அத்தியாயம் 10 · 10 / 23
அத்தியாயம் 10
Chapter 10
மூல ஸ்கேன் 85 after centered 10 – 92 before centered 11
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
10
சிவகாமியிடம் பெற்ற சத்தியத்தையெண்ணிப் பூரிப்படைந்தவாறு டைகர், நேராக ஆனந்தியின் மருத்துவ இல்லத்தை நோக்கி நடந்தான். சிவகாமி சத்தியத்திற்குப் பயந்தவள் என்பதும் அதுவும் குலதெய்வத்திற்கு மாறாக எதுவும் செய்யத் துணியமாட்டாள் என்பதும் டைகரின் நம்பிக்கைக்கு அதிக வலுவூட்டின. மருத்துவ மனையின் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் ‘தட தட’ வென பூட்ஸ் ஓசையைக் கிளப்பியவாறு கால்களை வேகமாகப் பதியவைத்தான். அப்போது “என்ன சார்?” என்ற கேலி கலந்த சிரிப்போடு வேம்பு கீழிருந்து கூப்பிட்டான்.
“காரியம் அநேகமாக முடிவு முற்றுவிட்டது வேம்பு! ஆள் பத்திரந்தானே!” என்று ஆவலோடு வினவினான் டைகர்!
“ஓ! அதெல்லாம் பூட்டியபடியே கிடக்கிறது பொருள் உள்ளே! போகலாம்! போய் இஷ்டத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்!” என்று வேம்பு பரிகாசம் செய்தான்.
“இல்ல வேம்பு! இப்போதே நான் அவளை அவள் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டுப் போகிறேன். இனி எனக்கும் அவளுக்கும் நிச்சயமாகத் திருமணம் நடந்தே தீரும். அதில் அணுவளவும் சந்தேகமில்லை!” இந்தச் சேதியை உற்சாகத்தோடு உரைத்தவாறு படிகளில் ஓடினான் டைகர்!
டைகரின் மகிழ்ச்சியையும் துடிப்பையும் கண்ட வேம்பு, “சரி; என் காரியம் ஆகிவிட்டது! நான் பாலையூர் ஆஸ்பத்திரிக்குப் போய் அம்மாவுக்கு ஆகவேண்டியதைச் செய்துவருகிறேன்” என்று தலையைச் சொறிந்தான் வேம்பு. டைகர் அவனுக்கு விடைகொடுத்து, ஒரு பத்து ரூபாய் நோட்டையும் அவன் கையிலே அழுத்தி, பாலையூர் ஆஸ்பத்திரியில் நயினா முகம்மது என்று ஒருவன் இருக்கிறான்; அவன் நடவடிக்கைகளையும் கவனித்துவா” என்று அனுப்பினான். நோட்டைக் கண்களில் ஒத்திக்கொண்டு பற்களைக் காட்டியவாறு வேம்பு அதைவிட்டு அகன்றான்.
மாடிக் கதவைத் திறந்துகொண்டு டைகர் பிரவேசித்தான். அங்கேயுள்ள ஒரு பெரிய அறையும் பூட்டப்பட்டிருந்தது. அதன் கதவையும் திறந்தான். உள்ளே இருள் சூழ்ந்திருந்தது. மின்சார விளக்கைப் பொருத்தினான். அந்த ஒளியிலே சிந்தாமணி கீழே உருண்டு கிடப்பது தெரிந்தது. அவள் கைகால்கள் கட்டப்பட்டிருந்தன. அதிர்ச்சியால் தாக்குண்டவன்போல, “ஆகா! இது என்ன கோரம்! சிந்தாமணி! உன்னை யார் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியது?” என்று கேட்டவாறே அவளைக் கட்டுகளில் இருந்து விடுவித்தான். சோர்வுற்ற நிலையிலே சிந்தாமணி எழுந்து நின்றாள். மீண்டும் டைகர், “சொல் சிந்தாமணி! உன்னை கஷ்டத்திற்குள்ளாக்கியது யார்? காரணம் என்ன?”
என்று ஆவலோடும் ஆத்திரத்தோடும் கேட்டதுபோல நடித்தான், மிகத்திறமையாக!
“தெரியாததுபோல ஏன் கேட்கிறாய்? எல்லாம் உன் ஏற்பாடுகள்தான் என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது!”
“வீண் கற்பனை! சிந்தாமணி—கனவிலும் இப்படி ஒரு கஷ்டத்தை உனக்குக் கொடுக்கமாட்டேன்! என்னை நம்பு அந்த வேம்பு இருக்கிறானே......”
“அவன்தான் மாடியிலேயுள்ள நோயாளி விடுதியில் தங்கவேண்டும் என்று என்னை அழைத்து வந்தான்! அவன்தான் என்னை அறையிலே போட்டுப் பூட்டி “டைகர் வரும் வரையில் காத்திரு” என்றும் கூறிவிட்டுப் போனான். இப்போது புரிகிறதா...?
சிந்தாமணியின் கண்களில் கனல் கிளம்பிற்று. அவள் முகம் ஆத்திரத்தால் சிவப்பேறிக்கொண்டேயிருந்தது.
“அந்த வேம்பு முட்டாள் தனமாக உளறிவிட்டானே; மடையன்” என்று தனக்குத்தானே முணகிக்கொண்டு டைகர் அந்த அறையில் அங்குமிங்கும் உலவினான். எப்படியும் தான் குற்றமற்றவன் என்று சிந்தாமணியை நம்ப வைத்து அவளைக் காப்பாற்றுவதற்காகவே தான் அங்கு வந்ததாகச் சொல்லி, அதன்மூலம் அவளை மகிழவைக்கவும் வேண்டும் என்று திட்டமிட்டு வந்திருந்தான். அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, சிந்தாமணியின் பதில் இருந்தது.
“நான் சொல்வதை நீ நம்பித்தான் தீரவேண்டும் சிந்தாமணி! உன்னையும் என்னையும் பிரிப்பதற்காக லேடி டாக்டர் ஆனந்தி செய்த வேலையிது! அவளுக்கு என்மீது அடங்காத மோகம். எனக்கோ உன்மீது! இதை அவள் புரிந்துகொண்டுவிட்டாள். உன்னையும் என்னையும் பிரிக்க சமயம் பார்த்திருந்தாள். காலையில் குளக்கரையில் காதல் வேடிக்கையிலே நான் உன்மீது கல் எறிய, நீ என்மீது கடைவிழியோட்டித் திரும்பு—தெய்வச்செயலாக நீ கீழே விழ—இந்த ஆஸ்பத்திரிக்கு வர—ஆனந்திக்கு உன்னையும்<!-- source join: scan 87 ends ஆனந்திக்கு உன்னையும்; scan 88 begins என்னையும்... --> என்னையும் பிரிக்கும் வேலை சுலபமாகிவிட்டது. உன்னை யார் கண்ணிலும் படாமல் மறைத்து ஏதோ ஒரு பயங்கரமான திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறாள். அதற்குள் தெய்வம் அவளுக்குக் கூலி கொடுத்துவிட்டது. கார் விபத்தில் சிக்கிப் பாலையூர் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறாள், உயிருக்குப் போராடிக்கொண்டு!
“உன்னைக் காணவில்லையென்று உன் பெற்றோர் ஊரெல்லாம் தேடி கடைசியில் என்னிடம் ஓடிவந்தார்கள். நானு வேம்புப் பயலைக் கூப்பிட்டு மிரட்டி, கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தியதும்—அவன் உண்மையைக் கக்கி விட்டான். அதன்பிறகுதான் ஓடிவந்தேன்—உன்னைக் கண்டேன்! விடுவித்தேன்! வேம்பு சொன்னதாகச் சொன்னாயே; “டைகர் வருவார் காத்திரு!” என்பதாக! அதற்கு என்ன அர்த்தம் புரிகிறதா? உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது. உன் ஆசைக் காதலன் டைகர் வந்தாலும் முடியாது! என்ற திமிரான பேச்சாகும் அது! நீ அவன் பேச்சை கேட்டுக்கொண்டு என்னை சந்தேகப் படுகிறாய்”
இப்படி ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு டைகர் நாடகமாடித் தீர்த்தான். சிந்தாமணிக்கு அவனது பேச்சை நம்பவும் முடியவில்லை; நம்பாமலிருக்கவும் முடியவில்லை. குழப்பத்திற்கு ஆளாகித் தவித்தாள்.
“எது எப்படியிருந்தாலும் சரி; என்னை வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டால் போதும்!” என்று தெரிவித்தாள்.
“இதோ—காத்திருக்கிறேன். உன்னை வீட்டுக்கு அழைத்துப் போகத்தானே ஓடோடியும் வந்தேன். என் சொத்து நீ! உன்னை பாதுகாக்காமல் வேறு நான் யாரைப் பாதுகாக்கப் போகிறேன்!”
“டைகர்! வீண்பேச்சு தேவையில்லை. வீட்டுக்குப் போகலாம்!”
“போகலாம் சிந்தாமணி — ஆனால் ஒரு வேண்டுகோள்! எப்படியும் நாம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு சதிபதிகளாய் வாழப்போகிறோம் என்பது நிச்சயமாகிவிட்டது. அதனால்......”
“அதனால்......”
வார்த்தைகளே முடிக்க இயலாமல் தத்தளித்தவாறு அவளிடம் நெருங்கினான் டைகர்.
அவனது எண்ணத்தைச் சிந்தாமணி புரிந்துகொண்டாள். அவள் உடலும் உள்ளமும் நடுங்கின. என்ன நடக்கப்போகிறதோ என்ற பயம் அவளது மென்மையான இருதயத்தை உருக்கிற்று. வளமாகக் குலுங்கி நிற்கும் திராட்சைக் கொத்தை ஒரு அகன்ற இரும்புக் கரம் ஒரு சேரச் சேர்த்துப் பிழிவது போலிருந்தது அவளது இருதயத்தில் ஏற்பட்ட வேதனை. குளக்கரையிலே விழுந்ததினால் ஏற்பட்ட வலியை, அவள் நெஞ்சில் அப்போது எழுந்த வலி மிஞ்சிற்று. எதையும் இழந்துவிடலாம் ஒரு பெண் — ஆனால் மானத்தை இழந்துவிடவும் துணிய முடியுமா? சூர்ப்பனகை மூக்கிழந்தாள், முலையிழந்தாள் என்றாலும் கற்பு நிலை யிழக்கவில்லையென்பதால்தானே இராவணனின் தங்கையென்ற பெருமையைப் பெற முடிகிறது! எதிரே இலக்குமணன் நிற்பது போலவே டைகரை அவள் கற்பனை செய்தாள். அவன் முரட்டுக் கரங்களிலே சிக்கிக் கசங்கும் முல்லை மலராகத்தான் ஆகிவிடக்கூடாதேயென்ற கவலை அவளுக்கு மயக்கத்தை அதிகமாக்கிற்று. தன்னையே நிதானப்படுத்திக்கொண்டாள். எங்கேயோ ஒரு நீதி மன்றத்தில் ஒரு வக்கீல் வாதாடுகிறான்; கற்பழித்த வழக்கு ஒன்றில்!
குற்றவாளியின் சார்பில் வாதாடிய அவர், இறுதியாகத் தன் பேச்சை முடிக்கும்போது—“இந்தப் பெண் இவனால் கற்பழிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது — இவளுக்கு இஷ்டமில்லாமலே அந்தக் காரியம் நடந்ததாகவும் விளக்கப்படுகிறது. ஒரு பெண் இறுதிவரையில் மறுத்துவிட்<!-- source join: scan 89 ends மறுத்துவிட்; scan 90 begins டால் -->டால் அதையும் மீறி ஒரு ஆண் வெற்றியடைய முடியும் என்பது சாதாரண விஷயமல்ல! பலாத்காரம் நடைபெற்ற இடத்தில் இவளைக் கட்டிப் போட்டவுமில்லை! மயக்கமுறவும் செய்யவில்லை. அப்படியிருந்தும் இவள் கற்பிழந்தாள் என்பது ஆச்சரியமே! இதோ இந்தக் கையில் ஊசியை நான் ஆட்டிக்கொண்டே இருக்கிறேன்; நீங்கள் இதிலே ஒரு நூலைக் கோர்த்துவிடுங்கள் பார்க்கலாம்!” என்று கூறி ஒரு ஊசியை எடுத்து மெதுவாக அசைத்துக் கொண்டேயிருந்தாராம், அதில் யாரும் நூலைக் கோர்த்திட முடியவில்லையாம்!
“இதைப்போலத்தான் பெண்ணின் மனம் பிடிவாதமாக மறுப்புக் காட்டியிருந்தால், இந்த ஆண் வெற்றிபெற முடியாது. சிறிதளவாவது அவளும் உணர்ச்சி வசப்பட்டு விட்டதாலேயே இவன் வெற்றி யடைந்திருக்கிறான். அதனால் இருவருமே குற்றவாளிகள்தான்!” என்று குறிப்பிட்டாராம் அந்த வக்கீல்!
அதை எங்கேயோ யார்மூலமோ கேள்விப்பட்டாளோ; அல்லது படித்திருக்கிறாளோ—அது நினைவில்லை! ஆனால் அந்தக் கட்டத்தில் அந்த வழக்கு, வக்கீலின் விளக்கமும் ஞாபகத்திற்கு வந்தன. ஆடிக்கொண்டிருக்கும் ஊசியாக மாறினாள். அலைமோதிக்கொண்டிருந்த டைகர் அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு, “கண்ணே! கண்ணே!!” என்று கெஞ்சினான். அவன் கைகளைத் தட்டிவிட்டு அப்பாற்போய் நின்றுகொண்டாள்.
“டைகர்! இதுதான் நீ என்னைக் காப்பாற்ற வந்த அழகோ! மரியாதையாக இதைவிட்டுப் போய்விடு!” என்று கத்தினாள். அவனுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. அவளை மடக்கிவிடலாமென்ற எண்ணம் முளியாகிவிட்டது. ஆனாலும் ஒரு சபலம்; திருமணம் என்னமோ நிச்சயமாக நடந்துவிடுமென்று! அதற்குள் இப்படி ஒரு குழப்பம் விளைவித்துக் காரியத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாதென்று முடிவு செய்துகொண்டான். அதனால் அதற்கு மேல் அவளிடம் நெருங்கவில்லை.
“சரி; சிந்தாமணி! கல்யாணத்திற்கு முன்பு இப்படி யெல்லாம் நடந்துகொள்ளக்கூடாதென்று கருதுகிறாய் போலும்! அந்தக் கர்நாடக வழக்கம் உன்னைவிட்டுப் போகவில்லை. பரவாயில்லை. உன்னை உன் இஷ்டப்படியே வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் வா” என்று பேச்சின் முறையையே மாற்றினான் டைகர்.
சிந்தாமணிக்கு உள்ளூரப் பயந்தான்! வீட்டுக்கு அழைத்துப்போவதாக எங்காவது அழைத்துப்போய் விடுவானோ என்று அவள் பயப்படுகிறாள் என்பதையும் அவன் புரிந்துகொண்டான்.
“எங்கேயாவது தந்திரமாக உன்னைக் கொண்டுபோய் விடுவேனோ என்று கலங்காதே! நான் உன்னோடு வரப்போவதில்லை. இந்த மருத்துவமனையின் வாசல் வரையிலே வந்து நான் உன்னை வழியனுப்பி வைக்கிறேன். அதற்குப் பிறகு நீயே உன் வீட்டிற்குப் போகலாம்” என அவன் கூறினான்.
அது நல்ல யோசனைதான் என்று சிந்தாமணி கருதினாலும் வீடு வரையிலே நடந்து போகக்கூடிய அளவுக்கு உடல் நிலை இடந்தராதேயென்று யோசித்தாள். அதனால் வீட்டுக்குச் செல்ல ஒரு வண்டி வேண்டுமென்று கேட்டாள். “இதோ கொண்டுவருகிறேன்” எனக் கீழே இறங்கிப் போய் ஒரு இரட்டைமாட்டு வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தினான். சிந்தாமணி மாடிப்படிகளில் இறங்குவதற்குக் கஷ்டப்பட்டு இறங்கி வந்தாள். அந்தச் சாக்கிலாவது அவளுக்கு உதவி புரிவதுபோல அவள் மேனியைத் தொடுவதற்கு அவன் துடித்தான். அவளோ கைப்பிடிச் சுவரின் துணையோடு மெதுவாக இறங்கிக் கீழே வந்தாள். உயரக் கூண்டு வேய்ந்த இரட்டை மாட்டு வண்டி. அதில் ஒரே தாவாக தாவித்தான் ஏறமுடியும். சிந்தாமணி சிறிது திகைத்தாள். டைகர் உதவிபுரியத் தயாராக நின்றுகொண்டிருந்தான். அவன் வண்டிக்காரனைப் பார்த்து, “ஏய், இதைக் கொண்டுபோய், அவுங்க வீட்டிலே விட்டுவிடு! இந்தா வண்டிச் சத்தம்” என்று எட்டணா பணத்தையும்<!-- source join: scan 91 ends எட்டணா பணத்தையும்; scan 92 begins நீட்டினான். --> நீட்டினான். வண்டிக்காரன் வாங்கிக்கொண்டு, “உம்! புறப்படுங்கம்மா!” என்று துரிதப்படுத்தினான். சிந்தாமணி வண்டியில் ஏறவேண்டுமே! நல்ல உடம்புக்காரர்களுக்கே “ஹை ஜம்ப்” வித்தை தெரிந்திருக்க வேண்டும், அந்த வண்டியில் ஏற—அவளோ உடலும் உள்ளமும் நலிந்து, உற்சாகமின்றியிருக்கிறாள்—அதனால் சங்கடப்பட்டாள். பிறகு சமாளித்துக்கொண்டு அந்த வண்டியிலே குதிக்கும் தோரணையில் ஏறினாள். வெற்றி கிட்டவில்லை அவளுக்கு! டைகருக்குத்தான் வெற்றி கிட்டியது! வண்டியின் தட்டிலே சிந்தாமணியின் இடுப்பு வரையில் போய்விட்டது. கால்கள் கீழே தொங்கிக்கொண்டிருந்தன. கால்களை எடுத்துப் பூரணமாக அவளால் வண்டியில் அமரமுடியவில்லை. கீழே குதிக்கவும் பயம்! நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டான் டைகர்.
ஓடிப்போய் அவளை அப்படியே அள்ளி அணைத்து வண்டியின்மீது அமர்த்தினான். சிந்தாமணிக்கு தன்னைத் தூக்கித் தீக்குண்டத்திலே வீசி எறிந்ததுபோல இருந்தது. அந்தத் தீயினும் கொடுமையான வார்த்தைகள் எங்கிருந்தோ வந்து அவள் காதுகளைத் தாக்கின. “அடி வேசி! அடி விபசாரி!” என்ற சொற்கள்தான் அவைகள்! சிந்தாமணி காதுகளைப் பொத்தியவாறு, திரும்பிப் பார்த்தாள். சிவநேசர் ஆவேசமாக வண்டியை நோக்கி ஓடி வந்தார். “அப்பா!” என்று வீரிட்டு அலறி வண்டிக்குள்ளேயிருந்து கீழே விழுந்தாள் சிந்தாமணி!
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்