அத்தியாயம் 6 · 6 / 23
அத்தியாயம் 6
Chapter 6
மூல ஸ்கேன் 52 – 59 before centered 7
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
6
அவளை உடனடியாகத் தூக்கி மடிமீது சாய்த்துக் கொண்டான் அழகப்பன்! அவள் தலையிலேயிருந்து குபு குபு வென்று இரத்தம் பெருக்கெடுத்தபடி இருந்தது. “யாரது? லேடி டாக்டர் மாதிரியல்லவா இருக்கிறது!” என்று வியப்போடு கூறினான் நயினா முகமது! “ஆனந்தியம்மா! ஆனந்தியம்மா!”—என்று பதைபதைத்த குரல்களோடு ஊரார் அந்த இடத்தில் கூடிவிட்டனர்.
ஆனந்தி கண் விழிக்கவில்லை. பிரக்ஞை இல்லாமல் இருந்தாள். தலையிலே பிளந்து வழியும் இரத்தம் நிற்கவில்லை. அழகப்பன் அருகிலிருந்தவர்களைப் பார்த்து, “இந்த ஊரில் நல்ல ஆஸ்பத்திரி வேறு எங்கு இருக்கிறது?” என்று ஆவலோடு கேட்டான். “இங்கு ஏது ஆஸ்பத்திரி? ஒரே ஒரு ஆஸ்பத்திரிதான்—அவங்களுக்கே தான் இப்படி வந்துவிட்டதே!” என்று அங்கலாய்த்தனர் சுற்றி இருந்தோர்! “பக்கத்திலே ஐந்தாறு மைல் போனால் பாலையூர் இருக்கிறது. ஒரு சின்ன ‘டெளன்’ மாதிரி! அங்கு இருக்கு நல்ல ஆஸ்பத்திரி!” என்று ஒருவன் பாதை காட்டினான். ஆனந்தியைக் காரிலே தூக்கிவைத்துக்கொண்டு அழகப்பன் முதலியோர் புறப்பட்டனர். தாயாரம்மாளின் மடியிலே ஆனந்தி சாய்ந்து கிடந்தாள். நயினா முகமது ஒரு துணியினால் ஆனந்தியின் தலையை அழுத்திப் பிடித்து இரத்தப் பெருக்கைக் குறைக்க முயன்றான். துணியையும் மீறி வெளிவந்த இரத்தம் காரின் உட்பகுதியையே சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. தாயாரம்மாள் மனம் படாதபாடு பட்டது. “என்னமோ அப்பா; இந்த மூதேவி வீட்டிலே சம்பந்தம் பேசியதிலேயிருந்து நமக்குச் சனியன் பிடித்தது!” என்று அங்கலாய்த்துக்கொண்டாள். பாலையூர் மருத்துவ மனையில் ஆனந்திக்கு அவசர அவசரமாகச் சிகிச்சை ஆரம்பமாயிற்று. இரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டதென்றும் இன்னும் சிறிது தாமதித்திருந்தால் உயிருக்கு ஆபத்து வந்திருக்கலாம்<!-- source join: scan 52 ends ஆபத்து வந்திருக்கலாம்; scan 53 begins என்றும்... --> என்றும் டாக்டர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். தாயாரம்மாளை மருத்துவ மனையில் விட்டுவிட்டு அழகப்பனும் நயினாவும் விபத்து குறித்துப் போலீசாருக்குத் தெரிவிக்கப் புறப்பட்டனர்.
ஆனந்திக்குச் சிகிச்சைகள் எல்லாம் முடிவுற்றன. தலையிலே நல்ல காயம். அதற்கு சிறு தையல் போட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் மயக்கமுற்ற நிலையிலே இருந்தாள். எப்பொழுதாவது ஒருமுறை புரண்டு படுக்க உடலை வளைப்பாள். அப்போது அவளது உதடுகள் “நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று உச்சரிக்கும்.
டாக்டர்கள், அடிபட்ட கிலியில் உளறுவதாக முடிவுகட்டினர். உளறுகிறாள் என்பது உண்மை; ஆனால் அடிபட்ட பீதியில்தான் அப்படி உளறுகிறாள் என்பது என்ன நிச்சயம்!
“நிறுத்துங்கள்!”
“நிறுத்துங்கள்!!”
அழகப்பனை அவனது அவசர முடிவுகளிலேயிருந்து விடுவிப்பதற்காகவும் அவள் அந்தக் கூச்சலை எழுப்பியிருக்கலாம்.
சிந்தாமணி ஒரு குழந்தைக்குத் தாயில்லை என்பதும்—அவள் கன்னிப் பருவத்தினாள் என்பதும்—ஆனந்தி அறியாததல்லவே!—
அவளது நல்ல இருதயம் முதன் முதலாகப் பிறருக்குக் கேடு விளைவிக்க முயன்று அந்த முயற்சியிலேயே துவண்டிருக்கிறது—அதன் விளைவுதான் கார் விபத்து!
சிந்தாமணி குளக்கரையிலே தடுமாறி விழுந்து மருத்துவ மனைக்கு கொண்டுவரப்பட்டதும், டைகர் மூளையிலே மூர்க்கத்தனமான திட்டங்கள் மூண்டெழுந்தன. அந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஆனந்தியைத்தான் அவன் தேர்ந்தெடுத்தான். பெண் வீடு பார்க்க வருகிறவர்களை வழியிலேயே தீர்த்துக்கட்ட ஆட்கள் அனுப்பப்பட்டிருக்க<!-- source join: scan 53 ends அனுப்பப்பட்டிருக்க; scan 54 begins கிறார்கள். -->கிறார்கள். ஒருவேளை அவர்களிடமிருந்து மாப்பிள்ளை வீட்டார் விடுபட்டுவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகத்தோடு டைகர் திரிந்துகொண்டிருந்த போதுதான் சிந்தாமணி மருத்துவ மனைக்கு வரநேர்ந்தது. மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பார்க்க எப்படியும் வைத்திய சாலைக்கு வந்துதான் ஆகவேண்டும் எனக் கருதினான். அவன் அப்படி எண்ணியதிலே தவறில்லைதான். சிவநேசர் சாஸ்திரம், சம்பிரதாயம், சகுனம் முதலிய தடைகள் பலவற்றை விதித்துங்கூட அழகப்பன் திருட்டுத்தனமாக சிந்தாமணியைப் பார்த்துவிட்டதானே விரும்பினான்! இந்த மன தத்துவத்தை உணர்ந்த டைகர், சிந்தாமணியை வெறுப்புக்குரியவளாக ஆக்க வேண்டுமென்ற திட்டமொன்றை வெளியிட்டான் ஆனந்தியிடம்! அவளால் அதை நிராகரிக்கக்கூட முடியவில்லை. “மன்னிக்க முடியாத பாதகம்!” என்று மறுத்துரைத்தாள். அழகப்பனுக்கும் தனக்கும் வெகுகாலமாக விரோதமென்றும், அவன் சிந்தாமணியை மணப்பதை எப்படியும் தடுத்தாக வேண்டுமென்றும் குதித்தான் டைகர்! “அவள் வாழ்வு முன் நிறைந்த காடாகிவிடுமே!” என்று கண் கலங்கினாள் ஆனந்தி.
“அதைப்பற்றிய கவலை உன்னைவிட எனக்கு அதிகமாக உண்டு! சிந்தாமணி எனக்குச் சொந்தக்காரி—அவளுக்கு ஏற்ற மணமகனைப் பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டியது என் பொறுப்பு!” டைகர் மிக அக்கறையோடு பேசினான். ஆனந்தியின் உடல் நடுங்கிற்று. பாலகங்காதரத் தேவரின் பள்ளியறையிலேகூட அப்படி நடுங்கவில்லை அவள்!
“என்ன; சொன்னபடி செய்யப் போகிறாயா; அல்லது என்னை மறந்துவிடப் போகிறாயா?” என்று உறுமினான் அவன். பதைப்பும்—பரபரப்பும்—அவளை ஆட்டி வைத்தன. ஒத்துக்கொண்டுதானே தீரவேண்டும்—ஆரம்பத்திலேயே தாட்சண்யத்திற்காக அவனிடம் தன்னை ஒப்புவித்தவளாயிற்றே அவள்? இன்னொரு பெண்ணுக்குப் பிறந்<!-- source join: scan 54 ends பிறந்; scan 55 begins திருக்கிற -->திருக்கிற குழந்தையை சிந்தாமணியிடம் படுக்க வைப்பது என்பதுதான் திட்டம். ஒரு பெண்ணிடம் ஒரு குழந்தை படுத்திருப்பது—கேட்பதற்கு பயங்கரமாக இல்லையென்றாலும்—பிரசவ ஆஸ்பத்திரியில்—அதற்கு அர்த்தமே வேறுயிற்றே! அதுவும் தாலி கட்டப்படவேண்டிய தையல்! கன்னி கழியாத பருவப்பெண்! திருமணத்திற்கு நாள் பார்க்கவேண்டியதுதான் பாக்கி—என்ற அளவிலேயுள்ள நிலைமை! சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சதிவேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டான் டைகர்!
அழகப்பன் மருத்துவ மனையிலிருந்து அக்கினிப் பிழம்பு போன்ற சொற்களை இறைத்துவிட்டுப் போனதும் ஆனந்தி நிலை தடுமாறிவிட்டாள். சிந்தாமணி படுத்திருந்த பக்கமாக வேகமாக நடந்தாள். அவள் படுக்கையில் அயர்ந்தவாறு பக்கத்திலிருந்த குழந்தையை வியப்போடு பார்த்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள். அவளால் அசையவோ—எழுந்திடவோ இயலாது.
“என்னம்மா இது, ஏது இந்தக் குழந்தை?” என்று ஆனந்தியிடம் கேட்டாள் சிந்தாமணி. ஆனந்தியின் கண்களில் நீர் பொல பொலவென உதிர்ந்தது. ஓடிப்போய் குழந்தையைத் தூக்கிக்கொண்டு “சிந்தாமணி! சிந்தாமணி!” என்றாள். அதற்குள் அவள் தொண்டை அடைத்துக்கொண்டது.
“என்னம்மா—எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! பக்கத்திலே குழந்தை! கேட்டால் அழுகை! யாரோ இரண்டு பேர் வந்தார்கள்; அவர்கள் எங்க அப்பாவை ஏதோ பேசினர்கள்! என்ன விஷயம்?” என்று விசாரிக்கத் தொடங்கினாள்.
“ஒன்றுமில்லை சிந்தாமணி! உடம்பை அலட்டிக் கொள்ளாதே! மயக்கத்தில் உனக்கு அப்படியிருக்கிறது!” என்று கூறிவிட்டு குழந்தையுடன் அறைவிட்டு அகன்றாள்<!-- source join: scan 55 ends அறைவிட்டு அகன்றாள்; scan 56 begins ஆனந்தி. --> ஆனந்தி. ஆனால் அவள் கண்ணை விட்டு சிந்தாமணியின் களங்கமற்ற முகம் மறையவில்லை.
இளமையின் துடிப்பு நிறைந்த அவள் அங்கமும், தங்கம் நிகர் இதயத்தை எடுத்துக் காட்டும் இனிய முகமும் “வழுக்கி விழுந்தவள்” என்ற அடைமொழியால் அழுக்கேறி விடுமே என எண்ணியபோது ஆனந்தியால் வேதனை தாங்கமுடியவில்லை. “பாலகங்காதரத் தேவரின் பிடியிலே சிக்கி உருக்குலைந்தபிறகு எவ்வளவு பாடுபட்டேன் நான்—அது டைகருக்குத் தெரிந்துவிட்டது என அறிந்ததும் எப்படிப் பதைத்துப் போனேன் நான்—எனக்கே இப்படியிருந்தால், ஒரு குற்றமும் புரியாதவளைப் பற்றி ஊர் கேலி பேசினால் என்ன ஆவாள் அவள்! அய்யோ கொடுமை—மிக்க கொடுமை! நான் லேடி டாக்டர் வேலைக்கே லாயக்கில்லை! பெண்களை அவமானப் படுகுழியிலிருந்து மீட்பதற்காக ஒரு சில லேடி டாக்டர்கள் பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்; அது உண்மையோ பொய்யோ தெரியாது—ஆனால் என்னைப் பொறுத்த வரையிலே குற்றமற்ற ஒரு பெண்ணை குப்பை மேட்டு நாயினும் கீழாக ஆக்கிவிட்டேன்.”
ஆனந்தி குமுறினாள். கதறினாள். தன் தவறுக்கு எப்படிக் கழுவாய் தேடிக்கொள்வது என்று பதறினாள். அந்தச் சமயம் வேம்பு வேறு வந்து சேர்ந்தான். அந்த உளறுவாயன், சிந்தாமணியை டைகர் திருமணம் செய்து கொள்ளவே இப்படியெல்லாம் திட்டம் போடுவதாக உளறிவைத்தான்.
ஆனந்திக்கு இந்தச் சேதி அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டியது. டைகருக்காகவே பெரும் பாதகம் செய்யத் துணிந்தாள். அந்தப் பாதகம் டைகரின் புதிய நோக்கத்திற்குப் பாதையாக அமைகிறது என்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தும்பைப்பூ போன்ற ஒருத்தியின் எதிர்காலத்தில் கரிபூசிவிட்டு தனக்கும் துரோகம் நினைப்பவன் வெற்றியடையக்கூடாது என்று உறுதி பூண்டாள். கலங்கிய அவளது உள்ளம் கண்டிப்பான<!-- source join: scan 56 ends கண்டிப்பான; scan 57 begins முடிவெடுத்தது. --> முடிவெடுத்தது. டைகர் குறுக்கிட்டான். அவளைத் தடுக்க முடியவில்லை. உண்மையை நிலநாட்டும் வைர நெஞ்சத்தோடு அவள் புறப்பட்டாள். “போ! போ! பெண்ணே! இந்த டைகரின் எண்ணத்தில் யாரும் மண்ணைப் போட முடியாது!” என்று கர்ஜனை புரிந்து கலகலவெனச் சிரித்தான். சிந்தாமணி படுத்திருக்கும் பக்கம் திரும்பி உறுமினான். அதற்குள் ஆனந்தி தெருவிலே ஓட ஆரம்பித்தாள். சிவநேசர் வீட்டிலே மாப்பிள்ளை வீட்டாரைச் சந்தித்து உண்மையைக் கூறி மன்னிப்புப் பெறவே அவள் அப்படி ஓடினாள்.
ஆனால் அவள் ஆசை பூர்த்தியாகவில்லை. விபத்துக்கு ஆளானாள்.
“நிறுத்துங்கள்!”
“நிறுத்துங்கள்!!”
இந்த வார்த்தை மட்டுமே புலம்பலாக வெளிவருகிறது. டாக்டர்களோ அதை உளறல் என்று கூறிவிட்டார்கள்.
போலீஸ் ஸ்டேஷன் வேலைகளை முடித்துக்கொண்டு அழகப்பனும் நயினா முகமதுவும் திரும்பி வந்தார்கள். ஆனந்திக்கு சுயநினைவு வரவில்லை.
“நிறுத்துங்கள்!” என்ற வார்த்தையை மட்டும் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருவதை அழகப்பன் கவனித்தான்.
மருத்துவ மனையில் தான் கண்ட கொடிய காட்சிக்கும்—இவளது புலம்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று நயினா முகமதுவிடம் கேட்டான். நயினா முகமது ஆழ்ந்து சிந்தித்தானே தவிர உடன் பதில் கூறவில்லை.
“என்னடா பெரிய புத்தர் மாதிரி சிந்திக்கிறாய்? பதில் சொல்லேண்டா!” என்று அதட்டினான், அழகு!
“புத்தர் மட்டுந்தான் சிந்தித்தாரா? எங்கள் நபிகள் நாயகம் சிந்திக்கவில்லையா?... உங்கள்...இந்து மதத்தில்
“யாரும் சிந்திக்கவில்லை இதுவரையில்—டே, நயினா! மத ஆராய்ச்சிக்கு இதுவா நேரம்? எவ்வளவு நெருக்கடியிலே சிக்கிக்கொண்டிருக்கிறோம்...அதை மறந்துவிட்டு”
“என்னப்பா நெருக்கடி? ‘எல்லாவற்றையும் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்’ என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்? நடப்பதெல்லாம் நல்லதுக்குத்தான்!”
“எது நல்லதுக்கு? பெண் பார்க்க வந்த இடத்தில் இவ்வளவு கோளாறும் நல்லதுக்கா?”
“ஆமாம்—பெண், தப்பானவள் என்று முதலிலேயே தெரிந்துவிட்டது எவ்வளவு நல்லதாய்ப் போச்சு! பலகாரம் கசப்பா, இனிப்பா—என்று பார்வையிலேயே தெரிந்துவிட்டதேயப்பா! அதுவே நாக்கைக் கெடுக்காமல் இருந்தது நம்ப நல்லகாலந்தானே!”
அழகு, நயினா முகமதின் பேச்சில் திருப்தி அடையாதவனாய் எழுந்து தாழ்வாரத்தில் உலாவத் தொடங்கினான். அப்போது டைகர் அவசர அவசரமாக மருத்துவ மனையில் நுழைந்தான். அவனைப் பார்த்த அழகப்பன், “வாங்க! வாங்க” என்று உபசரித்தான் சற்று பயத்துடன்! “மன்னிக்கவேண்டும்!” என்று கேட்டுக்கொண்டான். “சே! சே!! அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் அப்படியெல்லாம் ஒன்றும் நினைக்கமாட்டேன். தவறுதல் சகஜம்!” என்று இளித்தபடி ஆறுதல் கூறினான் டைகர்! பிறகு ஆனந்தியை போய்ப் பார்த்தான். அவள் மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.
“நிறுத்துங்கள்!”
“நிறுத்துங்கள்!!”
இந்த சொல்மட்டும் விட்டுவிட்டு ஒலித்தபடி இருந்தது. மீண்டும் டைகர் அழகப்பனுடன் பேசிக்கொண்டே தாழ்வாரத்திற்கு வந்தான்.
“ஆனந்திக்கும் உங்களுக்கும் என்ன உறவு?” என்று கேட்டான் அழகப்பன்,
“சகோதரி மாதிரி வைத்துக்கொள்ளுங்களேன்—தூரத்து உறவு! அவ்வளவுதான்!”
“எங்கே அவ்வளவு அவசரமாக ஓடிவந்தாள்?”
“எல்லாம் உங்களுக்காகத்தான்!”
“எனக்காகவா?”
“ஆமாம் உங்களுடைய சந்தேகத்தை மாற்ற; சிந்தாமணியைக் களங்கத்திலிருந்து விடுவிக்க!!”
“என்ன? என்ன? சிந்தாமணியைக் களங்கத்திலிருந்து விடுவிக்கவா?”
“ஆமாம், அவள் மிகவும் நல்லவள்!”
“யார்?”
“ஆனந்தி!”
“சிந்தாமணி?”
“அவளும் தங்கமானவள்தான்!”
இதைக் கேட்டு அழகப்பன் வியப்பில் மூழ்கிவிட்டான்.
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்