பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 12 · 12 / 23

அத்தியாயம் 12

Chapter 12

மூல ஸ்கேன் 99 after centered 12 – 107 before centered 13

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

12

யாரோ வரும் காலடி ஓசைகேட்கவே நயினா முகம்மது அவசர அவசரமாக ஆனந்தியின் படுக்கையைவிட்டு அகன்று, பழையபடி தாழ்வாரப் பக்கம் வந்துவிட்டான். அவன் உடலெங்கும் வியர்த்துக்கொட்டி உடைகள் எல்லாம் நனைந்துவிட்டன. ஒரு பெண்ணைப்பற்றி, தானே ஒரு முடிவு செய்துகொண்டு, அந்த முடிவுக்கு அவள் ஒத்து வருவாளா என்று எதிர்பார்ப்பதும், அதற்கான ஆரம்ப வேலைகளில் ஈடுபடுவதும்—ஆண்மைக்கு ஆடவர்களைக்கூட எவ்வளவு கோழைகளாக்கிவிடுகிறது என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். தாழ்வாரத்திலிருந்த படியே, ஆனந்தியிருக்கும் அறைப்பக்கம் வருவது யார் என்று கவனித்தான். மற்றொரு வாயிலின் கதவைத் திறந்துகொண்டு நர்ஸ் ஒருத்தி, கையிலே மருந்து சீசாவுடன் உள்ளே நுழைந்தாள். வந்தவள், ஆனந்தி நன்றாகத் தூங்குவதைப் பார்த்து, ஈனசுரத்தில் இரண்டு முறை கூப்பிட்டுப் பார்த்தாள். ஆனந்தி விழிக்கவில்லை.

உடனே நயினா கதவோரத்தில் நின்றபடி, “என்னம்மா வேண்டும்?” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை, மருந்து கொண்டுவந்தேன். நல்ல தூக்கம். தொந்தரவு பண்ணக்கூடாது. தயவுசெய்து விழித்தவுடன் என்னைக் கூப்பிடுங்கள். நான் வந்து மருந்தைத் தருகிறேன். இதோ...இந்த மேசையில் இருக்கும் மருந்து!” என்று கூறிக்கொண்டே நர்ஸ், மருந்து சீசாவை மேசைமீது வைத்துவிட்டு அதைவிட்டு அகன்றாள். நயினா முகம்மது தாழ்வாரத்தில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் மனக்கண் முன்னே எழில் மயமான இன்ப எதிர்காலம் காட்சியாயிற்று. கண்களோ அப்படியே இலேசாக மூடிக்கொண்டு அந்தக் கற்பனைக் காட்சியை அனுபவிக்கத் தொடங்கின.

அவன் தோள்பட்டையிலே இரண்டு இறக்கைகள் முளைக்கின்றன. வானத்திலே பறக்க ஆரம்பிக்கிறான். நட்சத்திரக் கூட்டம்—அந்த விண்மலர்ப் பூங்காவுக்கிடையே ஒரு தும்பிபோல நீந்திச் செல்கிறான். நட்சத்திரப் பூக்கள் தங்களது செழிப்பான தேனைத் தாழ்த்தி அவனை அழைக்கின்றன. அவனோ எதையோ ஒன்றை நாடிப் பறக்கிறான். பளபளப்பான பட்டுப்பூச்சியொன்று வனப்புமிக்க சிறகு பறப்பி அந்த நந்தவனத்தில் நடன மாடுகிறது. அதன் முகத்திலே ஆனந்தியின் முகம் பதிக்கப்பட்டிருக்கிறது. அவன் அவளோடு சென்று உல்லாச நடனம் புரிகிறான். இருவரும் நட்சத்திர சோலையைப் பிரிந்து இன்னும் மேலே பறக்கிறார்கள். வானத்தின் நீலக் கூரையைப் பிய்த்துக்கொண்டு அதற்கு மேலே பறந்துவிடுகிறார்கள். கிழிபட்ட வானக் கூரையிலிருந்து நட்சத்திரங்கள் பொல பொலவென்று உதிர்கின்றன. புயல் காற்றில் “லஸ்தர் விளக்கு” ஆடுவதுபோல சந்திரன் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கிறான். வான்முகட்டையும் தாண்டிப் பறக்கும் இன்பலோகக் காதலர்களின் இறக்கைகள் திடீரென்று கழன்றுவிடுகின்றன. பறக்கும் சக்தியற்ற அவர்கள் தடார் என்று பூமியின்மீது வந்து விழுகிறார்கள்.

அதிர்ச்சியோடு கண் விழித்துப் பார்த்தால்—எல்லாம் கனவு என்று திரைப்படங்களில் காட்டுகிறார்களே; அது போன்ற கனவல்ல நயினா கண்டது!

ஆனந்தியும் தானும் வாழ்வில் ஒன்றுபட்டுவிட்டால் குடும்பம் எப்படி நடத்துவது?—எந்த ஊரில் நடத்துவது?—குடும்ப வாழ்வு எவ்வளவு பொருத்தமுடையதாக இருக்கும்?—ஒருவேளை, டாக்டர் வேலைகூடத் தனக்குத் தேவையில்லையென்று ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாகவே இருப்பதற்கு ஆனந்தி திட்டம் போட்டுவிடுவாளா?—இது போன்ற கேள்விகளுக்குப் பதிலைத் தேடிக்கொண்டுதான் முகக் கண்களை மூடிக்கொண்டு, அகக் கண்களை அகலத் திறந்து வைத்துக்கொண்டிருந்தான் நயினா முகம்மது!

அவன் தாழ்வாரத்தில் காதல் தவமிருக்கும் அந்தச் சமயத்தில்தான் பலகணிப் பக்கம் நின்றுகொண்டிருந்த கரிய உருவத்தின் கரம், பலகணித் திரையை விலக்கிக் கொண்டு ஆனந்தி படுத்திருக்கும் அறையின் உள்ளே நீட்டப்பட்டது. ஆனந்திக்காக நர்ஸ் மருந்து வைத்துவிட்டுப்போன மேசையின் பக்கம் அந்தக் கரம் எதையோ தேடிற்று. இருட்டில் எட்டாத தூரத்தில் இருந்த மருந்து சீசாமீது பட்டது. மருந்து சீசாவைத் தனக்கு அருகாமையிலே நகர்த்திக்கொண்டது. மேசையின் மற்றொரு பகுதிக்கு மருந்து சீசா கொண்டுவரப்பட்டதும்; மேசையிலே சீசாவை வைத்துவிட்டு, கரம் பலகணிப் பக்கம் திரும்பச் சென்றது. மீண்டும் அந்தக் கரம் ஒரு சிறிய சிமிழுடன் சீசாவின் பக்கம் நீட்டப்பட்டது. அந்தச் சிமிழில் விஷம் என்று சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. மருந்து சீசாவினுள்ளே சிமிழ் சாய்க்கப்பட்டு, அதிலிருந்து ஒரு துளி மருந்தில் கலக்கப்பட்டது. மருந்து இப்போது விஷமாகிவிட்டது. கரிய உருவம் சற்று நேரம் அங்கு நின்றுவிட்டு, பிறகு ஓசைப்படாமல் அதைவிட்டு அகன்றது. விஷம் கொட்டப்பட்டதும், சீசாவுக்குள்ளே மருந்து கொப்பளித்துக்கிளம்பி, மீண்டும் அடங்கிவிட்டது. சிறிது நாழிகைக்குப் பிறகு ஆனந்தி<!-- source join: scan 101 ends ஆனந்தி; scan 102 begins புரண்டு படுத்தாள். --> புரண்டு படுத்தாள். புரளும்போது அவள் முனகிய ஒலி, தாழ்வாரத்திலிருந்த நயினாவைத் துடித்தெழச் செய்தது. உள்ளே வேகமாக ஓடிவந்தான். “என்ன வேண்டும்?” என்று பதைப்பட்டுப்போய் கேட்டான். ஆனந்தி நயினாவைச் சிறிதுநேரம் கண்கொட்டாமல் பார்த்தாள். அந்தப் பார்வையிலே வியப்பும், விசுவாச உணர்ச்சியும், குளிர்ச்சியும் நிறைந்திருந்ததை அவன் தெளிவாகப் புரிந்துகொண்டான். அவன் உள்ளத்துப் பூரிப்புக்கு அணைபோட முடியாமல் தவித்தான்.

“நர்ஸ் மருந்து கொண்டுவந்தாள். தூங்கியதால் எழுப்பாமல் போய்விட்டாள். எழுந்ததும் சாப்பிடச் சொன்னாள், தரட்டுமா?” என்று கேட்டான். அப்படிக் கேட்கும்போது அவன் தொண்டை அவனுக்குக் கட்டுப்படாமல் அடைத்துக்கொள்வானேன்? நாக்கிலே நடுக்கம் காணப்படுவானேன்? விசித்திரமான உணர்ச்சி! மிக விசித்திரமான உணர்ச்சி! அவனை ஆட்டிப் படைத்தது அந்த உணர்ச்சி!

ஆனந்தி எழுந்ததும் தன்னைக் கூப்பிடச் சொல்லியிருந்தாள் நர்ஸ்! அவனே, அவளைக் கூப்பிட்டால் ஆனந்திக்குத் தன் கையால் மருந்து கொடுக்கும் வாய்ப்பை இழந்துவிட நேரிடுமே எனப் பயந்தான். ஆனந்தியும் மருந்தைச் சாப்பிடுவதற்குச் சம்மதித்துத் தலையை ஆட்டினாள். நயினாவின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது. அவனுக்கு என்ன தெரியும்; மருந்திலே விஷம் கலக்கப்பட்டிருக்கும் சேதி!

“இந்தா; இந்த விஷத்தைச் சாப்பிடு” என்று சொல்வது போல அந்த மருந்தைச் சாப்பிடச் சொல்லப் போகிறான். அதற்காகத்தான் பாவம்; அவன் அவ்வளவு நேரமாகக் காத்துக்கிடந்திருக்கிறான்.

மேசையிலே இருந்து மருந்து சீசா, நயினாவின் இருதயத்திலே பெரியதோர் குறுவளியை எழுப்பி, அவன் ஆசை மாளிகையைத் தூள் தூளாக உடைத்தெறிந்து<!-- source join: scan 102 ends உடைத்தெறிந்து; scan 103 continues --> அவனைத் தீயினிட்டப் புழுவாகத் துடிக்கச்செய்யத் தயாராய் இருப்பதுபோல தோற்றமளித்தது.

நயினா, மருந்து சீசாவைக் கையிலே எடுத்துக்கொண்டு ஆனந்தியின் அருகே வந்தான். அருந்தியதும் அரை நொடியில் உயிரைப் போக்கவல்ல நஞ்சு அதிலே நன்றாகக் கரைந்திருந்தது.

“உம்! தரட்டுமா?” என்று அன்பொழுகக் கேட்டான் அவன்.

அவளும், “அய்யோ! என்னால் உங்களுக்கு வீண் சிரமம்” என்ற வார்த்தைகளை விழி மூலம் பேசியவாறு, மீண்டும் ஒருமுறை தலையசைத்தாள்.

அவளது மின்னும் செவ்விதழ்களின் பக்கம் சீசாவைக் கொண்டுபோனான் நயினா.

ஆனால், அவள் படுத்திருந்த நிலை, மருந்தைக் குடிப்பதற்கு இல்லை. அதனால், அவன் மெதுவாக ஒரு கையால் அவள் தலையைச் சிறிது மேலே தூக்கியவாறு மருந்தை வாயருகே கொண்டுபோனான்.

அவளும், மருந்தைப் பருக சீசாவை உதட்டில் பதித்துக்கொண்டாள். சீசாவைச் சாய்த்து, மருந்தை வாயில் ஊற்றிட முனைந்தான் நயினா. திடுக்கென சீசாவை அப்புறத் தள்ளிவிட்டு, தலையை அப்படியும் இப்படியும் திருப்பி “விஷம்! விஷம்!!” என்று கத்தினாள் ஆனந்தி.

என்ன? “விஷமா?” என்றபடி சீசாவை முகர்ந்து பார்த்தான் நயினா. அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அவள் டாக்டர்! அதனால் அதைக் கண்டுபிடித்துவிட்டாள். நயினாவின் கைகள் வீணை நரம்புகள் போல் அதிர்ந்தன.

“விஷம்! விஷம்!!”

நயினா வேறெதுவும் பேசமுடியாமல் திணறினான்.

“ஏன் நடுக்கம்?......விஷயம் புரிந்துவிட்டதே என்று? என்னைக் கொல்வதால் யாருக்கு என்ன பலன்? ஏன் இந்த வேலை செய்ய வேண்டும்?...இப்போதே கூப்பிடச் சொல்லு<!-- source join: scan 103 ends சொல்லு; scan 104 begins கிறேன் போலீசை! -->கிறேன் போலீசை! எங்கும் ஓடாதே!” என்றவாறு ஆனந்தி, நயினாவின் கையை இறுகப்பிடித்துக்கொண்டாள். அவனுக்கு விபத்தினில் ஏற்பட்ட பலஹீனம்கூட எங்கேயோ மறைந்துவிட்டது. ஆனந்தி தன் கையைப் பிடிக்கவேண்டுமென்று நயினா ஆவல் கொண்டிருந்தது என்னவோ உண்மை; ஆனால் இது போன்ற ஒரு பயங்கரச் சூழலில் அவள் கை அவன்மீது படுவது, அக்கினிக்கட்டை படுவதுபோலவேயிருந்தது.

நயினா, நின்றபடியே அவள் கால்பக்கம் தலையைச் சாய்த்துக்கொண்டு, தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். என்ன பதில் கூறுவது என்றே அவனுக்குப் புலப்படவில்லை. எதைச் சொல்லி அவளை நம்பவைக்கமுடியும்?

“என்னை நம்பவேண்டும்! நான்......நான்...நான்...” என்று அழத்தொடங்கினான்.

“என்னை அப்படி நினைக்கிறாயா ஆனந்தி? விஷமிட்டுக் கொல்லுகிற அளவுக்கு உனக்கும் எனக்கும் என்ன பகை? யோசனை செய்து பார் ஆனந்தி!” என்று கதறினான்.

“நமக்குள்ளே பகையுமில்லை; உறவுமில்லை!...யாரோ அனுப்பியிருக்கிறார்கள் உம்மை, எனக்கு எமனாக!” என்று பதட்டத்தோடு அழுத்தந்திருத்தமாகக் கூறினாள் ஆனந்தி.

“அய்யோ! அப்படியெல்லாம் சொல்லாதே! உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டது முதல்—உன் உதாரகுணத்தை அறிந்தது முதல் நல்ல உள்ளத்திற்குத் தலைவணங்கும் என் மனத்திலே நீ அழியாத ஓவியமாகிவிட்டாய்! ஒருநாள்! சில மணி நேரங்கள்! அதற்குள் நான் உன் அழகுக்கும், அன்புக்கும் அடிமையாகிவிட்டதாகவே நினைத்துக்கொண்டேன், வாய்ச் சொற்கள் இல்லை. விழிகளும் மொழிகள் பரிமாறவில்லை—மௌன நிலையிலிருந்த உன் மோகன ரூபம் என்னை மயக்கிப்போட்டுவிட்டது! இந்த ஒருதலைக் காதல் பலிக்குமோ, பலிக்காதோ என்று துடித்துக்கிடந்தேன். ஒருமுறை உனக்கு பழரசம், அல்லது பால்—‘ஹார்லிக்ஸ்’, அல்லது மருந்து—ஏதாவது ஒன்றைத் தந்து உபசரிக்கிற<!-- source join: scan 104 ends உபசரிக்கிற; scan 105 begins அந்த மகிழ்ச்சிகரமான... --> அந்த மகிழ்ச்சிகரமான வேளை வராதா என்று எதிர்பார்த்துக்கிடந்தேன். அந்த நல்ல வேளை வந்தது—அது இப்படி நச்சு வேளையாக அமையுமென்று நான் கனவுகூடக் காணவில்லை ஆனந்தி!” என்று மனம் திறந்து பேசினான் நயினா.

“இவன் யார்? எங்கிருந்து வந்தவன்? இவன் ஏன் இவ்வளவு அக்கறையாக கால முதல் மருத்துவ மனையில் தங்கித் தன்னைக் கவனிக்கவேண்டும்? எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்; சதியை நிறைவேற்றலாம் என்றுதான் காத்திருந்தான் போலும்! இப்போது அழுகிறான். என்னைக் காதலித்ததாகவேறு கதைக்கிறான்! இவன் எப்படி நம்புவது? ஒரே குழப்பமாயிருக்கிறதே! முன்கூட்டியே சதித் திட்டம் வகுத்திருந்தால்கூட—காலையில் இப்படி ஒருவிபத்து ஏற்படும்; ஆஸ்பத்திரிக்கு வருவேன்—அங்கே விஷங்கலக்கலாம் என்று இவன் எப்படி யூகித்து முடிவு செய்திருக்க முடியும்? ஒருவேளை இப்படி ஒரு நிலைமை ஏற்பட்ட பிறகு யாராவது இந்த நிலைமையைப் பயன்படுத்தி, கார் விபத்தின்மீது சாக்குப்போட்டு என்னைத் தீர்த்துவிடக் கருதியிருக்கலாமோ? அப்படியானால் ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் யாராவது இதற்கு உடந்தையாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு பலப்பல எண்ணி ஆனந்தி குழப்பமடைந்தாள்.

நயினாவோ ஆனந்தியின் மனத்திலே தன்னைப்பற்றியுள்ள தவறான எண்ணத்தை மாற்றிவிடவேண்டுமென்று தத்தளித்தான்.

“நான் ஒரு குற்றமும் அறியாதவன் ஆனந்தி! பெண்பார்க்க என் நண்பனுடன் வந்தேன். வந்த இடத்தில் என் நண்பன் மனமுடைந்துபோனான். நீ குறுக்கிட்டாய்! விபத்து நம் இருவரையும் சந்திக்கவைத்தது. எங்கேயோ ஒரு மூலையில் பதுங்கிக்கிடந்த நினைவுகளைத் தட்டி எழுப்பி என்னை இங்கேயே தங்கிவிடுமாறு கட்டிப்போட்டது உன்<!-- source join: scan 105 ends உன்; scan 106 begins சௌந்தர்யம்! --> சௌந்தர்யம்! வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் உன் அபிப்பிராயத்தின் விருப்பைக்கூடத் தெரிந்துகொள்ளாமலும் நான் இப்படிப் பேசுவதற்காக மன்னித்துவிடு! என் காதல் தெய்வத்துக்கு நான் விஷம் கொடுத்துக் கொல்ல நினைப்பேனா?”

இதைச் சொல்லியவாறு முகத்திலே அறைந்து கொண்டு அலறினான் நயினா.

ஆனந்திக்குக் கலக்கமும் குழப்பமும் போட்டிபோட்டு எழுந்தது. சற்றுநேரம் அசைவற்று இருந்தாள். அவள் விழிகள் எதிரேயுள்ள சுவரின்மீது பதிந்திருந்தன. நயினாவும் அவளையே பார்த்தவாறு நின்றான். அவன் கண்களிலே நீர் பெருக்கெடுத்தவாறு இருந்தது. “ஆனந்தி” என்று கூப்பிட்டான். அதில் பாசம், பரிவு, பயம், பக்தி அனைத்தும் அடங்கியிருந்தது.

ஆனந்தி திருப்பினாள். மருந்துச் சீசா இருந்த மேசையை உற்றுப்பார்த்தாள். ஏதோ ஒரு பொருள்! ஆம்; அந்தச் சிறிய விஷச் சிமிழ்! அதுதான் இருந்தது!

“அதை எடுங்கள்!” என்றாள் ஆனந்தி. அவள் குரலிலே நயம் இருந்தது இப்போது! நயினா ஓடிப்போய் அந்தச் சிமிழை எடுத்து ஆனந்தியிடம் கொடுத்தான். அதை அவள் நன்றாகக் கவனித்தாள். அது அவளது ஆஸ்பத்திரியில் இருந்த சிமிழ்.

அந்த அடையாளத்தைக் கண்டுபிடித்துவிட்டாள்!

“அது எப்படி இங்கு வந்திருக்கும்?”—இந்தக் கேள்விக்கு அவளால் உடனே பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

“டைகர் இங்கு வந்தாரா?” என்று நயினாவிடம் கேட்டாள்.

“பகலில் வந்ததுதான்—இரவில் வரவில்லை!” என்றான் அவன்.

“நான் உங்கள்மீது தவறாக சந்தேகப்பட்டுவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்” என்றாள். அவள் கண்களில்<!-- source join: scan 106 ends அவள் கண்களில்; scan 107 begins நீர் கலங்கிற்று. --> நீர் கலங்கிற்று. நயினா மகிழ்ச்சியை வெளியிட இயலாது, அழுதவாறு அவள் கைகளைத் தன் முகத்தில் ஒத்திக் கொண்டான். இதை அவன், அவனையறியாமலே செய்தான். கையை விடுவித்துக்கொண்ட ஆனந்தி விஷச் சிமிழை மீண்டும் ஒருமுறை பார்த்துக்கொண்டாள். மருந்தை அப்படியே கீழே கொட்டிவிடுமாறு நயினாவிடம் கூறினாள். நயினா மருந்தைக் கீழே கொட்டினான். ஆனந்தியின் உயிரைக் குடிக்க இருந்த விஷம் தரையில் ஓடிற்று.

நயினா, ஆனந்தியிடம் திரும்பி, “ஆனந்தி! இப்போது நம்பிக்கை வந்துவிட்டதா, விஷம் கலந்தது நானல்லவென்று!”

“நீங்கள் விஷம் கலக்கவில்லை! அமுதமல்லவா கலந்து விட்டார்கள்!” என்றாள் அவள், புன்னகையோடு! அப்போது திடீரென்று “டொமீல்! டொமீல்!!” என்று துப்பாக்கி வேட்டுச் சத்தம் கிளம்பிற்று. மருத்துவ மனை முழுதும் ‘குய்யோ!’ என்று பேரொலி எழுந்தது!

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்