அத்தியாயம் 4 · 4 / 23
அத்தியாயம் 4
Chapter 4
மூல ஸ்கேன் 33 after centered 4 – 45 before centered 5
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
4
சிந்தாமணி கண்ட இன்பக் கனவுகளின் எழிலுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல அழகப்பனின் ஆசைக் கனவுகள்! விரிந்து பரந்து கிடக்கும் தன்னுடைய மாளிகையிலே சதா சர்வ காலமும் சதங்கையணியாத மயிலொன்று நட்டுவனார் பயிற்றுவிக்காத நாட்டியத்தை நடைமூலம் ஆடிக் காட்டும் அற்புதக் காட்சியைக் கண்டு களிக்கலாம் என எண்ணி மகிழ்ந்தான். காதல் எண்ணங்கள் யாத்திரீகர்களைப்போல வருவதும் தங்குவதும் பிறகு போய்விடுவதுமாக இருந்த அவனது இருதயச் சத்திரம் இனிமேல் இடித்துப் புதுப்பிக்கப்பட்டு எப்போதுமே காதல் நினைவுகள் காவல் புரியும் கோட்டையாக மாற்றியமைக்கப்பட்டு விடும். அவனது அம்மா தன் கண்களை மூடுவதற்குள் பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.
அவனோ, தன் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்திலே வாழ்க்கைத்துணை தேவையென்று விரும்பி நின்றான். அவனது விருப்பத்தைப் பூர்த்திசெய்வது போலத்தான் வேதபுரமிருந்துவந்த அந்தப் படம் அமைந்தது. படத்தைக் கையிலே வைத்துக்கொண்டு அந்த விழி அசைந்தால் எப்படியிருக்கும்! இதழ்கள் திறந்தால் எழிற்காட்சி எப்படிக் கொட்டும், என்றெல்லாம் கற்பனை சாம்ராஜ்யத்தைப் படைத்து ரசித்துக்கொண்டிருந்தான். பெரிய வீட்டுப் பிள்ளை! ஓய்வைக் கழிப்பதே அவர்களுக்குப் பெரிய தொல்லை! அந்தத் தொல்லை தவிர்க்க ஒரு கிள்ளை வருகிறது வேதபுரமிருந்து! அவளை ஒருமுறை எப்படியாவது நேரிலே பார்த்துவிடவேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தான். பெண்வீடு பார்ப்பதற்குத் தாயார் மட்டுமே<!-- source join: scan 33 ends பெண்வீடு பார்ப்பதற்குத் தாயார் மட்டுமே; scan 34 begins போவதாக இருக்கிறாள். --> போவதாக இருக்கிறாள். அவளுக்குத் துணையாக அவனது நண்பன் நயினா செல்வதாக இருக்கிறான்; நயினா என்பது நயினாமுகம்மது என்ற பெயரின் சுருக்கம். அழகப்பனும் நயினாவும் ஆருயிர்த் தோழர்கள்; ஒரே தெருவினர். ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். ஒரே மாதிரி இருவரும் பரீட்சையில் ‘சுழி’ வாங்குபவர்கள்! அழகப்பன் உலகத்தை அவனுடைய சுற்றளவுக்குமேல் பெரிதாக மதிப்பவன். நயினாவுக்கோ உலகம் ஒரு விளையாட்டு மைதானம். அழகப்பன் எதையுமே ஆழ்ந்து சிந்திப்பான். நயினாவோ எல்லாவற்றையும் அலட்சியப்படுத்திவிடுவான். வாழ்க்கை என்பது மனிதன் திட்டமிட்டு அழைத்துக்கொள்ள வேண்டிய சிங்காரச் சோலை! இது அழகப்பனின் தத்துவம்.
சோலையானாலும் பாலையானாலும் சேர்ந்து போகாமல் மனிதன் கடக்கவேண்டிய பாதைதான் வாழ்க்கையென்பது நயினாவின் முடிவு!
இந்த இருவரின் முடிவுகளும் அடிக்கடி மோதிக்கொள்ளும். அப்போதெல்லாம் அழகப்பன் வேகமான கருத்துக்களுக்கு அடிமையாகிவிடுவான். நயினாவுக்கோ அந்த மோதல் நிகழ்ச்சி ஒரு நகைச்சுவை நாடகமாயிருக்கும். அந்த நாடகத்தில் தன்னைத் தலைமைப் பாத்திரமாக்கிக்கொண்டு அழகப்பனைச் சிரிக்கவைப்பதில் முழுமுயற்சி எடுத்துக்கொண்டு முடிவில் வெற்றிபெறுவான் நயினா முகம்மது!
வேதபுரத்துப் பயணம் பற்றி நயினாவிடம் பேச்செடுத்தான் அழகப்பன். எப்படியாவது தானும்போய் பெண்ணைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென அவனிடம் மெல்ல மெல்ல விஷயத்தை வெளியிட்டான்.
“படம் பார்த்தாயே; அது போதாதா?” என்று கேலி பேசினான் நயினா.
“படம்; அசையாது! பேசாது! சிரிக்காது!” என்றான் அழகப்பன்.
“ஓகோ! ஆசையிலே அன்னமா, மயிலா என்று தெரிந்துகொள்ளவேண்டுமாக்கும்! பேச்சிலே கிளியா, குயிலா எனத் தெரியவேண்டும்—சிரிப்பிலே முல்லைச்சரமா, முத்தாரமா என்று பார்த்துவிடவேண்டும்—இல்லையா?”
“நயினாவின் கேலி அதிகமாயிற்று! அழகப்பன் வெட்கத்தால் தலை குனிந்தான்.
“என்னப்பா இதற்கெல்லாம் போய் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு!.........மொட்டைத் தலையில் வெயில் படாமல் இருக்க ஒரு குல்லாய் வேண்டுமே தவிர, அந்தக் குல்லாய் பட்டினால் செய்யப்பட்டு பளபளப்பான ஜரிகை நெய்யப்பட்டு...இருக்கவேண்டுமா என்ன? அதுமாதிரி... வாழ்க்கைக்கு ஒரு பெண்! அவ்வளவுதானே!”
“ஏய், நயினா! மொட்டையடித்துக்கொள்ளாமலே இருந்தால் அந்தக் குல்லாய் கூட தேவையில்லையே!”
“மொட்டையடிப்பது மதச் சம்பிரதாயம்! அதுபோல் கல்யாணம் வாழ்க்கைச் சம்பிரதாயம்!”
“அப்படியானால் குல்லாய் போடுவது...?”
“வாழ்க்கைச் சம்பிரதாயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், குல்லாய் போட்டுத்தான் தீரவேண்டும்! சில பேர் மொட்டையடிக்காமல் கிராப்புத் தலையுடனேயே குல்லாய் போட்டிருக்கிறார்களா இல்லையா; அதுபோலத்தான்! அழகப்பா இந்த இடத்தில் குல்லாய் என்பது பெண்ணைக் குறிக்கும்!”
“தலைக்குக் குல்லாய்போல அல்ல; குடும்பம் நடத்த வருகிற பெண்!”
“பிறகென்ன; கிரீடமா? அழகப்பா! எனக்குத் தெரியும், தலைக்கு தொப்பிபோல வருகிற எத்தனையோ பெண்கள் கடைசியில் காலுக்குச் செருப்புபோல, தேய்ந்து கழட்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்!”
“சரி சரி! உன் ஆராய்ச்சியை வளர்த்தாதே! தயவு செய்து நிறுத்து!”
“ஆராய்ச்சியில்லையப்பா — அனுபவ உண்மை! என்னமோ—உனக்கு உன் ஆசைப்படியே ஓவியம்போல ஒரு பெண் கிடைத்திருக்கிறது — அந்த ஓவியம் பேசுமா பேசாதா? சிரிக்குமா? சிரித்தால் பல் இருக்குமா — இருக்காதா? — நடக்குமா? நடக்கக் கால் உண்டா? நொண்டியா? — இவைகளையெல்லாம் நாங்கள் பார்த்துவிட்டு வருகிறோம். நீ கவலைப்படாமல் இரேன்!”
“நயினா உனக்கு எல்லாம் விளையாட்டுதான்! நீ பெண்ணைப் பார்க்கமுடியாது!”
“ஏன்—எங்களைப்போல ‘கோஷா’ முறை ஏதாவது உண்டா?”
“அதெல்லாமில்லை—என் மாமனார் பெரிய சனாதன இந்து! உன்னை உள்ளே அனுமதிப்பதுகூட சந்தேகந்தான்!”
“உண்மையாகவா; அல்லது நீ வரவேண்டுமென்பதற்காகப் புளுகுகிறாயா?”
“உண்மைதான் நயினா; உண்மைதான்!!”
“அப்படியானால், நான் கைலியில்லாமல், குல்லா இல்லாமல் போகிறேன்!”
“இந்துவென்று எண்ணிக்கொள்வாரா மாமனார்? பைத்தியக்காரா! தலை மொட்டையாக இருக்கிறதே; அது காண்பித்துக்கொடுத்துவிடாதா?”
“திருப்பதிக்குப் போனதாகச் சொல்லிவிடுகிறேன், என்ன அழகப்பா, எனக்கே நீ காது குத்துகிறாய்!”
“டேய்! காது வேறு குத்திக்கொள்ள வேண்டுமடா—இந்து என்றால்!”
“காது குத்துகிறவன்தான் இந்து என்று எனக்குத் தெரியும்! குத்திக்கொண்டால் போகிறது! மனிதனுக்கு மனிதன் ஆண்டவன் படைத்த அவயவங்களே சில மாறுதல் பண்ணிக்கொள்வதுதானேடா மதம்!”
“சரி! சரி! மத ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாயா? உருப்பட்ட மாதிரிதான்!”
“எந்த ஆராய்ச்சியில் இறங்கினாலும் சரி; கடைசியில் வேதபுரத்துக்குப் போவது நானும் உன் அம்மாவுந்தான்!”
“அம்மாவுக்கு அரைப்பார்வை! பெண்ணைச் சரியாகக் கூடப் பார்த்துவர முடியாது!”
“ஓகோ—நீ போனால் சரியாகப் பார்த்துவிட்டு வந்து விடுவாயோ? அப்படியே அழகப்பா! இது ‘அவள்’ வீட்டுப் பெண்ணல்ல; மாப்பிள்ளைக்கு நேராக பாட்டுப் பாடி, நடனமாடி, கற்ற வித்தைகளையெல்லாம் காட்டி கல்யாணத்துக்குச் சம்மதம் பெறு! அம்மா பார்க்கிற அரைப்பார்வை கூட உன்னால் பார்க்கமுடியாது!”
“நயினா! ஒரே முடிவாகச் சொல்லுகிறேன்; நான் வந்துதான் தீரவேண்டும்!”
“உங்க மாமனார் வேறு கடிதம் எழுதியிருக்கிறார்; மாப்பிள்ளை வரவேண்டாம்—வந்தால் ஊரில் திருஷ்டி அதிகமானாலும் ஆகும் என்று! அதோட நீ அந்த வீட்டில் இந்த மாதம் அடிவைக்கக் கூடாதாம்! உங்க அம்மாதான் அடிவைக்கலாமாம்—அதுமாதிரி பஞ்சாங்கத்திலே போட்டிருக்காம்!”
“அந்தப் பஞ்சாங்கத்தைக் கிழித்து எறி! நெருப்பிலே போடு!”
“அதில் புண்ணியமில்லை! நீ மந்திரியா வந்து பஞ்சாங்கமே வெளியிடக்கூடாதுன்னு தடைபோடு!”
“நயினா, நானும் புறப்படுகிறேன் வேதபுரத்துக்கு! அம்மாவிடம் நான் சொல்ல வெட்கமாயிருக்கிறது. நீ சொல்லிவிடு!”
அழகப்பனின் பிடிவாதத்தை மாற்ற இயலாதெனக் கண்டுகொண்ட நயினா பின்வாங்கினான். தாயாரின் அபிப்பிராயப்படி ஜோசியர் குறித்துக்கொடுத்த நாளில் வேதபுரம் புறப்படுவதற்குத் தீர்மானமாயிற்று. அழகப்பன்,<!-- source join: scan 37 ends அழகப்பன்,; scan 38 begins நயினா, தாயார்... --> நயினா, தாயார் மூவரும் மோட்டாரில் புறப்பட்டனர்; வேதபுரத்திற்குத் தந்தி கொடுத்துவிட்டு!
வெள்ளிக்கிழமை முற்பகல் வேதபுரம் சேர்ந்துவிட வேண்டுமென்ற முடிவில், பெங்களூரைவிட்டு இரவே புறப்பட்டுவிட்டனர். பெங்களூருக்கும் வேதபுரத்திற்கும் முந்நூறு மைல்களாவது இருக்கும். வயதான தாயார் காரில் இருப்பதால் மெதுவாகத்தான் காரை ஓட்ட இயலும்! வேடிக்கைக் கதைகள் பேசியவாறு அழகப்பனையும் அவன் தாயாரையும் உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தான் நயினா. பொழுது விடியப்போகிற நேரம். பெண் வீடு பார்க்க வருகிறவர்கள் எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தாளே சிந்தாமணி, அந்த நேரம்! அப்போதுதான் அழகப்பனின் கார் வேதபுரம்நோக்கி நாற்பது மைலில் மெதுவாக வந்துகொண்டிருக்கிறது.
தாயாரம்மாள் களைப்பின் மிகுதியால் காரில் சாய்ந்தவாறே சிறிது கண்ணயர்ந்தாள். டிரைவருக்கு அசதியாக இருக்குமென்று, அவனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அழகப்பனே கார் ஓட்ட ஆரம்பித்தான்.
“உன் அவசரத்தில் காரை வேகமாக விடாதே அழகு! அம்மாவேறு தூங்குகிறார்கள்” என்று கிண்டலாக எச்சரித்தான் நயினா. எத்தனையோ நாள் கார் ஓட்டியிருக்கிறான் அழகு! ஆனால் இப்போது ஏற்படும் தனி உற்சாகம் என்றுமே ஏற்பட்டதில்லை! அருகேயிருந்த நயினா அவனது மன உற்சாகத்தைப் புரிந்துகொண்டவன்போல—
“இன்னும் கொஞ்சநாள் போனால்; பெண்களில் இந்தக் கார் என்ன பாடுபடும்? பக்கத்திலே நான் உட்கார்ந்திருக்கமுடியுமா?” என்று சிரித்தான்.
“ஏய்—அம்மா!” என்று சைகை செய்தான் அழகப்பன். “அம்மா தூங்குவது தெரியவில்லையா?” என்று கேட்டபடி நயினா மீண்டும் ஆரம்பித்தான்.
“அழகு! நான் ஒரு கேள்வி கேட்கிறேன்; பதில் சொல்! ஒரு வெள்ளைக்காரனும் வெள்ளைக்காரியும் காரில்<!-- source join: scan 38 ends காரில்; scan 39 begins போய்க்கொண்டிருந்தார்களாம். --> போய்க்கொண்டிருந்தார்களாம். கணவன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். பக்கத்திலே மனைவி! கார் போய்க்கொண்டிருக்கும்போதே அருகேயுள்ள மனைவிக்கு அவன் ஒரு முத்தம் கொடுத்தானும்—முத்தம் பெற்ற அவள் கேட்டாளாம்; “நீங்கள் முத்தம் தரும்போது உங்கள் கவனம் என் கன்னத்தில் இருந்ததா? அல்லது எதிரில் உள்ள சாலையில் இருந்ததா?” என்று! நீயாயிருந்தால் அதற்கு என்ன பதில் சொல்லியிருப்பாய்? சொல்லு பார்க்கலாம்!”
“உன் கதையை அனுபவித்துப் பார்த்துவிட்டுப் பிறகு உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்!”
“பெங்களூரில் கார் மோதி எதிரே வந்த ஒரு ஆளுக்கு தலை காணாமல் போய்விட்டது என்று ஒரு சேதி பத்திரிகையில் வந்தால்—அன்றைக்கு நீ என் கேள்விக்குப் பதில் கேட்பாயிருக்கிறாய் என்று அர்த்தம்! இல்லையா?”
“அப்படியானால் என் கவனம் சாலையில் இருக்காது என்கிறாயா?”
அழகப்பன் இப்படிக் கேட்கும்போதே கார் ஒரு மரத்தின் மீது மோத இருந்து தப்பியது! நயினா சிரித்தபடி அழகுவைத் தட்டிக்கொடுத்தான்.
இன்னும் தொண்ணூறு மைல்கள் வேதபுரம் என்பதை ஒரு கைகாட்டி அறிவித்தது. கைகாட்டியைத் தாண்டி சிறிதுதூரம் சென்றதும் சாலை குறுகி இருமருங்கிலும் புதர் அடர்ந்து காணப்பட்டது. குறுகிய சாலையில் கார் பிரவேசித்தது. இதயத்தை வேதபுரத்திற்கும் காருக்குமாக அலைய விட்டுக்கொண்டிருந்த அழகப்பன் திடீரென காரை நிறுத்தினான். “என்ன என்ன?” என்றான் நயினா. தாயாரம்மாளும் விழித்துக்கொண்டாள். சாலையின் குறுக்கே ஒரு மனித உருவம் கிடந்தது.
“யாரோ அடிபட்டுச் செத்திருக்கிறான்” எனக்கூறியபடி அழகப்பன் காரைவிட்டு இறங்கினான். அவன் இறங்கியதுதான் தாமதம் பெருங்கூச்சலோடு ஏழெட்டுப்பேர் காரை வளைத்துக்கொண்டார்கள். சாலையின் குறுக்கே<!-- source join: scan 39 ends சாலையின் குறுக்கே; scan 40 begins கிடந்தவனும்... --> கிடந்தவனும் பயங்கரச் சிரிப்போடு எழுந்துவிட்டான். அழகப்பனுக்கும் நயினாவுக்கும் இன்னது செய்வதென்றே புரியவில்லை. தாயாரம்மாள் அலறினாள். “அய்யோ! எங்களை விட்டுடுங்க! நீங்க கேட்கிறதெல்லாம் தர்றோம்!” என்று கெஞ்சியழுதாள். “என்னையாவது கொள்ளுங்க! என் பிள்ளையை ஒண்ணும் பண்ணாதீங்க!” என்று தாய்ப்பாசத்தின் உயர்வை வெளியிட்டு ஒப்பாரிவைத்தாள்.
நயினாவின் முதுகில் ஒரு குத்து விழுந்தது. நயினாவும் அவர்களை எதிர்க்க ஆரம்பித்துவிட்டான். அழகப்பனுக்கும் வேறு வழியில்லை. கார்டிரைவரும் களத்தில் இறங்கினான். சாலையில் சிறிதுநேரம் போர்க்களம் உருவாயிற்று. ஏழெட்டுப்பேரை மூவர் மட்டுமே எவ்வளவு நேரந்தான் எதிர்க்கமுடியும்? அதுவும் டைகரின் இருஞ்சோறு சாப்பிட்டு உடலைக் கொழுக்கவைத்துக்கொண்ட கூட்டம்! அழகப்பன் அவர்களைச் சமாளிக்கமுடியாமல் தவித்தான்.
திடீரென்று நயினாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. காரின் முன்பகுதியில் பாய்ந்தான். அங்கிருந்த ரிவால்வரை எடுத்து, ‘அழகப்பா! இந்தா! சுடு! சுடு!’ என்று கத்தியவாறு அவனிடம் தூக்கி எறிந்தான். ரிவால்வர் அழகப்பனின் கைக்கு வந்ததும் டைகரின் ஆட்கள் பயந்தவாறு நயினா இருக்கும் பக்கம் ஓடிவந்தனர். “உம்! ஓடி விடுங்கள்! சுட்டுவிடுவேன்!” என்று எச்சரித்தான் அழகப்பன்! முரடர்கள், “எங்களைச் சுட்டால் இவனைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுவோம்!” என்று கத்தியவாறு நயினாவைச் சூழ்ந்துகொண்டனர். நயினா, தள்ளாடியபடியே அவர்களை எதிர்த்தான். “இனிப்பொறுக்க முடியாது! சுடவேண்டியதுதான்!” என உரக்கச் சொல்லிக் கொண்டே ரிவால்வரை முடுக்கினான் அழகப்பன்! இரண்டு வெடிச் சப்தம்! “அய்யோ! என்னைக் கொன்றுவிட்டாயே அழகப்பா!” என்று கத்தியவாறு நயினா முகமது தடால் என்று கீழே சாய்ந்தான்! அழகப்பன் உடல் நடுங்கிற்று! கைவற்றுப்போனான். தாயாரம்மாள் அடித்து மோதிக்<!-- source join: scan 40 ends அடித்து மோதிக்; scan 41 begins கொண்டு அழுதாள். --> கொண்டு அழுதாள். முரடர்கள் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட ஆரம்பித்தார்கள்.
அழகப்பன் ரிவால்வரை கீழே போட்டுவிட்டு நயினா முகமதின் மீது சாய்ந்தான். தன் ஆருயிர்த் தோழனைத்தானே கொன்றுவிட்டோம் என்ற அதிர்ச்சி சாமான்யமானதா? அந்த வேகத்தில் நண்பன் மீது அவன் விழுந்தான்.
“அடேடே! வலிக்குதப்பா! மாடுமாதிரி மேலே விழுகிறியே!” என்று சிரித்துக்கொண்டே திமிர் என எழுந்தான் நயினா முகமது! அழகு வியப்போடு “நயினா! நீ சாகவில்லையா?” என்று கேட்டான்.
“குறிபார்ப்பதில் உனக்கு யாருமே ஈடில்லை அழகப்பா! நல்லவேளை நீ பார்த்த குறிக்கு இது உண்மையான ரிவால்வராக இல்லாமல் விளையாட்டுத் துப்பாக்கியாகப் போய்விட்டது!”
“உய்—உய்! புறப்படு!” என்று அனைவரையும் காரிலே உட்காரச்சொல்லி அவசரப்படுத்தினான். புது வாழ்வு பெற்றதுபோன்ற பூரிப்பில் எல்லோரும் கார் பயணத்தை மீண்டும் தொடங்கினர்!
சிந்தாமணியை மருத்துவ மனையிலே விட்டுவிட்டு விடிவந்த சிவநேசர், சிவகாமி இருவரும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கக் காத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குச் சிறிது தாமதமாக—ஆனாலும் ஜோசியர் சொன்ன நாழிகையில் சிறிதும் தவறாமல் மாப்பிள்ளை கார் சிந்தாமணியின் வீட்டு வாசலில் வந்து நின்றது! சிவநேசரும் சிவகாமியும் அவர்களை எதிர்கொண்டழைத்து உபசரித்தனர்.
“மாப்பிள்ளை வரமாட்டார் என்றல்லவா நினைத்தேன்?” என்றார் சிவநேசர்.
“அவருக்கு வர இஷ்டமில்லைத்தான். நான் தான் கட்டாயப்படுத்தி இழுத்துவந்தேன்” என்று தன்னைத்தானே<!-- source join: scan 41 ends தன்னைத்தானே; scan 42 begins அறிமுகப்படுத்திக்கொண்டு... --> அறிமுகப்படுத்திக்கொண்டு நயினா முகமது பதில் கூறினான்.
“மாப்பிள்ளை இப்போது வீட்டுக்கு வர பொருத்தம் சரியில்லை! அடுத்த மாதந்தான் வரலாமென்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது! அதனால்தான் அவர் வரவேண்டாம்... அப்படின்னு...... நினைச்சேன்!” என்று இழுத்தார் சிவநேசர். அவரது சனதன உள்ளம் சடங்குகள், சாஸ்திரங்களுக்கு அடிமைப்பட்ட உள்ளம் கிரக பலனுக்கு விரோதமாக மாப்பிள்ளை வருகைதந்ததை ஏற்க மறுத்துவிட்டது. அதை வெளியில் காட்டாமலும் அவரால் இருக்க முடியவில்லை.
“கிரகம் சரியில்லாவிட்டாலும், ஏதோ தோஷம் கழிச்சா சரியாப்போயிடும்னு சொன்னார் ஜோசியர்! அதனால்தான் பையனை அழைச்சுகிட்டு வந்தோம்!”
“தோஷம் கழிப்பதாவது ஒண்ணுவது; அதெல்லாம் பித்தலாட்டம்! ஜோசியன் பிழைப்புக்காகப் புளுகுவது!”
“கிரகபலன் போட்டிருக்கிற அதே பஞ்சாங்கத்திலே தான் தோஷ நிவர்த்தியும் போட்டிருக்கிறதாக ஜோசியர் சொன்னாரே!” என்றான் நயினா!
“அட உமக்கென்னய்யா தெரியும்? நீர் வேறே மதம், நாங்க வேறே மதம்!” என்று கடுமையாகப் பேசி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சிவநேசர். அழகப்பனின் முகத்தை நயினா கிண்டலாகப் பார்த்துச் சிரித்தான். அழகு முகத்திலே அசடுவழிந்தது! நயினாவுக்கு இந்தமாதிரிக் குத்தல் எல்லாம் சாதாரணம்! பிறகு தாயாரம்மாள் வழியில் திருடர்களிடமிருந்து தப்பிய கதையைக் கூறினாள். “எல்லாம் கிரகபலனை மீறியதால் வந்த வினைதான்!” என்று சிவநேசர் இடித்துக்காட்டினார்.
இன்னும் ஒருதடவை இப்படி ஏதாவது சொல்லியிருப்பாரேயானால் அழகப்பன், தாயாரை அழைத்துக்கொண்டு பெங்களூர் திரும்பியிருப்பான்; அவ்வளவு ஆத்திரம் ஏற்<!-- source join: scan 42 ends ஏற்; scan 43 begins பட்டுவிட்டது -->பட்டுவிட்டது அவனுக்கு! “வீட்டுக்கு வந்தவர்களிடம் இப்படிப் பேசினால் தவறு எண்ணிக்கொள்ளமாட்டார்களா?” என்று சிவகாமி அறிவுறுத்திய பிறகுதான் சிவநேசர் சிறிது அடங்கினார். தாயாரம்மாளின் பார்வை வீடு முழுதும் சுழன்றுகொண்டிருந்தது. அவள் கண்களுக்குச் சரியான ஒளியில்லாத காரணத்தால் மிகமிகக் கூர்ந்து எல்லாத் திசைகளிலும் பார்வையை ஓட்டினாள். அதே நிலைதான் அழகப்பனுக்கும்! சிவகாமி கடைசியாக மெதுவாகப் பேச்சையெடுத்து—சிந்தாமணிக்கு ஏற்பட்ட விபத்தைக் கூறினாள்.
தனக்கு ஏற்பட்டமாதிரி தன் மனைவிக்கும் ஒரேநாளில் ஆபத்து ஏற்பட்டிருக்கிறதே என எண்ணி வியப்படைந்தான் அழகப்பன். தாயாரம்மாள் சிந்தாமணியை மருத்துவ மனையில் சென்று பார்க்க விரும்பினாள்.
“வரும்போதும் வழியில் சகுனம் சரியில்லை; இங்கும் இப்படிச் சகுனம் சரியில்லாமல் இருக்கிறது!—அதனால் சிந்தாமணியை இன்றைக்குப் பார்ப்பது அவ்வளவு உசிதமாகத் தெரியவில்லை. இன்னொரு நாளைக்கு...” என்று இழுத்தார் சிவநேசர்!
எல்லாம் தலைகீழ் மாற்றமாகிவிடவே தாயாரம்மாள் சிறிது அதிர்ச்சியடைந்தாள். சிவகாமி அதைப் புரிந்து கொண்டு வேதனை கொண்டாள்.
“உடம்பு சுகமில்லாமல் இருக்கிற பெண்ணைப் பார்த்தால் என்ன—எனக்கும் பார்க்க ஆசையிருக்காதா?” என்று பிடிவாதமாகச் சொன்னாள் தாயாரம்மாள்!
நயினாவும் ‘ஆமாம்’ போட்டான். அழகப்பனும் அதே கருத்தை ஜாடையாகத் தெரிவித்தான்.
எல்லோருமே சாஸ்திரத்துக்கு விரோதமாகப் பேசுவதாக நினைத்தார் சிவநேசர்!
“நீங்கள் எல்லாம் நாஸ்திகர்களா?” என்று தாயாரம்மாளைப் பார்த்துக் கேலி கலந்த கோபத்தில் கேட்டுவிட்டார்.
“சிவ சிவா” என்று வாயில் அடித்துக்கொண்டாள் தாயாரம்மாள்.
இறுதியில் சிவநேசர் அபிப்பிராயமே வென்றது. அன்றிரவு மாப்பிள்ளை வீட்டார் ஊருக்குத் திரும்புவதென்றும் இன்னொரு நல்லநாள் பார்த்துப் பெண் வீடு பார்க்க வருவதென்றும் முடிவுசெய்யப்பட்டது! அழகப்பனும், நயினாவும் ஊர் சுற்றிப் பார்த்துவரப் புறப்பட்டார்கள்! அழகப்பனுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. அதை நயினாவிடம் வெளியிட்டான்.
“சிந்தாமணியை நாம் பார்க்க இதுதான் தக்க சமயம்! ஆஸ்பத்திரியில் போய் சாதாரணமாகப் பார்த்துவிட்டு வரலாம், என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான். நயினா சம்மதிக்காமலிருக்க முடியுமா?
இருவரும், ஆனந்தியின் மருத்துவமனையை விசாரித்துக்கொண்டு போய்ச்சேர்ந்தனர். அங்கே டைகர் இருந்தான். ஆனந்தி இருந்தாள். சிந்தாமணியைப் பார்க்க வேண்டுமென்று அழகப்பன் கூறினான். ஆனந்தி முதலில் மறுத்தாள், பிறகு டைகர் சிபார்சு செய்தான்; “யாரோ அவளுக்குச் சொந்தக்காரர் போலிருக்கிறது, சரிதான் பார்த்துப்போக அனுமதிகொடு” என்று!
சொந்தக்காரர் என்ற முறையில் அழகப்பனும், நயினாவும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வேம்பு அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு போய், ஒரு நர்சுவிடம் அறிமுகப்படுத்தி, “இவர்களைச் சிந்தாமணி இருக்குமிடம் அழைத்துப் போ” எனக் கூறிவிட்டுத் திரும்பினான். நர்சு அவர்களை அழைத்துக்கொண்டு போனாள்.
சிந்தாமணியிடம் தான் யார் என்று சொல்வதா இல்லையா என்ற பிரச்சினை அழகப்பனைக் கலக்கிற்று. அதோடு சிவநேசருக்குத் தெரியாமல் இப்படி வருவது சரியா? என்ற கேள்வியும் குடைந்தது! எப்போதுமே தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலே ஏற்படுவதைவிட அதிக அச்சம் உச்சி போய்ச்சேரும்போதுதான் தோன்றுகிறது. அந்த நிலைக்கு ஆளானான் அழகப்பன். நர்சு அவர்<!-- source join: scan 44 ends நர்சு அவர்; scan 45 begins களச் சிந்தாமணி... -->களச் சிந்தாமணி படுத்திருக்கும் கட்டிலண்டை அழைத்துப்போனாள்.
“உம்! இதுதான் சிந்தாமணி—அயர்ந்த தூக்கம்! எழுப்பாதீர்கள்!” என்றாள் நர்சு!
அழகப்பன் ஆவலோடு அப்பக்கம் நோக்கினான். தீப்பட்டவைபோல் ஆயின அவன் கண்கள்! “ஆ” என்று அலறினான். சிந்தாமணி திடுக்கிட்டு விழித்தாள். அவள் பக்கத்திலே ஒரு குழந்தை.
“ஸ்! சப்தம் போடாதீர்கள்—பிரசவக் களைப்பு—தொல்லை கொடுக்காதீர்கள்” என்றாள் அதிகாரமாக நர்சு.
“அடப்பாவிகளே! நல்லவேளை—நான் தப்பினேன்! இதற்குத்தான் அந்த சிவநேசன் நாள் நட்சத்திரங்கள் மீது பாரத்தைப் போட்டு அவ்வளவு தடுத்தான? அட மோசக்காரர்களே!” என்று ஆத்திரக் கூச்சலிட்டான் அழகப்பன். நயினா முகமது அவன் வாயைப் பொத்தி மளமளவென்று வெளியே இழுத்துக்கொண்டு வந்தான்.
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்