பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 8 · 8 / 23

அத்தியாயம் 8

Chapter 8

மூல ஸ்கேன் 68 after centered 8 – 75 before centered 9

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

8

அழகப்பன் முதலியோர் பெங்களூர் புறப்பட்டு விட்டால், தனக்கு பெரிய சுமை இறங்கியதுபோல என்று கருதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் டைகர்! இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு ஆனந்திக்கு இவர்கள் உபசாரம் செய்துகொண்டிருக்கிறார்களே ஏன்; சீக்கிரம் போய்த் தொலையமாட்டார்களா என்றும் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவன் மனம் குளிரும் வண்ணம் தாயாரம்மாள் பேச ஆரம்பித்தாள். பெங்களூர் பயணத்தைப் பற்றியதாகவே அவள் பேச்சு இருந்தது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை அழகு, நயினா, டைகர் மூவருமே எதிர்<!-- source join: scan 68 ends எதிர்; scan 69 begins பார்த்து இருந்தார்கள். -->பார்த்து இருந்தார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு அழகு, தனது பேச்சிலே சாதுர்யத்தைக் குழைக்க ஆரம்பித்தான்.

“அம்மா மனசு சரியில்லை—இங்கே இருந்தால் இன்னும் குழம்பிக்கொண்டேயிருப்பார்கள். பாவம்; இந்த நயினாவைவேறு அவன் வேலைகளையெல்லாம் கெடுத்து அழைத்துக்கொண்டு வந்தோம். எப்படியும் நீங்கள் இரண்டுபேரும் பெங்களூர் போய்ச் சேருவதை நான் விரும்புகிறேன்” என்றான் அழகப்பன்.

பரபரப்புடன் நயினா, “அப்படியெல்லாம் எனக்கொன்றும் வேலை கெடவில்லையப்பா! இன்னும் பத்து நாளைக்கு வேண்டுமானாலும் இங்கேயே இருக்கிறேன்” என்று பதில் கூறினான்.

“அதற்கில்லை நயினா! அம்மா எப்படியும் ஊருக்குப் போகவேண்டும்... அவர்களுக்கு நம் இருவரில் யாராவது ஒருவர் துணை போகவேண்டும். நான் இரண்டு நாள் இங்குத் தங்கி, ஆனந்தியின் உடல் பூரண சுகமானவுடன் புறப்பட்டு வரலாமென்று நினைக்கிறேன்”—அழகு சமாளித்தான்.

“பார்த்தீங்களா அம்மா—உங்கள் மகன் பேசுவதை! விடக் கூடாதம்மா இங்கே! அது பெரிய ஆபத்தாகமுடியும்! அழகப்பனின் மனம் நிம்மதியில்லாமல் இருப்பது எனக்குத் தெரியும்! நம்மை அனுப்பிவிட்டு, எங்காவது போகத் திட்டம் போட்டிருக்கிறதாகத் தெரிகிறது” என்று நயினா முகம்மது தாயாரம்மாளிடம் தூபம் போட்டான். அவன் பாலையூரில் தங்கி ஆனந்தியின் அன்பைப் பெறலாமென்று திட்டம் போட்டிருக்கிறான். அந்தத் திட்டம் அழகப்பனின் யோசனையால் சிதைந்து விடுமோ என்ற பயம் நயினாவைப் பற்றிக்கொண்டது. அதற்காக என்னென்ன சொல்லி அழகப்பனை பெங்களூருக்கு அனுப்பமுடியுமோ அவைகளையெல்லாம் சொல்லத்தென்று முடிவுக்கு வந்தான். தாயாரம்மாளைத் தனியாக அழைத்துப்போய், அழகப்பன் ஏமாற்றத்தால் ஏங்கியிருப்<!-- source join: scan 69 ends ஏங்கியிருப்; scan 70 begins பதாகவும் -->பதாகவும்—அவமானத்தால் அவன் குன்றிப்போய்க் காணப்படுவதாகவும்—அவனையே தனியே விட்டுப் போவது ஏதாவது பயங்கர விளைவுக்கு அஸ்திவாரம் அமைக்குமென்றும் எச்சரிக்கை செய்தான்! தாயாரம்மாளும் நயினா கூறுவதுதான் சரியென்று தீர்மானத்துக்கு வந்து அழகப்பனைத் தன்கூட பெங்களூருக்குப் புறப்பட வேண்டுமென்று பிடிவாதம் செய்தாள். அழகப்பனுக்குத் தாயின் வார்த்தையைத் தட்டமுடியாமற் போய்விட்டது. அவனது ஆசைக் கனவுகள் அருமைத் தோழனால் அழிக்கப்படுகிறதேயென்று தனக்குத்தானே நொந்துகொண்டான். அவனுக்குத் தெரியாது; நயினாவின் உள்ளம் ஆனந்தியின் பாற் சென்றிருக்கிறது என்ற உண்மை! அதுபோலவே நயினாவுக்கும் அழகப்பனின் ஆனந்தி மோகம் தெரிந்திட நியாயமில்லை! வெளியிடவும் ஒருவருக்கொருவர் வெட்கம். விஷயம் சிறிது முற்றிய பிறகு வெளியிடலாமே என்ற எண்ணம்.

அழகப்பனும் தாயாரம்மாளும் பயணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினர். நயினா இருப்பது கூட டைகருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஒருவேளை ஆனந்தி, உண்மையை நயினாவிடம் கூட சொல்லிவிடலாமே என்ற அச்சம்! அதனால் அவன் சற்று அழுத்தந்திருத்தமாகவே, “யாரும் எங்கள் ஆனந்திக்குத் துணை வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்!” என்று கூறினான்! நயினா அதற்குப் பதில் சொல்லவில்லை. விழிகளை அகலமாகத் திறந்தபடி டைகரைப் பார்த்துக்கொண்டே நின்றான். டைகர், தன்னை யறியாமல் தலைகுனிந்துகொண்டு ஊமைபோல அதை விட்டு அகன்றான்.

தாயாரம்மாள் ஆனந்தியிடம் வந்து, “கண்ணு! நான் ஊருக்குப் போய்விட்டு வர்றேம்மா!” என்று சொல்லிக் கொண்டாள்.

ஆனந்தி பேசமுடியாமல் விழிகளாலே அதற்குச் சம்மதம் தெரிவித்தாள்.

அழகப்பனும் அவளருகே வந்து “நான் கூட போய் வருகிறேன்” என்றான். ஆனந்தி ஏதோ பேச முயன்றாள் போகவேண்டாமென்று சொல்வதற்கு எண்ணுகிறாள் என்று கற்பனை செய்துகொண்டான் அழகு! அவனை ஆனந்தி, இமைக்காமல் அப்படியே பார்த்தாள். “நீங்களுமா?” என்பது போல ஒரு மௌனக் ஒலி மட்டும் கிளம்பிற்று அவளிடமிருந்து!

உடனே நயினா, “அவர்கள் தான் போகிறார்கள்—நான் இங்கேதான் நாலந்து நாளைக்கு இருக்கிறேன்!” என்று கூறினான். நயினாவின் பக்கமும் ஆனந்தியின் விழிகள் சுழன்றன. அவன் இதயத்தில் புன்னகை ஒன்று மின்னி மறைந்தது. அதற்கு ஏதேதோ புதிய பொருள்களைக் கற்பித்துக்கொண்டார்கள் அழகும், நயினாவும்!

“ஆனந்தி, என்னிடம் பிரேமை கொண்டுவிட்டாள்; அதனால்தான், அவள் நயினாவிடம் அன்பு காட்டுகிறாள். ராஜாராணி கதைகளிலே வரும் ராஜகுமாரிகள் ராஜகுமாரர்களைக் காதலிப்பார்கள்; அந்த ராஜகுமாரர்களது பாங்கர்கள் மீதும் அன்பு செலுத்துவார்கள். அதைப் போன்ற அன்பு, ஆனந்திக்கு நயினாமீது பிறந்திருக்கிறது. இதிலிருந்து அவள் என்னைக் காதலிக்கிறாள் என்பது நிச்சயமாகிவிட்டது!”

இப்படிக் குருடிக் களிப்படைந்தான் அழகு. அந்த ஒரு புன்னகை அவன் உள்ளத்திலே அவ்வளவு கற்பனைகளை எழுப்பியது. வானத்திலே சஞ்சரிக்கும் மேகங்கள் காற்றின் மோதுதலால் ஒன்றுசேரும்போதும் பிரியும்போதும் ஆகா! இது யானைபோலிருக்கிறது; இது பூனைபோலிருக்கிறது என்று கற்பனை செய்வதில்லையா? அதுபோலவே ஆனந்தியின் இதழ் அசைவுக்கு அழகப்பன் புதுப்புது அர்த்தங்களை தனக்குள்ளாகவே படைப்பித்துக்கொண்டான். நயினா முகம்மது அந்தப் புன்னகையிலே போதை தலைக்கேறியவனாய் நின்றான். இறுதியில் அழகப்பன் பிரியமுடியாமல் அந்த இடத்தைவிட்டுப் பிரிந்து தாயாரம்மாளுடன் காரில் ஏறி உட்கார்ந்தான். நயினா<!-- source join: scan 71 ends நயினா; verified continuity carries the name into scan 72 --> முகம்மது அவர்களை வழியனுப்பிவிட்டு டைகருடன் மருத்துவமனைக்குத் திரும்பினான். ஆனந்தி படுத்திருக்கும் கட்டிலுக்குச் சிறிது தூரத்தில் ஒரு நாற்காலியைத் தூக்கிப் போட்டுக்கொண்டு நயினா உட்கார்ந்து கொண்டான். அவனை எப்படியாவது துரத்திவிடவேண்டும் என்று துடியாய்த் துடித்தான் டைகர். தான் மட்டுமே ஆனந்திக்கு வேண்டியவன் என்றும், நயினா ஆனந்திக்குத் தெரியாதவனென்றும்—அதனால் அவன் இங்கிருக்கத் தேவையில்லையென்றும்—டாக்டர்களிடம் சொல்லி அவனைத் துரத்திவிடலாமா என்று யோசித்தான். அப்படிச் சொல்லும் போது ஒருவேளை, ஆனந்தியே தனக்கு எதிர்ப்பாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் பிறந்தது! செய்வதறியாது விழித்தான் டைகர்! பிறகு நயினாவிடம்... “நீங்கள்தான் இங்கிருக்கிறீர்களே; ஆனந்தியைப் பார்த்துக்கொள்ளுங்கள்! நான் காலையில் வருகிறேன்” என்று கூறிவிட்டுப் பாலையூர் மருத்துவமனையிலிருந்து வேகமாகப் புறப்பட்டான்! பயங்கரமான திட்டமொன்றுக்கான அடித்தளம் அவன் நெஞ்சப் படுகுழியில் அமைவதை அவனது முகம் எடுத்துக் காட்டிற்று!

மாலைச் சூரியன் மேற்கிசையிலிருந்து பொன்னிறக் கதிர்களை மருத்துவமனைப் பலகணி வழியாக ஆனந்தியின் மீது கொட்டினான். அந்த மஞ்சள் நிற வெயிலிலே ஆனந்தியின் மந்தகாச முகம் ஒளிசிந்திக்கொண்டிருந்தது. ஆனந்தி, லேசாகக் கண்களைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தாள். உடனே நயினா அவளருகே ஓடி, “என்ன வேண்டும்?” என்று கேட்டான் ஆனந்திக்குப் பேச இயலவில்லை. இதழ்கள் அசைத்தாள். நயினா யூகமாக “ஹார்லிக்ஸா?” என்று வினவினான். அவளது சுந்தர விழிகள் ஆமோதிப்பதுபோல் அசைந்தன. அவசர அவசரமாக ‘ஹார்லிக்ஸ்’ தயாரிக்கத் தொடங்கினான். தயாரிக்கும் போதே இன்ப நினைவுகள்! ‘ஹார்லிக்ஸ்’ நாம்தானே அவளுக்குத் தரவேண்டும்—ஆகா—எவ்வளவு அருமையான வாய்ப்பு! ‘ஹார்லிக்ஸ்’ குவளையை அவள் இதழ் அருகே நீட்டும்போது; என் விழிகளும் சந்திக்குமல்லவா?

இதுவரை சந்தித்தது போலில்லாமல் அந்த சந்திப்பில் ஒரு நெருக்கம் இருக்குமல்லவா? நினைக்கவே இனித்தது நெஞ்சம். ‘ஹார்லிக்ஸை’ எடுத்துக்கொண்டு எழுந்தான் நயினா!....அந்தோ, அவனது எண்ணக் கோட்டை தவிடுபொடியாகிவிட்டது...... நர்ஸ் வேகமாக வந்து கொண்டே, “என்ன ஹார்லிக்ஸா?” எனக்கேட்டபடி அவன் கையிலிருந்த குவளையை வாங்கி ஆனந்தியிடம் திருப்பினாள். நர்ஸ் குறுக்கீடு நயினாவை மரம்போலச் செய்துவிட்டது. வெட்பத்தையும் வேதனையையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவன் பழையபடி உட்கார்ந்து கொண்டான். ஆனந்திக்கு வேண்டிய வசதிகளைச் செய்து விட்டு, நர்ஸ் அதை விட்டு அகன்றாள். இனி அடுத்த சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமென்று எதிர்பார்த்தபடி நயினா உட்கார்ந்திருந்தான்.

சிந்தாமணி மாசற்ற மாணிக்கம், களங்கமற்ற நிலவு என்றெல்லாம் சீராட்டிப் பாராட்டி வளர்த்த சிவநேசரும், சிவகாமியும் எரிமலையின் தீக்குழம்பால் தாக்குண்டது போலத் துடித்துத் தேம்பி அழுதனர். தெய்வமே துணை என்று இருப்பவள் சிவகாமி. அவனன்றி ஓரணுவும் அசையாது என்று அழுத்தமாக நம்பிக்கிடப்பவர் சிவநேசர்! அவனையுமறியாமல் இந்த அக்ரம அசைவு எப்படி ஏற்பட்டது என்று அவருக்கே புரியவில்லை! பூமி அசைவுகளையும்—பூகம்ப அதிர்ச்சிகளையும்—பூவோடும் பிஞ்சோடும் குடும்பங்கள் புயல்காற்றில் சிக்கி மடிவதையும், கடற்கொந்தளிப்பில் நாடு நகரங்கள் நாசமாவதையும் அமைதியோடு பார்த்துக்கொண்டிருக்கிற “ஆண்டவன்” சிவநேசர் குடும்பத்திலே ஏற்பட்ட சிறு கொந்தளிப்பு கண்டா அதிர்ச்சி அடைந்துவிடப் போகிறான்! கற்பைவிற்று. உடலை விலைகூறி, உல்லாசிகளுடன் தேகத்தை உராசிக் காசு பெறும் “உத்தமி”களை உலவவிட்டு வேடிக்கை பார்க்கும் “ஆண்டவன்” சிந்தாமணியின்மீது ஏற்பட்ட களங்கத்தைத் துடைப்பதற்கு ஓடோடியும் வரவேண்டுமா<!-- source join: scan 73 ends வரவேண்டுமா; scan 74 begins என்ன? --> என்ன? பாவம்; பைத்தியக்கார சிவநேசர்; இந்தச் சிக்கலுக்கு சிவனார் வழி காட்டுவார் என்று பரிபூரணமாக நம்பினார்!

நல்லவேளை, சிந்தாமணிச் சோதிக்க சிவனார் வராமல் இருந்தாரே என்று சந்தோஷப்பட்டிருக்கவேண்டும் சிவநேசர்! மாறாக வருத்தமுற்றார்; இன்னும் ஆண்டவன் அருள்பாலிக்கவில்லையே என்று சிவகாமியோ, கணவனின் காலில் விழுந்து கதறி அழுது, “வாருங்கள் ஆஸ்பத்திரிக்குப் போய் சிந்தாமணியைப் பார்த்து வரலாம், விவரமெல்லாம் புரியும்!” என்று கூறினாள்.

“நான் கடவுளைத்தான் நம்பியிருக்கிறேன். அவர்தான் என் கஷ்டத்தைப் போக்கவேண்டும்! தெய்வமே! மானமாக வாழ்ந்தவன் இந்த சிவநேசன்—எனக்கு இப்படி ஒரு அவமானம் வரலாமா? நான் யாருக்கு என்ன தீமை செய்தேன்?” என்று ஓவென அலற ஆரம்பித்தார் சிவநேசர். சிவகாமி, அவரைப் பிடிவாதமாக அழைத்துக்கொண்டு, மருத்துவ மனைக்குப் புறப்பட்டாள்! “சிந்தாமணியைப் பார்த்தால் எல்லாம் புரிந்துவிடும், கவலைப்படாமல் வாருங்கள்! இந்த மாப்பிள்ளை போனால் வேறுமாப்பிள்ளை!” என்று கணவனுக்கு ஆறுதல் கூறினாள்.

“மாப்பிள்ளை போனால் பரவாயில்லை சிவகாமி! மானமல்லவா போய்விட்டது!” என்று கதறினார் அவர்.

“ஏன் போகிறது மானம்? எவனோ ஒருத்தன் உளறின என்பதற்காகத் தங்கம் பித்தளையாகிவிடுமா?” என்று சிவகாமி ஆத்திரத்தோடு பேசினாள். இருவரும் ஆனந்தியின் மருத்துவ மனைக்குள் நுழைந்தார்கள். வாயிற்புறத்தில் யாருமில்லை. ஆனந்தி, விபத்துக்குள்ளாகிப் பாலையூர் சென்றுவிட்டதால் மருத்துவமனை வெறிச்சென்று காணப்பட்டது. வழக்கமாக வரவேற்கும் வேம்புவைக்கூட காணவில்லை. நர்ஸ் ஒருத்திமட்டும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு தூங்கிக்கொண்டிருந்தாள். சிவகாமி, சிந்தாமணி படுத்திருந்த கட்டிலண்டை வேகமாகப் போனாள். அங்கே<!-- source join: scan 74 ends அங்கே; scan 75 begins சிந்தாமணி காணப்படவில்லை. --> சிந்தாமணி காணப்படவில்லை. தூங்கிக்கொண்டிருந்த நர்ஸை எழுப்பி, “எங்கே சிந்தாமணி?” என்று கேட்டாள்!

“அய்யோ எனக்குத் தெரியாதே! நான் ரொம்ப நாழிகையாகத் தூங்குகிறேன்” என்றாள் அந்தக் கடமை புரியும் காரிகை!

மருத்துவமனை முழுவதும் தேடியாகிவிட்டது. சிந்தாமணி காணப்படவில்லை! மற்ற நோயாளிகளும் தங்களுக்குத் தெரியாது என்று கூறினர்களே தவிர, விவரம் அறிந்தவர்களாக யாருமில்லை. சிவகாமி “சிந்தாமணி! சிந்தாமணி!!” என்று பெருங்கூச்சலிட்டுக் கதறினாள்! வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு மருத்துவ மனையில் உருண்டாள்! சிவநேசர் அமைதியாக அப்படியே உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் அவர் பேசவே இல்லை! பிறகு மெதுவாகச் சிரித்தார்! “என்ன இது?” என்றாள் அதிர்ச்சியோடு சிவகாமி! அவர் கலகலவெனச் சிரித்தார்!

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்