றாள் சிந்தாமணி. அவள் கலங்கிய உள்ளத்தை இன்னும் சிறிது உடைப்பதுபோல், பெங்களூர் மாப்பிள்ளை வீட்டார் சிந்தாமணியைப் பற்றித் தவறாகக் கருதியதையும், கோபித்துக்கொண்டு போன நிகழ்ச்சியையும், ஆனந்தி காரில் அடிபட்டு பாலையூர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதையும் சிவகாமி ஒன்றுவிடாமல் கூறி புலம்பியழத் தொடங்கினாள். தன் கற்புக்கு மாசு கற்பிக்கப்பட்ட பயங்கர சம்பவத்தை சிந்தாமணியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எப்படி இயலும்? வசீகரம் நிறைந்ததும், வனப்பு செறிந்ததுமான வாழ்க்கை வானத்தில் பறப்பதற்குச் சிறகுகளும் சித்திரப் புள் அவள்! அவளது இறக்கைகள் வெட்டி வீழ்த்தி இரும்புப் படுகுழியில் தள்ளுவதென்றால் அவளால் அந்த வேதனையை ஏற்றுக்கொள்ள எவ்வாறு சாத்தியமாகும்! தனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் வரவேண்டும்? விடை காணமுடியவில்லை அவளால்! பூர்வ ஜென்ம பூஜாபலன் என்பார்கள் புத்தியைத் தீட்ட மறுப்பவர்கள். சிந்தாமணி அந்த வேதாந்தக் கருத்துக்களால் சாந்தியடைய மார்க்கமில்லை. அவள் பதில் தேடி அலைந்தாள்; அம்மாவின் மார்பில் சாய்ந்து அழுதாள். “ஏனம்மா! எனக்கு இப்படி ஒரு சங்கடம் வந்தது? நான் யாருக்கு என்ன துரோகம்<!-- source join: scan 116 ends நான் யாருக்கு என்ன துரோகம்; scan 117 begins செய்தேனம்மா! --> செய்தேனம்மா! என் வாழ்நாள் எல்லாம் வீணாகி விட்டதே தாயே! சிந்தாமணியைக் கொலை செய்திருக்கலாமே—ஐயோ! இனிமேல் என் சவத்திற்குக்கூட யாரும் மரியாதை காட்டமாட்டார்களே” என்று கதறினாள். மகளின் கண்ணீர் ஊற்றைத் தடுக்க மாதாவினால் இயலவில்லை. அவளும் சேர்ந்து அழுதாள், மாப்பிள்ளை வீட்டாரிடம் தன்னை மாசு படிந்தவள் என்று காட்டி, அதனால் லாபம் பெற்றவர்கள் யாராயிருக்கமுடியும் என்று சிந்தித்தாள். டைகரேதான்! அவன்தான் இந்தச் சதி நடக்க வேண்டும் என்று முடிவான அபிப்பிராயங் கொண்டாள்.
“இந்தக் கொடுமை நிறைந்த பழிச் சொல்லிலே இருந்து எப்படி மீளுவது அம்மா?”
“எனக்குத் தெரியவில்லை என் கண்ணே!—என்ன சமாதானம் சொன்னாலும் மாப்பிள்ளை வீட்டார் உன்னை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!”
“ஏற்றுக்கொள்ள வேண்டாம்; கவலையில்லை. ஆனால் அவர்கள் என்னைப்பற்றிக் கொண்டிருக்கும் தவறான கருத்தையாவது மாற்றிக்கொள்ளச் செய்யவேண்டும் அம்மா!”
“சிந்தாமணி! என்னைச் சித்திரவதை செய்யாதே—நம்ப குடும்பத்திலே இப்படியெல்லாம் நாசகாலம் நுழையுமென்று நான் நினைக்கவேயில்லை!”
“என்னை நான் தூய்மையானவள் என்று நிலைநாட்டிக் கொள்ளவேண்டும். எனக்குக் கல்யாணம் வேண்டாம்—கல்லெடுப்பும் வேண்டாம்! என் தந்தையும், உலகமும் என்னை மாசற்றவள் என்று கூறினால் போதும்—அந்த நல்ல வார்த்தையைக் கேட்டுவிட்டு உடனே சாவதானாலும் கவலையில்லை. நான் குற்றமற்றவள் என்று நிரூபிக்கப்படும் வரையில் சாகமாட்டேன்! சாகமாட்டேன்!”
சிந்தாமணி வெறிகொண்டவள்போலக் கத்தினாள். அவளைச் சாந்தப்படுத்தி உட்காரவைக்க சிவகாமி உட்
எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை. அப்போதே பாலையூர் மருத்துவ மனைக்குப் போய், அந்த ஆனந்தியைப் பார்க்கவேண்டுமென்றும், அவளிடம் தன்னைக் கொடுமைப் படுத்தியதற்குக் காரணம் கேட்கவேண்டுமென்றும் ஆவேசமாகக் கூறிக் கிளம்பினாள். சிவகாமி என்ன சமாதானங் கூறியும் அவள் நிற்கவில்லை. ‘இப்போதே பாலையூர் போக வேண்டும்! அங்கு விவரமறிந்து உடனே பெங்களூர் போக வேண்டும்!’ இது அவளது ஆத்திரமான முடிவு. இந்த இருட்டில் எங்கும் போகக்கூடாது எனத்தடுத்தாள் தாய்.
“இருட்டு! என் வாழ்க்கையைவிடவா பயங்கரமானது?—வெளிச்சத்தில் இந்த ஊரார் முகத்தில் எப்படி விழிப்பேன்? என் அருமைத் தோழிகள் முகத்தை எப்படி ஏறெடுத்துப் பார்ப்பேன்? என்னை மூடியிருக்கும் களங்கப் பனியை விலக்கிய பிறகே வேதபுரத்துக்குத் திரும்புவேன். அம்மா! நீ அப்பாவை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்! நான் வருகிறேன்”
என உரைத்துக் கிளம்பினாள். அவளை வழிமறித்துக் கொண்டு சிவகாமி, “கண்ணே! களங்கம் உன்னை ஒன்றும் செய்யாது! எனக்கு நீ பத்தரைமாற்றுத் தங்கம். மாசற்ற மாணிக்கம். ஊரும் உலகமும் அந்த அவசரக்கார மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் என்ன சொன்னால் நமக்கென்ன? நீ எனக்கு மகள் என்பதைக்கூடவா மறந்துவிடுவார்கள்! கல்யாணந்தானே ஆகாமற் போகும்! போனால் போகட்டும்!” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
“கல்யாணத்தைப்பற்றிக் கவலைப்படவில்லையம்மா நான்! மணிமேகலையைப் படித்திருக்கிறேன். அவளுக்கிருந்த உள்ளத்தை என்னாலும் படைத்துக்கொள்ள முடியும். ஆனால், என்மீது வீசப்பட்ட அவச்சொல்லை—அவமானச் சொல்லை—அறவே அகற்றியாகவேண்டும். அதுவரையில் எனக்குத் தூக்கமில்லை. வேறு காரியங்களில் ஊக்கமில்லை. என்னைத் தடுக்காதீர்கள்! தணலாயிருக்கிறது நெஞ்சு! அதில் தண்ணீர் கொட்டப்படவேண்டும்.
வருகிறேன்.........வெற்றி பெற்றுத் திரும்புகிறேன். இல்லையேல் எனக்கு நடத்தவேண்டிய இறுதிக்காரியங்களை நீங்களும் அப்பாவும் இருந்து நடத்திவிடுங்கள்!”
ஒரு மகள் இப்படிப் பேசும்போது தாய்மையின் பாசம் பெருக்கெடுக்கும் பெற்ற வயிறு எப்படிப் பற்றி எரிந்திருக்கும்! விக்கி அழுவதுமில்லை, பேசுவதுமில்லை; சிலையானாள். சிந்தாமணியைத் தடுக்கவும் விருப்பமில்லை. சிந்தாமணி தாயின் காலில் விழுந்து வணங்கிவிட்டு, வீட்டைவிட்டு வெளியே ஓடினாள். வைகறையை நோக்கித் திரும்புவதற்குத் தனது முதலடியை எடுத்து வைத்துவிட்ட இரவில் அவள் ஓடிக் கொண்டேயிருந்தாள்.
ஆனந்தியைப் பாலையூரில் சந்திக்கவேண்டும். தன்னை அவமானச் சின்னமாக்க அவள் ஏன் இடமளித்தாள் என பதைக் கேட்கவேண்டும். சரியான பதில்கிடைக்காவிட்டால் பழிக்குப்பழி தீர்த்துக்கொள்ளவேண்டும். இப்படி வஞ்சங் கொண்டு புயல்காற்றுபோலத் தெருவில் ஓடினாள். வேதபுரத்திலிருந்து பாலையூருக்கு ஓடுவதென்றால் அவ்வளவு சுலபமான விஷயமா? இந்தப் பீதி அவளுக்கு எழவுமில்லை, எழ நியாயமுமில்லை.
ஓடி ஓடி இறுதியில் பாலையூருக்குள் நுழைந்து விட்டாள் சிந்தாமணி. அவ்வளவு விரைவில் ஓட்டப் பந்தயக்காரர்கள் கூட வேதபுரமிருந்து பாலையூருக்கு வந்திருக்க முடியாது. பந்தயக்காரர்கள் நோக்கம் பரிசு பெற வேண்டுமென்பது—இவள் நோக்கம் பழி துடைத்துக் கொள்ளவேண்டுமென்பதல்லவா? பாலையூர் தெருக்களிலே மருத்துவ மனையைத் தேடித் திரிந்தாள். அவள் எதிரில் போலீஸ் வண்டி வந்துகொண்டிருந்தது. அந்த வண்டியிலேதான் மருத்துவ மனையில் கைதுசெய்யப்பட்ட டைகர் இருந்தான். தன் வாழ்வுக்கு விஷம் தூவ வந்த நச்சரவு தன் எதிரேதான் போய்க்கொண்டிருக்கிறது என்பது சிந்தாமணிக்குத் தெரியாது. ஆனால் போலீஸ் வண்டியிலிருந்து டைகர், ஒரு பெண் வேகமாக வருவதையும், அவள் சிந்தாமணி ஜாடையாக இருப்பதையும் கவனித்து<!-- source join: scan 119 ends கவனித்து; scan 120 begins விட்டான். --> விட்டான். ஒரு விளக்குக் கம்பத்தின் பக்கம் அவள் போன போது டைகருக்குச் சந்தேகம் பலமாகிவிட்டது. தொண்ணூறு சதவிகிதம் அவள் சிந்தாமணியாய்த்தானிருக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டான். விஷயமென்னதும் கேள்விப்பட்டு, மனமொடிந்து எங்கேயோ கிளம்பி விட்டாள்போலும் என எண்ணினான். எப்படியாவது அவளை இப்போது பிடித்துவிட வேண்டும் என செய்வது என்று ஏங்கினான். பெண் விஷயமென்றால் பேராபத்தும் சிறு துரும்பாகத் தெரியுமென்பது பொய்யாகுமா? போலீஸ் வண்டி போய்க்கொண்டிருக்கும் போதே அதிலிருந்து குதித்துவிட்டான். போலீசார் துரத்தினர்; எங்கேயோ ஓடி மறைந்துவிட்டான்.
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்