அத்தியாயம் 9 · 9 / 23
அத்தியாயம் 9
Chapter 9
மூல ஸ்கேன் 75 after centered 9 – 85 before centered 10
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
9
அந்தச் சிரிப்பு அமைதி நிரம்பிய உள்ளத்திலேயிருந்து எழுந்ததல்ல; கொந்தளிக்கும் கடலிலே எழும்பும் பேரலைகளை ஒத்திருந்தது. “சிந்தாமணி! சிந்தாமணி!!” என்று கூவினர். உரக்கச் சிரித்தார்! “மகளே! மகளே!” எனக் கதறினர். “அடி மானங்கெட்டவளே!”—என்று சீறினர். “நெறிகெட்ட பெண்ணே! நேர்மையற்ற பேதாய்! நீலி! காளி!”—என்றெல்லாம் உளறினர். சிவநேசருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று முடிவு கட்ட எதைவிட வேறென்ன காரணங்கள் வேண்டும்? சிவகாமி எதிரே விழுந்து தடுத்துங்கூட அவளைத் தள்ளிவிட்டு சிவநேசர் தெருவுக்கு ஓட ஆரம்பித்தார்.
ஊர் மக்கள் கூடினர். சிவநேசர் அவர்களையெல்லாம் வெறிகொண்ட வார்த்தைகளால் தாக்கத் துவங்கினர். அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்று<!-- source join: scan 75 ends இழுத்துச் சென்று; scan 76 begins வீட்டிலேபோட்டுப்... --> வீட்டிலேபோட்டுப் பூட்டிவைத்தார்கள் ஊர் மக்கள். சிவகாமியின் மனம் மரத்துப்போய்விட்டது. அசைவற்றுப் போனாள். இனி என்ன இருக்கிறது நடப்பதற்கு; எல்லாம் நடந்துவிட்டது என்ற குமுறல் அவள் நெஞ்சிலே மேலோங்கியிருந்து அறையிலே அடைக்கப்பட்ட சிவநேசர் கூச்சல் போட்டவாறு கதவைத்தட்டி ரகளா செய்து கொண்டிருந்தார். சிந்தாமணியைப் பற்றி ஊரிலே பலவாறு பேச்சு ஆரம்பமாயிற்று! அவளது தோழிகள் அவளுக்காக வாதாடத் தோன்றினார்கள்.
“பார்ப்பதற்கு பரம சாதுமாதிரி இருந்தாளே; அவளா இப்படிப் பரத்தைவாழ்வு நடத்தியிருக்கிறாள்!” என்று அதிசயப்பட்டனர் பலர்.
“சாதுக்களைத்தானய்யா இந்தக் காலத்தில் நம்பக் கூடாது! அதற்குச் சரியான உதாரணம் இந்தச் சிந்தாமணி!” இப்படி நிச்சயப்படுத்தினர் பலர்!
“பாவம்; சிவநேசர் கொஞ்சம் மானஸ்தன்! அவன் பொண்டாட்டி சிவகாமிக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்கும்; சிந்தாமணிகெட்டதற்கே அவள்தான் காரணமாயிருந்திருப்பாள்!” இப்படி அபாண்டம் சுமத்தினர் சில அவசரக்காரர்கள்!
“பெற்ற குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்குதான் ஓடியிருப்பாள்! பலே கைகாரியமா அவள்! பிரசவம் ஆன உடம்பு! பச்சை உடம்பு! அதோடு ஓடியிருக்கிறாளே ஒரு காலி!” என்று மூக்கில் விரல் வைத்தவாறும், முகவாய்க்கட்டையில் கைவைத்தவாறும் பெண்கள் மகாநாடு அதிசயத்தில் ஆழ்ந்தது!
“என்னதான் சொல்லுங்கள், எங்கள் சிந்தாமணி—அப்பழுக்கற்ற தங்கம்! அவளைப்பற்றி அணுவளவு சந்தேகப்பட்டுப் பேசினாலும் அவர்கள் நாக்கு அழுகிவிடும்!” என்று சபங்கொடுத்தாள் ஆண்டாள்!
“நாக்கு என்ன நாரத்தம்பழமா! அழுகிப்போக! போடி போக்கிரி, உன் வேலையைப் பார்த்துக் கொண்டு!” என்று அவளை அடக்கினாள் ஊர்ப் பெரியமனுஷி ஒருத்தி!
“விஷயம் வெளிச்சமாகித்தானே மாப்பிள்ளை வீட்டார் மனமுடைந்து திரும்பியிருக்கிறார்கள்” என்று தங்களுடைய அரைகுறைச் சந்தேகங்களையும் போக்கிக்கொண்டார்கள் தீர்முடிவுக்காரர்கள் சிலர்!
எப்படியோ சிந்தாமணிக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டு அது ஊர் முழுவதும் பரவிவிட்டது. சிவநேசர் வீட்டை மிக அலட்சியத்தோடு பார்க்க முற்பட்டார்கள் அவரது சொந்தக்காரர்கள். ஒருவனுக்குக் கஷ்டம் வந்துவிட்டால் முதலில் சந்தோஷப்படுவதும் சங்கடப்படுவதுபோல் காட்டிக்கொண்டு மேலும் தொல்லைகளை உண்டாக்குவதும் சொந்தக்காரராகத்தானே இருப்பார்கள்!
வேதபுரத்திலேயிருப்பவர்கள் மட்டுமென்ன; விதிவிலக்கா? “சிவநேசர் சரியானபடி சிக்கிக்கொண்டான். பெண்கள் சம்பந்தமாகவே பெண்கள் சம்பந்தம்! பெரிய இடத்து சம்பந்தம்! எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது!” என்று தங்களுக்குத் தாங்களே பூரிப்படைந்தார்கள், அற்ப குணத்தில் அறுநீர்ப் பறவைகளாயுள்ள உறவினர்கள்! சிந்தாமணியின் தோழிகளோ சிந்தை கலங்கி நின்றனர். தங்கள் ஆருயிர்த் தோழிக்கு இப்படி ஒரு அவமானம் வந்துற்றதேயென்று ஏங்கித் தவித்தனர்; அவர்களாலும் இந்தப் புதிரைப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஊரார் பேச்சுப் பேச்சு அவர்களிலேயே பிளவு ஏற்பட்டது.
“ஒருவேளை நமக்கும் தெரியாத உண்மையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் துளிர்விடத் தொடங்கியது, தோழிகள் சிலருக்கு! எந்த மணமும் இல்லாத இடத்திலே “எலுமிச்சம்பழ வாடை வீசுகிறது” என்று மந்திரவாதி நூறுமுறை நம்புவதுபோல் சொல்வானேயானால் நமக்குக் கூட அந்த வாடை வீசுவதுபோல் தோன்றலாம். பொய்யைப் பத்துமுறை வற்புறுத்திச் சொன்னால் மெய்யாகத் தோற்றமெடுக்கும் என்பார்கள். அப்படிச் சொன்னதானே “கடவுள்” என்ற சொல்லே வாழ்க்கை அகராதியிலே பெரிய எழுத்துக்களில் அச்சடித்து வைத்திருக்கிறார்கள்! உலக மக்கள் ஏமாற்றும் பொய்மைகளே உண்மை<!-- source join: scan 77 ends உண்மை; scan 78 begins களாக... -->களாக உருவெறிக்க முடியும் என்கிறபோது சிந்தாமணியைப்பற்றிய செய்திகள் தீப்போலப் பரவி அப்படித்தானிருக்கமுடியுமென்று தீர்மானமாக ஆக்கப்படுவது பெரிய காரியமா என்ன? புனிதமானவர்களையும் புகழடைந்தவர்களையும் பற்றி பொல்லாங்கு பேசும் பொறாமைக்காரர்கள் சூழ்ந்திருக்கிற இந்த உலகத்தில் சிந்தாமணியைப்போன்ற செந்தாமரைகளை, ‘எரிச்சல் எருமைகள்’ மிதிக்காமல் விடுவார்களா?
பெண்கள் வட்டாரத்தில் ஒரு பகுதி சிந்தாமணியைப் பற்றிய கேலிக் கணைகளைப் பொழிந்தவண்ணமிருந்தது. அவர்களில் சிலர் ‘கற்பு’ எனும் மூன்றெழுத்துக்கு அர்த்தம் தெரியாதவர்கள்; தன்னிடத்தில் மண்டிக்கிடக்கும் குற்றங்குறைகளைத் திருப்பிப்பாராமல் பிறரிடம் இல்லாத குற்றங்களைச் சிருஷ்டித்துக்கொண்டு சிரித்து மகிழ்வதுதானே இந்த விசித்திர பூமியில் விளையாட்டாக இருக்கிறது! இந்த வேதனையான விளையாட்டுக்குப் பரிதாபத்திற்குரிய பாவை சிந்தாமணி பலியானாள்.
சிவநேசரை வீட்டிலே அடைத்துவிட்டு, சிவகாமிக்கு ஆறுதல் கூறிவிட்டு ஊராரும் தெருவாரும் தங்கள் கடமைகளைக் கவனிக்கப் புறப்பட்டார்கள். சிவகாமி என்ன செய்வதென்று தோன்றாமல் உட்கார்ந்திருந்தாள். கணவனிடம் யோசனைகள் கேட்கவோ வழியில்லை. அவர் காளி போல் கத்திக்கொண்டு கிடக்கிறார். சிந்தாமணி போன மார்க்கமோ தெரியவில்லை. தெருவிலேயுள்ளவர்களோ தெளிவான யோசனை எதுவும் தெரிவிக்கவில்லை. “ஆகட்டும், நாளைக்குப் பார்க்கலாம்” என்று கூறிப் பொறுப்பைக் கழித்துக்கொண்டு போய்விட்டார்கள். சிந்தாமணியைப் பற்றி ஊரே சந்தேகப்பட்டுப் பேசுகிறது. அவளோடு சேர்ந்திருந்த தோழிகளும் குழப்பத்தில் மூழ்கிவிட்டார்கள். சிவகாமி தனித்து விடப்பட்டிருக்கிறாள். அவளால் எதைத் தீர்மானிக்க முடியும்? தாயொருத்திக்குத்தான் தன் செல்வியைப்பற்றிய ஐயம் எழவேயில்லை! அவள் தூய ஜோதி என்று சிவகாமி மட்டுமே குழப்பமின்றி உணர்ந்திருந்<!-- source join: scan 78 ends உணர்ந்திருந்; scan 79 begins தாள். -->தாள். மகளைப் பார்த்து விவரமெதுவும் அறிய முடியாதபடி போய்விட்டதே—அவள் எங்கு போயிருப்பாள்—ஒருவேளை சேதி கேள்விப்பட்டு வேதனை தாங்காமல் எங்காவது ஓடிப் போய்...அய்யோ! அதை கற்பனை செய்யவே முடியவில்லை!
மணி ஒன்பது அடித்தது—இருள் சூழ்ந்த வேதபுரத்தில் கண் கட்டப்பட்ட நிலையிலே தத்தளித்துக்கொண்டிருந்தாள் சிவகாமி. வாயிற்புறத்தில் யாரோ வரும் சத்தம் கேட்டது. “சிந்தாமணி!” என்று அலறியடித்துக்கொண்டு ஓடினாள் சிவகாமி! அவள் அலறியதைக் கேட்ட சிவநேசர் அறைக்குள் இருந்தபடியே “சிந்தாமணியா? அந்தச் சீரழிந்தவளா?” என்று கூச்சலிட்டு உளற ஆரம்பித்தார். தெருவுக்கு ஓடிய சிவகாமி திகைத்து நின்றாள். எதிரே டைகர் நின்றுகொண்டிருந்தான்.
“என்ன வீடு ஒரே ரகளைப்படுகிறது! என்ன அத்தை சமாசாரம்! மாமா எங்கே?” என்று கேட்டான் டைகர்!
“மாமா! இதோ இருக்கிறான் மானங்கெட்ட மாமன் இதோ இருக்கிறேன். கதவைத் திறவீர்! கதவைத் திறவீர்! இல்லாவிட்டால் இந்த ஊரையே அழித்துவிடுவேன்! நான் தான் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்! மானேந்தி மழுவேந்தி தலையிலே கங்கையேந்திப் பக்கத்திலே பார்வதி ஏந்தி! நான் தான் பரமசிவன்! அடே ராக்ஷசா! உடனே கதவைத் திறக்கிறாயா? என் காளை வாகனத்தைவிட்டு உன்னை முட்டச் சொல்லட்டுமா? அடி பார்வதி! ஹே; சிவகாமி! கதவைத் திற! இல்லாவிட்டால் நான் தேவாரப் பதிகம்பாடி திருமறைக் காட்டில் கதவு திறந்ததுபோல் திறந்துவிடுவேன்” என்று கடல்மடை திறந்தாற்போல பேச்சு ஆரம்பித்தார் சிவநேசர். பித்து அதிகமாகிறது என்பதை உணர்ந்த சிவகாமி, தலையில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டு அழத் தொடங்கினாள். “என்ன அத்தை இது! கொஞ்சங்கூட புத்தி கிடையாது உங்களுக்கு! இப்போது என்ன வந்துவிட்டது? ஏன் இப்படித் தாண்டவமாடுகிறீர்கள்?” என்றான் டைகர்.
“இன்னும் என்னப்பா வரவேண்டும்? குடும்பத்து மானமே போனபிறகு மிச்சம் என்ன இருக்கிறது! என் உயிர்தான் இருக்கிறது! அதையும் அந்தப் பாழும் கடவுள் பறித்துக்கொண்டு போகமாட்டேன் என்கிறானே!”
சிவகாமி மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள்.
“கவலைப்படாதே சிவகாமி! இதோ நமது எமனை அழைப்புகிறேன் அவனோடு தேவலோகம் வந்து சேருவாயாக! ஓடிவா! ஓடிவா!” என்று கத்தினார் சிவநேசர்!
“இதவிடக் கொடுமை வேறு என்னப்பா வேண்டும்; அதுவும் இந்த வயதில் எனக்கு!”
சிவகாமி ஒப்பாரி மீண்டும் ஆரம்பமாயிற்று.
“பயப்படாதீர்கள் அத்தை! மாமாவுக்கு உடம்பு குணமாக நான் ஜவாப்தாரி! சிந்தாமணியைக் கண்டு பிடிப்பதும் என் பொறுப்பு!”
“டைகர் எங்கள் விதியை யாராலும் மாற்ற முடியாது. நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ!” என்று அழுகை ஆத்திரத்தோடு சிவகாமி கூறினாள்.
“அதுதான் சரி! அதுதான் சரி! விதியை மாற்ற எவனும் முடியாது! சிந்தாமணி! உன் விதியை என்னால் மாற்ற முடிந்ததா? நீ கேடுகெட்டவளாக மாறவேண்டும் என்று விதி இருந்திருக்கிறது! நீ கல்யாணத்துக்குள் கர்ப்பமாக வேண்டுமென்று விதி இருந்திருக்கிறது! விதியே விதியே விதியே!...என் தலைவிதியே! என் தலைவிதியே! காம சத்யபாமா! கதவைத் திறவாய்! திறவாய்!!” சிவநேசரின் கூச்சல் அதிகமாயிற்று. டைகர் சிவகாமியிடம் மிகப் பணிவோடும், குழைவோடும் பேச்சைத் தொடங்கினான்.
“அத்தை! என்னைப்பற்றி நீங்களும் மாமாவும் போட்டிருக்கிற கணக்கு தவறு! நான் நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்குக் கெட்டவன்! நீங்கள் என்னை அலட்சியப்படுத்தினாலும் நான் உங்களுக்கு வந்த<!-- source join: scan 80 ends வந்த; scan 81 begins கஷ்டத்தைப்... --> கஷ்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். சத்தியமாகச் சொல்லுகிறேன்; சிந்தாமணியைக் கொண்டுவந்து உங்கள் கையில் ஒப்புவிக்கவேண்டியது என் பொறுப்பு! என் கடமை! நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது என் வேலை!”
“சிந்தாமணி திரும்பி வருவதும் ஒன்றுதான் அவள் வராமல் அங்கேயே சாவதும் ஒன்றுதான்! அவளைப்பற்றி ஊர் முடிவுகட்டிவிட்டது! அவமானச் சின்னம் என்று அபிப்ராயம் தெரிவித்துவிட்டது! என் கண்மணி திரும்பி வந்து காலமெல்லாம் கண்ணீருங் கம்பலையுமாக கன்னி கழியாத குமரியாக இருப்பதைவிட அவள் செத்து விடுவது மேல்!”
இதைச் சொல்லியபடி தலையைச் சுவரில் சாய்த்தவாறு கண்ணீர் உகுத்தாள் சிவகாமி.
“சிந்தாமணிக்குக் களங்கம்! அதற்காகத்தானே பயப்படுகிறீர்கள் அத்தை! யாரும் அவளை இனிமேல் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார்களே என்றுதானே கவலைப்படுகிறீர்கள்! இதைவிட ஆயிரம் அபாண்டங்களைப் பதினாயிரம் பழிகளை அவள்மேல் சுமத்தினாலும் சரி; நான் தயாராயிருக்கிறேன் அவளைக் கல்யாணம் செய்துகொள்ள என்ன சொல்கிறீர்கள்?” என்றான் டைகர்—நல்லவன் போல நடித்தது, உத்தமன்போல பணிந்து நின்று!
சிவகாமி அவனை உற்று நோக்கினாள்! ஆத்திரம் அவள் கண்களில் தோன்றியது! உதடுகள் துடித்தன அவனுக்கு!
“ஏ! ராமகிருஷ்ணு! எல்லாம் உன் சூழ்ச்சிதானே? சிந்தாமணியைக் கல்யாணம் செய்துகொள்வதற்காக நீ செய்த ஏற்பாடுகள்தானே இவையெல்லாம்?” என்று சினம் பொங்கி வழியச் சீறினாள் சிவகாமி!
“என்ன அத்தை! உங்களுக்குமாமா மாதிரி ஏதாவது பிடித்துவிட்டதா என்ன? உண்மையிலே சொல்லுங்கள்—சிந்தாமணி களங்கமற்றவள் என்று நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா?” டைகர் கேட்டான் இப்படி!
“என் மகள் கண்ணகிதேவியடா—கண்ணகிதேவி!” என்று கத்தினாள் சிவகாமி.
“அப்படியானால், அந்தக் கண்ணகிதேவி, உயிரோடு திரும்பிவந்து, உங்களை அம்மா என்று அழைப்பதை ஏன் மறுக்கிறீர்கள்?”
“யார் மறுத்தது? என் மாணிக்கம், ஒரு முறை முக தரிசனம் காட்டினாலும் போதுமே!”
தாய்மை உணர்ச்சி அணை உடைத்து எழுந்தது சிவகாமிக்கு! அவள் தான் முதலில் சொன்னாள்; ‘ஊரார் பழிக்கு ஆளான சிந்தாமணி திரும்பி வருவதைவிட சாவது மேல்’ என்று! இப்போது அவள்தான் பேசுகிறாள், முகதரிசனம் கிடைத்தாலும் போதுமென்று!
முன்னது, மான உணர்வுக்குக் கட்டுப்பட்ட மனித உணர்ச்சி! பின்னர் பீறிட்டு எழுந்தது அதனினும் மேம்பட்ட தாய்மை உணர்ச்சி! தாய்மை உணர்ச்சியைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளத் திட்டமிட்டான், டைகர் ராமகிருஷ்ணன்!
“சிந்தாமணி எங்கும் போய்விடவில்லை! என்னால் அவளை இங்குக் கொண்டுவர முடியும்! ஆனால் ஒரு நிபந்தனை—அவளை எனக்குத் திருமணம் செய்துவைப்பதாக உறுதி கூறவேண்டும்!”
“திருமணமே கிடையாது! சிந்தாமணிக்குத் திருமணமே கிடையாது! அவள் ஒரு மணிமேகலை! துறவி! சந்நியாசினி! புத்த பிக்ஷுணி! அவளுக்குத் திருமணம் கிடையாது! இது என்னுடைய தீர்மானம்! அவள் ஒரு பிரம்மச்சாரிணி! இல்லை இல்லை; கன்னி கழியாமல் பிள்ளை பெற்றவள்! அவள்தான் அசல் குந்திதேவி! ஏ பாண்டு மகாராஜனே! அவளைக் கல்யாணம் செய்துதர முடியாது! ஓடிவிடு! ஓடிவிடு!!” என்று முழக்கமிட்டார் முற்றிக் கொண்டிருக்கும் பித்த மூர்ச்சியால் சிவநேசர்!
“என்ன அத்தை சொல்கிறீர்கள்! சிந்தாமணி திரும்பி வரவேண்டுமல்லவா?”
“ஆமாம்! நிச்சயமாக!”
“அப்படியானால் திருமணம்?”
“திருமணமா?” சிவகாமி பெருமூச்சு விட்டாள்!
“அத்தை! முடிவாகச் சொல்லுங்கள்! நீங்கள் உறுதி கொடுத்தால் நாலுபேரறிய நாகரிகமான முறையில் திருமணம் நடக்கும். இல்லாவிட்டால் எங்களுக்குத் திருமணமான சேதியைக் கேள்விப்படுவீர்கள்!”
“என்னப்பா பயமுறுத்துகிறாய்! சிந்தாமணியை நீ ஒளித்துவைத்திருக்கிறாயா? இது என்ன காட்டுராஜா காலம் என்று நினைத்துக்கொண்டாய்! போலீஸ் இலாகா இருப்பதை மறந்துவிட்டாயே!”
“இருக்கலாம், போலீஸ் இலாகா வந்தால் உங்கள் மகளின் பிணத்தைத்தான் கொண்டுவரும்! ஞாபகம் இருக்கட்டும்!” அதைக்கேட்ட சிவகாமி திடுக்கிட்டாள்.
“இப்போது நீ என்னதான் சொல்லுகிறாய் என்று கெஞ்சுந்தோரணையில் கேட்டாள்.
“என்ன சொல்கிறேன்! சிந்தாமணியை அழைத்து வருகிறேன். அவளை எனக்குத் திருமணம் செய்துவைக்கச் சம்மதிக்க வேண்டுமென்கிறேன்.”
“சரி ஆகட்டும்! அவளை அழைத்துக்கொண்டு வா!” என்றாள் சிவகாமி!
“இப்படிச் சொன்னால் போதாது அத்தை! உங்கள் குலதெய்வத்துக்கு நேராகச் சத்தியம் செய்துகொடுக்க வேண்டும்.”
“சத்தியமா?”
“பிறகென்ன; ஏமாற்றிவிடலாம் பயலை என்று எண்ணுகிறீர்களா? அதெல்லாம் முடியாது! குலதெய்வத்துக்கு நேராக ஆணையிட்டு சம்மதம் தரவேண்டும்.”
சிவகாமி யோசித்தாள்! அவள் தாயுள்ளத்திலே போரும், புயலும் மூண்டன!
சிந்தாமணியை இழந்துவிட அவள் துணிய முடியுமா? அதே நேரத்தில் டைகர் ராமகிருஷ்ணனை அவளுக்குத் துணைவனாக ஆக்கிடத்தான் சம்மதிக்க முடியுமா? இப்போது சிவகாமிக்கு இருந்த ஆசையெல்லாம், சிந்தாமணியை ஒருமுறை சந்தித்து அவள்மீது சுமத்தப்பட்ட பழியைப்பற்றிய விவரம் அறியவேண்டுமென்பதுதான்! தன் அன்பு மகளைச் சூழ்ந்திருக்கும் அவதூறு இருளை எப்படியாவது அகற்றிவிடவேண்டும் எனத் துடித்தாள் அவள். சிந்தாமணி திரும்பிவந்தால் அந்தப் பழியை ஊரார் மனத்திலேயிருந்து அகற்றிவிடலாம் என்று நம்பினாள் அவள்! இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் டைகர்தான் காரணமாயிருப்பானோ என்ற சந்தேகமும் எழுந்தது அவளுக்கு! டைகருக்கு அவளைத் தருவதாக வாக்களித்து விட்டால், அவன் அவள்மீது-தானே வீண்பழியைச் சுமத்தியதாக ஊர் மக்களிடம் ஒப்புக்கொண்டு தன் மகளைப் புனிதவதியாக மாற்றிவிடுவான். அவள்மீது படிந்த மாசு விலகிவிடும்! வீண் அபவாதம் அழிந்துவிடும் என எண்ணினாள் டைகரோடு சிந்தாமணி வாழ்க்கை நடத்துவதைச் சகித்துக்கொள்ளலாம்; ஆனால், அவள் களங்கமுற்றவள் என்ற பெயரை எப்படிச் சகித்துக்கொள்வது? அந்தப் பெயர் மறையவேண்டுமானால், டைகருக்கு அவளைத் திருமணம் செய்துகொடுப்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தாள் சிவகாமி! தாயுள்ளம் அப்படித்தான் தீர்மானிக்க முடியும்!
குலதெய்வத்தின் முன்னே சத்தியம் செய்துகொடுக்க சிவகாமி தயாரானாள். சிவநேசரோ கதவைத் தட்டி உடைத்துக்கொண்டு உரக்கக் கூவிக்கொண்டிருந்தார்.
வீடு அல்லோல கல்லோலப் படுவதும், ஊரார் நகைத்துப் பரிகசிப்பதும்—சிந்தாமணி திரும்பிவந்தால் சரியாகிவிடும் என்று அவள் பூரணமாக நம்பிவிட்டாள். அதோடு,<!-- source join: scan 84 ends அதோடு,; scan 85 continues Chapter 9 --> டைகர் தன் வீட்டு மாப்பிள்ளையாகிவிட்டால், ஊர்வாய் அச்சத்தால் அடைபடும் என்றும் கருதினாள்.
மகள் ‘மாசற்றவள்’ என்று நிரூபிக்கப்பட்டு விட்டால் போதும் சிவகாமிக்கு!
அதனால் பழிபாவம் பாரங்களையெல்லாம் தெய்வத்தின் மீது போட்டுவிட்டு, டைகரின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டாள்.
டைகர், குலதெய்வத்திற்கு குத்துவிளக்கு ஏற்றிவைத்தான். குங்குமப்பொட்டு வைத்தான். “உம்! உறுதி கொடுக்கலாம் அத்தை!” என்றான்.
சிவகாமியும் குலதெய்வத்திற்கு நேராக நின்று “எங்கள் குலதெய்வத்தின் மேல் ஆணை! சத்தியமாக, உனக்குச் சிந்தாமணியைக் கல்யாணம் செய்துகொடுக்கிறேன்!” என்று உறுதிமொழி தந்தாள்.
அதைக்கேட்ட டைகர், “சபாஷ்! அத்தை சபாஷ்! இனிமேல் சிந்தாமணி வருவாள்! உங்கள் துன்பமெல்லாம் தொலையும்!” என்று மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டே வீட்டைவிட்டு வெளியேறினான்.
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்