அத்தியாயம் 13 · 13 / 23
அத்தியாயம் 13
Chapter 13
மூல ஸ்கேன் 107 after centered 13 – 115 before centered 14
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
13
நயினா முகம்மது வெளியே ஓடினான். மருத்துவ மனையின் விளக்குகள் அனைத்தும் போடப்பட்டுவிட்டன. பெரிய வாயிற்புறத்தை நோக்கி அனைவரும் ஓடினார்கள். அங்கே இரண்டு பேர் கட்டிக்கொண்டு தரையில் புரண்டார்கள். ஒருவன் ஆஸ்பத்திரி காவற்காரன். இன்னொருவன் டைகர். காவற்காரனின் தோள்பட்டையிலேயிருந்து இரத்தம் ‘குபுகுபு’வென்று பெருகிக் கொண்டிருந்தது. அந்த வேதனையிலும் அவன் டைகரை விடாமல் பிடித்துக் கொண்டு, “ஓடிவாங்க! ஓடிவாங்க!”—என்று கதறினான்.
டைகரின் கையிலேயுள்ள துப்பாக்கி, மறுபடியும் வாய்திறக்காதவாறு மிக எச்சரிக்கையாக அவன் கையை காவற்காரன் அமுக்கிக்கொண்டான். அருகே ஓடிவருகிறவர்கள் மீது சுட்டு அவர்களை விரட்டிவிட்டுத் தானும் தப்பித்துவிட<!-- source join: scan 107 ends தப்பித்துவிட; scan 108 begins எவ்வளவோ திமிறினான்... --> எவ்வளவோ திமிறினான் டைகர். காவற்காரன் விடவில்லை. அதற்குள் நயினா முகம்மது டைகரின் மீது பாய்ந்து. அவன் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டான். டைகரைச் சுற்றி மருத்துவமனை சிப்பந்திகள் வளைத்துக் கொண்டார்கள். காவற்காரனுக்கு இப்போதுதான் வலியும் வேதனையும் தோன்ற ஆரம்பித்தது. அவன் தோள்பட்டையிலிருந்து வழிந்த குருதி உடல் முழுவதையும் நனைத்தது. முதலுதவிக்காக அவனை அவசர அவசரமாகப் படுக்கைக்குக் கொண்டுபோனார்கள்.
காவல் பார்த்துக்கொண்டிருக்கும்போது சிறிது கண்ணயர்ந்து விட்டதாகவும், அப்போது யாரோ ஒருவன் சுவரேறிக் குதித்து வெளியே போக முயற்சிப்பதாகத் தெரிந்து அருகே ஓடியதாகவும், சிறிதும் எதிர்பாராவிதமாக அவன் துப்பாக்கியால் தன்னைச் சுட்டதாகவும், அதையும் பொருட்படுத்தாமல் ஓடிப்போய் அவனைப் பிடித்துக் கொண்டதாகவும் காவற்காரன் விளக்கமுரைத்தான். போலீசாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டு, சில நிமிடங்களில் எல்லாம் வந்து சேர்ந்தார்கள். இன்ஸ்பெக்டர் எவ்வளவுதான் கேட்டபோதிலும் பதில் சொல்லாமல் பிடிவாதமாக மெளனம் சாதித்தான் டைகர். அவன் கைதுசெய்யப்பட்டு போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டான். நயினா முகம்மது வாயிலாக விவரமறிந்த ஆனந்தி வியப்பில் ஆழ்ந்தாள். பயங்கரப் பூகம்பத்திலே சிக்கிக்கொண்டவளைப் போல நடுங்கினாள். இரு பெரும் ஆபத்துகளிலேயிருந்து அவள் தப்பித்துக்கொண்ட போதிலும் சொல்ல முடியாத ஒரு பீதி அவள் உள்ளத்தைக் கலக்கியது. நடந்து செல்லும்போது காலடியில் மிதிபட்டுச் சாகக்கூடிய எறும்பினுங் கேவலமாகத் தன்னைக் கருதிக்கொண்டு மிருகத்தனமான வேலையில் ஈடுபட்டிருக்கிறானே டைகர்—என்று நினைக்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது.
“டைகர் யார்?”
“அவன் ஏன் இங்கு வந்தான்?”
“இந்தப் பயங்கர நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன?”
கேள்விகள் நயினா முகம்மதின் நெஞ்சத்தைக் குடைந்தன. அவன் ஆனந்தியிடம் டைகரைப் பற்றிக்கேட்டான்.
“டைகர், சகோதரன் என்பது உண்மைதானே?”
“அப்படிச் சொன்னா அந்தச் சண்டாளன்?”
“ஆமாம்!”
“சகோதரனல்ல!—உங்களை ஏமாற்ற எண்ணியிருக்கிறான் படுபாவி! அவன் வேதபுரத்திலே உலவும் பெரிய மனுஷன்! “பெரிய மனுஷன்” என்பது இந்த இடத்திலே அவனது சின்னப் புத்தியைக் குறிக்கும்!”
“அப்படியானால் அவன் என்னிடம் கூறியதெல்லாம் பொய்தானா?”
“என்ன கூறினான்?”
“முதலில் சிந்தாமணியைக் களங்கமற்றவள் என்று சொன்னான். பிறகு, அவள் செய்த மாபெரும் தவறை மறைப்பதற்காகவே நீ இவ்வளவு கஷ்டப்பட்டாய் என்று கதைத்தான்!”
“அவன் சொன்ன இரண்டு கருத்துக்களில் நீங்கள் எதை நம்பினீர்கள்!”
“இரண்டாவது கருத்தைத்தான்!”
“அய்யோ! சிந்தாமணி சீரழிந்தவள் என்பதையா?”
“ஆமாம்!”
“தவறு! மிகத் தவறு! சிந்தாமணி செந்தாமரை மொட்டு! அவளைச் சேற்றிலே எறியாதீர்கள்!”
“ஆனந்தி! உன்னுடைய இந்தப் பெரிய உள்ளம்தான் என்னைக் கவர்ந்துவிட்டது! மயில் தோகை விரித்தாற் போன்ற உன் மனத்திலே என்னைப்பற்றிய நினைவுகள் நீலப் பிறைகளாக அமையாதாவென்று நான் ஏங்குவதில் தவறென்ன இருக்கமுடியும்!”
“எனக்கொன்றும் நீங்கள் நினைப்பது போல புனிதமான உள்ளம் இல்லை! சுருக்கமாகச் சொல்லப்போனால்<!-- source join: scan 109 ends சுருக்கமாகச் சொல்லப்போனால்; scan 110 begins நான் ஒரு புழுதிமேடு! --> நான் ஒரு புழுதிமேடு! இந்தப் புழுதிக்காற்று, “புண்யவதி” ஒருத்தியின் புனிதமான வாழ்க்கையை அசுத்தப்படுத்தக் காரணமாயிருந்துவிட்டதேயென்று நினைக்கும் போது நெஞ்சு படபடக்கிறது!”
“மறுபடியும் உன் தியாக உள்ளத்தைத்தான் திறந்து காட்டுகிறாய், சிந்தாமணிக்கு ஒளியேற்றும் முயற்சியைப் பாராட்டுகிறேன். ஆனால், உண்மை அந்த வெளிச்சத்திலே துல்யமாகத் தெரிய ஆரம்பித்துவிடும். எவ்வளவுதான் நீ சிரமப்பட்டாலும், சிந்தாமணி பூமியிலே சிந்திய பால்தான் என்பதை மாற்றிடமுடியாது!”
நயினாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆனந்தியின் கண்களிலேயிருந்து நீர் தாரை தாரையாக வழிய ஆரம்பித்தது.
“நான் சொல்வதை நம்புங்கள். அந்தப் பாதகன் டைகரின் பேச்சைக் கேட்டு, பிரசவ ஆஸ்பத்திரியில் இருந்த வேறொருத்தியின் குழந்தையை சிந்தாமணியின் அருகே படுக்கவைத்து அவளைக் குற்றம் சுமத்திய துரோகியாகிவிட்டேன் நான்! சிந்தாமணி, அவனுக்கு மாமன் மகள்! தூரத்து உறவு! பெங்களூர் மாப்பிள்ளைக்கு சிந்தாமணியைக் கொடுக்கப்போகிற சேதி கேள்விப்பட்டதும் தனக்கு உதவாது அழிந்துபோகட்டும் என்று நினைத்து அவள்மீது வேசிப் பட்டம் சூட்ட இப்படியொரு சூழ்ச்சியை ஏற்பாடு செய்தான்.
“நான் முதலில் தடுத்தேன். சிந்தாமணியின் நன்மைக்காகவும் அவள் பெற்றோர்களின் நன்மைக்காகவுமே அதைச் செய்வதாக என்னிடம் புளுகினான். ஏமாந்தேன். சிந்தாமணியை அவன் அபகரிக்கவே அப்படிச் சதி நடத்துகிறான் என்பது எனக்குப் புரியாது. நீங்களும் உங்கள் நண்பரும் மருத்துவ மனைக்கு வந்து, சிந்தாமணியை வாய்க்கு வந்தவாறு வசை பாடிவிட்டுப் போனதுமுதல் என் மனம் ஒரு நிலையில் இல்லை. மனச்சாட்சி, என்னைப் பார்த்துக் காரி உமிழ்ந்தது. “நீயும் ஒரு பெண்ணா?””
என்ற கேள்வி, நான் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலித்தது. ஓடிவந்தேன் உண்மையைச் சொல்ல!....அதற்குள் இப்படியெல்லாம் ஆகிவிட்டது...” ஆனந்தி, விம்மியழுது கொண்டே சொல்லி முடித்தாள். நயினாவுக்கு ஒரே புதிராக இருந்தது.
“அப்படியானால் சிந்தாமணி அப்பழுக்கற்றவளா?” என்று இருதயத்தை அழுத்திக்கொண்டே பெருமூச்சுடன் கேட்டான்.
“நிச்சயமாக! நீங்களே கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்களேன்—பத்து மாதக் கர்ப்பவதிக்குத் திருமணம் செய்ய எந்தப் பெற்றோர்தான் இவ்வளவு தைரியமாக முன்வருவார்கள்? நிறை கர்ப்பிணியைப் பெண்பார்க்க வருமாறு எந்த முட்டாள் தகப்பனாவது மாப்பிள்ளை வீட்டாருக்குக் கடிதம் எழுதுவான்?”
“நாங்களேதானே புறப்பட்டு வந்தோம்!”
“முன் அறிவிப்பு இல்லாமலா?”
“தந்தி கொடுத்துவிட்டுத்தான்!”
“உம்......! அது போதாதா......தந்தி வந்தவுடன் பெண்ணை வெளியூருக்கல்லவா அனுப்பியிருப்பார்கள்—உள்ளூரில் வைத்திருப்பார்களா; தவறு அவர்கள்பால் இருந்தால்?”
“அதனால்தான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள் என்று நாங்கள் சந்தேகப்பட்டோம்!”
“சந்தர்ப்பம்—சூழ்நிலை இரண்டும் சிந்தாமணியின் சோக சரித்திரத்தில் ‘குடிலர்’களாக உருவெடுத்துவிட்டன. உங்களிடம் பச்சையாகச் சொல்ல வேண்டியிருக்கிறதே என்பதற்காக வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். உண்மையிலேயே ஒரு பெண்ணுடைய எதிர்காலத்தில் உங்களுக்கும் உங்கள் தோழருக்கும் அக்கரை இருக்குமேயானால் என்ன செய்திருக்கவேண்டும்? சிவநேசரும், சிவகாமியும் அவ்வளவுதூரம் அலறியபோது சிறிதா<!-- source join: scan 111 ends சிறிதா; scan 112 begins வது -->வது சிந்தித்திருக்கவேண்டும். உங்கள் அம்மாவையாவது, அல்லது வேறொரு பெண்ணையாவது விட்டு சிந்தாமணியை சோதித்துப் பார்த்து, உண்மையில் அவள் பிள்ளை பெற்றவளா?—என்பதை ஆராய்ந்திருக்கவேண்டும்! அவளது உடலமைப்பு மூலம் உண்மை விளக்கப்பட்டிருக்கும். இவை எதுவுமின்றி, ஒரு பரிதாபத்திற்குரிய பாவையைப் பாலைவனமாக்குவது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்! இப்போது ஒன்றும் முழுகிவிடவில்லை. சிந்தாமணியின் வாழ்க்கை எழிலாக்குவது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் தோழரின் மனதை உடனடியாக மாற்றுங்கள். உடைந்துபோன வீணையாக சிந்தாமணியை ஆக்காமல் பாதுகாத்திடப் பாதை வகுத்திடுங்கள்!”,
நயினா முகம்மதுவுக்கு ஆனந்தியின் பேச்சு, நம்பிக்கையூட்டிற்று. அவசர முடிவினால் ஒரு குடும்பப் பெண்ணின் வாழ்வை விஷமாக்கிவிட்டதாகக் கருதினான்; கண்ணீர் வடித்தான்.
“சரி ஆனந்தி! சிந்தாமணி அழகப்பனின் மனைவிதான்! அதற்கு நான் பொறுப்பு! என் அவசர முடிவுக்கு நான் செய்துகொள்ளும் பிராயச்சித்தமே, அழகப்பன்—சிந்தாமணி திருமணந்தான்!...”
“அப்பாடா... என் மனத்திலேயிருந்த பாரம் குறைந்தது! சத்தியமாகச் சொல்லுங்கள்—அழகப்பர் சிந்தாமணி திருமணத்தை...”
“நடத்தியே தீருவேன்!......ஆனந்தி! அதை முடிந்த விஷயமாகவே கருது! இன்னும் முடியாமலிருக்கிற நம் விஷயத்தைப்பற்றி நாளைக்குப் பேசுவோம்—களைப்பாயிருக்கும் தூங்கு!”
“நம் விஷயமா?...இதற்கு முடிவே கிடையாது!”,
“என்ன சொல்லுகிறாய் ஆனந்தி?”
“உங்களை நான் புரிந்துகொண்டேன், உங்கள்மீது எனக்கு அனுதாபந்தான் பிறக்கிறது!”
“ஏன்?”
“நீங்கள் மிகவும் நல்லவர்!”
“பிறகு?”
“அழகானவர்—அன்பு வடிவானவர்—பண்பு நிறைந்தவர்.............இப்படியெல்லாம் வர்ணித்துக்கொண்டே இருக்கலாம் உங்களை!”
“உன் பிடிகை புரியவில்லை ஆனந்தி!”
“உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை!”
“ஏமாற்றமாட்டாயல்லவா? அதுபோதும் எனக்கு!”
“என்னை நீங்கள்.........!”
“என் தயக்கம்! உன்னை நான்......காதலிக்கிறேன். உலகத்திலே உன்னைத் தவிர வேறு எதுவும் எனக்கு உயர்வாகத் தெரியவில்லை!”
“குப்பைமேடு நான்! கூளம் என் வாழ்வு! என்னைக் காதலிக்காதீர்கள்! என்மீது, அன்பு செலுத்தாதீர்கள்! நான் தங்களுக்குத் தகுதியானவள் அல்ல! தங்கள் அழகிற்கும் குணத்திற்கும் எத்தனையோ பேர் தவங்கிடந்து ஓடி வருவார்கள்!”
“ஆனந்தி! நேரடியாக “முடியாது” என்று கூறுவதற்குப் பதிலாக இப்படிச் சுற்றி வளைத்துப் பேசுகிறாயா? என்ன உயர்த்தியும் உன்னைத் தாழ்த்திக்கொண்டும் பேசுவது...அறிவும் ஆற்றலுமிக்க சொற்பொழிவாளன் ஒருவனின் அவையடக்கம்போலவே எனக்குத் தோன்றுகிறது!”
“இல்லை...எனக்கு அப்படியெல்லாம் பேசுகிற திறமை கிடையாது! என் நிலைமையைக் குறிப்பால் உணர்த்தினேன்; அவ்வளவுதான். தாங்கள் கௌரவமான குடும்பத்து வாலிபர்...நானோ.........!”
“என்ன சொல்லுகிறாய் ஆனந்தி!”
ஆனந்தி பேசவில்லை; அழுதாள். நயினா முகம்மது தன்னையறியாமல் அவளது கண்களைத் துடைத்துக் கொண்டே, “அழாதே!” என்று ஆறுதல் கூறினான்.
ஆறுதல் கூறுவதற்கு ஒருவர் அருகே இருக்கும்போது<!-- source join: scan 113 ends அருகே இருக்கும்போது; scan 114 begins பாசமும் பற்றும்... --> பாசமும் பற்றும் அதிகமாகப் பெருக்கெடுத்து சோகம் உச்சக் கட்டத்தை அடையுமல்லவா? ஆனந்தியும் அப்படித்தான் ஆவள்! விம்மி விம்மிக் கதறினாள். நான் விஷம்! தீண்டத்தகாதவள்!” என்று முனகினாள்!
“இருந்தால் என்ன? நான் முஸ்லீம்! சாதி வித்தியாசம் எனக்குக் கிடையாது!” என்றான் நயினா.
“சாதியோ மதமோ என்னைத் தீண்டத்தகாதவளாக ஆக்கவில்லை. நானே என்னை இந்த உலகத்தின் கழிவுப் பொருளாக ஆக்கிக்கொண்டேன். தயவுசெய்து என் கண்ணீரை உங்கள் மிருதுவான விரல்களால் தொடாதீர்கள்
கண்ணீரல்ல அது! இருதயத்துப் புண்ணிலே வடியும் சீழ்!
களங்கமுற்றவள் சிந்தாமணியல்ல; நான் சீரழிந்த மணி; என்னோடு உத்தமராகிய நீங்கள் பேசுவதே பாவம்!”
ஆனந்தியின் துக்கம் கட்டுமீறிக் கிளம்பியது. அவளது கண்டிப்புக்கும் அடங்காமல் தொண்டை அடைத்துக் கொண்டது.
நயினா முகம்மதுவின் முகத்திலே ஆவலின் ரேகைகள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்துகொண்டேயிருந்தன.
“நீங்கள் தூய்மையானவர்! என்னைத் தொடாதீர்கள்!” என்று அவன் கையை எடுத்துவிட்டாள். அவளது மென்மை மிகுந்த கரம் அவன் கையிலே எழுப்பிய ஸ்பரிச உணர்ச்சியை “அமராழ்” என்கிறாளே; அது கூட எழுப்பாதுதான்! கையிலே மீட்டப்பட்ட நரம்பு, நெஞ்சிலே நாதம் எழுப்பியது! அசைவற்றுவிட்டான் நயினா. அவன் இதழ்கள் ஈனசுரத்தில்,
“ஆனந்தி!” என்று அசைந்தன.
“ஆனந்தி யார் தெரியுமா? அவள் கற்பிழந்தவள்! டைகரின் வைப்பாட்டி!”
ஆவேசம் வந்தவள்போல இதைச் சொல்லிவிட்டு அவள் அப்படியே கண்களை மூடிச் சாய்ந்தாள்.
பழுக்கக் காய்ச்சிய தகட்டின்மீது சம்மட்டியடி விழுவது போல ஆனந்தியின் சொற்கள் அவன் இருதயத்தைத் தாக்கின.
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்