பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 5 · 5 / 23

அத்தியாயம் 5

Chapter 5

மூல ஸ்கேன் 45 after centered 5 – 51

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

5

எரிமலைபோல் வரும் அழகப்பனையும் அவனைக்கட்டுப்படுத்தியவாறு பின்தொடரும் நயினாவையும் கண்ட ஆனந்தி, ‘என்ன? என்ன நடந்தது?’ என்று கேட்டாள்.

“இன்னும் என்ன நடக்கவேண்டும்? நடக்கவேண்டிய தெல்லாம் நடந்துவிட்டது!” என்று உரக்கக் கத்தினான் அழகப்பன். அவன் வாயைப் பொத்தியவாறு நயினா முகமது ஆனந்தியைப் பார்த்து, “என்னம்மா, சிந்தாமணியின் பிரசவம் எப்போது ஆயிற்று?” என்று கேட்டான். “இன்று காலையிலேதான்” என்று பதில் சொல்லிவிட்டு ஆனந்தி, டைகரின் முகத்தைப் பார்த்தாள். அகத்தில் எழுந்த ஆனந்தக் களிப்பை வெளியிலே காட்டிக்கொள்ளாமல் டைகர், ஆனந்தியைக் கண்ஜாடை செய்து வேறுபக்கம்<!-- source join: scan 45 ends வேறுபக்கம்; scan 46 begins அழைத்துக்கொண்டு போனாள். --> அழைத்துக்கொண்டு போனாள். அவமானப்படுகுழியில் தள்ளப்பட்டபோதிலும்—பயங்கரம் நிறைந்த எதிர்காலத்திலேயிருந்து நிரந்தரமாக மீட்கப்பட்டுவிட்டோம் என்ற ஆறுதல் ஒருபக்கம் தலைகாட்ட அழகப்பன் வெகுவேகமாக சிவநேசரின் வீட்டுக்குள்ளே நுழைந்தான்.

“என்ன மாப்பிள்ளை! இவ்வளவு வேகம்!” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் சிவநேசர். “ஓகோ! பல்லை வேறு இளிக்கிறீர்? பவிசு கெட்டவர்களே! எங்கள் குடும்ப கௌரவத்தையே குழியில் தள்ளி கோபுரம் கட்ட நினைத்த கொடுமதியாளர்களே! சிரிப்பு வேறு சிரிப்பு!” என்று கண்ணைக் கக்கினான் அழகப்பன். சிவநேசர் அதிர்ச்சி அடைந்தார். சிவகாமி மரமானாள். தாயாரம்மாள் விழித்தாள். நயினா முகமது அழகப்பனை சாந்தப்படுத்துவதில் முனைந்து நின்றான். “நயினா! என்னப்பா—என்ன நடந்தது!” என்று தாயாரம்மாள் பரபரப்போடு விசாரித்தாள்.

“அம்மா! நாசம் நடக்க இருந்தது! மோசம் போக இருந்தோம்! நல்ல வேளை; வேஷம் கலைந்துவிட்டதம்மா—தப்பி விட்டோம்! தப்பிவிட்டோம்!” என்று தணல்மேல் நிற்பவன்போல கூச்சலிட்டான் அழகப்பன். “புரியவில்லையா அம்மா உனக்கு! இந்தப் பேயர்கள் பெற்ற குலக்கொடியை இப்போது பார்க்கக்கூடாது என்று தடை போட்டார்களே, ஏன் தெரியுமா? நாள் நட்சத்திரத்தின் மீது பாரத்தைப் போட்டார்கள்; அதன் மர்மம் புரியுமா? ‘மாப்பிள்ளை வரவேண்டாம் பெண் வீடு பார்க்க’ என்று கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்களே; அதற்குக் காரணம் புரிந்துவிட்டதம்மா!” என்று பேசிக்கொண்டேயிருந்தான் அவன். சிவநேசருக்கோ தன் கண்முன்னால் நடைபெறும் சம்பவமும், காதிலே விழும் நெருப்பு மொழிகளும் உண்மைதானா? என்ற ஐயமும் அதிர்ச்சியும் பிறந்தது! அசைவற்றுப் போனார் அவர்.

“மாப்பிள்ளை என்ன சொல்லுகிறீர்?” என்று சாவதானமாகக் கேட்டார் நயினாவிடம்! நயினா மெளனமாக<!-- source join: scan 46 ends நயினா மெளனமாக; scan 47 begins நின்றான். --> நின்றான். அழகப்பனும் மறுபடியும் ஆத்திரக் குரலெழுப்பத் துவங்கினான்.

“மாப்பிள்ளை என்று என்னை அழைக்காதீர்! மானம் பெரிது என வாழ்கிறவர்கள் நாங்கள்! எங்களுக்கும் மானத்தைப்பற்றியே கவலைப்படாத உங்களுக்கும் சம்பந்தி உறவு ஏற்பட எந்தக் காலத்திலும் இயலாது!”

“தம்பி! கொஞ்சம் வார்த்தையை அடக்கிப் பேசு! விஷயத்தைச் சொல்லாமல் வெடிக்கிறாயே; ஏன்? மானம் அவமானத்தைப்பற்றி எனக்குப் பாடம் சொல்லித்தர உனக்கு வயது போதாது தம்பி! நிதானமாகப் பேசு! பதறாதே! பைத்தியம் என்று முடிவுகட்டுவார்கள்; உன் போக்கைப் பார்த்து!”

சிவநேசர் அமைதியாகவும் ஆனால் கண்டிப்பாகவும் இந்த வார்த்தைகளைப் பிரயோகித்தார். தாயாரம்மாள், அழகப்பனின் ஆவேச ஆட்டத்தை நிறுத்தி ‘விஷயத்தைத் தான் சொல்லேண்டா’ என்று கத்தினாள்.

“சொல்லக்கூடிய விஷயம் இல்லையம்மா! ஆனால் சொல்லாமலும் இருக்கமுடியாது! இதோ நிற்கிறாரே; இந்தப் பெரிய மனிதர்; இவர் நமக்கு அளிப்பதாக வாக்களித்த பெண் இருக்கிறாளே; வைரச்சிலை! கூழாங்கல்! சிந்தாமணி! அவள் இன்று காலையில்தான் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருக்கிறாள்—இந்த உத்தமர் தாத்தாவாகியிருக்கிறார்!” அழகப்பன் வாய்மூடவில்லை; சிவநேசர், “அய்யய்யோ கடவுளே!” என்று கூவிவிட்டார்!

“யார் இந்த அபாண்டத்தைக் கட்டிவிட்டது?” என்று சிவகாமி ஒப்பாரி வைக்கத்தொடங்கினாள்.

அழகப்பன் தாயாரிடம் நெருங்கி “அம்மா! இனி ஒருகணமும் இங்கிருக்கக்கூடாது! உடனே புறப்படு! இந்தக் குப்பை மேட்டில் பெண் கேட்க வந்தோம் என்று யாருக்காவது தெரிந்தால்கூட அவர்கள் இனிமேல் நம்மை மதிக்கமாட்டார்கள்! நம் சம்பந்தத்தை விரும்ப<!-- source join: scan 47 ends விரும்ப; scan 48 begins மாட்டார்கள்! -->மாட்டார்கள்! புறப்படம்மா; புறப்படு!” என்று அவசரப்படுத்தினான். சிவநேசர் வெறிகொண்டவர்போல் “என் பெண், தாயாகிவிட்டாளா? அகரமம்! அபாண்டம்! அய்யோ! அடுக்காது! அடுக்காது! யாரோ என் குடும்பத்தைக் கெடுக்க சூழ்ச்சி செய்துவிட்டார்கள்! பெரிய இடத்திலே உறவு ஏற்படப் போகிறது சிவநேசனுக்கு என்று உறுமிக்கொண்டிருந்தவர்கள் இப்படி ஒரு பயங்கரமான உபாயத்தைக் கையாண்டிருக்கிறார்கள்! நம்பாதீர்கள்! நம்பாதீர்கள்!! யாரோ கட்டிவிட்ட கதை இது!” என்று புலம்பியழுதார்!

“ஆகா! உணர்ச்சிகரமான நடிப்பு! நாடகத்திலே சினிமாவிலே ‘அப்பா’ வேடத்திற்கு அபாரமான பொருத்தம்!” என்று கூறி கலகலவெனச் சிரித்தான் அழகப்பன்.

“அய்யோ—ஊர் பேச்சைக் கேட்காதீர்கள்!” என்று சிவகாமி ஓடிவந்து தாயாரம்மாளின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கத்தினாள்.

“யார் பேச்சையும் கேட்கவில்லையம்மா நான்! நானும் நயினாவும் நேரிலேயே பார்த்தோம்—லேடி டாக்டர் ஆனந்தியின் ஆஸ்பத்திரியில் சிந்தாமணி—பக்கத்திலே குழந்தையுடன் படுத்திருந்த காட்சியை நேரிலே பார்த்தோம்!”

“அது யார் குழந்தையோ என்னமோ?” சிவகாமி ஓலமிட்டாள்.

“பிரசவக் களைப்பால் சிந்தாமணி அயர்ந்திருக்கும் விஷயத்தையும் அங்கிருக்கும் நர்சு சொன்னாளம்மா! கண்ணால் கண்டது பொய்யல்ல! காதால் கேட்டதும் பொய்யல்ல! புறப்படம்மா உடனே இதைவிட்டு!”

“சிவகாமி! சிவகாமி! என்ன இது? என்னடி மோசம் இது! சிந்தாமணிக்குப் பிரசவமா? அய்யோ தெய்வமே!” என்று தலையிலே அடித்துக்கொண்டார் சிவநேசர். சிவகாமியோ தரையிலே விழுந்து புரண்டு அழுதாள்.

“தம்பி! உங்களுக்கு இந்த வீட்டு உறவு வேண்டாம் என்றால் பிடிக்கவில்லையென்று சொல்லிவிட்டுப் போய்<!-- source join: scan 48 ends சொல்லிவிட்டுப் போய்; scan 49 begins விடுங்கள்! --> விடுங்கள்! அதற்காக இப்படியெல்லாம் எறிமலைக் குழம்பை வாரி எங்கள்மீது இறைக்காதீர்கள்! நீங்கள் செல்வர் வீட்டுப்பிள்ளை! நாங்கள் ஏழைகள்! ஏணி வைத்தாலும் உங்களுக்கும் எங்களுக்கும் எட்டாது! உங்கள் போன்றவர்களின் உறவு வேண்டுமென்ற எங்கள் பேராசைக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்! சிந்தாமணி, கல்யாணம் ஆகவேண்டிய பெண்! கடைச் சரக்கல்ல அவள்! இதைப்போன்ற களங்கமும் பழியும், ஒரு கன்னிப் பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கி விடும் தம்பி! தயவுசெய்து உங்கள் தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்! சிந்தாமணி தங்கம்! மாசமறுவற்ற மல்லிகைப்பூ என் மகள்! அவளுக்குப் பட்டம் சூட்டவா உம்மைப் பெங்களூரில் இருந்து வரவழைத்திருக்கிறோம்? வேண்டாம்—என் பெண் உங்களுக்கு வேண்டாம்! போய்விடுங்கள்! பொல்லாங்கு பேசாமல் போய்விடுங்கள்!!”

சிவநேசர் உள்ளம் உடைந்து பொங்கினார். குழறி எழுந்த உணர்ச்சித் தீயைக் கொட்டினார். அழகப்பனும் ஆத்திரத்தின் உச்சியிலிருந்து ஒரு படியும் இறங்கவில்லை. சூழ்ச்சி பலிக்கவில்லை என்றதும் சுற்றி வளைத்துப் பேசி தப்பித்துக்கொள்ள வழி தேடுகிறீர்கள் என முடிவுகட்டினான். “நீர் ஆயிரந்தான் சொன்னாலும் சரி; உம்மை நம்ப முடியாது! நான் நேராகவே பார்த்தேன்; உமது மகளையும்—உமது பேரக்குழந்தையையும் ஆஸ்பத்திரியில்! விஷயம் வெளிச்சமாகிவிடும் என்றுதானே, எங்களை ஆஸ்பத்திரிக்குச் செல்லக்கூடாது—அபசகுனம் என்று தடுத்தீர்! அம்மாவின் ஒளி மங்கிய விழிகள் எப்படியாவது ஏமாற்றி வழி தவறிய பெண்ணை என் தலையில் கட்டிவிடலாமென்ற நம்பிக்கையில்தானே ‘மாப்பிள்ளை வரவேண்டாம்; அம்மா வந்தால் போதும்’ என்று கடிதம் எழுதினீர்கள்! ஆரம்பத்திலேயே அகப்பட்டுக்கொண்டீர்கள்; அரிச்சந்திர மயான காண்டம் நடத்திச் சமாளிக்கிறீர்கள்—நாங்கள் உங்களிடம் ஏமாந்திருந்தால் நாள்தோறும் “பாரதம்” அல்லவா நடக்கும் எங்கள் வீட்டில்!” என்று கேலியும்<!-- source join: scan 49 ends கேலியும்; scan 50 begins கிண்டலும் செய்தான் --> கிண்டலும் செய்தான்; இடையிடையே சீறியும் விழுந்தான் அழகப்பன். இவ்வளவு நேரம் மெளனமாக இருந்து இந்த அசம்பாவித நிகழ்ச்சியைக் கவனித்துக் கொண்டிருந்த நயினா முகமது, சிவநேசரை அணுகி மெதுவாக “நான் ஒன்று கேட்கிறேன் கோபித்துக்கொள்ளக்கூடாது! நீங்கள் சந்தேகப்படுவது தவறு என்றால் நீங்கள் ஏன் உங்கள் மகள் தூய்மையான பெண் என்பதை நிரூபிக்கக்கூடாது? அதற்காக முயற்சி எடுத்துக்கொள்ளுங்களேன்!” என்று கூறினான். சிவநேசர் சிறிது யோசித்தார். அதற்குள் அழகப்பன் குறுக்கிட்டான். “அடே நயினா! ஏமுட்டான்! இனிமேல் என்னடா நிரூபிப்பது! இருவரும் நேரிலேயே பார்த்தோம்—இதற்கு சாட்சிவேறு வேண்டுமா? புறப்படடா!” என்று அதட்டினான்.

“நிரூபித்தால்தான் நீங்கள் எங்கே ஒப்புக்கொள்ளப் போகிறீர்கள்! எங்கள் பெண்ணை—நாங்கள் பெற்ற கண்ணை—குறை சொல்ல வேண்டுமென்பதற்காகவே இவ்வளவு முன்னேற்பாடுகளும் செய்திருக்கிறீர்கள்! பரவாயில்லை! சிந்தாமணி அதிர்ஷ்டக்காரிதான்! உங்களைப் போன்ற அவசரக்காரர்களிடமிருந்தும்—அக்கிரமக்காரர்களிடமிருந்தும்—அவள் தப்பியது பெரிய அதிர்ஷ்டம்தான்!” என்று சிவநேசர் கடுமையாகப் பதில் கூறினார். சிவகாமிக்குத் தாங்கமுடியவில்லை. பெற்ற வயிறல்லவா? பெண்ணைப்பற்றி பிறர் ஒன்று சொல்ல சம்மதிக்குமா! மாசற்றவள் தனது மகள் என்பதை எப்படியாவது நிரூபித்துவிட வேண்டும் என்று தவித்தாள். “வாருங்கள் எல்லோருமே மறுபடியும் ஆஸ்பத்திரிக்குப் போவோம்! தீர விசாரிப்போம். என் மகள் தூய்மையானவள் என்பதை உணர்த்துகிறேன்” என்று உறுதியோடு எழுந்து நின்று மற்றவர்களையும் அழைத்தாள். “ஏன் லேடி டாக்டருக்கு ஏதாவது லஞ்சம் கொடுத்து ஏமாற்றலாம்—சிந்தாமணியை எப்படியாவது தலையில் கட்டிவிடலாம் என்ற ஏற்பாடா? வேண்டாம்! வேண்டாம்!” என்று கூறி தாயாரின் கையைப்<!-- source join: scan 50 ends தாயாரின் கையைப்; scan 51 begins பிடித்து... --> பிடித்து வெளியே அழைத்துக்கொண்டு புறப்பட்டான் அழகு! நயினாவுக்கும் எந்த முடிவும் தோன்றவில்லை. அவனும் பின்தொடர்ந்தான்.

“என் குடும்பத்தை அடியோடு கெடுத்துவிட்டுப் போகும் கொலைகாரர்களே! நீங்கள் உருப்படுவீர்களா? மண்ணாய்ப் போங்கள்!” என்று ஆவேசமாகக் கத்தி ‘சாப’ மிட்டார் சிவநேசர்!

“என் பெண் கெட்டவளா? அட தெய்வமே! இவர்கள் நல்லாயிருப்பார்களா?” என்று மாரடித்துக்கொண்டு கோவென அழுதாள் சிவகாமி!

கூச்சலுக்கும் குழப்பத்துக்குமிடையே அழகப்பன், தாயாரை காரில் உட்காரவைத்து, தானே காரை வேகமாக ஓட்டுவதற்கு அமர்ந்தான். சிவநேசர் சிவகாமி இருவரும் மாறி மாறிச் சபித்துக்கொண்டேயிருந்தார்கள்! அந்த சாபத்தைப் பொறுக்கமுடியாத தாயாரம்மாள். “அட, ஏன் இப்படித் திட்டுகிறீர்கள்; நீங்கள் நாசமாய்ப்போக! என் பிள்ளையை ஏமாற்றவைத்து, எங்கள் மதிப்பையே குலைத்த நீங்கள் புழுத்துத்தான் சாவீர்கள்!” என்று பதிலுக்கு ‘சாபம்’ கொடுத்தாள். நல்லவேளை இருவரின் சாபங்களுக்கும் சக்தியில்லாமல் போய்விட்டது! அழகப்பன் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான். கார் புறப்படுவதிலேயே அவன் உள்ளத்தின் வேகம் புலப்பட்டது! வீட்டைவிட்டு ‘விர்’ எனப் பறந்த காரின் முன்னே ஒரு பெண் கூச்சலிட்டவாறே ஓடிவந்தாள்! “நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று அவள் சப்தம் போட்டுக்கொண்டே ஓடிவந்தாள். காரை நிறுத்துவதற்குள் அவள் காரின் முன்னே வந்து விழுந்தாள். அவள்மீது காரின் முன்சக்கரம் ஏறியது! “ஆ!” என்று அவளது கூச்சல் மட்டுமே கேட்டது! கார் நின்றது—அழகப்பன், நயினா, டிரைவர் முதலியோர் இறங்கி ஓடிவந்தனர். அந்தப் பெண் இரத்த வெள்ளத்திலே மிதந்துகொண்டிருந்தாள்.

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்