பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 7 · 7 / 23

அத்தியாயம் 7

Chapter 7

மூல ஸ்கேன் 59 after centered 7 – 68 before centered 8

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

7

“சிந்தாமணி, தங்கமானவளா? இன்று காலையில் தானே களங்கத்தின் அருகாமையில் அவளைக் கண்டேன். அவள் திடீரென்று தங்கமானவளாக சித்தரிக்கப்படுவது எப்படி? ஒருவேளை நீங்கள் எனக்குக் காட்டியது சிந்தாமணி அல்லவோ? அந்த நர்சுப்பெண் தவறுதலாக வேறொரு பெண்ணை எங்களுக்குக் காட்டிவிட்டாளோ?” என்று பதைப்போடு கேட்டான் அழகு!

“இல்லை! இல்லை! நீங்கள் பார்த்தது சிந்தாமணியே தான்! அதில் சந்தேகமேயில்லை—சிவநேசரின் செல்வக் குமரியேதான்! அவள் தங்கமானவளேதான்!”—டைகர் அழுத்தந்திருத்தமாகப் பேசினான்.

“என்னய்யா ஒரே குழப்பம்! நான் பார்த்தது சிந்தாமணியேதான்—பக்கத்திலேயிருந்தது அவள் குழந்தையேதான்—நீர் கூறும் தங்கத்திற்குப் பொருள் என்ன? விளக்கம்!”

“அவசரப்படவேண்டாம். கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரிப்பதே மெய்—என்ற பழமொழியை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது! சிந்தாமணியின் அருகிலே இருந்தது அவள் குழந்தையல்ல!”

“என்ன? என்ன? என்ன சொல்கிறீர்?” என்று துள்ளிக்குதித்தான் அழகப்பன்.

“உண்மையைத்தான் சொல்கிறேன். சிவநேசரின் குடும்பத்திற்கு ஆகாத பகைவர்கள் ஆனந்திக்குப் பணத்தாசை காட்டி, இப்படி ஒரு பஞ்சமா பாதகத்தைச் செய்து விட்டார்கள்! அந்தக் கொலைக்காரக் கொடியவர்களின் ஆசைவார்த்தையிலே மயங்கி ஆனந்தியும் சிந்தாமணியைச் சேறு என மெய்ப்பிப்பதற்கு முற்பட்டுவிட்டாள். பகைவர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், அந்த வெற்றிக்குப் பிறகுதான் போராட்டம் ஆரம்பமாயிற்று. ஆனந்தியின் மனப்போராட்டமே அது! அந்தப் போரை வலுப்பெறச் செய்தேன் நான்! ‘மருத்துவர் உலகிற்கே மாசுண்டாக்கிவிட்டாய்!’ எனக் குற்றஞ்சாட்டினேன். இறுதியில் உண்மை வென்றது. திடீரென ஒருக்கணல் தீ போலச் சூழ்ந்த தீய நினைவு ஆனந்தியின் உள்ளத்திலே அணைந்தது—தர்மத்தைக் காப்பாற்ற தங்களை நாடி ஓடி வந்தாள்! இப்போது அவளுக்குப் பதிலாக நான் பேசுகிறேன். சிந்தாமணி தங்கமானவள்!”

“நம்பாதே அழகப்பா, நம்பாதே! இந்த நாடகத்தை நம்பாதே!” என்று கூச்சலிட்டவாறு நயினா முகமது டைகரின் முன்னே வந்து பயங்கரத் தோற்றம் காட்டினான்.

“என்னப்பா கதை அளக்கிறாய்—சிந்தாமணி சேறல்ல; செந்தாமரை என்று நிரூபிப்பதற்கு வந்திருக்கிறாயா?

முடிந்துபோன அத்தியாயம்! மூடப்பட்டுவிட்ட புதைகுழி! மீண்டும் தோண்டி அழுகிப்போன சவத்தை வெளியே எடுக்காதே!”

—என்று டைகரின் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டுபோனவாறு முரட்டுத் தொனியிலே முழக்கினான் நயினா!

“இல்லை; என் பேச்சை நம்புங்கள்! பகைவர்கள் செய்த பாதகம்தான் அது! சிந்தாமணியின் குழந்தையல்ல அது! வேறொரு குழந்தை—உங்களை ஏமாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தை! என்னை நம்புங்கள்!” என்று கெஞ்சினான் டைகர்!

“முடியாது! இனியும் ஏதாவது உளறினால் உன் உயிர் உனக்கில்லை! உண்மையைச் சொல்லிவிடு! உடனே உண்மையைச் சொல்லிவிடு!” என்றவாறு நயினா முகமது டைகரின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தான். டைகர் திக்குமுக்காடித் தத்தளித்தான். நயினாவின் கரங்கள் அவன் கழுத்தில் மேலும் மேலும் அழுந்த ஆரம்பித்தன.

“சொல்றேன் சொல்! சிவநேசரும் சிவகாமியும் உனக்கு லஞ்சம் கொடுத்து அனுப்பியது உண்மைதானே! சொல்—உண்மையைக் கக்கு!” என உறுமினான்.

“விட்டுவிடுங்கள் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்!” என்று உயிர் போவதுபோலக் கத்தினான் டைகர். நயினாவின் கைகள் விலகின. டைகர் மூச்சு வாங்கிக்கொண்டே நின்றான்.

“உம்! சொல்லு!” என்று உறுமினான் நயினா!

“இதோ—இதோ” என்று பயந்து நடுங்கினான் டைகர்.

“உன்னுடைய நடிப்பெல்லாம் இங்கு செல்லாது—மரியாதையாக உண்மை வரவேண்டும்” என்று முஷ்டியை உயர்த்திக் காட்டினான் நயினா.

“தான் சொன்னதெல்லாம் பொய்தான். என்னை விட்டுவிடுங்கள் ஓடிவிடுகிறேன்.”

“பொய்தானா? பிறகென்னப்பா சிந்தாமணி தங்கமானவள் என்று பிரசங்கம் ஆரம்பித்தாய். என்னிடம்?” என்று சீறினான் அழகன்.

“தங்கமானவள் என்றுதானே சொன்னேன்—தணலில் பட்டபிறகுதானே தங்கத்திற்கு ஒளி பிறக்கிறது! அதைப்போலத்தான் தவறுதல் என்னும் தணலிலே இந்தத் தங்கம் விழுந்தாள். அதிலே பிறந்த ஒளிதான் அந்தக் குழந்தை—என்று சொல்ல வந்தேன்!”

“அட அட அடா! என் புதுமைப் புலவனே! என்ன கற்பனை! என்ன கற்பனை! எல்லாம் லஞ்சம் படுத்துகிற பாட்டப்பா பாடு!” என சிரித்தான் ஆத்திரமாக நயினா!

“லஞ்சமல்ல நண்பர்களே; நெஞ்சம்! என் இளகிய நெஞ்சம்! ஒரு குடும்பம் வீணாக எங்களால் கெட்டுவிடக் கூடாதே என்று எண்ணிய இளகிய நெஞ்சம்! அதன் விளைவுதான் உங்களிடம் அகப்பட்டுக்கொண்டு விழிக்கிறேன் நான்!”

“சரி; விவரத்தைச் சொல்லு!”

“என்ன சொல்லுவது! அட இறைவா? கச்சி ஏகாம்பா? உன் தலையிலே பாரத்தைப் போட்டுவிட்டுத்தான் சொல்ல வேண்டும்”

“பாரத்தைப் போடுறயா? ‘பவுண்டு’ கணக்கிலா? ‘டன்’ கணக்கிலா? பார்த்துப் போட்டப்பா—பாரங்கள் உடைந்துவிட்டுப்போகிறது! என்று ஆத்திரத்தோடு கேலியும் பேசினான் அழகப்பன்.

“இப்படியெல்லாம் பயல்கள் பாரத்தைப் போடுவார்கள் என்று பயந்துதானே எங்கள் ஆண்டவன் கல்லாகவும் இல்லை; சிலையாகவும் இல்லை; கண்ணுக்குத் தெரியாமலே இருக்கிறார்!” என்று கடுகடுப்போடு கூறினான் நயினா.

“சரி! சரி! விஷயத்தைச் சொல்லட்டும்” என்று அழகப்பன் டைகர் முகத்தை உற்று நோக்கினான்.

டைகர் பேசினான்:

“ஒரு குடும்பம், ஒரு பெண்ணின் வாழ்வு இவையெல்லாம் கெடுவதற்கு நானும் என் சகோதரி ஆனந்தியும் காரணமாக இருக்கவேண்டுமென்றுதான் நீங்கள் விரும்புகிறீர்களா?”

“எங்களுக்கு உண்மை தெரியவேண்டும்!”

“அடப்பாவி சிவநேசா! அப்போதே மாப்பிள்ளை வீட்டார் வந்தாலும் வருவார்கள் என்று எங்களுக்கு ஜாடை காட்டியிருந்தால் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்காதே! ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று ஜம்பமாக பேசி விட்டு, இப்போது எங்களை ஆபத்தில் மாட்டிவிட்டாயே! முன்பே இவர்கள் வரப்போகிற சேதி தெரிந்திருந்தால், முன் எச்சரிக்கையாக குழந்தையையாவது மறைத்திருப்போமே!” என்று அங்கலாய்த்துக் கொண்டான் டைகர்!

“பார்த்தாயா, பயல் கக்குகிறான் விஷயத்தை!” என்றான் நயினா.

“விஷயமல்ல! விஷத்தைக் கக்குகிறேன். ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை அழித்துப்போடும் ஆலகாலவிஷத்தைக் கக்குகிறேன்!” என்று தனிந்த குரலிலே டைகர் பேசினான்.

“உம்...பிறகு? தொடர்ந்து சேதி!” என்றான் நயினா!

“இன்னும் என்ன இருக்கிறது சேதி! ஆஸ்பத்திரிக்கு நீங்கள் இருவரும் வந்தபோது மாப்பிள்ளை வீட்டார் என்று எங்களுக்குத் தெரியாது! நீங்கள் வரப்போகிற சேதிகூட எங்களுக்குத் தெரிய நியாயமில்லை! சிந்தாமணியைப் பற்றிய சந்தேகமும் எங்களுக்கு எழுந்திட வழியில்லை! அவள் திருமணமானவள் என்றே எண்ணிக்கொண்டிருந்தோம். நீங்கள் ஆஸ்பத்திரியிலிருந்து ஆக்ரோஷ புருஷர்களாய் வெளியேறிய பிறகுதான் விசாரித்தோம்! விஷயம் தெரிந்தது! அய்யோ, நம்மால் ஒருத்தியின் வாழ்க்கை<!-- source join: scan 63 ends அய்யோ, நம்மால் ஒருத்தியின் வாழ்க்கை; scan 64 begins கெட்டுவிடுமே... --> கெட்டுவிடுமே—என்று ஆனந்தி துடித்தாள்! ‘நடந்தது நடந்துவிட்டது; இனி என்ன செய்ய இயலும்!’ என்று ஆறுதல் கூறினேன். அவள் கேட்கவில்லை! “சிந்தாமணி இளமையின் விஷமத்தால் எப்படியோ தவறியிருக்கலாம்; அதற்காக அவளது எதிர்காலம் முழுவதும் இருட்டறையாக மாறிவிடுவதா? என்னைப்போல அவளும் ஒரு பெண் தானே! அவளை எப்படியும் காப்பாற்றுவேன்! அவளைக் கற்புக்கரசி என்று நிலைநாட்டுவேன்” எனச் சபதம் செய்தாள்! சிந்தாமணியின் குழந்தையை மறைப்பதற்கு ஏற்பாடு செய்தாள்! உங்களிடம் ஓடிவந்தாள்! ஆண்டவன் உங்கள் பக்கம் இருந்துவிட்டான். உங்கள் குடும்பத்து குலதெய்வங்கள் உங்கள் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றிவிட்டன. சிந்தாமணியெனும் ஒரு பெண்ணின் வருங்காலத்திற்காக உங்கள் குலப்பெருமை அழியக்கூடாது என்று தெய்வம் தீர்ப்பு எழுதிவிட்டது! அதனால் எங்கள் திட்டம் நிறைவேறவில்லை. ஆனந்தியை விபத்திலே சிக்கவைத்த ஆண்டவன், என்னையும் உங்களிடம் சிக்கவைத்து, உண்மையைக் கக்கவைத்துவிட்டார்!” என்று பெருமூச்சோடு முடித்தான் டைகர்! அழகப்பன், நயினா இருவரையும் நன்றாக ஏமாற்றிவிட்டோம் என்ற மகிழ்ச்சி அவன் உள்ளத்திலே கரை புரண்டோடியது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமலே, வேதனையைக் கொட்டுபவன்போல் காட்சியளித்தான் அந்தக் கயவன்.

எங்கே ஆனந்தி விழித்துக்கொண்டு உண்மையை வெளிப்படுத்திவிடுவாளோ என்ற அச்சத்தில் அவன் முன்னேற்பாடாகத் தீட்டிய சூழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது!

இன்னொரு திட்டம்; எப்படியாவது அவர்களை பெங்களூருக்குப் பயணப்படுத்தி விடவேண்டுமென்பது! அதற்காக ஆரம்பித்தான் பேச்சை!

“நண்பர்களே! எங்கள் முயற்சியில் தோற்றுவிட்டோம். தெய்வம் ஜெயித்துவிட்டது! பரவாயில்லை; சகோதரி ஆனந்தியை நான் கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை! ஊருக்குப் புறப்படலாம்!” என்று பீடிகை போட்டான்.

அப்போது, அழகப்பனின் டிரைவர் அவசர அவசரமாக அங்கு ஓடிவந்து, “ஆனந்தி கண் விழிச்சாச்சு! தாயாரம்மாள் உங்களையெல்லாம் கூப்பிடுகிறார்கள்!” என்று கூறினான். மூவரும் உள்ளே சென்றார்கள் வேகமாக!

ஆனந்தி புது ஒளி நிறைந்த கண்களை விழித்தவாறு படுத்திருந்தாள். அவளருகே டாக்டர்களும் தாயாரம்மாளும் நின்றிருந்தார்கள்.

டைகர் ஓடிப்போய், “ஆனந்தி! ஆனந்தி!!” என்று அன்புவழியக் கூப்பிட்டான். அப்படி நடிக்கவேண்டிய கட்டம் அவனுக்கு. அது! ஆனந்தி அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையின் அர்த்தத்தை டைகர்மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அவனைச் சுட்டு சாம்பலாக்கிய பார்வை அது! சுருண்டுபோன புழுப்போல ஆகிவிட்டான், அந்த அக்ரமக்காரன். அவன் பக்கம் இருந்த பார்வையை அழகப்பன் மீதும் நயினா மீதும் திருப்பினாள் ஆனந்தி!

அவள் கண்கள் குளமாகிவிட்டன. அந்தக் கலக்கத்தின் பொருளை உணர்ந்துகொண்டவர்கள் போல நயினாவும் அழகும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவளோ, சிந்தாமணி உண்மையில் நிரபராதி என்பதை நிரூபிக்க வந்திருக்கிறாள். இவர்கள், அவள் இரக்க சுபாவமுடையவள்; அதனால் ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுக்க மனமின்றி ‘சிந்தாமணி நிரபராதி’ என்று பொய் கூறுவதற்கு வந்திருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள்! அவள் எதற்கு வந்தபோதிலும் சரி; மிக மிக நல்ல உள்ளம் படைத்தவள் என்ற தீர்ப்பை அழகும், நயினாவும் தங்களுக்குத் தாங்களே வெளியிடாமல் மனத்திற்குள் எழுதிவைத்துக்கொண்டார்கள்.

“ஹார்லிக்ஸ் கொடுங்கள்!” என்று டாக்டர்கள் சிபார்சு செய்தனர். அவசர அவசரமாக டைகர் ‘ஹார்லிக்ஸ்’ தயாரித்து, அதை ஆனந்தியின் உதட்டருகே<!-- source join: scan 65 ends அதை ஆனந்தியின் உதட்டருகே; scan 66 begins கொண்டுபோனான். --> கொண்டுபோனான். அதை அவள் மறுத்துவிட்டாள். ஆனாலும் நினைத்தார்கள், அவளுக்கு ‘ஹார்லிக்ஸ்’ தேவையில்லையென்று ஆனால் அவளுக்கு இப்போது அந்த டைகரின் உபசாரம் தேவையில்லை! ஏன்; டைகரே தேவையில்லை! அவளே ‘டைகரா’க மாறியிருக்கிறாள் இப்போது!

பாதகன் டைகரைப் பழிவாங்கும் புலிக்குணம் பெற்று விட்டது, அந்தப் புள்ளிமான்!

“ஒய்வாக இருக்கட்டும்—ஒன்றும் பேசாதீர்கள்” எனக் கூறி டாக்டர்கள் அகன்றார்கள். இவர்களும் அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

“அம்மாடி! கண்ணு!” என்று அருகே சென்று செல்லமாகக் கொஞ்சினாள் தாயாரம்மாள்.

“உம்” என்று மாத்திரமே ஆனந்தியால் கேட்க முடிந்தது! “கொஞ்சம் ஹார்லிக்ஸ் சாப்பிடு அம்மா! ரொம்ப களைப்பாயிருக்கும்!”—இது தாயாரம்மாள்!

ஆனந்தி கண்களைத் திருப்பி தாயாரம்மாளை ஏற இறங்கப் பார்த்தாள். மீண்டும் அவள் கண்கள் கலங்கின. தாயாரம்மாள் ‘ஹார்லிக்ஸை’ எடுத்துக் கொடுத்தாள். அதை ஆனந்தி முழுவதுமே குடித்தாள். டைகருக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. அழகப்பனுக்கோ எண்ண அலைகள் இதயத்தில் குழுமி எழுந்தன!

“எவ்வளவு நல்லவள்—யாரோ ஒரு தவறு செய்த பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவளுக்கு எவ்வளவு ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது! தன் நிலைமறந்து, எதிரே வருவது என்ன என்கிற உணர்ச்சியுமற்று, ஒரு பெண்ணுக்கு வாழ்வளிக்க விரும்பிய இவளது இருதயத்திற்கு ஈடு இணைதான் ஏது! அழகி மட்டுமல்ல; அன்பின் உரு! ஆகா, இவளது கண்களிலேதான் எத்துணை ஆழமான கவர்ச்சி! ‘குஞ்சி அழகும், கொவ்வை இதழ் அழகும், கோமளக் கண் அழகும் அழகல்ல; இவைகள் அனைத்தையும் விட மேலான என் நெஞ்சத்து அழகே அழகு’ என்று சொல்லாமல் சொல்லுவதுபோல் அவளது அற்புத விழிகள்<!-- source join: scan 66 ends அவளது அற்புத விழிகள்; scan 67 begins அசைந்துகொண்டிருக்கின்றனவே! --> அசைந்துகொண்டிருக்கின்றனவே! பிறர் கெடுவதையே விரும்புகிற இந்த வையகம் ஆனந்தி போன்ற ரோஜா மலர்களையும் அரளிப்பூ கூட்டத்தினிடையே துவளியிருக்கிறது என்பதை நான் ஆதார பூர்வமாக உணர முடிகிறது! இந்த நல்ல பெண்மணிகளன்றே நாட்டையும் வீட்டையும் வாழ்விக்கவந்த உத்தமிகள்! எனக்கு வர இருந்தவள் சிந்தாமணி! அல்ல; அல்ல! புழுதி மண்ணிலே அழுந்து சிந்திவிட்ட மணி! சிதறிவிட்ட மணி! அவளுக்குப் பெயர்தான் சிந்தாமணி! இவளோ ஆனந்தி! பெயரிலே கொஞ்சம் நவநாகரிக பாணி மினுக்குகிறது! உத்தியோகமும் அப்படித்தான்! ஆனால் உள்ளமோ தங்கம்! தங்கம் என்று கூடச் சொல்ல இயலாது—அந்த உபமானத்திற்கும் இந்த டைகர் புதிய வியாக்கியானம் கொடுத்துவிட்டான். இது தணல் படாத தங்கம்! கரம் படாத முல்லை! களங்கம் படாத வெள்ளி நிலவு! இந்த மாதரசி எனக்கு வாழ்க்கைத் துணையானால்?......”

கேள்விக்குறியில்லை; ஆவலைக் காட்டும் அறிகுறி எழுந்தது அழகப்பனின் இருதயத்தில்! நினைவு காட்டாறு தானே! எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பிரயாணம் செய்யுமல்லவா? அந்தப் பிரயாணத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டே! காட்டாறு காட்டிலேயே பாய்ந்து விரிந்து மறைந்து ஒழிந்துவிடும்! அல்லது கழனிக் கிடையே செல்லும் குட்டி வாய்க்கால்போல சிறுத்துக் கடலிலே கலக்கும் இரண்டாவது நிலையைப்பெற்றது அழகப்பனின் நினைவு நதி!

அவனை ஆனந்தி, நோய்ப் படுக்கையிலிருந்தே கவர்ந்துவிட்டாள். அவளது அன்பு இதயத்தை எப்படியும் தன் இதயத்தோடு பதித்துவிடவேண்டுமென்று தீர்மானம் செய்துகொண்டான்.

மணமகள் தேடும் படலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆனந்தியைத் தன் துணைவியாக்கிக்கொள்ள வேண்டியதுதான் தன் வாழ்வின் அடுத்த அத்தியாயம் என்று முடிவு செய்தான்.

அம்மாவையும் நயினா முகம்மதுவையும் ஊருக்கு அனுப்பிவிட்டு, தான் பாலையூர் மருத்துவமனையில் ஆனந்திக்கு உதவியாக இருந்து, அந்தப் பணிபுரியும் படலத்திலேயே குறிக்கோளை வெளியிட்டு விடலாமென்று திட்டம் வகுத்தான்.

“பாலையூர் மருத்துவ மனையில் ஆனந்தியோடு பழகும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது அவள் என்னை உணர்வாள்! நான் அவளை உணர்வேன்! எண்ணம் ஈடேறும்! வண்ணம் திட்டப்படும் என் வாழ்வுக்கு” எனக் கற்பனை செய்தான். எப்படியும் நயினாவையும் அம்மாவையும் ஊருக்கு அனுப்பவேண்டும்!

இதையப்போலவே நயினாவும் எண்ணிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் ஆனந்தியை மனத்தில்வைத்து பூஜிக்க ஆரம்பித்துவிட்டான். சுருக்கமாகவே சொல்லிவிடலாமே; நயினா ஆனந்தியைக் காதலிக்கிறான். அவன் நினைக்கிறான்; எப்படியாவது அழகப்பனையும் தாயாரம்மாளையும் பெங்களூர் அனுப்பிவிட்டு, பாலையூரில் தானிருந்து பணி புரியலாமென்று! இவை எதுவுமே புரியாமல் டைகர் எதிர்காலத்தைப்பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்!

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்