அத்தியாயம் 11 · 11 / 23
அத்தியாயம் 11
Chapter 11
மூல ஸ்கேன் 92 after centered 11 – 99 before centered 12
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
11
மற்றுமொரு வாய்ப்பு கிடைத்தது அந்த மாம்பழ மேனியாளைத் தொடுவதற்கு என மகிழ்ந்த டைகர், கீழே விழுந்து கிடப்பவளை அவசர அவசரமாகத் தூக்குவதற்கு முனைந்தான். சிந்தாமணி, அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளத் திமிறியவாறே “அப்பா” எனக் கூவியவாறு சிவநேசருக்கு முன்னே ஓடுவதற்கு முயன்றாள். “அவளிடம் போகாதே—அவர் வெறிபிடித்துப்<!-- source join: scan 92 ends வெறிபிடித்துப்; scan 93 begins போயிருக்கிறார் --> போயிருக்கிறார்” என்று சப்தமிட்டபடி டைகர், அவளை இழுக்க அணைத்துக்கொண்டானே தவிர, பிடியைச் சிறிதும் தளர்த்தவில்லை.
சிவநேசர், பாய்ந்துவரும் வேங்கைபோல அவர்களிடம் ஓடிவந்தார். “குலத்தைக் கெடுத்தவளே! கோணல் வழி போனவளே! ஆகாகா......என் அபூர்வ சிந்தாமணி........அபிதான சிந்தாமணி........ஐயோ! ஐயோ!! என்னையும் என் மனைவியையும் கொலை செய்த கொலைகாரி! குடிகேடி! சிந்தாமணி—சீரழிந்தமணி! பேயாகப் பிறக்க வேண்டியவளே! பெண்ணாகப் பிறந்த பூதமே!” என்று வசைமாரி பொழிந்தார் சிவநேசர். சிந்தாமணி, “அப்பா” எனக் கதறினாளே தவிர வேறெதுவும் பேசமுடியவில்லை!
“சும்மா இரு சிந்தாமணி! உன் அப்பாவுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது; அவரிடம் பேசக்கூடாதே!” என்று அவள் வாயைப் பொத்தினான் டைகர். சிந்தாமணிக்கு ஆத்திரம் எல்லைமீறிவிட்டது, அதனால் ஒரு புதிய தெம்பு உதயமாயிற்று அவளுக்கு! ஓங்கி ஒரு அடி கொடுத்தாள் அவன் கன்னத்தில்; அவள் அணிந்திருந்த வளையல்கள் நொறுங்கி அவன் கன்னத்திலே இரத்தக் கோடுகள் விழுந்தன. “அடி! அடி!! நன்றாக அடி! அடி! அடி கள்ளி! ஆத்துக்காரரை ஏனடி அடிக்கிறாய்?” என்று கேட்ட சிவநேசர்,
“என்ன குற்றம் செய்தானவன்? கன்னத்தில் ஏன் அடிக்கின்றாய்? பெண்ணே நீயும் சொன்னால்போச்சு!...... பின்னே எந்தன் கோபம் பொங்கும்!”
என்று பாடவும் ஆரம்பித்தார். சிந்தாமணிக்கு டைகர் கூறியது உண்மைதான் என்பது தெளிவாகிவிட்டது!
“காதல்—காதல்—காதல்—காதல்! கள்ளக் காதல்! உள்ளக் காதல்; உண்மைக் காதல்! ஒருதலைக் காதல்! உருப்படாக் காதல்!”
என்று பிதற்றியபடி நடனமாடத் தொடங்கினார் நடுவீதியில். கலகலவென பயங்கரத் தொனியில் நகைத்தார். திடீரென அழுதார். ஆத்திரமாகக் கத்தினார்.
“மண்ணுயிர் போக—மண்ணுயிர் போக! மாப்பிள்ளை பெண்ணும் தோப்பிலே தென்னங் கண்ணும்...... மண்ணுயிர் போக!”
என்றபடி தெரு மணலில் வாரி டைகரின் முகத்திலும் சிந்தாமணியின் முகத்திலும் இறைத்தார். சிந்தாமணியை விட்டுவிட்டு டைகர், தன் கண்களைத் துடைத்துக்கொண்டபடியால் அவள் ஓடிவந்து சிவநேசரின் காலை பிடித்துக்கொண்டு, “அப்பா! அப்பா! இதென்னப்பா கோலம்?” எனப் புலம்பி அழுதாள்.
“கோலமா? இதுதான் அலங்கோலம்! அவசரக் கோலம்! அள்ளித் தெளித்த அவசரக் கோலம்! பொங்கலுக்குப் போடுகின்ற புதுக்கோலம்! தண்டகாரண்யம் வந்திருக்கும் இந்தத் தசரதனின் தவக்கோலம்! சைவத் திருக்கோலம்! அடியே! காரைக்கால் அம்மையே! நீ உடனே உடலைப் பேயுருவாக்கி, தலைகீழாக நடந்து கைலாசத்திற்கு ஓடிவா! நான்தான் சிவபெருமான்—நெற்றிக்கண்ணன்! இயற்பகை நாயனரின் மனைவியைப் பரிசோதிக்கப் புறப்பட்டிருக்கிறேன். சிறுத்தொண்டரின் பிள்ளையைக் கறி சமைத்துச் சாப்பிடப் புறப்பட்டிருக்கிறேன். தாருகாவனத்து ரிஷி பத்தினிகளெல்லாம் சோதனை செய்ய எழுந்தருளியிருக்கிறேன். இதோ என் உடைய கருட வாகனம்—இதிலே ஏறி கற்புக்கரசிகளைப் பரீட்சை செய்து பார்க்கப் புறக்கப்போகிறேன்” என உளறியவாறு சிவநேசர், வண்டியிலே ஏறி உட்கார்ந்து கொண்டார். அப்போது அங்கே சிவகாமி பரபரப்போடு ஓடிவந்துகொண்டிருந்தாள். தாயாரை மகள் காணவும் மகளைத் தாயார் காணவும்—இருவரும் ஒருவரை<!-- source join: scan 94 ends இருவரும் ஒருவரை; scan 95 begins தழுவிக்கொண்டு --> தழுவிக்கொண்டு விம்மி விம்மி அழவும்—சிவநேசர் அதைக் கண்டு உரத்த குரலெடுத்துச் சிரிக்கவும்—அந்த இடமே ஒரு சோகக் காட்சியின் களமாக அமைந்துவிட்டது.
தாயும் மகளும் சந்தித்த நிலையில் எதுவுமே பேசத் தோன்றவில்லை அவர்களுக்கு! “என்னம்மா செய்கிறது அப்பாவுக்கு? காலையில் எல்லாம் நன்றாக இருந்தாரே!” என்று வருத்த மிகுதியோடு கேட்டாள் சிந்தாமணி. “எல்லாம் உன்னால் வந்த வினைதானடா கண்ணு! வெள்ளிக்கிழமை பொழுது விடிந்தாலும் விடிந்தது—நம்ப குடும்பத்துக்கு வினாசகாலமும் வந்து முடிந்தது!” என்று தேம்பி அழத் தொடங்கினாள் சிவகாமி.
அந்தச் சோகக் கட்டத்தில் டைகர் குறுக்கிட்டான். “அத்தே! நடுத்தெருவிலா உங்கள் ராமாயணமெல்லாம் நடத்தவேண்டும்?” என்று சற்றுக் கண்டிப்பாகவும் கடுமையாகவும் கேட்டான். அவனுக்குப் பதில் சொல்வதற்குப் பயந்தோடிக் குதித்து வந்தார் சிவநேசர்.
“ராமாயணத்தை நடுத்தெருவில் நடத்தாமல் வேறு எங்கேயடா நடத்துவது? ராமாயணத்திலேயே முக்கிய வாசிக் கதை காட்டிலே நடந்ததுதானேடா! நாட்டிலே நடந்தது நாலில் ஒன்று! ராமனும் சீதையும் காட்டிலே இருந்தது பதினாறு வருஷம்—பிறகு வால்மீகியும் சீதையும் காட்டிலே இருந்தது பல வருஷம்—இதற்கிடையே அசோக வனம்—அனுமார் தாண்டிய கடல்—அவனும் சுக்கிரீவனும் மறைந்து திரிந்த காடு—பாலகாண்டத்திலே விசுவாமித்திரனோடு அலைந்ததும், தாடகையைக் கொன்றதும், அகல்யாவைக் காலால் மிதித்து வாயால் வாழ்த்தியதும் கானகத்தில்தானே! அதனால் ராமாயணம் என்பது ஒரு காட்டுக் கதை! காட்டிலே உள்ள பிராணிகள் சிலவற்றைக் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் வைத்து எழுதப்பட்ட கதை! ஆகவே ராமாயணத்தை நடுத்தெருவில் நடத்தலாம்! ஏ, சிவகாமி! நீ நடத்து ராமாயணத்தை!”
“இதோ இவள்தான் காணமற்போன சீதை! ஹே ராவண! நீ என் சீதையைத் தூக்கிக்கொண்டு வந்தாய்?......சொல்! சொல்!”
இப்படி வாய்க்கு வந்தவாறு பேசிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும்—நின்ற சிவநேசரைப் பார்த்து, சிவகாமி, சற்று மிரட்டலுடன் “இப்ப சும்மா இருக்கப்போகிறீர்களா இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே அவர்களைக் பற்றிக்கொண்டாள். டைகரும் உதவிக்கு ஓடிவந்து, அவர்களைக் கட்டிவிட்டான், ஒரு துணியால்! பின்னர் வண்டிக்காரனின் துணையோடு அவர்களுடைய காலையும் கட்டி, வண்டியிலே கிடத்தினான். சிவகாமியையும் சிந்தாமணியையும் வண்டியிலே ஏறிக்கொள்ளச் செய்து, அவர்களோ வீட்டுக்குப் போகுமாறும், தான் காலையிலே வந்து எல்லா விஷயங்களையும் கவனிப்பதாகவும் சொல்லி விடைகொடுத்தான். சிவநேசர் வண்டிக்குள்ளே அங்குமிங்கும் புரண்டு வண்டியையே கவிழச் செய்துவிடுவார் போலிருந்தது.
சிந்தாமணியும் அவள் தாயாரும் ஒருவர் முகத்தை ஒருவர் வேதனையோடு பார்த்தவாறு, தங்கள் துன்பத்திற்கு ஆறுதல் அளிக்க யாருமில்லையே என்ற ஏக்கம் பிரதிபலிக்க வண்டியில் உட்கார்ந்திருந்தார்கள். எப்போதும் வீடு போய்ச் சேருவோம் என்ற கவலையோடு! வண்டி அவர்களது இருதய நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் செப்பனிடப்படாத அந்த ஊர்ச்சாலையிலே ஆடி அசைந்து, குண்டு குழிகளில் ஏறி இறங்கி, வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
பாலையூர் மருத்துவ விடுதியில் ஆனந்திக்கு தன் கையால் ஏதாவது அளிக்கக்கூடிய சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்ற ஆவலோடு துடித்துக் கிடந்த நயினா முகம்மதுக்கு அப்படியொரு வாய்ப்பு நள்ளிரவில் கிடைத்தது. விடுதியின் சட்டப்படி வெளித்தாவரத்திலே மட்டுமே நயினா முகம்மது தங்கிட முடிந்தது. ஆனந்தியின் அருகாமையிலேயிருக்கும் சூழ்நிலை அமையாமற்போய்விட்டது. ஆனாலும் அவன் தூங்கவில்லை. ஒரு நாற்காலியில் உட்<!-- source join: scan 96 ends உட்; scan 97 begins கார்ந்துகொண்டு -->கார்ந்துகொண்டு, தாழ்வாரத்தில் இருந்தபடியே அவளைக் கவனித்துக்கொண்டிருந்தான். “அவள் அசையமாட்டாளா? ஒருகணம் விழிக்கமாட்டாளா?”—தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். தன்னைத் தவிர மருத்துவ மனையில் யாருமே விழித்திருக்கவில்லை யென்பதையும் உணர்ந்தான். அவனுக்கு ஒரு ஆசை; சிறிதுநேரம் ஆனந்தியின் முகத்தை அப்படியே இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்று!
பெண்களை அவர்கள் விழித்துக்கொண்டிருக்கும்போது ஒரேயடியாகப் பார்த்துக்கொண்டிருக்க இயலுமா? இயன்றாலும் அதிலே ரசனையிருக்காது! ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்தால்—அந்த நீடித்த நோக்கிலே ‘ரசம்’ இருக்காது; விரசம்தான் வெளிப்படும். அவன் நோக்க, அவள் நிலம் நோக்குவாள். அவன் நோக்காத போது அவள் அவனை நோக்குவாள். இப்படி மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் விழியை வீசும்போது திடீரென இரு விழிகளும் திருடர்கள்போல் சிக்கிக்கொள்ளும். நாணம் இருவரையும் அடிமைகொள்ளும். பெண்மை கலந்த நாணத்திலே ஒரு பெருஞ் சிறப்பு—பேரழகு காணப்படும். அதை ஆடவன் சுவைப்பான். அதே சுவையை தூங்குகின்ற காதலியின் முகத்தை இடையறாது பார்த்துக்கொண்டிருக்கிற காதலன் பெறுவான். இந்நிலே காதலிக்கும் உண்டு.
அந்த ஆசை உந்தித் தள்ள, நயினா முகம்மது மெதுவாக எழுந்து தாழ்வாரத்தைக் கடந்து, உள்ளே செல்ல முயன்றான். அவளை நிதானமாகப் பார்த்து ரசிக்க அவன் உள்ளத்திலே அப்படியொரு ஆவல் தீ மூண்டெழுந்தது. அடிமேல் அடிவைத்து நடந்தான். திருட்டுத்தனமாக இப்படி நடக்கும்போதுதான் பாழுங் காலில் “சொடக்கு” முறியும்! “படக்—படக்” என்று கால் விரல்களிலே ஒலி கிளம்பும்! அதைவிட ஆபத்து தொண்டையிலே ஏதோ ஒன்று அடைப்பதுபோல உணர்ச்சி ஏற்படும்! கனைத்துக் கொள்ளத் தோன்றும்! இதற்கிடைஞ்சல்களும் நயினா<!-- source join: scan 97 ends நயினா; scan 98 begins வைத் தாக்காமல் இல்லை -->வைத் தாக்காமல் இல்லை. நாற்காலியில் உட்கார்ந்து கால்களில் நன்றாக ‘நெட்டி’ முறித்துக்கொண்டு, கனைத்து முடித்துக்கொண்டு, ஒரு குவளை குளிர்ந்த பானத்தையும் சாப்பிட்டுவிட்டு, அந்தக் குளிரிலும் வியர்வையால் நனைந்திருந்த உடம்பைத் துடைத்தபடி ஆனந்தி இருக்கும் கட்டிலின் பக்கம் மெதுவாக வந்துகொண்டிருந்தான். அதுவரையில் சும்மா இருந்த கடிகாரம் அப்போதுதானா மணியடிக்க ஆரம்பிக்கவேண்டும்! அதுவும் ஒன்று—இரண்டா? பனிரெண்டு மணிகள்! நயினா பயந்து கொண்டு திரும்பிவந்து பழைய இடத்தில் உட்கார்ந்து விட்டான். பனிரெண்டு மணிகளோ முழக்கிவிட்டு, கடிகாரம்—நயினாவின் இருதய ஒலியோடு போட்டி போட்டுக்கொண்டு சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. அவனே அன்புக்கும் அச்சத்திற்கும் இடையிலே தொங்கிக்கொண்டு தத்தளித்தான். பின்னர் அன்பு வென்றது. அச்சம் சற்று விலகி நின்றது. மீண்டும் புறப்பட்டான் ஆனந்தியைப் பார்ப்பதற்கு! கொஞ்சம் கால்கள் வேகமாக வைத்து, அவள் படுத்திருந்த கட்டிலண்டை வந்துசேர்ந்தான். மங்கிய பச்சை விளக்கு ஒளியிலே அவளது முகத்தைப் பார்த்தபடி லயித்துப்போய் நின்றான் நயினா முகம்மது. அமைதியான தூக்கம்!
அந்த அழகை ஓவியர்களும் கற்பனை செய்யமுடியாது என்றே அவன் முடிவுகட்டினான். மூடியிருக்கும் கண்கள்—ஆனாலும் அந்த முகத்திலே எவ்வளவு மோகம்! சிற்பி வடிக்கின்ற வெண்பளிங்குச் சிலைகளிலே கருவிழிகளுக்கு வண்ணம் தீட்டுவதில்லை. ஆனாலும் அதன் அழகு அணுவும் குறைவதில்லை. அதுபோலவே கருவிழி மூடியிருக்கும் ஆனந்தியின் கண்களிலே அழகைக் கண்டான் நயினா! அந்தக் கண் இமைகளோ அவன் சாதாரணமாகக் கற்பனை செய்யவில்லை. காப்பிய நூலொன்றின் மேலட்டையாகவே வர்ணித்தான். மகரந்தப் பொடியை உள்ளே மூடி வைத்திருக்கும் மலரின் இதழ்களோடு ஒப்பிட்டான். அந்த இமைபோல, அவளுக்குத் தானே பாதுகாப்பாக இருந்<!-- source join: scan 98 ends இருந்; scan 99 begins தால்...... -->தால்......நயினாவின் இருதயம் படபடத்தது! அந்த ஒலி ஒருவேளை அவள் காதில் விழுந்து விழித்துக்கொள்வாளோ என்ற பயத்தில் தன் மார்பை அழுத்திக்கொண்டான். அவள் முகத்தைவிட்டு அவன் விழிகள் எடுக்க மனம் வரவில்லை. அப்படியே அசைவற்று மயக்கமுற்ற நிலையிலே நின்றுகொண்டிருந்தான். அந்த மயக்கத்தில், பலகணியின் பக்கம் ஒரு கரிய உருவம் நின்றுகொண்டிருப்பதை அவன் கவனிக்கவேயில்லை. அந்த உருவத்தின் கையிலே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. பலகணித் திரையிலே அந்த உருவமும், அது பிடித்திருந்த துப்பாக்கியும் நிழல் வடிவத்திலே விழுந்தன. ஆனந்தியின் நித்திரை அழகில் நேத்திரத்தைப் பதித்திருந்த நயினாவுக்குப் பலகணிப் பக்கம் கண் திருப்பு நினைவேது? உருவம் கைத் துப்பாக்கியைச் சரிபார்த்துக் கொண்டதானது பலகணி நிழலிலே நன்றாகத் தெரிந்தது.
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்